rama lakshmana 700அனுமான் இலங்கையில் சீதையைக் கண்டு திரும்பி வரும்போது ராமேஸ்வரம் கடற்கரையில் கால்வைத்த சமயம். களைப்பாக இருந்தான். தாகம் வேறு; சுற்றுமுற்றும் பார்த்தான். கடற்கரை மேட்டில் ஒரு முனிவர்; அமர்ந்த கோலத்தில் அருகே சென்றான். வணங்கினான். “தாகம் பசி தீர்க்க முடியுமா முனிவரே” என்றான். அவர் “வடகிழக்கே ஒரு ஊருணியும் சோலையும் உண்டு; காய், கனிகளும் - கிடைக்கும்” என்றார்.

அனுமன் “முனிவரே சென்று வருகிறேன்; அதுவரை இந்தக் கணையாழியைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள முடியுமா” என்று கேட்டான். முனிவர் தன் முன்னே இருந்த கமண்டலத்தைக் காட்டி “அதில் போடு; வரும்போது எடுத்துக்கொள்” என்றார். அனுமனும் அப்படியே செய்தான். பசி தீர்க்க சோலையை நோக்கிப் போனான்.

காய்கனிகளை உண்டு பசியாறினான்; தாகம் தீர்த்தான்; ஓய்வெடுத்தான்; முனிவரிடம் வந்தான். “முனிவரே கணையாழியை எடுத்துக் கொள்ளலாமா” என்று கேட்டான். முனிவர் கமண்டலத்தைக் கை காட்டினார். அனுமன் கணையாழியை எடுக்கக் கமண்டலத்தில் கையை விட்டான். நிறையக் கணையாழிகள். கமண்டலத்தைக் கவிழ்த்தான். கணையாழிகள் பொலபொலவென விழுந்தன. அனுமன் திகைத்தான் “என் கணையாழி எது” என்று கேட்டான்.

“யாருடைய கணையாழி” முனிவர்.

“சீதையினுடையது” அனுமன்.

“எந்தச் சீதை” முனிவர்.

“இராமனின் மனைவி” அனுமன்.

“எந்த இராமன்” முனிவர்.

அனுமன் திகைத்தான்; “எந்த ராமனா” என்று கோபத்துடன் கேட்டான். அங்கு முனிவர் இல்லை; பிரம்மா நின்றார்; அதுவும் கொஞ்ச நேரம்; மறைந்து விட்டார்; அவரது குரல் மட்டும் கேட்டது.

“அனுமனே எத்தனை எத்தனை ராமர்கள்” எத்தனை சீதைகள்; எத்தனை ராமாயணங்கள்; “நீ எப்போது வாழ்ந்த சீதையைக் கேட்கிறாய்?” என்றார். இராமாயணத்திற்குப் பல்வேறு வடிவங்கள் உண்டு எனக் கூறவரும் ஆய்வாளர்கள் எல்லோரும் முதலில் சொல்லுவது இந்தக் கதையைத்தான்;

இராமாயணம் தான் எத்தனை இராமாயணம். உலக காவியங்களில் இதைப்போல வேறுபட்ட மாறுபட்ட வடிவங்கள் கொண்ட இன்னொரு பனுவல் உண்டா என்று தெரியவில்லை. இப்படியான மாறுபட்டப் பனுவல் உருவாவதற்கு எத்தனையோ காரணங்கள் கூறலாம். மதம், பக்தி, அரசியல் மாற்றம், சமூக மாற்றம் மொழியின் பண்பாடு, கவிஞன்/படைப்பாளிகள் கதைசொல்லியின் மனநிலை எனப் பல காரணங்கள்.

நாட்டார் கலையை நிகழ்த்துபவன் எப்போதும் ஒரே பனுவலைக் கூறுவதில்லை. ஒரே மூலத்திற்கு ஒரே பனுவல் இருப்பதில்லை. வேறு வேறு வடிவங்கள் இருக்கும். வாய்மொழி மரபு உருவாக்கப்படும் சூழல், கற்பனை, எழுத்திலக்கியத்திற்கில்லாத சுதந்திரம் என்றும் காரணங்கள் பலவகை பனுவல்களை உருவாக்கும் என்னும் காரணிகள் இராமாயணத்திற்கும் பொருந்தும்.

கேரளத்தில் கண்ணகி கதை தொடர்பாக 18 வடிவங்கள் கிடைத்துள்ளன. காரணம் கேரளத்தில் கண்ணகி பரவலாய் வழிபாடு பெற்றதுதான். (இப்போது கண்ணகி கோவில்கள் பகவதி கோவிலாகி விட்டன என்பது வேறு விஷயம்) மணிமேகலை கதைக்கு ஒரு வடிவமே; அவள் வழிபாடு பெறவில்லை என்பது ஒரு காரணம். இராமன் பரவலாய் வழிபாடு பெற்றதும் இதன் பல்வேறு பனுவல்களுக்குரிய காரணங்களில் ஒன்று.

இராமாயணம் பற்றிய விழுமம் அழகியல் கூறு போன்றவற்றை எழுத்திலக்கியம் போல் வாய்மொழி மரபு பெரிய அளவில் கணக்கில் எடுத்துக்கொள்ளுவதில்லை. ராமன், சீதை இருவரையும் பிரித்து வைப்பதற்குப் பொருத்தமான நியாயத்தை தேடுவதில் செவ்வியல் படைப்பாளிகள் மும்முரமாக இருந்தனர். வாய்மொழி மரபில் இதற்கு நேர்மாறாக இருக்கும். பவபூதியைப் போன்ற எழுத்திலக்கியவாதிகள் வாய்மொழி மரபை முழுதும் பின்பற்றியதால் வேறுபட்டுள்ளனர் என்கின்றனா¢.

இராமாயணம் இந்திய மொழிகளில் மட்டுமன்றி கீழைநாட்டு மொழிகளான இந்தோனேசிய மொழி முதலாகப் பத்து மொழிகளில் உள்ளது. ஏறத்தாழ 11 ராமாயணங்கள் உள்ளன. (பி.இ.எண்;1) இந்த இராமாயணங்கள் கி.பி 9ஆம் நூற்றாண்டிற்கும் கி.பி 19ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தவை.

இந்திய மொழிகளில் மிகப்பழையதான ஆனால் பேச்சு வழக்கில் இல்லாத சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம் ஆகிய மொழிகளில் அதிக ராமாயணங்கள் உள்ளன. ராமாயணக் கதையை நேரடியாகச் சொல்லும் 11 சமஸ்கிருத மூலங்கள் கிடைத்துள்ளன. (பி.இ.எண்; 2) இவற்றின் பின் எல்லை கி.பி 15ஆம் நூற்றாண்டு வரை எட்டுகிறது. அல்லாமல் வியாசபாரதம் உட்பட வேறு 4 புராண இதிகாசங்களிலும் இராமாயணக்கதை பேசப்படுகிறது. (பி.இ.எண்.2) இந்த நூற்களின் கால எல்லை கி.மு.4ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.15ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலகட்டத்தவை.

பாலி மொழியில் 3 ராமாயணங்கள் உள்ளன. இவை கி.மு.வில் உள்ளவை. பிராகிரதத்தில் உள்ள 5 ராமாயணங்களும் கி.மு 4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 9ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலகட்டத்தவை (பி.இ.எண். 3).

தென்னிந்திய மொழிகளில் தமிழ் (கி.பி. 12ஆம் நூற்றாண்டு) தெலுங்கு (கி.பி.12ஆம் நூற்றாண்டு) கன்னடம் (கி.பி. 16ஆம் நூற்றாண்டு) மலையாளம் (கி.பி. 14ஆம் நூற்றாண்டு) ஆகிய மொழிகளில் ராமாயணக் காவியங்கள் உள்ளன. வட இந்திய மொழிகளில் காஷ்மீரி. அசாமி, வங்காளி, மராட்டி, ஒரியா, இந்தி, பார்சி ஆகிய மொழிகளிலும் நேபாளி, குஜராத்தி எனச் சிலவற்றிலும் ராமாயணக் காவியங்கள் உள்ளன. இவற்றில் அசாமி மொழியில் 14ஆம் நூற்றாண்டிலும் பிற மொழிகளில் 16ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டும் எழுதப்பட்டவை.

ஒருவகையில் ஆரம்பகாலத்தில் சமஸ்கிருத, பாலி, பிரகிருத மொழிகளின் வழியும் வாய்மொழி மரபிலிருந்தும் பரவிய இராமாயணமே இந்திய மொழிகளில் பெரிதும் அறிமுகமாயுள்ளது. வான்மீகிக்குப் பிறகு 12ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவில் படிப்படியாக வளா¢ந்த ராமன் வழிபாடு இராமாயணத்தின் பனுவலையும் பாதித்திருக்கிறது.

வடஇந்திய மொழிகளில் உள்ள செவ்வியல் ராமாயணங்களில் வாய்மொழி மரபின் தாக்கம் அதிகம். காளிதாசன் பவபூதி போன்ற உன்னதமான கவிஞர்களும் வாய்மொழி மரபைப் பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர். காளிதாசன் காஷ்மீரில் பிறந்தவன். போஜராஜனின் காலத்தவன். நாடோடியாய் அலைந்து ராமாயணக் கதைகளைச் சேகரித்தவன். இப்படியும் ஒரு செய்தி உண்டு. வட இந்திய பாணர் மரபினர், பழங்குடியினர் ஆகியோரின் வாய்மொழி மரபிலிருந்து இந்தியச் செவ்வியல் இராமாயண வடிவங்களுக்கு வந்தவை நிறைய உண்டு. இதற்குப் புத்த ஜாதகக் கதைகளும் காரணம் என்பதை டாக்டர் போயர் போன்ற ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆந்திரமாநிலம் தமிழிற்கும் தமிழ் பண்பாட்டிற்கும் அளித்த நன்கொடை கணிசமானது. மொழியைவிட நாட்டார் நிகழ்த்துக் கலைகள், கதைப் பாடல்கள். சுவரோவியங்கள். கோவில் கட்டுமானம், சிற்பம், நீராதாரப் பெருக்கம் என்னும் பலவற்றிற்கு அவர்களின் பங்களின்பு உண்டு. நாயக்கர் ஆட்சிக்குப் பின்னர் தமிழகத்தில் ஐரோப்பிய ஆட்சியால் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டாலும் தெலுங்கு மொழியும் ஆந்திரப் பண்பாடும் அளித்த கொடையின் சுவடுகள் இன்னும் பசுமையாக ஒளிருகின்றன.

தமிழக நாட்டார் நிகழ்த்துக் கலைகளில் உறுமி, கோமாளியாட்டம் எக்காளக் கூத்து, சாட்டையடி ஆட்டம், தாதராட்டம், தேவராட்டம், பகல்வேடம், சேவையாட்டம், சோ¢வையாட்டம் ஆகியன முழுதும் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்களால் நடத்தப்படுவன. கோணங்கி ஆட்டம், கையுறை பாவைக் கூத்து, பாகவத மேளா வீரபத்திரசாமி ஆட்டம், ஆலி ஆட்டம், பின்னல் கோலாட்டம், புலிவேட ஆட்டம் போன்றன ஆந்திரர்களின் செல்வாக்கால் தமிழர¢களுக்குக் கிடைத்த கலைகள். இவற்றில் பின்னல் கோலாட்டம் தமிழ்நாட்டிலிருந¢து கேரளத்திற்குச் சென்றிருக்கிறது.

திருமால் அடியவர்களைப் போற்றி தொட்டியம்பட்டி நாயக்கர்கள் ஆடும் ஆட்டம் தாதர்கள் ஆட்டம். பகல் வேடம் புராண, இதிகாசப் பாத்திரங்களின் வேடத்தைப் புனைந்துகொண்டு பாடுவது. இதில் இராமனும் சீதையும் வருவார்கள். சேவையாட்டம் அரங்கநாதன் கோவிலில் நிகழ்வது. திருப்பதிக்குச் சென்று திரும்பியவர்கள் நடத்துவது கோணங்கி ஆட்டம். பாகவதக் கதையுடன் தொடர்புடையது. சுவடி பார்த்து குறிசொல்லும் குடுகுடுப்பை நாயக்கர்களின் கலை (இது ஒருவகை யாசகம்) இராமாயணத்துடன் தொடர்புடையது.

இங்கு குறிக்கப்பட்ட எல்லா கலைகளும் ராமாயணம் அல்லது பாகவதத்துடன் தொடா¢புடையன. வைணவ சம்பிரதாயங்களையும் ராமாயணக் கதைகளையும் சாதாரண பாமரனுக்கு நாட்டார் கலைகள் வழி கொண்டு சென்றதில் ஆந்திரர்களுக்கு முக்கிய இடம் உண்டு. பிற்காலச் சோழர் காலத்திலேயே ஆந்திரரின் தொடா¢பு தமிழகத்திற்கு இருந்தாலும் ராமாயணம் பாமர மக்களிடம் சென்றது நாயக்கர்கள் காலத்தில்தான். தமிழின் உன்னதமான கவிஞன் கம்பன் செல்லாத இடங்களிலும் தெலுங்கு ரங்கநாத ராமாயணம் தன் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தென்னிந்திய மாநிலங்களில் ராமாயணத்தின் தாக்கம் அதிகம் உள்ள மொழி தெலுங்கு என்பதை ராமாயண ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். செவ்விலக்கியங்களில் மட்டுமல்ல நாட்டார் வழக்காறுகளில் ஆழக் கால் பதித்த ராமாயணத் துணுக்குகள் தெலுங்கில் பல உண்டு. ஆறு அல்லது குளத்தில் குளிக்கும் போது மரணச் செய்தியைக் கேட்டால் இராமா எனக் கூறுவது அங்குள்ள மரபு இங்கு இராமா என்பதற்கு ஐயோ அப்படியா என்பது பொருள்.

இங்கு செவ்வியல் வழக்கில் அல்லாமல் வட்டார ரீதியான ராமாயண வடிவங்கள், நாடகம், கூத்து வடிவங்கள் கிடைத்துள்ளன. இவை கதை வடிவங்கள். ஆந்திராவில் மட்டும் 18க்கும் மேற்பட்ட இராமாயண வடிவங்கள் கிடைத்துள்ளன. இவை 12ஆம் நூற்றாண்டிற்கும் 19ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டவை.

ஆந்திராவின் முதல் ராமாயணமாக பாஸ்கர ராமாயணத்தைக் கூறுகின்றனர். கம்பன் காலத்திற்குச் சமகாலத்திலோ பிந்தியோ எழுதப்பட்டிருக்கலாம் என்ற கருத்து உண்டு. இந்நூல் வான்மீகியிலிருந்து சில இடங்களில் வேறுபடுகிறது. நூலாசிரியர் தன் சமகால வாய்மொழி மரபை பெரிதும் பயன்படுத்தி இருக்கிறார். குமார கம்மண்ணர் மதுரை வந்தபோது (1371) இந்த ராமாயணமும் தமிழகம் வந்தது. இதன் பல நிகழ்ச்சிகள் வாய்மொழியாகவும் பரவியது. முக்கியமாகத் தெலுங்கு மொழி பேசியவர்கள் குடியேறியபோது இக்கதை வழக்கில் வந்தது.

ரங்கநாத மகாத்மியம் (ராமாயணம்) கி,பி, 1240இல் எழுதப்பட்டது. இதன் மொத்த வரிகள் 34580. இந்தியாவிலேயே நாட்டார் ராமாயண மரபைப் பெருமளவில் பயன்படுத்திய நூல் இது என்று கூறுகின்றனர். ஆந்திர தோல்பாவைக் கூத்திற்குரிய மூலப் பனுவலே இந்த ராமாயணம்தான். இந்நூலின் ஆசிரியரான புத்தாரெட்டி இசைக் கலைஞரும் கூட. இதனால் இந்த ராமாயணத்தை ஆந்திரத் தோல்பாவைக்கூத்துக் கலைஞர்கள் விரும்பி ஏற்றனர் என்கின்றனர்.

நிர்வகள உத்திர ராமாயணம் 16ஆம் நூற்றாண்டினது. சம்பு வடிவம், உத்திரகாண்ட நிகழ்ச்சியை விவரிக்க எழுதப்பட்டது. தமிழகத்து ஒட்டக்கூத்தரின் உத்திரகாண்டத்திலிருந்து வேறுபட்டது. இந்த நூலில் வரும் மயில்ராவணன் கதை தமிழக நாட்டார் மரபில் அம்மானையாய் வடிவம் பெற்றிருக்கிறது.

மேலும் வாசிட்ட ராமாயணம் (கி.பி. 14நூற்) மொல்ல ராமாயணம் (கி.பி. 16 நூற்) சகலவர்ண பூர்ணா இராமாயணம் (கி.பி.13நூற்) சீதா விஜயம், அற்புத ராமாயணம், ஸ்ரீகிருஷ்ணா ராமாயணம். அத்யாத்ம ராமாயணம் மைராவண சரிதம் (கி.பி.15நூற்) வான்மீகி (மொ.பெ) கோவிந்த ராமாயணம் (1820) சுக்கிரீவ விஜயம் (யட்சகானத்திற்கு) ஞானபீட விருது பெற்றவரான விஸ்வநாதர் (1893-1974) இயற்றிய விசுவநாத ராமாயணம் என 17க்கு மேல் வரும். இவற்றில் விசுவநாத ராமாயணம் சென்னை பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டத்தில் இருந்தது.

தமிழகத் தோல்பாவைக் கூத்து ஆந்திர ரங்கநாத ராமாயணத்திற்கு முழுதும் கடன்பட்டது. இந்த ராமாயணம் தஞ்சை மராட்டிய ஆட்சிக் காலத்தில் (1659-1855) அறிமுகமாகிவிட்டது. இக்காலத்தில் தோல்பாவைக் கூத்தை தமிழில் நடத்திய மராட்டியக் கலைஞர்கள் தங்கள் ராமாயணத்துக்கு மூலமாக ரங்கநாத ராமாயணக்கதை நிகழ்ச்சிகளையே பெரிதும் எடுத்துக் கொண்டனர்.

தமிழகத்துத் தோல்பாவைக் கூத்து நிகழ்ச்சி வான்மீகிக்கோ கம்பனுக்கோ கடன்பட்டதல்ல. தென்மாவட்டங்கள் புகழ்பெற்றிருந்த கோபாலராவ் (1882-1976) சில கம்பராமாயணப் பாடல்களை 30களின் இறுதியில் பாடினார்; அது தமிழறிஞன் பி.ஸ்ரீயின் தூண்டுதலால் பாடப்பட்ட நிகழ்வு. கோபாலராவின் மகன் பரமசிவராவ் (1940-) சில பாடல்களைப் பாடினார். அவர் அப்பாவிடமிருந்து கற்றதாகச் சொன்னார். இவரைத் தவிர வேறு எந்தக் கலைஞர்களுக்கும் கம்பனிடம் தொடர்பு இல்லை.

தோல்பாவைக்கூத்துக் கலைஞர்கள் எல்லாவற்றையும் இலவசமாகப் பெற்று இலவசமாகவே கூத்து நடத்திய காலத்தில். தென்மாவட்டங்களில் இவர்களைப் பெரிதும் புரந்தவர்கள் தெலுங்கு பேசிய மக்களே. மூலக் கருப்பட்டி, முனைஞ்சிப்பட்டி, ரெட்டியார் பட்டி, செவல்பட்டி என்னும் கிராமங்களில் தோல்பாவைக்கூத்துக் கலைஞர்களுக்கு இருந்த வரவேற்பை சுப்பையாராவ் சொல்லியிருக்கிறார். 80களின் பாதியில் ரெட்டியார் பட்டியில் பரமசிவராவின் கூத்தை நான் பதிவு செய்தபோது நேரடியாக அறிந்தேன். இந்தப் பின்னணியில் ரங்கநாத ராமாயணம் தோல்பாவைக் கூத்தில் செல்வாக்கு பெற்றதைப் பார்க்க வேண்டும்.

தமிழகத் தோல்பாவைக் கூத்தில் ஆந்திர ராமாயணம் தொடர்பான சில நிகழ்ச்சிகளை மாதிரிக்குப் பார்ப்போம்.

இந்திரஜித் போரில் இறந்ததும் அவனது கை மட்டும், இராவணனின் அரண்மனைக்குச் செல்கிறது; அங்கு இந்திரஜித்தின் மனைவி சுலோசனாவின் முன்னே சென்று நிற்கிறது. அவளுக்குப் புரிந்து விட்டது; ஏற்கெனவே கணவன் சொன்ன அடையாளம் அது. அவள் கணவனின் உடலைத் தேடி போர்க்களத்திற்குச் செல்லுகிறாள். இராமனைக் கண்டு ஓவென அழுகிறாள்.

இராமன் மவுனமாக லட்சுமணனைப் பார்க்கிறான். தன் உள்ளங்கையைப் பார்க்கிறான். லட்சுமணனிடம் காட்டுகிறான். லட்சுணனுக்குத் தன் முந்திய பிறவி நினைவுக்கு வருகிறது. சுலோசனா தன் மகள்; முந்தைய பிறவியில் தான் நாககன்னிகையின் மகள் என்பதெல்லாம் சித்திரம்போல் கண்ணுக்கு முன்னே ஓடுகிறது. அவனுக்கு அழுகையும் கோபமும் மேலெழுகிறது. “என் மகளை விதவையாக்கியது யார்? அவனைக் கொல்லுகிறேன்” என எழுகிறான். இராமன் அவன் நினைவை மாற்றுகிறான்.

இது தோல்பாவைக்கூத்துக் கதை. கம்பனிலோ தமிழ்நாட்டு வேறு ராமாயண வடிவங்களிலோ இல்லாதது; ஆந்திர மக்களின் வழி வந்த நிகழ்வு. தோல்பாவைக் கூத்தில் வரும் சூர்ப்பநகை தெலுங்கு ரங்கநாத ராமாயணத்தின் மறுபதிப்புதான். இக்கூத்தில் சூர்ப்பநகையின் கணவனின் பெயர் வித்தியாசிங்கன் மகன் ஜம்புகாசுரன்.

வித்தியாசிங்கன் இராமனைவிட மாபெரும் வீரன். ஒருமுறை இராவணனை சிறு பூச்சியை எடுப்பதுபோல் பிடித்து தன் வாயில் போட்டுக்கொண்டான். இதனால் இராவணன் வித்தியாசிங்கன் இருந்தால் தனக்கு ஆபத்து என உணா¢ந்து சூர்ப்பநகையின் மூலம் வித்தியாசிங்கனின் உயிர் இருக்கும் இடத்தை அறிந்து சூர்ப்பநகையின் வழி தந்திரமாக அவனைக் கொன்று விடுகிறான்.

சூர்ப்பநகையின் மகன் செண்பகசுரனை ஒருமுறை லட்சுமணன் அறியாமல் வாளால் வெட்டிவிடுகிறான். இதனால் சஞ்சலமடைந்த சூர்ப்பநகை இராவணன் மீதும் லட்சுமணன் மீதும் வெறுப்பு கொள்கிறான். தோல்பாவைக்கூத்தில் இந்த நிகழ்ச்சி சூர்ப்பநகை வாய்வழி சொல்லப்படுகிறது.

வித்தியாசிங்கனைப் பற்றிய இந்தக் கதை கம்பனில் இல்லை. தோல்பாவைக்கூத்தில் உண்டு. தென்மாவட்டங்களில் அபூர்வமாய் வழக்கில் இருந்த இராமகீர்த்தனம் என்னும் வில்லிசைப்பாடலிலும் சூர்ப்பநகை பற்றிய இந்த நிகழ்ச்சி வருகிறது. இதன் ஆசிரியர் திருவானந்தம்; இவர் 1758-1828ஆம் ஆண்டுகளில் வாழ்ந்திருக்க வேண்டும். இவரது கதைப்பாடலில் வதைகன் காண்டம் பகுதியில் சூர்ப்பநகையின் மகளின் இறப்பு பற்றிய செய்தி வருகிறது. இதே நிகழ்ச்சி தோல்பாவைக் கூத்திலும் காட்டப்படுகிறது. இரண்டிற்கும் மூலம் தெலுங்கு ராமாயணம்

தென்திருவிதாங்கூரில் ஞானியாகவும் புரட்சியாளராகவும் வாழ்ந்த அய்யா வைகுண்டரின் அகிலத்திரட்டிலும் சூர்ப்பநகை பற்றிய செய்தி வருகிறது. இது தோல்பாவைக்கூத்து நிகழ்ச்சிக்கும் இராமகீர்த்தனத்துக்கும் ஒத்துப்போவது. இதனால் ஆந்திரமக்களின் குடியேற்றப் பகுதிகளில் - தெலுங்குமொழி ராமாயணச் செய்திகள் பரவலாக புழங்கியிருப்பதாகக் கருதலாம்.

கோபாலராவ் நடத்திய ராமாயண யுத்தகாண்ட நிகழ்வில் இராவணனின் அண்ணன் சகஸ்வர கண்டனுடன் போர் செய்ததாகவும் ராமன் எதிர்க்க முடியாத நிலையில் கையற்று இருந்ததாகவும் அப்போது சீதை காளி உருவம் எடுத்து சகஸ்வர கண்டனைக் கொன்றதாகவும் பின்னணிக் குரலில் கூறுவாராம். 70களில் சுப்பையாராவும் 80களில் பரமசிவராவும் கூட இந்தக் கதை நிகழ்வைக் கூறினர். இப்படி ஒரு செய்தி கம்பனில் இல்லை. இது தெலுங்கு அற்புத ராமாயணம் வழி தமிழகத்தில் பரவியிருக்கலாம்.

தமிழில் கிடைக்கின்ற யட்சகானங் களில் சுக்கிரீவனைப் பற்றிய ஒரு யட்சகானம் உண்டு. இது தெலுங்கு யட்சகானத்தின் மொழிபெயர்ப்பு. கும்பகோணம் ராமசாமிக்கோவிலில் அனுமான் வீணை மீட்டுவது போன்ற ஒரு சிற்பம் உள்ளது. இதே வடிவத்தைக் கும்பகோணம் கடைகளிலும் விற்பனை செய்கின்றனர். அனுமன் இசைக்கலை ஞனாக இருந்தான்; நாரதரிடம் வீணை கற்றான்; அகத்தியருக்குச் சமமாகப் வீணைமீட்டுவான் என்னும் கதைகள் தமிழ் மரபு இராமாயணங்களில் இல்லை. இதே விஷயம் ‘மடாகோவிந்த தீட்சதர்’ என்பவர் எழுதிய சங்கீத கதா என்ற நூலில் உள்ளது. தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட இந்நூலின் ஒட்டுப் பிரதி தஞ்சையில் கிடைத்திருக்கிறது.

இராவணனுக்கு ஒரு தம்பி இருந்தான். அவன் இராமனை மயக்கித் தன் பாதாள உலகிற்குக் கொண்டு சென்றான். இராமனைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனுமனுக்கு. அதனால் இராமனை மீட்பேன் இல்லையேல் இறப்பேன் என்னும் சபதத்துடன் பாதாளத்துக்குப் போகிறான் அனுமன். அங்கு மயில் ராவணனைக்கண்டு கொன்று இராமனை மீட்கிறான்.

இந்தக் கதை தமிழ் மரபு ராமாயணங் களில் சொல்லப்படாதது. கம்பனிடம் இல்லை. தமிழில் இது புகழேந்திப் புலவர் பெயரில் அம்மானை வடிவில் உள்ளது. மயில்ராவணன் கதை என்னும் போ¤ல் உள்ள இக்கதைப் பாடல் 1885இல் அச்சில் வந்துள்ளது. மயில்ராவணன் கதை சமஸ்கிருத மரபிற்குத் தொடர்பில்லாதது. இக்கதை முதலில் தெலுங்கு ஆனந்த ராமாயணத்தில் வருகிறது.

இந்தியாவில் 25 மொழிகளில் மயில் ராவணன் கதை வேறு வேறு வடிவங்களில் உள்ளது. இந்தக் கதைகள் வட்டாரரீதியான மாறுபாடு உடையன. எழுத்து வடிவில் உள்ள இக்கதைகள் தவிர வாய்மொழி வடிவிலும் நிறைய உள்ளன. இவற்றில் சிலவே தொகுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் நீலகிரியில் வாழும் பாறுகுறும்பர் என்னும் பழங்குடியினரிடம் வழக்கில் இருந்த மயில்ராவணன் கதையை டைட்டர்சாம் என்பவர் 1974இல் தொகுத்திருக்கிறார். இதில் தெலுங்கு ராமாயணச் செல்வாக்கு உண்டு.

தமிழில் மயில்ராவணன் எனச் சொல்லப் பட்டாலும் பேச்சுவழக்கில் மயிராவணன் என்றே சொல்லப்படுகிறான். மஹி - - மயி - பாதாளம் என்பதைக் குறிக்கும் சொல் மயில் ஆகி விட்டது. தமிழில் அம்மானை வடிவம் மட்டுமல்ல ‘ஹனுமந்த விஜயம்’ என்னும் ஒரு கதையும் உண்டு; இது தெலுங்கு மொழியின் தமிழ் வடிவம்; அச்சில் வரவில்லை.

மாதவையா என்பவர் தெலுங்கு மொழியில் இயற்றிய மைராவணன் சரித்திரம் மூன்று காண்டங்களை உடையது; கி.பி.15ஆம் நூற்றாண்டினது. இதன் பாதிப்பு மயில்ராவணன் கதையில் முழுதும் உண்டு என்கின்றனர். மாதவையா தமிழகத்தில் வாழ்ந்தவர். பி.பி.சாமிநாதன் என்பவர் தெலுங்கு மொழியில் மைராவணன் கீர்த்தனை ஒன்று இயற்றியுள்ளார். இவர் தமிழ்நாட்டில் வாழ்ந்தவர். தமிழக நாயக்கர் காலத்தவர்.

தமிழகத்தில் தோல்பாவைக் கூத்திலும் மயில்ராவணன் கதை நிகழ்த்தப்பட்டது; சுப்பையாராவ் மயில்ராவணக் கதை என்ற போ¤ல் நடத்தினார். பெரும்பாலும் மற்ற கலைஞர்கள் மச்சவல்லபன் போர் என்னும் போரில் மயில் ராவணன் கதையை நடத்துகின்றனர். அனுமானுக்குக் கடலில் உள்ள ஒரு மச்சகத்திற்கும் பிறந்தவன் மச்சவல்லபன். அனுமன் தன் மகன் எனத் தெரியாமலே மகனுடன் மோதுகிறான்.

சுப்பையாராவ் “தஞ்சாவூரிலிருந்து எங்கள் சாதிக்காரர்கள் குடிபெயர்ந்தபோது மதுரையில் ராமாயணக் கதை மட்டுமல்ல மச்சவல்லபன் கதையையும் நடத்தினார்கள். நாயக்க சாதிக்காரங்க விரும்பி அதை நடத்தச் சொல்லுவார்கள்” என்றார்.

தமிழகத்திற்கு ராமாயணம் மட்டுமல்ல கதைப்பாடல்கள், நாடகம், போன்றவற்றிக்கும், ஆந்திரர்களின் நன்கொடை உண்டு, உதாரணத்திற்கு இரண்டு பார்க்கலாம். சாரங்கதாரா என்ற நாடகம் தமிழகத்தில் பரவலாக அறியப்பட்டது; இது திரைப்படமாகவும் வந்தது.

தமிழகத்தில் சிவன் கோவில்கள் சிலற்றில் சாரங்கதாரா நாடகம் தேவதாசிகளால் நடிக்கப்பட்டது என்பதை மிகச் சிலரே சொல்லியிருக்கின்றனர். சுசீந்திரம் கோவில் என்னும் பி.எச்.டி. ஆய்வேட்டில் (1953) டாக்டர் கே.கே.பிள்ளை இந்தக் கோவிலில் சாரங்கதாரா நாடகம் தேவதாசிகளால் நடத்தப்பட்டதைக் குறிப்பிடுகிறார். இதே காலத்தில் வேறு கோவில்களிலும் நடிக்கப்பட்டிருக்கிறது.

தமிழக அரசு ஓலைச் சுவடி நூலகத்தில் சாரங்கதாரா யட்சகானம் ஏடு உள்ளது. இது அச்சில் வரவில்லை. சாரங்கதார அம்மானையை ஏகாம்பரநாத முதலியார் என்பவர் பதிப்பித்திருக்கிறார் (1906). வாசகப்பா வடிவிலும் இக்கதை வந்திருக்கிறது (1909) சாரங்கதாரா இசை நாடகம் ஒன்று (1908) வந்திருக்கிறது. இது முழுதும் இசைப் பாடல் வடிவிலானது.

சங்கரதாஸ் சுவாமிகள் - சாரங்கதாரா நாடகத்தை மேடை ஏற்றியிருக்கிறார். தஞ்சை தமிழ்ப் பல்கலைப் பேராசிரியர் இராமாநுஜம் என்னிடம் சாரங்கதாரா நாடகப் பிரதி ஒன்றைத் தந்தார். அது ஸ்பெஷல் - நாடகக் கம்பெனியாருக்குரியது. தெலுங்கு நாடகப்பிதாமகரான கிருஷ்ணமாச்சாரியார் சென்னையில் இந்த நாடகத்தை நடத்தியிருக்கிறார். முழுக்கவும் தெலுங்கு மொழியில் நடந்த இந்த நாடகத்தைப் பம்மல் சம்பந்த முதலியார் பார்த்திருக்கிறார். இந்த உத்வேகத்தில் இந்நாடகத்தைத் தமிழில் மேடை ஏற்றினார் (1912) இது 198 முறை மேடையில் நடிக்கப்பட்டிருக்கிறது.

சாரங்கதாரா திரைப்படம் இந்தி, தமிழ் இரண்டிலும் ஒரே சமயத்தில் வந்தது (1936) அப்போது இப்படம் படு தோல்வியடைந்தது. 1956இல் தமிழில் சாரஙகதாரா படம் வந்தது. சிவாஜி, பானுமதி நடித்த இப்படம் 100 நாட்கள் ஓடியது. இப்போது நாம் அடிக்கடி கேட்கும் வசந்தமுல்லை... என்னும் பாடல் இப்படத்தில் வருவது.

இந்த சாரங்கதாரா கதை தமிழிற்கு ஆந்திர மக்கள் வழி 17ஆம் நூற்றாண்டிலேயே அறிமுகமாகி விட்டது. தெலுங்கு யட்சகானம் வழி தமிழகத்திற்கு வந்திருக்கலாம். சாரங்கதாரா கதை ஆந்திராவில் 16ஆம் நூற்றாண்டில் வழக்கில் இருந்தது. இக்கதையை தெலுங்கு மொழி நூலான துவிபத பாகவதம் கூறுகிறது. இந்நூல் 16ஆம் நூற்றாண்டினது. சாரங்கதாரா தெலுங்கு மூலத்தில் வரும் இடங்களில் பழைய வேங்கியான ராஜமுந்திரியும் ஒன்று. இதில் குறிப்பிடப்படும் அரசர்களில் ஒருவன் ராஜேந்திரன்.

ஆந்திரர்களின் கொடையில் முக்கியமான கதை நல்லதங்காள் கதை. புகழேந்திப் புலவர் போ¤ல் உள்ள நல்லதங்காள் அம்மானையை கருணானந்த சுவாமிகள் 1869இல் முதலில் அச்சிட்டு வெளியிட்டார். தொல்லியல் துறை அதிகாரி தெ.கோபாலன், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பிலிருந்து நல்லதங்காள் கதை ஏடு ஒன்றைச் சேகரித்தார்; இது பாடல் வடிவானது. இதற்கு வேறு ஏடுகளும் உண்டு. இது அச்சில் வரவில்லை. வாய்மொழி வடிவிலும் நல்லதங்காள் கதை பாடப்படுகிறது. ஹிட்இன்ஸ் நாடகக் கம்பெனியார் தயாரித்த ஒலிவடிவ ரிகார்டு ஒன்று உண்டு. இது பெருமளவு பாடல்களைக் கொண்டது. இதை நான் பதிப்பித்திருக்கிறேன். (நல்லதங்காள். காவ்யா. 2004). நல்லதங்காள் கதை திரைப்படமாகவும் வந்துள்ளது.

தமிழகத்தில் நல்லதங்காள் கதை பரவலானதற்குத் தோல்பாவைக் கூத்துக் கலையும் ஒரு காரணம். இக்கூத்தில் இராமாயண நிகழ்ச்சி முடிந்த மறுநாள் நல்ல தங்காள் கதை நடத்துவது ஒரு மரபு. கூத்து நடக்கும் மொத்த நாட்களில் அதிக வசூல் நல்லதங்காள் கூத்துக்குதான். சில சமயம் பார்வையாளர்களின் வேண்டுகோளால் இரண்டாம் முறையும் நல்லதங்காள் கதை நடத்துவதுண்டு.

நல்லதங்காள¤ல் மழை இல்லாமல் பஞ்சம்; வறுமை; அதனால் அவள் தன் ஏழு குழந்தைகளுடன் அண்ணன் வீட்டிற்குச் செல்லுகிறாள். அங்கே அண்ணன் இல்லை. அண்ணனின் மனைவி அவளைக் கொடுமைப் படுத்துகிறாள். அதனால் நல்லதங்காள் ஏழு குழந்தைகளையும் கிணற்றில் தள்ளிவிட்டுத் தற்கொலை செய்து கொள்ளுகிறாள். அண்ணன், தங்கையின் பழி தீர்க்க மனைவியைக் கொல்லுகிறான்.

தமிழகத்தில் நல்லதங்காளுக்கு விருதுநகர் மாவட்டம் வத்ராஇருப்பு அருகே ஒரு கிராமத்தில் கோவில் உள்ளது; வழிபாடு உண்டு. நல்லதங்காள் கதை ஆந்திர மாநிலத்திற்குரியது என்ற கருத்தை முதலில் பேரா.நா.வானமாமலை அவர்களே முன்வைத்திருக்கிறார்.

நா.வா. ஒருமுறை ஹைதராபாத் நாட்டார் வழக்காற்றியல் அறிஞர் நாராயண கிருஷ்ணனிடம் தமிழக நல்லதங்காள் கதையைச் சொல்லி இருக்கிறார். நாராயணன் ஆந்திர மாநிலத் தெருப்பாடர்கள் பாடும் நல்லதங்காள் கதையைச் சொல்லி இதன் மூலம் ஆந்திரா என்றாராம். அதோடு கம்மவர்கள் தமிழகத்திற்குக் குடிபெயா¢ந்த போது இந்தக் கதையும் வந்தது என்றாராம். நா.வா. இக்கதை 1946இல் கம்மவர்களால் பேசப்பட்டதற்குச் சான்று தேடியிருக்கிறார்.

தமிழக நல்ல தங்காள் கதைக்கும் ஆந்திர நல்லதங்காள் கதைக்கும் வேறுபாடுண்டு. முக்கியமாக விவசாயக் குடும்பங்களின் பாதிப்பு இக்கதையின் மையம். இதே கதை கன்னடத்தில் “ஹைன்னோத்து ஹெங்கலு” என்னும் பெயா¤ல் வழங்கியது. ஆந்திரக் கதையிலிருந்து வேறுபட்டது என்றாலும் மூலக்கதை ஆந்திராவுக்குச் சொந்தமானது. கேரளத்தில் இக்கதை இல்லை.

தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு வாழ்ந்து அகால மரணமடைந்து தெய்வமானவர்கள் தமிழ்நாட்டில் வழிபடு தெய்வங்களாக உள்ளனர். இவர்களைப் பற்றிய தமிழ் வில்லுப்பாட்டுகள் உள்ளன. கேரளத்துப் பிராமணனான முத்துப்பட்டன் என்பவன் பொம்மக்கா திம்மக்கா என்னும் இரண்டு பேரை மணந்தான். இருவரும் தெலுங்கு மொழி பேசியவர்கள். முத்துப்பட்டன் கொலைப்பட்டபின் மனைவியர் சிதையில் ஏறினர். மூவரும் தெய்வமாயினர். இவர்களைப் பற்றிய கதைப் பாடல் உண்டு. இவர்களை தமிழர்கள் வழிபடுகின்றனர். இவர்களைப்போல் மாகாளி அம்மன் (பொள்ளாச்சி நாயுடு) சௌண்டீஸ்வரி (தேவாங்கர் செட்டி) சென்னாதேவி (வேலூர்) துளசி (ஆந்திர தமிழ் எல்லை) ஜக்கம்மா (கம்பளத்தார்) என இப்படியாக ஒரு பெரிய பட்டியலைக் கூறலாம்.

வில்லுப்பாட்டு கதைகளில் ஆந்திர மக்களுடன் தொடர்புடையவையும் உண்டு. பொன்னிறத்தாளம்மன் கதையின் நாயகன் நாயக்க சாதியினன். இவனை கதைப் பாடல்

மதுரை நாடதிலே திருமலைவாழ்

நாயக்கன் மகன்

தளவாய் நாயக்கன் மகன் தக்க

இணை சூரனுமோ

என்று கூறும். இக்கதையின் நாயகன் மதுரை திருமலை நாயக்கரின் (1923 - 1658) உறவினன். இவனது மனைவி பொன்னிறத்தாள். இவர் திருடர்களால் கொல்லப்பட்டு தெய்வமாகிறாள். இவளைத் தமிழ்பேசும் நாடார் மக்களே வழிபடுகிறார்கள். இதே கதையின் மலையாள வடிவமும் உண்டு.

தமிழர்களின் கோவில் கட்டுமானம், சிற்பம், ஓவியம் என்பவற்றில் நாயக்க அரசர்களின் நன்கொடை பண்பாட்டு அடிப்படையில் விரிவாக ஆராயப்படவில்லை. குறிப்பாக இராமாயணம் தொடர்பான சுவரோவியங்களைச் சொல்லலாம்.

செங்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி கோவில் 700 ஆண்டுகள் பழமையானது. இங்கு, மகா மண்டபத்தில் ராமாயண ஓவியங்கள் உள்ளன. தளவாய் நாயக்கன் என்னும் குறுநில மன்னன் காலத்தது இந்த ஓவியங்கள். இவற்றில் அங்கதனும், அனுமனும் மண்டோதரியின் துகிலை உரிந்து அவமானப் படுத்தும் ஓவியம் உள்ளது. இராவணனின் தலத்தைக் கலைக்க மண்டோதரியின் துகிலையும் மார்புக் கச்சையையும் உரிவது என்ற கதை நிகழ்ச்சி வடஇந்தியாவிலிருந்து ஆந்திரம் வந்தது. பின் தமிழகம் வந்தது.

ஆனந்த ராமாயணம். அத்யாத்ம ராமாயணம் ஆகியவற்றில் உள்ள இந்த நிகழ்ச்சி ஆந்திர ரங்கநாத ராமாயணத்திலும் வருகிறது. இதே நிகழ்ச்சி தமிழக வாய்மொழி மரபிலும், வில்லுப்பாட்டிலும் வருகிறது. (ராமசாமி கதைப்பாங்கு) இதுபோன்று எவ்வளவோ உள்ளன. விரிவாக ஆராயப்பட வேண்டியவை.

பின் இணைப்புகள் எண் 1

கீழை நாட்டுமொழிகளில் திபெத்திய மொழி

துன்ஹீவாங் கி.பி.9ஆம் நூற்.

உரைநடை வடிவம் கி.பி. 13ஆம் நூற்.

இந்தோனேசியா மொழி

(பழைய ஜாவானிய மொழியில் கி.பி. 10-11ஆம் நூற்றாண்டில் ஒரு ராமாயணம்)

ஜப்பானிய மொழி

ஹொபுத்க்ஷீ கி.பி.12 நூற்.

சம்போ எகொடோபா

கி.பி.12 நூற்.

பர்மியமொழி

ராமவத்து கி.பி.17ஆம் நூற்.

மலாய் மொழி

ஹகாயத்செரிராமா கி.பி. 13ஆம் நூற்.

பிலிப்பைன்ஸ்மொழி

மகாரடிய லாவன கி.பி.17ஆம் நூற்.

தாய்மொழி

ராமகியேன் கி.பி. 18ஆம் நூற்.

லாவோஸ் மொழி

குவாய்துபாரபி கி.பி.18ஆம் நூற்.

பிராலச் பிரலாம் கி.பி.ஆம் நூற்.

பங்களாதேஷ்

சிங்களம்

பி.இ.எண் - 2

சமஸ்கிருத மொழிகளில் உள்ள மூலங்கள் வான்மீகி ராமாயணம் கி.மு. 4-5ஆம் நூற்.

இரகுவம்சம் கி.பி. நூற்.

பட்டிகாவியம் கி.பி. 7ஆம் நூற்.

(இராவணவதம்)

ஜானகிஹரன் கி.பி.8, 9ஆம் நூற்.

இராமசரிதம் கி.பி.10ஆம் நூற்.

சம்புராமாயணம் கி.பி.11ஆம் நூற்.

இராமாயண மஞ்சரி கி.பி. 12ஆம் நூற்.

புசுண்டி ராமாயணம் கி.பி.12ஆம் நூற்.

அத்யாத்ம ராமாயணம் கி.பி.15ஆம் நூற்.

ஆனந்த ராமாயணம் கி.பி. 15ஆம் நூற்.

ராமாயணக் கதையைக் கூறும் வேறு சமஸ்கிருத புராணங்கள்

வியாச பாரதம் கி.மு. 4 - 5

நரசிம்மபுராணம் கி.மு. 5 நூற்.

பாகவதம் கி.பி.7ஆம் நூற்.

பத்மபுராணம் கி.பி.12ஆம் நூற்.

பி.இ.எண் - 3

பாலிமொழியில் அமைந்த ராமாயணம்

தசரத ஜாதகம் கி.மு. 5ஆம் நூற். (பவுத்தம் சார்பு)

அளாமக ஜாதகம் கி.மு. 3ஆம் நூற்.

தசரத சதானம் கி.மு. 1ஆம் நூற்.

பிராகிருத மொழியில்

பௌமசறியு கி.மு.4 - 5ஆம் நூற். (சமணம்)

வாசுதேவ ஹிண்டி கி.பி. 5ஆம் நூற். (சமணம்)

இராவண வதை அல்லது கி.பி.6ஆம் நூற்.

சேதுபந்த

உத்திரபுராணம் கி.பி.9ஆம் நூற் (சமணம்)

- அ.கா.பெருமாள்

Pin It