vairamuthu 450வறுமையில் வாடியவர்கள் பொருளைப் பெற்றபின் மகிழ்ச்சியோடு வருகின்றார்கள். அப்போது வறுமையால் வாடிய ஒரு கூட்டம் எதிர்ப்படுகின்றது. தாம் பொருள் பெற்றதைப் போன்று அந்தக் கூட்டத்தாரும் பெறவேண்டும் என்னும் நல்லெண்ணத்தில் வழி கூறி நெறிப்படுத்தலே ஆற்றுப்படை என்னும் இலக்கியமாகும்.

பத்துப்பாட்டு என்னும் பத்துப் பழந்தமிழ் பாடல்களில் ஐந்து ஆற்றுப்படை நூல்களாகும். திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் என்னும் கூத்தராற்றுப்படை என்பவை அவை. இவற்றுள் முன்னுள்ளதைத் தவிர மற்றைய நான்கும் வறுமையில் வாடிய கலைஞர்களைப் பரிசில் பெற்ற கலைஞர்கள் மன்னர்களிடமும் வள்ளல்களிடமும் பரிசில் பெற ஆற்றுப்படுத்துபவை ஆகும்.

பொருள் வேண்டியோரை ஆற்றுப்படுத்தும் பாடல்கள் பற்றியே தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் / ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப் / பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச் / சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும் (தொல்.பொருள். 88 : 3-6).

கூத்தர், பேரியாழ் இசைக்கும் பெரும்பாணர், சிறுயாழை இசைக்கும் சிறுபாணர், ஏர்க்களமும் போர்க்களமும் பாடும் பொருநர் என இவர்களுக்குப் பொதுவானவர் ஆடற்கலையில் வல்ல பெண்பாலர் விறலியர். மூன்று வகைக் கலைப் பிரிவினருக்கும் ஆடற்கலை பொதுவானது என்பதால் கூத்தர், பாணர், பொருநர் என மூவரையும் குறிப்பிட்டு அடுத்துத் தொல்காப்பியர் விறலியைக் குறிப்பிடுகின்றார்.

மலைபடுகடாம் கூத்தரை ஆற்றுப்படுத்துவது: சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை பாணரை ஆற்றுப்படுத்துவன. பொருநராற்றுப்படை களம்பாடுவோரை ஆற்றுப்படுத்துவது. இவை நான்கும் வறுமையில் வாடும் கலைஞர்களைப் பொருள் பெறுவதற்காக ஆற்றுப்படுத்துபவை ஆகும் இறைவன் அருள்பெற்ற புலவர் ஒருவர் பெறாத புலவரை ஆற்றுப் படுத்துவதே திருமுருகாற்றுப்படை.

முருகாற்றுப்படை என்பதற்கு முருகன்பால் வீடுபெறுவதற்குச் சமைந்தான் ஓர் இரவலனை ஆற்றுப்படுத்து வது என்பது பொருளாகக் கொள்க (தொல்.பொருள். 91) நச்சினார்க்கினியர் விளக்கம் அளிக்கின்றார். எனவே, தொல்காப்பியர் குறிப்பிடும் ஆற்றுப்படை அமைப்பில் இருந்து திருமுருகாற்றுப்படையை ஒரு வளர்ச்சி நிலையாகவே கொள்ளவேண்டும்.

நச்சினார்க்கினியர் முருகாற்றுப்படை என்று குறிப்பிடும் இந்நூலுக்குப் புலவராற்றுப்படை என்னும் பெயரும் உள்ளது. இருப்பினும் திருமுருகாற்றுப்படை என்னும் பெயரே பெருவழக்காக உள்ளது. பழந்தமிழ் வழிபாட்டு முறை சிறு தெய்வ வழிபாட்டு முறையில் அமைந்திருக்கும். எட்டுத்தொகையில் பரிபாடல், கலித்தொகை போலவே பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படை மற்றவற்றை விடக் காலத்தால் பிற்பட்டது. திருமுருகாற்றுப் படையைப் பாடிய நக்கீரர் சங்க காலத்திற்குப் பிற்பட்டவர் என்பது உறுதியாகும் (பத்து. ஆராய். 632) என மா.இராசமாணிக்கனார் குறிப்பதும் இவண் குறிப்பிடத்தக்கதாகும்.

காலந்தோறும் ஆற்றுப்படை நூல்கள் தோன்றிக் கொண்டிருக்கின்றன. அவை மேலுள்ள இருவகை அமைப்புகளிலேயே அடங்கிவிடும். இன்னொரு வகையான ஆற்றுப்படை நூல் மிகவும் வேறுபட்ட நிலையில், இக்காலத்திற்குத் தேவை என்னும் நிலையில் எழுதப்பட்டுள்ளது. வெளிவந்த ஒரே மாதத்திற்குள் (ஜூலை, 2019) பல பதிப்புகளைக் கண்டுள்ளது கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள தமிழாற்றுப்படை . 

எல்லா ஆற்றுப்படை நூல்களும் செய்யுள் நடையில் இருக்க, தமிழாற்றுப் படை மட்டும் உரைநடையில் இருக்கிறது. பரிசில் பெற்ற கூத்தரும் பாணரும் பொருநரும் பரிசில் பெறாது வறுமையில் வாடுவோரை ஒரு மன்னன் அல்லது ஒரு வள்ளலிடம் செல்லுமாறு ஆற்றுப்படுத்துவர். ஆனால், கவிஞர் வைரமுத்து தற்போது மக்களாலேயே தீண்டத்தகாத மொழியாகக் கருதப்படும் தமிழை இருபத்து நான்கு பெரு மக்களிடம் ஆற்றுப்படுத்துகின்றார்.

இந்த இருபத்து நான்கு பெருமக்களும் குறியீடுகள்தாம். இவர்கள் எல்லோரும் தமிழ் மொழியோடு தொடர்புடையவர்கள். ஏதாவது ஒருவகையில் தமிழுக்குத் தொண்டு செய்தவர்கள்; தமிழின் மேன்மையை வெளிப்படுத்தியவர்கள். கால அடிப்படையில் சிலரை ஒன்று சேர்க்கலாம்; பாடுபொருள் அடிப்படையில் ஒன்று சேர்க்கலாம்; தமிழரிடம் விழிப்புணர்வை ஊட்டிய அடிப்படையில் ஒன்று சேர்க்கலாம். சுருக்கமாகச் சொன்னால் தமிழர் வரலாறே இந்த இருபத்து நான்கு பேருக்குள் அடங்கி விடும்.

பொருள் பெற்ற கலைஞர், பொருள் பெறாதவரை ஆற்றுப்படுத்தும் ஆற்றுப்படை நூல்களில் இருந்து, தமிழாற்றுப்படை சற்று வேறுபடுகின்றது. ஒருவரிடம் இல்லை; இருபத்து நான்கு பெருமக்களிடம் நூலாசிரியர் தமிழை ஆற்றுப்படுத்துகின்றார்.

தமிழின் வளம் குன்றிவிட்டதா? இத்தனை பெருமக்களிடம் தமிழை நூலாசிரியர் ஆற்றுப்படுத்துவதற்கான காரணம் என்ன? என்றொரு வினா எழலாம். நாம் எவ்வளவுதான் கண்டும் காணாமலும் இருந்தாலும் தமிழ் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். தமிழைத் தாய்மொழியாகப் பெறாதவர்கள் கொடுத்த நெருக்கடியிலும் அது வாழ்ந்து கொண்டுதான் இருந்தது. இக்காலத்தில் எல்லோரும் சேர்ந்து கொடுக்கும் நெருக்கடியிலும் தமிழ் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

‘எங்கள் மூதாதையர் சேர்த்து வைத்த புண்ணியத்தைக் கொண்டு இன்னும் பலதலைமுறை பெருமையோடு வாழ்வோம்’ எனச் சிலர் பேச்சு வாக்கில் கூறுவார்கள். அந்தக் கூற்றுத் தமிழ் மொழிக்கு முற்றிலும் பொருந்தும். உலகச் செவ்வியல் மொழிகளில் ஈப்ரு, சமஸ்கிருதம் போன்ற மொழிகள் வழக்கிழந்து விட்டன. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ள பாணியின் அஷ்டாத்தியாயி என்னும் இலக்கண நூல், இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் மிகவும் தொன்மையானவை. அம்மொழி தானாக வழக்கு இழக்கவில்லை. தேவபாடையை மற்றவர்கள் கற்கக் கூடாது என்று கழுத்தை நெரித்து விட்டார்கள். இப்போது உயிரூட்டக் கோடிக் கணக்கில் மைய அரசு ஒதுக்கியுள்ளது.

மொழியியல் (Linguistics) என்னும் மொழி பற்றிய அறிவியல் ஆய்வு வளர வடமொழி இலக்கண நூல்களே காரணமாக இருந்தன என்று மொழியியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

தமிழாற்றுப்படையில் கவிஞர் வைரமுத்து தமிழை ஆற்றுப்படுத்தும் பெருமக்களில் பலர் இக்காலத் தமிழோடு தொடர்புடையவர்கள். எவ்வளவு இடுக்கண் வந்தாலும் சீரிளமையோடு வாழும் ஆற்றல் பெற்றது தமிழ்.

போகிறபோக்கில் ஒன்றைக் கூறிவிட்டுப் போவார்கள். அது வரலாற்றில் பெரும் அதிர்வுகளை உண்டாக்கும். அவற்றை நேர் செய்வதற்கு நீண்ட காலமாகும்.

இந்தியாவில் பேசப்படும் நான்கு மொழிக்குடும்பங்களில் தமிழ் சார்ந்த திராவிட மொழிக் குடும்பமும் சமஸ்கிருதம் சார்ந்த இந்தோ - ஆரிய மொழிக் குடும்பமும் வேறுவேறாக இருந்தாலும் நெருங்கிய தொடர்புடையவை. குறிப்பாக, ஒன்றுக்கொன்று சொற்களைக் கொடுத்து எடுத்துக்கொள்கின்றன. ஆனால் வடமொழி அறிந்த தமிழ் மண்ணில் பிறந்தவர்களே தமிழுக்குத் தாய்மொழி வடமொழியே என்று கைகூசாமல் எழுதுகின்றார்கள்.

பதினோராம் நூற்றாண்டில் புத்தமித்திரனார் என்பவரால் எழுதப்பட்ட வீரசோழியத்திற்கு அதே காலக் கட்டத்தில் உரை எழுதிய பெருந்தேவனார், தமிழ்ச் சொல்லிற்கு எல்லாம் வடநூலே தாயாகி நிகழ்கின்றமையின், அங்குள்ள வழக்கு எல்லாம் தமிழும் பெறும் (வீரசோ. 60) என எழுதுகின்றார்.

தொல்காப்பியம் சொல்லதிகாரத்திற்குப் பதின்மூன்றாம் நூற்றாண்டில் வடநூற் கடலை நிலை கண்டு உணர்ந்த சேனாவரையர் எழுதியுள்ள உரையில், தமிழ்ச் சொல் வட பாடைக்கண் செல்லாமையாலும் வடசொல் எல்லாத் தேயத்திற்கும் பொதுவாகலானும் இவை வடசொல்லாய் ஈண்டு வழங்கப்பட்டன எனல் வேண்டும் (தொல்.சொல். 401) எனக் குறிப்பிடுகின்றார். பதினேழாம் நூற்றாண்டில் இலக்கணக் கொத்து என்னும் இலக்கண நூலை எழுதிய சாமிநாத தேசிகர் மேலுள்ளவர்களை விட இன்னும் மேலே போய், ஐந்து எழுத்தால் ஒருபாடை என்று / அறையவே நாணுவர் அறிவுடையோரே (இல.கொத். 7: 27-28) எனக் குறிப்பிடுகின்றார்.

வடமொழியிலும் தமிழிலும் உள்ள எழுத்துக்களைக் கவனமாகப் பட்டியல் இடுகின்றார். எ, ஒ, ழ், ற், ன் என்னும் ஐந்து எழுத்துக்கள் வடமொழியில் இல்லை. தமிழில் மட்டும் உள்ளன. இவை தவிர, தமிழில் பயன்படும் மற்ற எழுத்துகளை வடமொழிக்கு உரியவையாகக் கொள்கின்றார்.

வெளிநாட்டினர் சிலர் தம் பங்கிற்குச் சில நச்சு விதைகளை விதைத்தார்கள். நல்லவேளை, அவை சீமைக் கருவேலம் போலப் பரந்து வளரவில்லை. அவர்களிலேயே பலர் நாடு, மொழி, நாகரிகம் எனத் தமிழ் தொடர்பாகப் பல நல்ல விதைகளை விதைத்தார்கள். அவை அறிவியல் வளர வளர ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடிக் கொண்டிருக்கின்றன. அவை பற்றிப் பின்னர்ப் பார்க்கலாம்.

பல்லவர் காலத்திலும் வடமொழியே செல்வாக்குப் பெற்றிருந்தது அந்நியர் ஆட்சியிலும் அதே நிலைதான் தொடர்ந்தது. தமிழ் நாட்டில் தமிழைப் படிக்கப் போராட வேண்டிய சூழல் இருந்தது.

இன்றைய சூழலில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை மருத்துவராகவும் பொறியாளராகவும் விஞ்ஞானியாகவும் பார்க்க விரும்புகிறார்கள். தமிழ்வழிக் கல்வியைப் பெரும்பாலானோர் விரும்புவதில்லை. இவற்றை விடக் கொடுமை பல பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்கள் தாய்மொழியாகிய தமிழில் பேசிக் கொண்டால் தண்டம் போட்டுப் பணம் பெறுகிறார்களாம். இதனால்தான் தமிழ் தீண்டத்தகாத மொழியாகப் பார்க்கப்படுகின்றது என்று மேலே குறிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

நூலாசிரியர் கவிஞர் வைரமுத்துவைத் தமிழாற்றுப்படை என்னும் நூலை எழுதியமைக்காக எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஒப்புக்காகச் சொல்லவில்லை. அக்காலம் முதல் இக்காலம் வரை தமிழன் என்றோர் இனமுண்டு/ தனியே அவற்கொரு குணமுண்டு (நாம...பாட. 19) என்பதை ஒட்டுமொத்தமாகத் தமிழாற்றுப்படை வழி வெளிப்படுத்தி இருக்கின்றார்.

ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியமும் பழந்தமிழ் இலக்கியங்களும் பழந்தமிழரின் அறிவின் தெளிவையும் முற்போக்குச் சிந்தனையும் காட்டுவன. கிரேக்கம் போன்ற தொன்மையான மொழிகளில் சில தத்துவ அறிஞர்கள் தோன்றி மானுடம் உய்யப்பல கருத்துகளைச் சொல்லி இருக்கின்றார்கள். ஆனால் தமிழைத் தவிர, தொன்மையான மொழிகளில் புராணங்களும் இதிகாசங்களுமே அதிகம் தோன்றி உள்ளன. ஒரு குலத்திற்கு ஒரு நீதி பேசும் மனுநீதிகளும் தோன்றி உள்ளன.

இடைக்காலத்தில் தமிழைப் பக்தி இலக்கியங்களும் சிற்றிலக்கியங்களும் கைக்கொண்டாலும் இக்காலத் தமிழில்தான் பழந்தமிழின் தொடர்ச்சியைப் பார்க்கமுடிகின்றது. சொர்க்கச் சிந்தனையை / நிறுத்திவிடு வர்க்கச் சிந்தனையை / வளர்த்து விடு... இனி எந்தத் தேசமும் / மின்சாரத்தையும் / மார்க்ஸையும் ஒதுக்கி விட்டு / உயிர் வாழ முடியாது (வைர. கவி. ப.309). இவற்றைத் தமிழகத்தில் பதியம் போட்டவர்கள் தந்தை பெரியார், மகாகவி பாரதியார். வளர்த்துத் தழைக்கச் செய்தவர்கள் பலர். அவர்களிடம் எல்லாம் நூலாசிரியர் கவிஞர் வைரமுத்து தமிழை ஆற்றுப்படுத்துகின்றார்.

மேலே குறிப்பிட்டதைப் போன்று நூலாசிரியர் தமிழை ஆற்றுப் படுத்தும் இந்த இருபத்து நான்கு பெருமக்களும் குறியீடுகள் தாம். இவர்களுக்குள் பலர் கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இனி, தமிழ் மொழி, இலக்கிய, சமுதாய அடிப்படையில் தமிழால் அவர்கள் பெற்ற பெருமையையும் அவர்களால் தமிழ்பெற்ற பெருமையையும் விளக்கலாம்.

தமிழை இப்பெருமக்களிடம் ஆற்றுப்படுத்த நூலாசிரியருக்கு உரிமை உண்டு. தமிழைக் காத்த / செந்தமிழின் பாரதியைப் போலே நாட்டில் / தேனமுதப் பாவலன் யார்? என்னை விட்டால் (என்பழைய.ப.11) என்று அவரே குறிப்பிடுவதாலும் அந்த உரிமையை உறுதி செய்யலாம். தற்புகழ்ச்சிக்கும் இடம் உண்டு என்பதை நன்னூல் என்னும் இலக்கண நூலே குறிப்பிடுகின்றது. மன்னுடை மன்றத்து ஓலை தூக்கினும் / தன்னுடை ஆற்றல் உணரார் இடையினும் / மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினும் / தன்னை மறுதலை பழித்த காலையும் / தன்னைப் புகழ்தலும் தகும்புல வோற்கே (நன்: 53)

தமிழைப் படிப்பதில் ஒரு தேக்க நிலை; தமிழ்வழிக் கல்வியில் ஒரு தேக்க நிலை; பேச்சிலும் எழுத்திலும் தமிங்கிலம், மணிப்பிரவாளம். ‘இவற்றைப் பற்றி எல்லாம் கவலைப்படாதே; அக்காலம் முதல் இக்காலம் வரை உனக்குத் தொண்டு செய்தோரைப் பார்த்துப் பெருமைகொள்; இவர்களுடைய பணியால்தான் உலகெங்கிலும் உயர்ந்து நிற்கிறாய்; மற்ற மாநிலங்களை விட முற்போக்குச் சிந்தனையிலும் மூடநம்பிக்கை ஒழிப்பிலும் தனித்து நிற்கிறாய்’ என்று சொல்லாமல் சொல்வது போல நூலாசிரியர் கவிஞர் வைரமுத்து தமிழை இப்பெருமக்களிடம் ஆற்றுப்படுத்துகின்றார்.

தொல்காப்பியர்

தொல்காப்பியர் எழுதியுள்ள ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியத்திற்கு இணையாக இன்னொரு நூல் உலக மொழிகளில் தோன்றவும் இல்லை; தோன்றுவதற்கு வாய்ப்பும் இல்லை. தோன்றினால் மனம் உவந்து வரவேற்போம். பல மொழிகளை அறிந்த உலக அறிஞர்கள் தொல்காப்பியத்தின் அமைப்பை அறிந்து வியப்புக்கு ஆட்படுகின்றார்கள்.

உலகின் தொன்மையான மொழிகளில், செவ்வியல் மொழி என்னும் தகுதிப்பாடு பெற்ற மொழிகளில் மொழியின் எழுத்து, சொல், தொடர் அமைப்பை விளக்கத்தான் இலக்கணங்கள் தோன்றியுள்ளன. மக்களின் அக, புற வாழ்க்கையை விளக்கத் தமிழில் மட்டும்தான் இலக்கணம் தோன்றி உள்ளது.

தமிழர் இயற்கையோடு இயைந்து, அதனை நுட்பமாக அறிந்து வாழ்ந்த வாழ்க்கையில் முகிழ்த்ததே வாழ்வியலுக்கான இலக்கணம். வாழ்வோடு படைப்பிலக்கியங்களையும் படைப்பிலக்கியங்களோடு வாழ்வையும் தமிழர்கள் இடையறாது பேணி வந்ததே அது உயர்ந்திருப்பதற்கு முதற் காரணம். இலக்கணம் என்ற அறிவியல் மீது அது திட்டமிட்டுக் கட்டப்பட்டிருப்பது இரண்டாவது காரணம் (தமிழா. ப. 18). நூலாசிரியர் தொல்காப்பியத்தை மிகவும் நுட்பமாக உணர்ந்து இக்கருத்தைக் கூறியுள்ளார்.

பழந்தமிழகத்தை ஐந்தாகப் பகுத்துக்கொண்டு அவற்றின் முதல், கரு, உரிப் பொருளைக் கொண்டு இலக்கியங்களை யாத்தார்கள். மண் சார்ந்த இயல்பான வாழ்க்கை என்பதால் அதற்கு இயல்பாக இலக்கணம் எழுதும் சூழலும் வாய்த்து விட்டது. சட்டியில் இருப்பது அகப்பையில் வரும் என்பதற்குத் தொல்காப்பியப் பொருளதிகாரம் அருமையான சான்று. முற்போக்குச் சிந்தனைக்கும் இயல்பான வாழ்க்கைக்கும் முற்காலம், பிற்காலம் என்பவற்றை எல்லாம் அளவுகோலாகக் கொள்ளமுடியாது.

பல்வேறு மதத்தைச் சார்ந்தவர்களும் தாங்கள் வணங்கும் தெய்வந்தான் இந்த உலகத்தைப் படைத்ததாகக் கூறிக் கொள்கிறார்கள். சந்திரன், செவ்வாய் என அண்டக் கோள்களைப் பற்றி ஆராய்ந்தாலும் மதக் கோட்பாடுகளில் இருந்து மாறாதவர்கள் இன்றும் இருப்பார்கள்; இனிமேலும் இருப்பார்கள். அவர்கள் நம்புவதோடு மட்டுமல்லாமல் அவர்களிடம் உண்மையைச் சொல்பவர் கலிலியோ பட்ட பாட்டுத்தான் படவேண்டும்; படுகிறார்கள்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியர் எவ்வளவு தெளிவாக இந்த உலக உருவாக்கத்தைக் குறிப்பிடுகின்றார். நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும் / கலந்த மயக்கம் உலகம் (தொல்.பொருள். 639: 1-2). இந்நூற்பா அடிகளை எடுத்துக் கூறி, பூமியின் தோற்றம் குறித்து மறுதலிக்கப்பட்ட அனுமானங்களை மதங்கள் உருவாக்கி இருந்தபோது என்றும் ஏற்றுக்கொள்ளத்தக்க முதல் கருத்தை முன்னிறுத்தியவர் தொல்காப்பியர் (தமிழா. ப. 29) என்று எக்காலத்திற்கும் பொருந்தும் கருத்தைக் கூறிய தொல்காப்பியரிடம் பெருமிதத்தோடு தமிழை நூலாசிரியரிடம் ஆற்றுப்படுத்துகின்றார்.

தமிழ்மொழி பற்றி விளக்கும் எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் மொழியியல் அறிஞர்கள் வியந்து பார்க்கும் வகையில் தமிழ்மொழி அமைப்பை விளக்குகின்றன. பெரும்பான்மையான இலக்கண விதிகள் இக்காலத் தமிழுக்கும் பொருந்தி வருகின்றன. 3000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியரின் தமிழ் மொழிச் சட்டம், இன்று வரை ஒரு திருத்தத்திற்கும் ஆளாகாமல் உயிர்ப்போடு இயங்கி வருகிறது. சட்டம் வகுந்த தொல்காப்பியருக்கும் அது பெருமை; கட்டிக் காத்த தமிழர்களுக்கும் அது பெருமை (தமிழா. ப. 24). இவ்வகையான நிலைபேற்றிற்கு அடிப்படை, தமிழ் பேச்சு வழக்கு மொழியாகவும் செய்யுள் வழக்கு மொழியாகவும் இருப்பதே முதன்மையான காரணமாகும்.

தெய்வ மொழியாக இருந்தாலும் சரி, மக்கள் பேசும் மொழியாக இருந்தாலும் சரி, வேறுபட்ட மொழிபேசும் மக்கள் கலந்து வாழும்போது சொல்லைக் கொடுத்து, எடுத்துக் கொள்ளும் கடன் வாங்கும் முறை தவிர்க்க இயலாத ஒன்று. அவ்வாறு கடன் பெறும்போது அந்தந்த மொழியின் கட்டமைப்பு மீறாமல் இருக்கவேண்டும். இதைத்தான் தொல்காப்பியர், வடசொற்கிளவி வடவெழுத்து ஒரீஇ / எழுத்தோடு புணர்ந்த சொல்லாகும்மே (தொல்.சொல். 395) என்னும் நூற்பாவில் குறிப்பிடுகின்றார்.

தொல்காப்பியருக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின் தோன்றிய பெருந்தேவனார், சேனாவரையர் போன்றோர் வடமொழியே எல்லா மொழிகளுக்கும் தாய் மொழி, அம்மொழிச் சொல்லே பிறமொழிகளுக்குப் போகும்; பிறமொழிச் சொற்கள் அம்மொழிக்குப் போகா என்கின்றார்கள். ஆனால் எழுநூற்றுக்கும் மேற்பட்ட திராவிடச் சொற்கள் வடமொழியின் வேதங்களிலும் இதிகாசங்களிலும் இடம்பெற்றிருப்பதை மொழியியல் அறிஞர்கள்  (T.Burrow, 1968: 178) பட்டியலிடுகின்றனர்.

எனவே, முற்போக்குச் சிந்தனைக்குக் காலவரையறை இல்லை. தொல்காப்பியர் விளக்கியுள்ள இலக்கணம், கூறியுள்ள கருத்துகள் என்றும் ஏற்றுக் கொள்ளத்தக்கவை. இப்படிப்பட்ட ஒரு சிந்தனையாளரிடம் தமிழை ஆற்றுப்படுத்தும் தமிழாற்றுப்படையின் நூலாசிரியரின் தொடக்கமே ஓர் எதிர்பார்ப்புடன் நீள்கிறது.

கபிலரும் அவ்வையாரும்

இலக்கணம் என்னும் நிலையில் தமிழை ஒருவரிடம் மட்டும்தான் ஆற்றுப்படுத்த நூலாசிரியரால் முடிந்தது. தொல்காப்பியருக்கு ஒப்பாரும் மிக்காரும் யாரும் இல்லை. ஆனால் பாட்டும் தொகையும் எனப்படும் சங்க இலக்கியங்களைப் பாடியோர் நூற்றுக் கணக்கானோர். சரியாகச் சொல்லவேண்டும் என்றால் பத்துப்பாட்டு எட்டுத்தொகையில் சிறிதும் பெரிதுமாக (சிற்றெல்லை 3 அடி பேரெல்லை 782 அடி) 2381 பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றில் கபிலர் பாடியவை 235 பாடல்கள்!

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் / அறிவில் ஓங்கி இவ்வையகம் தழைக்குமாம் (பார. பாட . 1868) எனப் பாடிய பாரதி பரம்பரையில் தோன்றியவர் நூலாசிரியர் கவிஞர் வைரமுத்து. தம் பங்கிற்கு பெண்ணுக்கும் மாற்றமுண்டு / வாகைசூடும் ஆற்றலுண்டு (திரைப்பா. 1:21) எனப் பாடுகின்றார்.

எனவேதான் தமிழை ஆற்றுப்படுத்தச் சங்ககாலப் புலவர்களில் ஐம்பது - ஐம்பது விழுக்காடுகளாகக் கபிலரையும் ஒளவையாரையும் தேர்ந்தெடுத்துள்ளார். சங்க காலப் புலவர்களில் கபிலர் பல்வேறு சிறப்புகளைப் பெற்றவர். குறிப்பாகச் சங்க காலப் புலவர்களாலேயே பெருமையாகப் பேசப்பட்டவர். நல்லிசை வாய்மொழிக் கபிலன் (அகம். 78: 15-16), விளங்கு புகழ்க் கபிலன் (புறம். 53:12) நல்லிசைக் கபிலன் (பதிற். 86: 12-13) பொய்யா நாவின் கபிலன் (புறம். 174:10) என்றெல்லாம் சமகாலப் புலவர்களால் குறிஞ்சிக் கபிலர் போற்றப்படுகின்றார்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மலைபடு செல்வங்களைப் பட்டியலிட்ட கபிலர் உலகத்தின் முதல் சுற்றுச் சூழல் பெரும் புலவராகிறார் (தமிழா. ப: 40) என்று நூலாசிரியர் கபிலருக்குப் புகழாரம் சூட்டுகின்றார்.

பூமியைத் தேவைக்கு ஏற்பப் பயன்படுத்திய காலம் வரை செழிப்பாகத்தான் இருந்தது. உலகம் வாணிபக் கூடம் ஆனவுடன் அங்கிங்கெனாதபடி பார் முழுவதும் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு விட்டன. அந்நியர்கள் வந்து காடு, மலைகளை அழித்துக் காபித் தோட்டங்களும் தேயிலைத் தோட்டங்களும் ஆக்கினார்கள். நம்மவர்கள் மலைகளையே பிளந்து மாளிகை கட்டிக் கொண்டிருக்கின்றார்கள். இது ஒருபக்க நிலை இல்லை; உலக முழுப்பக்க நிலையே இதுதான்.

காலங்கள் மாறும்; கடல்கள் இடம் மாறும்; நிலவியல் மாறும்; பருவங்கள் தடுமாறும் (தமிழா. ப. 43) என நூலாசிரியர் கூறுவதுபோல இப்போது எல்லாம் அழிந்தாலும் கபிலர் பாடிய பாடல்களில் ஐந்நில வளங்களும் தமிழ் உள்ளவரை செழித்திருக்கும்.

கபிலரை ஆய்வு செய்த இராம. ஆநிரைக் காவலன், சங்க இலக்கியங்களிலேயே மிகுதியான பாடல்களைப் பாடிய ஒரே புலவர், சங்கத் தொகை நூல்கள் அனைத்திலேயும் இடம் பெற்றுள்ள ஒரே புலவர், ஐந்து திணைகளையும் பாடிய ஒரே புலவர், பிற்காலக் கல்வெட்டினால் சிறப்பாகப் புகழப்படும் ஒரே புலவர், சங்க காலத் தலைமைப் புலவர் கபிலர் ஒருவரே (2002, பக். 1 - 2) என்று கபிலரின் சிறப்புகளைப் பட்டியலிடும்போது குறிப்பிடுகின்றார். ‘ஒருபானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பதுபோல ஆண்பாற் புலவர்களில் தமிழாற்றுப் படை நூலாசிரியர் கவிஞர் வைரமுத்து ஏன் தமிழை ஆற்றுப்படுத்த கபிலரைத் தேர்ந்தெடுத்தார் என்பது இப்போது புரிகின்றது.

யாதும் ஊரே! யாவரும் கேளிர் (புறம். 192:1) என்னும் வைர அடியை ஐக்கிய நாட்டுச் சபையில் பதிய வைக்கும் அளவிற்குப் புகழ்பெற்ற கணியன் பூங்குன்றனார், நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின் (புறம். 195 : 6-7) என்று உலக மக்கள் அனைவரையும் ஆற்றுப்படுத்திய நரிவெரூஉத் தலையார் என ஒட்டு மொத்தச் சங்கம் பாடியோருக்குக் குறியீடாக நூலாசிரியர் கபிலரைத், தமிழுக்கு இனங் காட்டுகின்றார்.

ஆண்களுக்கு நிகராக ஐம்பது விழுக்காடு அளவு மகளிர் இருந்தாலும் மூன்றில் ஒரு பங்கு உரிமை கொடுக்கவே மறுக்கிறார்கள். பெயர் தெரிந்த, தெரியாத ஏறக்குறைய 600 சங்கப் புலவர்களில் 41 பேர் பெண்பாற் புலவர்கள். ஆண்பாற் புலவர்களுக்கு ஐம்பது விழுக்காடாகக் கபிலரும் பெண்பாற் புலவர்களுக்கு ஐம்பது விழுக்காடாக ஒளவையாரும் இடம்பெறுகின்றனர். பெண்கள் தொடர்பான ஒரு சிறுகதைத் தொகுப்பிற்கு இக்கட்டுரையாளர் சூட்டிய பெயர் ஐம்பது விழுக்காடுகள் (2010). படைப்பாளர்களால் இப்படித்தான் செய்யமுடியும்.

இந்த வகையில் தமிழ் சந்திக்க வேண்டிய ஒரு பெண்பாற் புலவராகக் கவிஞர் வைரமுத்து ஒளவையாரைச் சரியாகத் தேர்ந்தெடுத்துள்ளார். தலைமை ஏற்ற தாய்வழிச் சமுதாய இறக்கத்திற்கும் ஆணாதிக்கச் சமுதாயத் தோற்றத்திற்குமான காலக் கட்டத்தில் பிறந்தவர். தாய்வழிச் சமூகம் நொறுங்கி உடைந்த பிறகு ஆணாதிக்கச் சிந்தனைகளோடு ஒரு சமூகத்தை வழிநடத்தத் தலைப்பட்டன. தங்களை முன்னிறுத்திக் கொண்ட ஆண் மூளைகள் பெண்களுக்கான இருத்தல் - இயக்கம் இரண்டுக்குமான வாழ்வியலைச் சட்ட வழியாகவும் மரபு வழியாகவும் வரையறுத்தன (தமிழா. ப. 47).

அதியமான் நெடுமான் அஞ்சிக்கும் ஒளவையாருக்கும் இருந்த நட்பைத் தம்பாணியில் விளக்குகின்றார் நூலாசிரியர். ஆரம்பத்தில் பரிசில் கொடுக்காமல் காலம் தாழ்த்திய நெடுமான் அஞ்சியிடம் கூறுமாறு, எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே (புறம். 206: 13) வாயிற் காவலனிடம் சொல்வதில் தொன்மைத் தாய்மையின் மாண்பு பீறிட்டு வெளிப்படுகின்றது.

சங்க கால ஒளவையாரையும் பிற்கால ஒளவையாரையும் ஒருமுகப்படுத்திப் பெண் குலத்திற்கான குறியீடாகத் தமிழை ஒளவையாரிடம் நூலாசிரியர் ஆற்றுப்படுத்துகின்றார்.

திருவள்ளுவர்

தொல்காப்பியரை ஒரு தராசுத் தட்டில் அமர வைத்தால் உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரை இன்னொரு தட்டில் வைக்கவேண்டும். இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்த பழந்தமிழரையும் அவர்தம் மொழியையும் உலகுக்கு அடையாளம் காட்டியவர் தொல்காப்பியர். மானுடப் பிறப்பில் பேதம் காட்டியவர்களுக்கு, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் (திருக். 972:1) மரண அடி கொடுத்தவர் திருவள்ளுவர். இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பேயே தமிழர்கள் முற்போக்குச் சிந்தனையாளர்கள் என்பதற்கான அடையாளங்கள் இவர்களது எழுத்துக்கள். தமிழாய்ந்த உலக அறிஞர்கள் வியக்கிறார்கள். தமிழர்கள் உணரவேண்டும்.

உலக மூலை, முடுக்குகளில் உள்ள எல்லா நூல்களில் இருந்தும் கருத்துகளை எடுத்துக் கூறி, அவை ஒரு வட்டத்துக்குள் மானுட சமுதாயத்தைப் பார்க்கின்றன. வள்ளுவம் மட்டும்தான் உலக மக்களை ஒரே குலத்தில் பார்ப்பதாகக் கவிஞர் வைரமுத்து குறிப்பிடுகின்றார். வள்ளுவரின் வாக்குகள் தமிழரின் அடையாளம் மட்டுமில்லை. கால மதிப்பீடுகளில் வள்ளுவரின் கனிவும் கருணையும் மனித நாகரிகத்தின் மாண்பு சுட்டுவதைக் காட்டுவது மட்டுமே என் முயற்சியாகும், (தமிழா.ப.62) எனக் கூறுவதன்வழி, வள்ளுவம் தமிழகத்தில் மலர்ந்து உலகமும் முழுவதும் மானுட மாண்பு என்னும் மணத்தைப் பரப்புகின்றது என்று நூலாசிரியர் எழுதுகின்றார்.

தமிழாற்றுப்படை நூலாசிரியர் கவிஞர் வைரமுத்து தமிழைத் திருவள்ளுவரிடம் ஆற்றுப்படுத்தும் பாங்கை, மானுட இனத்தில் பேதம் காண விரும்புபவர்கள் கூட மனமுவந்து ஏற்றுக் கொள்வார்கள். மானுட விழுமியங்களைக் கூறுவதில் வள்ளுவத்திற்கு நிகர் வள்ளுவம்தான்.

இளங்கோவடிகள் முதலானோர்

திருவள்ளுவரைத் தொடர்ந்து தமிழாற்றுப் படையில் இளங்கோவடிகள் அப்பர், ஆண்டாள், செயங்கொண்டார், கம்பர், திருமூலர் போன்றோரிடம் கவிஞர் வைரமுத்து தமிழை ஆற்றுப்படுத்துகின்றார். ஒவ்வொருவருமே ஒவ்வொரு வகையில் தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளார்கள்.

சிலப்பதிகாரம் தொடர்பான கருத்துக்கள், காலம் போன்றவற்றில் உள்ள வேறுபாடுகளை எல்லாம் நூலாசிரியர் பட்டியலிட்டு விட்டு முத்தாய்ப்பாகக் கூறுகின்றார். சிலப்பதிகாரத்தை தமிழர்கள் ஏன் சீராட்ட வேண்டுமெனில், அழிந்த தமிழ் நாகரீகத்தின் ஆதாரம் அது என்பதால்தான். ஏற்கெனவே தமிழினம் இழந்தது கொஞ்சமன்று. எல்லைகள் - இலக்கணங்கள் - இலக்கியங்கள் - ஆயுதங்கள் - ஆலயங்கள் என்று எவ்வளவோ இழந்திருக்கிறது. அனைத்துக்கும் மொத்தமாய் அது கட்டிக்காக்க வேண்டிய கலை ஆவணம் சிலப்பதிகாரம்தான் (தமிழா.ப. 74).

இப்போது உலகமயத்தால் பல இனமக்களின் தனித்தன்மை, மொழி போன்றவை எல்லாம் மொட்டையடிக்கப்படுகின்றன. பல்லாயிரம் ஆண்டுகள் தமிழ்நாட்டு மூவேந்தர்களும் அவர்களுக்குள் போரிட்டுக் கொண்டாலும் வடபகுதிப் பேரரசர்களை இந்தப் பகுதியில் வாலாட்ட விடவில்லை என்பதைப் பழைய பாரத நாட்டு வரை படங்கள் பார்த்தாலே அறிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் ஒற்றுமை இன்மையால் அந்நியர்கள் நுழைந்தார்கள். திராவிடர்களிடம் ஒற்றுமை இன்மையால் இந்திய மயத்தில் உரிமைக்காகப் போராட வேண்டி இருப்பதை நூலாசிரியர் நுட்பமாக வெளிப்படுத்துகின்றார்.

போராட்டத்தாலும் திராவிட அரசியல் அதிகாரத்தாலும் பெற்ற சமூக நீதி, இட ஒதுக்கீடு விழுக்காடுகள் தற்போது கரையத் தொடங்கிவிட்டனர். 

அடுத்து, நூலாசிரியர் தமிழை அப்பரிடம் ஆற்றுப்படுத்துகின்றார். அப்பரின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை வரிசைப்படுத்துகின்றார். எல்லாவற்றையும் துறந்து அரண்மனையைவிட்டு வெளியேறிய சித்தார்த்தன் புத்தராகவே இறுதி வரை வாழ்ந்தார். அசோகரும் கூட அப்படித்தான். வள்ளலார், தந்தை பெரியார், புரட்சிக் கவிஞர், அண்ணா, கலைஞர் எனப் பலரும் பழுத்த ஆத்திகக் குடும்பங்களில் இருந்து வெடித்துக் கொண்டு வெளியே வந்தவர்கள்; இறுதிவரை அதற்குள் போய் முடங்கவில்லை.

ஆன்மீகத்தில் இருந்து நாத்திகத்திற்கு வந்து மறுபடியும் பழைய இடத்திற்குத் திரும்பிச் செல்ல முதன் முதலாகக் கோடு போட்டவர் அப்பராகத்தான் இருக்க முடியும். எப்படி இருந்தாலும் அப்பரின் கருத்துகள் நூலாசிரியரைத் தம் பக்கம் கவர்ந்து கொள்கின்றன. தமிழ்மீது படர்ந்த வடமொழி இருள், சைவத்தின் மீது படிந்ததாகக் கருதப்பட்ட சமண இருள், சமூகத்தின்மீது படிந்த சாதிய இருள் இந்த முவ்விருள் கிழிக்கத் தன்னையே சுடராய்க் கொளுத்திக் கொண்டதுதான் அப்பர் பெருமானின் பெருவாழ்வு (தமிழா. ப. 88).

எப்படிப் பார்த்தாலும் சமயவாதிகள் கருத்துமுதல்வாதம் பேசிக் கொண்டு பொருள்முதல்வாதத்தில்தான் குறியாக இருந்தார்கள். சோழநாட்டின் அரைப் பங்குக் குறையாத நிலம் கோயில் சார்ந்தே உள்ளது. அப்பர் அவ்வாறு பொன், பொருளுக்காக யாரையும் நாடவில்லை. நாமார்க்கும் குடி அல்லோம் (தேவா. 11:1) என்னும் தொடரில் அவர் தழுவி இருந்த சமண சமய வாடை மணக்கிறது.

அடுத்து, நூலாசிரியரை ஆன்மீகவாதிகள் வறுத்தெடுத்த சூடிக் கொடுத்த சுடர்க்கொடி பற்றியது. இந்தியா மட்டும் இல்லை; மதங்களுக்கும் உண்மைக்கும் ஏழாம் பொருத்தம்தான். மதத்தைக் காட்டி ஏசுநாதர், கலிலியோ உட்பட உண்மையைச் சொன்ன பலர் வதைக்கப்பட்டார்கள்.

உலகம் தட்டையானது என்று பைபிள் கூறுகிறது. கலிலியோ உருண்டையானது என அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து உண்மையைக் கூறினார். மதத்திற்கு எதிராகக் கூறினார் என்று தண்டிக்கப்பட்டார். ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகள் கழித்துக் கலிலியோவுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காகப் போப்பாண்டவர் தற்போது வருத்தம் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் பெருமாள் முருகனின் மாதொரு பாகனுக்குக்கூட இப்படிப்பட்ட எதிர்ப்பு எழுந்து அடங்கியது. விலங்கு நிலையில் இருந்து மனித இனம் வளர்ச்சி அடைந்தது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மகாபாரதத்தில் திருதராட்டிரன், பாண்டு, விதுரன் பிறப்புப் பற்றிய கதைக்கு யாருடன் போய் மோதுவார்கள்.

வரலாறு உண்மை சார்ந்தது. மதம், புராணம் நம்பிக்கை சார்ந்தவை. ஏதாவது ஒன்றைச் சொன்னால் மத உணர்வைப் புண்படுத்துவதாகக் குரல் எழுப்புகின்றார்கள். அவற்றுக்கு எல்லாம் கவலைப்படுகின்றவர்கள் ஒன்றை மட்டும் உரத்துப் பேச மறுக்கின்றார்கள்.

சைவம், வைணவம், சிறுதெய்வம் என்னும் வேறுபாடு இல்லாமல் இருந்த சிலைகளை எல்லாம் கடத்தி விட்டார்கள்; கடத்தல் தெரியாதிருக்கப் போலியாகச் செய்து வைத்து விட்டார்கள். சமூக ஆர்வலர்களுக்கு இருக்கும் அக்கறை ஆன்மீகவாதிகளிடம் இல்லை. எவ்வளவு கலைநயம் மிக்கவை? ஆலயங்களோடு தொடர்பில்லாதவர்களால் இவ்வாறு கடத்த முடியுமா? கோயில், மடங்களுக்கு உரிய நிலம், பொருள் எல்லால் ஆற்றில் போகும் நீரை ஆயா குடி; அம்மா குடி என்னும் நிலை ஆகிவிட்டது.

மதம், சாதிக்காக மாட்டிக் கொள்ளும் பூதக் கண்ணாடியை ஆலயங்களில் நடக்கும் ஊழல்களை ஒழிக்கவும் போட்டுக்கொள்ள வேண்டும்; மாட்டார்கள். கொள்ளிக் கட்டையை எடுத்துத் தலையைத் தாமே சொறிந்துகொள்ள அவர்கள் விவரம் தெரியாதவர்களா?

எப்படியோ மார்க்சியம், பகுத்தறிவுப் பார்வை கொண்ட தமிழாற்றுப் படை நூலாசிரியர் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் இடம் பெற்றுள்ள ஒரே பெண் ஆழ்வாரின் சிறப்புகளை எடுத்துக் கூறித் தமிழை ஆற்றுப்படுத்துகின்றார். ஆண்டாளை ஓர் ஆழ்வாராக ஏற்றுக் கொள்ளாத நிலையும் இருக்கின்றது. இதற்குக் குரல் கொடுக்க வேண்டும். ஆண் ஆழ்வார்களுக்குச் சரி நிகராக ஆண்டாளையும் பார்க்கவேண்டும்.

பக்தி இலக்கியங்களைத் தொடர்ந்து தோன்றிய சிற்றிலக்கியங்களில் பரணியின் சிறப்பைக்கூறி அவ்வகை இலக்கியவழித் தோன்றிய கலிங்கத்துப்பரணி பாடிய செயங்கொண்டாரிடம் தமிழை நூலாசிரியர் ஆற்றுப்படுத்துகின்றார். 

பழந்தமிழர் காதல் வாழ்வையும் போர்க்கள வாழ்வையும் சுருங்கச் சொல்லும் வகையில் கலிங்கத்துப்பரணி இருப்பதை நூலாசிரியர் கவிஞர் வைரமுத்து சில சான்றுகளுடன் விளக்குகின்றார்.

அடுத்து, தமிழாற்றுப்படை நூலாசிரியர் கம்பரிடம் தமிழை ஆற்றுப்படுத்துகின்றார். நுவல் பொருள் வடமொழிக்கு உரியதாயினும் அதனைக் கவிச்சக்ரவர்த்தி எவ்வாறெல்லாம் தம் ஆளுமைக்குள் கொண்டு வருகிறார் என்பதைக் கவிஞர் வைரமுத்து விரிவாக விளக்குகின்றார். காளிதாசரோடும் ஷேக்ஸ்பியரோடும் வான்மீகியோடும் ஒப்பிட்டுக் கம்பரின் மொழி ஆளுமையை விரித்துக் காட்டுகின்றார்.

மனிதச் சிசுவைப் பத்துமாதம்தான் ஒரு தாய் சுமக்கிறாள். ஆனால் கம்பன் என்ற மகாகவியைப் பல நூற்றாண்டுகள் தன் கருவில் தமிழ்த்தாய் தரித்திருக்கிறாள் (தமிழா. ப.130). உலகப் பெருங்கவிஞர்கள் பெற்ற புகழைக் கவிச்சக்ரவர்த்தி கம்பர் பெறவில்லை என்ற ஆதங்கத்துடன் நூலாசிரியர் தமிழை அவரிடம் ஆற்றுப்படுத்துகின்றார்.

தமிழைத் திருமூலரிடம் ஆற்றுப்படுத்தும்போது அவர் யாத்த திருமந்திரம் பன்னிரு திருமுறைகளில் ஒன்றாக வைக்கப்பட்டிருந்தாலும் இது தமிழர் தத்துவ சாரத்தின் தனிப் பனுவல் என்று தடந்தோள் விரியலாம். இது அறமாக விளங்கும் தமிழர் மெய்யியலுக்கு வரமாக வந்த வரவென்றும், வெவ்வேறு காலவெளிகளில் விளங்கி வந்த தமிழர் தம் தத்துவ முத்துக்களை ஆரவாரமில்லாமல் தொடுத்த அறிவாரம் என்றும் தமிழ்ச் சமயம் கருதுகின்றது (தமிழா. ப. 141) என்று முத்தாய்ப்பாக நூலாசிரியர் வைரமுத்து குறிப்பிடுகின்றார்.

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் (திருமந். 2104: 1) பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் (திருக். 972: 1) என்னும் வள்ளுவப் பெருந்தகையின் வாக்கோடு மதம் வளர்ந்த பிறகு மக்களுக்கு மதம் பிடிக்காமல் இருக்க திருமூலர் சொன்ன மந்திரமொழி. நூலாசிரியர் திருமூலர் மீது படிந்துள்ள கறைகளை நீக்கித் தூய்மைப்படுத்தித் தமிழ் மூலராகக் காட்டுகின்றார்.

வள்ளலார் முதலானோர்

திருமூலரை அடுத்துத் தமிழைத் தமிழாற்றுப்படை நூலாசிரியர் கால்டுவெல் பெருமகனிடம் ஆற்றுப்படுத்துகின்றார். அவருக்கும் திராவிடம் பேசுவோருக்கும் ஒரு தொடர்பு இருப்பதால் வள்ளலார், உ.வே.சாமிநாதையர், மறைமலையடிகள், பாரதியார் முதலியோருக்குப் பிறகு பெரியாரோடு சேர்த்துப் பார்க்கலாம்.

ஒன்றை நம்புவதில் தவறில்லை. ஆனால் அது மற்றவர்களை ஏமாற்றுகிறது, சுரண்டுகின்றது என்றால் கண்டிப்பாக அதனை விட்டொழிக்க வேண்டும். வள்ளலாரின் வாழ்க்கையிலும் அப்படித்தான் பரிணாம வளர்ச்சி காணப்படுகின்றது. பாரதியாருக்கும் பெரியாருக்கும் முன்னோடியாக இருந்த வள்ளலாரைப் பற்றிய அரிய கருத்துகளை எல்லாம் திரட்டிச் செம்மையாகத் தமிழாற்றுப்படையில் கவிஞர் வைரமுத்து எழுதுகின்றார்.

பிறப்பு - வளர்ப்பு - உணவு - உடை - உறைவிடம் - கல்வி பொருளாதாரம் என்று தொடங்கி இறப்பு வரையில் பேணப்படும் பேதங்களைக் கட்டிக்காக்கத்தான் இந்து மதத்தின் உருவ வழிபாடுகளும் அடையாளங்களும் துணைபோகின்றன (தமிழா. ப. 176) என்பதை அறிந்தே வள்ளலார் ஒளி வழிபாட்டைத் தொடங்குகின்றார். சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே (மணி. 11: 96) அமுத சுரபியுடன் மணிமேகலை உணவளிக்க அலைந்தாள். வள்ளலாரும் சத்திய தருமச் சாலை அமைத்து அனைவருக்கும் உணவளித்தார். இப்படிப்பட்ட ஒரு சீர்திருத்தவாதியை நூலாசிரியர் தமிழுக்கு அறிமுகப்படுத்துகின்றார். தமிழை ஆற்றுப்படுத்துகின்றார்.

எத்தனையோ ஏடுகள் இயற்கைச் சீற்றத்தாலும் அற்ப மானுடரின் செயற்கைச் சீற்றத்தாலும் அறியாமையாலும் அழிந்து விட்டன. தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் தமிழரின் வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்றவற்றை பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலான சங்க நூல்களைத் தேடி எடுத்து, நுட்பமாய் ஆராய்ந்து பதிப்பித்துத் தந்தவர் மகாமகோபாத்தியாய உ.வே.சாமிநாதையர். ஒரு செம்மொழியின் தலைமைத் தகுதியான தொன்மை என்பதற்குச் சங்க இலக்கியம் போலொரு தங்கப்பட்டயம் இல்லை (தமிழா. ப. 183) என்று நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். நாடுதோறும் ஏடுதேடி ஓடி அலைந்து அந்த அந்தணக் கிழவன் சந்தனமாய்த் தேய்ந்திரா விடில் (தமிழா. ப. 182) என்னும் வாசகத்தைப் படிக்கும்போது கண்கள் பனிக்கின்றன.

உ.வே.சாமிநாதையர் பதிப்பித்துள்ள நூல்களைப் புரட்டிப் பார்த்தாலே அவற்றின் பிரமாண்டம் புரியும். பொருள்புரியப் பகுத்திருக்கும் முறை, அருஞ்சொற்பொருள், ஒப்பீடு என எல்லாவற்றையும் ஒரு தாயைப்போலச் செம்மையாகச் செய்துள்ளார். சாதிய மேலாதிக்கத்தின் மீதான சமூகக் கோபம் உண்டே தவிர எந்தப் பிராமணர் மீதும் எனக்கு வெறுப்பு இல்லை (பாற்கடல், ப - 90). தம் நிலைப்பாட்டை மூவரைக் கொண்டு இந்நூலில் நிறுவியுள்ளார். குறிஞ்சி பாடிய அந்தணக் கபிலரையும் சூரிய மூலையில் பிறந்த ஆரிய மூளையையும் (தமிழா. ப. 192) மனம் உவந்து எழுதி வருணனை மழையால் கவிஞர் வைரமுத்து அவர்களை நீச்சல் அடிக்க விட்டுள்ளார். இன்னொருவர் மகாகவி. தமிழைத் தூக்கிப் பிடிப்பவர் யாராக இருந்தாலும் வணக்கத்திற்கு உரியவர்களே. சாமிநாத தேசிகரைப் போன்று தாக்க நினைப்போரைத் தமிழே பார்த்துக்கொள்ளும்.

அன்றியும் தமிழ் நூற்கு அளவு இலை அவற்றுள் / ஒன்றே யாயினும் தனித் தமிழ் உண்டோ (இல.கொத். 7: 25-26). சாமிநாத தேசிகருக்கு முன்னும் பின்னும் தமிழ் யாரிடம் சிறைபட்டிருந்தது? எந்த நுவல் பொருளைச் சுமந்திருந்தது? காமப்படுக்கை கவலைக்கிடமாய்க் கிடந்தது கவிதை. சிற்றிலக்கியங்களில் வழிந்த சீழ் - சிலேடைகளில் தெறித்த இந்திரியம் - கட்டளைக் கலித்துறைகளில் வழிந்த கட்டில் வேர்வை - கடவுட் பாடல்களில் கசிந்த கண்ணீர் என்று நனைந்து நனைந்து நைந்து கிடந்தது நந்தமிழ் (தமிழா. ப. 209). இப்படிப்பட்ட சூழல்களில் எழுதப்பட்ட கவிதைகளிலும் உரைகளிலும் தனித் தமிழையா எதிர்பார்க்க முடியும்?

தமிழை மறைமலையடிகளிடம் ஆற்றுப்படுத்துவதற்கு முன்னர்ப் பல சான்றுகளைச் சொல்லிவிட்டுத் தமிழாற்றுப்படை நூலாசிரியர் கவிஞர் வைரமுத்து இப்படிக் கூறுகின்றார்: தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்த தந்தை என்ற ஆழ்ந்த அடையாளத்திற்காகவே; எம்மொழித் துணையுமின்றித் தனித்தியக்க வல்ல செம்மொழி என்ற நம்பிக்கையைத் தமிழுக்குத் தந்ததற்காகவே (தமிழா. ப. 195).

பேராசிரியர்கள் சொல்லிக் கொடுத்தும் பிடிபடாத இலக்கணத்தையும் இலக்கியத்தையும் சமயத்தையும் தாமாகக் கற்றுத் துறை போகிய மறைமலையடிகளிடம் நூலாசிரியர் தமிழை ஆற்றுப்படுத்துவது உள்ளம் மகிழத்தக்கது.

உலக வளத்தைச் சுரண்டுபவர்களுக்கும் மனிதநேயத்தையும் மதிக்காதவர்களுக்கும் மாமேதை காரல் மார்க்ஸ் நெற்றிக்கண். தமிழையும் பகுத்தறிவையும் பாலாகப் பருகியவர்கள் தம் இரு கண்களையும் பாரதியாராகவும் பெரியாராகவும் கொள்வர். இனிவரும் தலைமுறையினர் நன்றி உணர்வோடு நினைத்துப் பார்க்கத் தக்கவர்கள் இம்மூவரும். ஓவியம் வரைந்து, சிலைவடித்துக் கண்திறப்பார்கள். கள்ளுக்கடைகளை மூடிய இழப்பை ஈடு செய்யப் பள்ளிக்கூடங்களை மூடினார்கள். பட்டி, தொட்டி எங்கும் பள்ளிக்கூடங்களை நிறுவிக் கிராமங்களின் கண் திறந்த காமராசரும் இவர்களுடன் இணைந்து கொள்வார்.

சமுதாய நலம் நாடுபவன் சாதி, மதம் பார்க்க மாட்டான் என்பதற்குப் பாரதியாரே சான்றாவார். அதனாலேயே மகாகவியானார். கன்னிப் பேச்சாயினும் முதிர்ந்த பேச்சாயினும் எழுத்தாயினும் பாரதியை இழுக்காமல் யாரும் ஓரடி முன்வைக்க முடியாது. அப்படிப்பட்ட மகாகவியின் இறுதி ஊர்வலத்தைக் கவிஞர் வைரமுத்து வரைந்ததை முழுமையாகப் படிக்க முடியவில்லை. கண்ணீர் திரைபோட்டு விடுகிறது. இறுதி ஊர்வலத்தினரின் / எண்ணிக்கை / இருபதுக்கும் குறைவாக / இருந்ததாம் தோழர்களே! மகா கவிஞனுக்கு / மரியாதை பார்த்தீரோ! / அவன் உடம்பில் மொய்த்த / ஈக்களின் எண்ணிக்கையில் கூட / ஆட்கள் இல்லையே! (கவி. கதை.ப. 148).

நீண்ட காலம், குண்டும் குழியுமான வழி. செம்மையாகப் பாதை அமைத்துக் கொடுத்த மகாகவியை எப்படிப் போற்றினாலும் தகும். திருவல்லிக்கேணி மயானத்தில் பாரதியின் சதைக்கோளத்தைத் தின்றுதீர்த்த தீ அணைந்திருக்கலாம். அவன் கொளுத்தி எறிந்துபோன அழியா நெருப்பு அணைவதேயில்லை. அது ‘யுகாக்கினி’ (தமிழா. ப. 219)

கால்டுவெல்

‘வெள்ளையும் சொள்ளையுமாக இருப்பவர்களுக்கு ஒரு பேச்சு; அழுக்கும் கிழுக்குமாக இருப்பவர்களுக்கு ஒரு பேச்சு; சதை இருக்கும் இடத்தைத் தான் கத்தி நாடும்’ என்றெல்லாம் கிராமத்தில் பேசிக்கொள்வார்கள். அந்நியர் ஆண்டபோது, வெளிநாட்டில் இருந்து வந்த சிலர் இவற்றை மெய்ப்பித்தார்கள்.

வடமொழி எப்போதோ வழக்கிழந்து போய்விட்டது. ஆனால் அதனோடு தொடர்புடையவர்கள் அதிகார வர்க்கத்தோடு தொடர்புடையவர்கள். மக்களிடம் புழக்கத்திலுள்ள தமிழைக் கல்வி நிறுவனங்களில் படிக்க வாய்ப்பில்லை. எவ்வளவு பெரிய முரண்பாடு. வேறு எங்குமில்லை; தமிழ்நாட்டில்.

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் வில்லியம் ஜோன்ஸ் (Sir William Jones, 1788) கிரேக்கம், இலத்தீன் போன்ற இந்தோ - ஐரோப்பிய மொழிகளுடன் குடும்ப உறவுடையது சமஸ்கிருதம் என்று கூறிவிட்டார். இருப்பினும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காரே, சார்லஸ் வில்கின்ஸ், கோல்புரூக் (திராவிடச்சான்று, பக். 198 - 199) போன்றோர் தமிழ் முதலான இந்திய மொழிகளுக்குத் தாய் மொழி வடமொழியே என்று குறுக்குச்சால் ஓட்டினார்கள். அவர்கள் கருத்தை வலிமை இழக்கச் செய்த பெருமை இராபர்ட் கால்டுவெல் (A Comparative Grammar of Dravidian or South Indian family of languages, 1856). அவருக்கு முன்னர் எல்லீஸ் (Francis Whyte Ellis, 1816). என்னும் பெருமகன் திராவிடமொழிகளும் சமஸ்கிருதமும் வேறுவேறு குடும்பத்தைச் சார்ந்தவை என்று கூறியுள்ளார்.

காம்பெல் (Campell A Grammar of Teloogoo language, 1816) என்பவரின் நூலுக்கு எழுதிய முன்னுரையில் எல்லீஸ் வடமொழியும் திராவிட மொழியும் வேறுவேறு குடும்பத்தைச் சார்ந்தவை என்பதைத் தெளிவாகக் கூறுகின்றார். அவரது எதிர்பாராத மரணத்தில் அவரது கருத்தும் வெளிப்படாமல் போய்விட்டது. இருப்பினும் திராவிட மொழியியலின் தந்தை எனப் போற்றப்படும் இராபர்ட் கால்டுவெல் பல சான்றுகளைக் காட்டி என்றும் வடமொழி இந்தோ - ஆரிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது, தமிழோடு பண்பட்ட மொழிகள் - பண்படா மொழிகள் எனப் பன்னிரண்டு மொழிகள் திராவிட மொழிக்குடும்பத்தைச் சார்ந்தவை என்றும் கூறுகின்றார்.

பல குடும்ப மொழிகளின் இலக்கண கோட்பாட்டை அறிந்த கால்டுவெல் பெருமகனார் திராவிட மொழிகளில் காணப்படும் திணை - பால் பாகுபாட்டை அறிந்து இந்த மொழிபேசுவோரின் முற்போக்குச் சிந்தனையை உச்சத்திற்குக் கொண்டுபோய்ப் பாராட்டுகின்றார்.

The Peculiar Dravidian law gender which has now been described would appear to be a result of progressive intellectuial and grammatical cultivation... (1976: 222).

எல்லாவற்றிற்கும் மேலாக அவர் கட்டமைத்த திராவிடம் என்னும் கோட்பாட்டை வளர்த்தெடுத்திருந்தால் விடுதலையின்போது பழைய தென்னாட்டை மீட்டுருவாக்கம் செய்திருக்கலாம். இந்தியாவின் தொன்மைக் குடியினர் திராவிடரே என்பதற்கு இந்தியா முழுவதும் மொழி, தொல்பொருள் சான்றுகள் நிறையக் கிடைக்கின்றன.

பிராகூயி என்னும் வட திராவிடமொழி பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பகுதியில் இன்னும் வழக்கில் உள்ளது. இந்தியாவின் தென்கோடி முதல் வடகோடி வரை இருபத்தைந்துக்கு மேற்பட்ட திராவிட மொழிகள் பேசப்படுகின்றன. சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்பதை 1920களிலேயே சர் ஜான் மார்ஷல் (1922) உறுதிபடக் கூறினார். இப்போதைய ஆய்வில் அக்கருத்தாக்கமும் கனிந்து திராவிடத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அஸ்கோ பர்போலா (2009:30), ஐராவதம் மகாதேவன் (2010-8-9) போன்றோர் சிந்துவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகம் என வலியுறுத்துகின்றனர். 

தமிழை முதன்மைப்படுத்த வேண்டும் என்பதற்காகத் திராவிடம் என்னும் கருத்தாக்கத்தை ஆரியம் சார்ந்தவர்தாம் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் திராவிடம் சார்ந்தவர்களும் மறுக்கின்றார்கள்.

ஆரியப் பாலை அதிகம் குடித்த ஆந்திரர், கன்னடர், கேரள மக்கள் திராவிடக் கோட்பாட்டை ஏற்க மாட்டார்கள். ஏற்க மாட்டார்கள் என்பதை நதிநீர்ப் பிரச்சினைகளிலேயே அறிந்து கொள்ளலாம். கடலளவு திராவிட வரலாறு குறுகிக் குட்டையாகி விட்டது. அந்நியர் வரவு மட்டுமல்லாது இங்கு நடந்த அடிபிடிச் சண்டையும் ஒரு காரணமாகும்.

திராவிடம் என்ற சொற்சுட்டு கால்டுவெல்லால் உண்டாக்கப்பட்டதன்று. அது ஓர் ஆதிச் சொல் (தமிழா. ப. 160). தமிழாற்றுப்படை நூலாசிரியர் கவிஞர் வைரமுத்து தொன்மையின் உண்மையை ஏற்றுக் கொள்வதற்காகப் பாராட்ட வேண்டும்.

இந்திய வரலாற்றில் திராவிட வரலாறு மறைக்கப்பட்டிருப்பதைப் பெரும்பெரும் வரலாற்றாசிரியர்கள் எழுதியுள்ள தலையணை அளவுள்ள நூல்களைப் புரட்டிப் பார்த்தாலே தெரியும். இருப்பினும் இந்திய வரலாற்று ஆய்வில் அரசியல் கலக்காமல் மீட்டுருவாக்கம் (Reconstruction) செய்தால் தமிழை முதன்மையாகக் கொண்ட திராவிடம் முதலில் நிற்கும்.

பின்னாளில் ஓர் அரசியல்களம் திராவிடம் சார்ந்து அமைய வழி வகுத்துக் கொடுத்த கால்டுவெல் பெருமகனை நூலாசிரியர் வஞ்சம் இல்லாமல் பாராட்டுகின்றார்.

நன்றி அய்யனே! ஒரு தலைமுறைக்கே தலையறிவு தந்தவனே! எங்கள் மூலமுகவரி அறிந்து சொன்ன மூதறிஞனே! தாய்க்கு முதல் எழுதிய தனையனே! அயர்லாந்தில் கருவுற்று இடையன் குடியில் திருவுற்றவனே! பைன் மரங்களுக்கிடையே கண்விழித்துப் பனை மரங்களுக்கிடையே கண்மூடியவனே! உனக்கும் கிறித்துவச் சமுதாயத்தின் பெரும் தொண்டுக்கும் தமிழ்ச் சமுதாயம் கடமைப்பட்டிருக்கிறது (தமிழா. ப. 166).

நூலாசிரியர் குறிப்பிட்டு இருப்பவை உண்மை. தமிழிலுள்ள திருக்குறள் முதலான பல நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்கள். இலக்கண, இலக்கியங்கள் நம்மவையாக இருந்தாலும் அவற்றின் நுட்பங்களை அறிய அவர்கள் காட்டிய மொழியியல் கோட்பாடும் இலக்கியக் கோட்பாடும் தமிழின் சிறப்பைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளன. கார்ல் கிரவுல் (Karl Graul, 1855) என்னும் ஜெர்மானிய அறிஞரின் மெல்வினை  (weak verb) இடைவினை (ஆனைனடந எநசதீ) வல்வினை (Middle verb) பற்றிய பகுப்புத் தமிழ் வினை ஆய்வுக்கு ஒரு கலங்கரை விளக்கம்.

டி.பர்ரோ (Strong verb) எம்.பி.எமனோ (M.B. Emeneau) என்னும் திராவிட மொழியியல் அறிஞர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள திராவிட இணைச் சொல் அகராதி (A Dravidian Etymological Dictionary, 1961) போன்று இன்னொரு விரிவான அகராதியை இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் நாம் தொகுக்க மாட்டோம்.

இப்படி அயலவர் தம் மொழியாகத் தமிழை நினைத்துச் செய்துள்ள தொண்டை நினைவுகூரும் நூலாசிரியரைப் பாராட்ட வேண்டும். கால்டுவெல் திராவிடத்திற்குத் தெளிவாக வழிகாட்டியுள்ளார். நாம்தான் பேசிக்கொண்டே வழியைத் தவற விட்டுவிட்டோம். இருப்பினும் விழிப்புணர்வைப் பெற்றோம் ஈரோட்டுப் பாதையால்.

பெரியார் முதலானோர்

காரல் மார்க்சின் பொதுவுடைமைக் கோட்பாடு பூமியில் களையாய் மண்டிக் கிடந்த மூடப்பழக்க வழக்கங்கள், அறியாமை, அடிமைத்தனம் போன்றவற்றை எல்லாம் புரட்டிப் போட்டது. பெரியாரின் முற்போக்குச் சிந்தனைகள் பிற திராவிடம் சார்ந்த நாடுகளைப் பாதிக்கவில்லை என்றாலும் தமிழ்நாட்டில் உறுதியாக ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது. முற்பட்டோர் அல்லாத மற்றவர்கள் அண்மைக் காலமாக நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வையோடு வாழ முதன்மைக் காரணம் தந்தை பெரியாரே. இதனால்தான் பெரியார், அம்பேத்காரின் தலைகள் சிதைகின்றனவோ?

மனித நேசம்தான் பெரியாரின் இலக்கு; பகுத்தறிவுதான் அவர் பாதை; சுயமரியாதைதான் வாகனம். சமத்துவம்தான் அவர் சக்கரத்தின் அச்சு (தமிழா. ப. 223). பல நூற்றாண்டுகள் பக்தியோடும் நிலக்கிழார்களோடும் பவனி வந்த தமிழுக்குப் பெரியாரைக் கண்டதும் பிணைத்திருந்த விலங்கு நொறுங்கி இருக்கும். சமுதாயச் சீர்திருத்தம், மொழிச் சீர்திருத்தம் எனப் பெரியார் தொட்டவை எல்லாம் துலங்கின. மார்க்சியமும் அம்பேத்கரியமும் அவரை ஆரத் தழுவிக் கொண்டதால்தான் 97 விழுக்காடு மக்களுக்கான விடியலைத் தேட முடிந்தது.

பெரியார் முரசம் என்றால் அதில் இருந்து முழங்கும் ஓசையாகப் பாவேந்தர், அண்ணா, கலைஞர் போன்றோர் தமிழகம் முழுவதும் அதிர்வு அலைகளை உருவாக்கினார்கள்.

பெரியார் சமுதாயத்தில் மண்டிக் கிடந்த களைகளை எடுத்துக்காட்டினார். பாரதிதாசன் அவற்றை எல்லாம் கவிதையில் முழங்கினார். தமிழகத்தில் காலங்காலமாகத் தேங்கிக் கிடந்த பிற்போக்குத் தனங்களைப் பாரதிதாசன் அளவிற்குச் சாடியவர் எவரும் இல்லை எனலாம்.

பெரியார் வழியில் வளர்ந்த அண்ணாவும் கலைஞரும் அரசுக் கட்டில் ஏறியதும் பல அரிய காரியங்களைச் செய்தார்கள். சனாதனக் கிடங்கிலிருந்து வருணாசிரமப் பள்ளத்தாக்கிலிருந்து 97 விழுக்காடு மக்களின் வாழ்வியல், உளவியல் இரண்டையும் மீட்டெடுக்கக் கருதியது அவர் கடமை (தமிழா. ப. 285) என்று அண்ணாவின் மனக்கிடக்கையை நூலாசிரியர் பதிவு செய்கின்றார்.

எல்லோரும் இந்நாட்டு மன்னர் (பார.பாட. 1831) என்னும் இலக்கை நோக்கி கலைஞர் போன்றவர்களை வீறுநடை போடவைத்தவை மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் போன்ற முற்போக்குச் சிந்தனைகள். இறைவனையும் தலைவிதியையும் சொல்லிச் சொல்லி உழைப்பிலும் ஏழ்மையிலும் ஆழ்த்திச் சிந்திக்கவிடாமல் தடுத்த சிறு கூட்டத்தின் பிடியில் இருந்து கட்டுடைத்துக் கொண்டு வெளியே வந்தவர் கலைஞர்.

அதிகாரம் கைக்கு வரும்போது கூடவே ஊழல், கருப்புப் பணம் போன்றவை பற்றியும் பேசப்படும். அவற்றில் உண்மையும் இருக்கலாம்; பொய்யும் இருக்கலாம். அவை பற்றி இங்குப் பேச இடமில்லை. உலகமயம் போல ஊழலும் உலகமயமாகி விட்டது. தேனை எடுத்தவன் கையை நக்குவது இயல்பு. ஆனால் இன்றைய உலகில் பொதுவாழ்வு, அரசுத்துறை, தனியார்துறை என எல்லாவற்றிலும் உள்ளவர்கள் தேனையே குடித்து விடுகிறார்கள். தேனால் வந்த நோய்க்குத் தேனே மருந்து என்பார்கள். இப்போது தெய்வமே மருந்தாகி விட்டது. ஆலயங்களில் மக்கள் குவிகிறார்கள். பங்கைக் காணிக்கையாகக் கொட்டுகிறார்கள். காரல் மார்க்ஸ், அம்பேத்கார், பெரியார் போன்றோர் மறுபடியும் பிறந்து இன்றைய உலகச் சூழலைப் பார்த்தால் மயங்கியே விழுந்து விடுவார்கள்.

கவிஞர் வைரமுத்துகூடப் பல நூல்களில் வறுமை, சுரண்டலைப் பதிவு செய்துள்ளார். 1947 - ஆகஸ்ட் - 15 / அவன் / ஒரு / பட்டுவேட்டி பற்றிய/ கனவில் இருந்தபோது / கட்டியிருந்த கோவணமும் / களவாடப்பட்டது. (கேள்வியால், பக். 82 - 83) ஊருக்குள் வந்தது ஊமைச் சுதந்திரம் / ஒன்றும் தரவில்லையே / சுரண்டும் நரிகள் / எங்கே? எங்கே? (நேற்றுப்போட்ட. பக். 113 - 114). ஆனால் பெரியாரின் வருகைக்குப் பிறகு குறிப்பாக அண்ணா, கலைஞர் போன்றோரின் பேச்சாலும் எழுத்தாலும் பற்றி எரிந்தவற்றை தமிழாற்றுப்படை நூலாசிரியர் பட்டியலிடுகின்றார். எரிகிறது; பற்றி எரிகிறது. மடமை எரிகிறது; மூட நம்பிக்கை எரிகிறது; வருணாசிரமம் எரிகிறது; சூழ்ச்சி எரிகிறது; ஆட்சி எரிகிறது; யுகக் குப்பை எரிகிறது; ஒடுக்கப்பட்டவர் மீது ஆண்டாண்டு காலம் செலுத்தப்பட்ட ஆதிக்கம் எரிகிறது; இடது சாரிச் சிந்தனைகளால் அநியாயத்தின் அடிப்படை எரிகிறது. வற்றிக் கிடந்த வாழைத்தண்டு மனங்களிலும் லட்சியம் எரிகிறது. எரியாதவை எழுதிய காகிதமும் திரையிடப்பட்ட திரையும் மட்டும்தான் (தமிழா. ப. 291)

சனாதன தர்மம் அழிந்துவிட்டது என்னும் புலம்பல் இப்போது அதிகமாகக் கேட்கிறது. அழிந்தவை எல்லாம் நூலாசிரியர் மேலே கூறியவைதாம். புலம்புகின்றவர்களே பெரும்பாலான தர்மங்களைத் தலைகுப்புறப்போட்டுத் தாண்டி விட்டார்கள்.

படைப்பாளர்கள்

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் / தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும் (பார.பாட. 1787) என்கிறார் மகாகவி. அறிவியலைவிடப் படைப்பிலக்கியங்கள் தமிழில் சிறப்பாகவே வளர்ந்துள்ளன. செம்மொழித் தமிழ் இலக்கியங்கள் இந்த மண்ணைப் பாடியதை விடவும் புதுக்கவிதைகள் உலகம் தழுவி எல்லாவற்றையும் பேசுகின்றன. சிறுகதை, புதினம் வளர்ந்த அளவிற்கு நாடகம் வளரவில்லை.

படைப்பிலக்கியங்களில் குறிப்பாகச் சிறுகதைகளிலும் புதினங்களிலும் வகை வகையான மாந்தர்களை வாழும் நிலம், சூழல் அடிப்படையில் சந்திக்கலாம். உலகத்தின் ஒட்டுமொத்த பிரச்சினைகளையும் புதுக்கவிதைகள் வழி அறியலாம். சொல்லப் போனால் பிரச்சினைகளைக் கூறுவதற்கே தோன்றியவை போலப் புதுக் கவிதைகள் உள்ளன.

புதுமைப்பித்தன் சிறுகதைக்கு வடிவம் தந்தவர். அவருடைய கதைக்கருவும் கதாபாத்திரங்களும் காலங்காலமாக இருந்தாலும் வெளியே தெரியாதவை. புதுமைப்பித்தனைப் போன்றே ஜெயகாந்தனுடைய சிறுகதையிலும் புதினங்களிலும் வரும் கதை மாந்தர்கள் நெஞ்சாங்குழிக்குள் நிழலாடிக் கொண்டே இருப்பார்கள். இவர்களிடமும் தமிழாற்றுப்படை நூலாசிரியர் தமிழை ஆற்றுப்படுத்துகின்றார்.

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் திரையிசைப் பாடல்களும் தூங்கிக் கிடப்பவர்களைத் தட்டி எழுப்பக் கூடியவை. இந்தியாவில் ஆன்மீகம் தழைத்திருக்கிறது என்கிறார்கள். சகிப்புத் தன்மை நிறைந்துள்ளது என்கிறார்கள். உபதேசங்கள் மூட்டைக் கணக்கில் மொழியப்பட்டுள்ளன. சாதிச் சண்டை, மதச்சண்டை, ஊழல் சுரண்டல், ஆண்டான் - அடிமை என மானுட வளர்ச்சிக்கான பிற்போக்குத் தனங்கள் அனைத்தும் மண்டிக் கிடக்கின்றன.

பட்டுக்கோட்டையாரின் பாடல்களில் அடிக்கடி நினைவுக்கு வரும் அடிகள். சித்தர்களும் யோகிகளும் / சிந்தனையில் ஞானிகளும் / புத்தரோடு ஏசுவும் உத்தமர் காந்தியும் / எத்தனையோ உண்மைகளை / எழுதி எழுதி வச்சாங்க / எல்லாந்தான் படிச்சீங்க? என்ன பண்ணிக் கிழிச்சிங்க? (பட். பாட. ப. 193). ‘எங்கள் குருநாதர் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை’ என்று யாரும் தப்பிக்க முடியாது. மனித நேயத்தில் முரண்படுபவர்களுக்கு மரண அடிகொடுத்துள்ளார் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். உலகில் எவ்வளவு முரண்பாடு? பாடல் அடிகளில் எவ்வளவு எதார்த்தம்!

தமிழை ஆற்றுப்படுத்த வேண்டியவர்களுன் கவியரசு கண்ணதாசனும் குறிப்பிடத்தக்கவர். எதார்த்த வாழ்க்கை, இலக்கியங்கள் என அனைத்திலிருந்தும் தேனீ போலச் சிறுகச் சிறுக உறிஞ்சி ஒரு கவிதைக் களஞ்சியத்தைத் தந்துள்ளார். முரண்பாடுகள் நிறைந்தவையாக அவர் வாழ்க்கை இருந்தாலும், தமிழ்க் கவிதைச் சமூகத்தில் யாரோடும் ஒப்பிட முடியாத தனியரு தமிழ்க் கவிஞன் கண்ணதாசன். இலக்கிய வரலாற்றில் வேறெப்போதும் காணாத வித்தியாசம் அவர். அந்த வித்தியாசம்தான் அழகு (தமிழா. ப. 315) என நூலாசிரியர் முத்தாய்ப்பாக முடிக்கின்றார்.

இறுதியாகத் தமிழை ஆற்றுப்படுத்துவது அப்துல் ரகுமானிடம். அவரை மட்டுமல்லாமல் புதுக்கவிதையின் வரலாற்றையே நூலாசிரியர் மிகவும் எளிமையாக எழுதி முடித்து விட்டார். முன்பே கூறியது போலத் தமிழாற்றுப் படையில் வரும் இருபத்து நான்கு பெருமக்களும் குறியீடுகள்தாம். ஒவ்வொருவருள்ளும் எண்ணற்றவர்கள் இணைந்திருக்கிறார்கள்.

புல்லின் இதழ்கள் வழி ஒளிர்ந்த புதுக்கவிதை மகாகவி, ந.பிச்சமூர்த்தி வழியாக வளர்ந்து மணிக்கொடி, எழுத்து, வானம்பாடி வழியாகப் பரவியதைக் குறிப்பிடுகின்றார். மீரா, சிற்பி பாலசுப்பிரமணியன், நா.காமராசன், ஈரோடு தமிழன்பன், அக்கினிபுத்திரன், புவியரசு, மு.மேத்தா, சந்திக்கனல், ஞானி, கங்கைகொண்டான், தமிழ்நாடன், பா.செயப்பிரகாசம், சிதம்பரநாதன் எனப் பெரும்பான்மையான கவிஞர்களைப் பட்டியலிடுகின்றார்.

பலரையும் கவர்ந்த அப்துல் ரகுமானின் கவிதைகள் சிலவற்றை எடுத்துக்காட்டி நினைவு கூர வைக்கின்றார். கவிதை மட்டுமல்லாமல் அவரின் நூல் தலைப்புகளே கவித்துவத்தையும் கம்பீரத்தையும் வெளிப்படுத்தும்.

தமிழாற்றுப் படை என்னும் தலைப்பை முதலில் அறிந்தபோது ஆற்றுப்படையின் நீட்சியாகத் தெரிந்தது. கட்டுரைகள் வெளிவந்தபோது துண்டு துண்டாகத் தெரிந்தது. ஒட்டு மொத்தமாகப் படிக்கும் போது வழக்கமான இலக்கிய வரலாறுபோல அல்லாமல் தமிழரின் வரலாறு, நாகரிகம், பண்பாடு எனத் தமிழர் சார்ந்த எதனையும் விட்டு வைக்காமல் ஒட்டு மொத்தமாகத் திரட்டித் தந்த நூலாகத் தெரிந்தது.

நிறைவாக ஒன்று. தமிழாற்றுப்படை நூலாசிரியர் கவிஞர் வைரமுத்து நூற்றுக்கணக்கான நூல்களையும் கட்டுரைகளையும் படித்து ஒரு நல்ல ஆய்வைச் செய்துள்ளார் என்பதை நூலைப் படிப்போர் அறிந்துகொள்ளலாம். அடிக்குறிப்பும் துணை நூற்பட்டியலும் அமைந்திருந்தால் எல்லோருக்கும் இல்லையென்றாலும் தேவை உள்ளோருக்குப் பெரிதும் பயன்படும். தமிழாற்றுப்படைக்கு நெஞ்சம் நெகிழும் வாழ்த்துக்கள்! இன்னும் பல அறிஞர்களிடம் தமிழை ஆற்றுப்படுத்தலாம்.

Pin It