பண்டைய இலக்கண, இலக்கியங்களுக்கு உரைநடை வடிவில் பொருள் எழுதியவர்கள் உரையாசிரியர்கள் என அழைக்கப் பெறுகின்றனர். இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், குணசாகரர், கல்லாடர், மயிலைநாதர் முதலானோர் இலக்கண உரையாசிரியர் ஆவர். அடியார்க்கு நல்லார், தெய்வச்சிலையார், மணக்குடவர், பரிதியார், பரிமேலழகர், பரிப்பெருமாள், காளிங்கர் முதலானோர் இலக்கிய உரையாசிரியர் ஆவார். இலக்கணம், இலக்கியம் என இரண்டிற்கும் உரை எழுதியவர் உளர். இவர்கள் 19 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட உரையாசிரியர்கள் ஆவார். இருபதாம் நூற்றாண்டு உரையாசிரியர்களாக ஔவை சு.துரைசாமிப் பிள்ளை, பொ.வே.சோமசுந்தரனார் ந.மு.வேங்கடசாமி நாட்டார், பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர், புலியூர்க்கேசிகன் முதலானோர் அறியப் பெறுகின்றனர்.

puliyur kesikanக.சொக்கலிங்கம் என்ற இயற்பெயர் பெற்றிருந்த புலியூர்க்கேசிகன் தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பாமாலை, தண்டியலங்காரம், நன்னூல் ஆகிய இலக்கண நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். நற்றினை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய எட்டுத்தொகை நூல்களுக்கு உரை கண்டுள்ளார். பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படைக்கு உரை எழுதியுள்ளார். திருக்குறள், பழமொழி நானூறு, நாலடியார் ஆகிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுக்கும் உரை வரைந்துள்ளார். இவ்வாறாக 50க்கும் மேற்பட்ட இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ள புலியூர்க்கேசிகன் உரைநடை நூல்கள், சோதிட நூல்கள், தன்னம்பிக்கை நூல்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழ்ச் சமூகத்திற்குத் தந்துள்ளார்.

‘ஏர் பிடித்தவர் ஏற்றம்’ என்ற தலைப்பில் புலியூர்க்கேசிகனின் முதல் உரைநூல் வெளிவந்துள்ளது. சிறு தலைப்பாக ‘கம்பரின் ஏரெழுபதின் விளக்கம்’ எனக் கொடுக்கப் பெற்றுள்ளது. பெயர் கொடுக்கப் பெற்றிருப்பதற்கு ஏற்பவே உரையை விளக்கமாக எழுதியுள்ளார். 1957 நவம்பர் மாதம் வெளிவந்த இம்முதல் நூலுக்கு அடுத்து வெளிவந்த இவரது உரைநூல்கள் அனைத்திலும் ‘தெளிவுரை’என்று பெயர் கொடுக்கப் பெற்றுள்ளது. உரையின் பெயர்களாக பதினான்கினை நன்னூலார் குறிப்பிட்டுள்ளார். பாடம், கருத்து, சொல்வகை, சொற்பொருள், தொகுப்பு, உதாரணம், வினா, விடை, விசேடம், விரிவு, அதிகாரம், துணிவு, பயன், ஆசிரிய வசனம் என்பனவற்றுள் தெளிவுரை என்றொரு வகையைக் காண முடியவில்லை. கருத்துரை என்பதையே தெளிவுரை என கொடுத்துள்ளார் புலியூர்க்கேசிகன். மேற்சுட்டப்பெற்ற வகையெல்லாம் இலக்கணத்திற்கான உரை வகைகள். எனினும் இலக்கியங்களுக்கும் அவை பொருந்தும்.

ஒவ்வொரு நூலுக்கும் உரை எழுதும்பொழுது அந்நூலுக்கு முன்னுரை எழுதுவது புலியூர்க்கேசிகனின் வழக்கமாகும். அம்முன்னுரையில் இரண்டு செய்திகளை அவர் குறித்துச் சென்றுள்ளார். ஒன்று - உரை எழுத எடுத்துக் கொண்டுள்ள நூலை முதன்முதலாகப் பதிப்பித்தது யார், உரை எழுதியது யார் எனக் குறிப்பிடுவது. இரண்டாவது, தனது உரை யாருக்காக, எவ்வாறு எழுதப் பெற்றுள்ளது எனக் குறிப்பிடுவது. 1960இல் வெளிவந்த அகநானூற்றுத் தெளிவுரையில்,

‘இந்நெடுந்தொகை என்னும் அகநானூற்றை, முற்றவும் தேடி எடுத்து ஆராய்ந்து, செம்மையாக வெளியிட்ட தமிழ்ப் பெரும்பணியினாலே, என்றும் தமிழன்பரின் உள்ளங்களில் நிலைபெற்ற புகழைத் தமதாக்கிக் கொண்டுள்ளவர், கம்பர் விலாசம் திருமிகு இராஜகோபால அய்யங்கார் அவர்களாவார். இந்நூல் முழுவதற்கும் நல்லுரை அமைத்து அடுத்து வழங்கியவர்கள் கரந்தைக் கவியரசு எனப் பெரும்புகழ் பெற்றுள்ள பெரியார் திரு. ரா.வேங்கடாசலம் பிள்ளையவர்களும் நாவலர் பண்டிதர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களும் ஆவர்’

எனக் கொடுக்கப் பெற்றுள்ளது. ஆக, உரை எழுதுவதற்கு முன்பாக வெளிவந்துள்ள பதிப்புகளையும், உரைகளையும் கவனத்திற் கொண்டு அவர் தனது ‘தெளிவுரையை’ அமைத்துள்ளார். சில நூல்களின் முன்னுரையில், தான் யாருடைய உரையைப் பின்பற்றியுள்ளேன் என்பதையும் வெளிப்படையாகச் சுட்டியுள்ளார்.

தான் எழுதும் உரையினைப் பற்றிய மதிப்பீடும் அவரிடம் தெளிவாக இருந்துள்ளது. ‘இலக்கியச் செய்யுள்களின் அவைமைக் காட்டிச் செல்வதற்கு மட்டுமே உரையினை வழிகாட்டியாகக் கொள்ளுதல் வேண்டும். அவற்றுள் செறிந்திலங்கும் ஆழ்ந்த பொருள்வளத்தை அறிந்து உணர்வதற்கு மீண்டும் மீண்டும் கற்று, கற்றுச் சிந்திப்பதே சிறப்பானதாகும்’ (கலி.முன்னுரை) என்பது அவரது கருத்து. ‘இலக்கியங்களைக் கற்றுத் தெளிந்தோரும், இலக்கியம் கற்க விரும்பும் மற்றையோரும் நற்றிணை நயத்தை அறிந்து கொள்வதற்கு உதவியாக அமைக்கப்பட்டு வெளிவருவதே இத்தெளிவுரைப் பதிப்பாகும்’ (நற். முன்னுரை) என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆக, தான் எழுதும் தெளிவுரையின் நோக்கம் பாடலின் கருத்தமைவைச் சுட்டிக் காட்டுவதாகும் என்பதை அவர் தெளிவாகவே குறிப்பிட்டுக் காட்டியுள்ளார். மேலும், தமிழில் ஆழமான அறிவுபெற்றோர் மட்டுமின்றித் தமிழறிந்தார் யாவருக்கும் எளிதில் புரியும்படி எழுதுவதே தெளிவுரை அமைப்பு (கலி. முன்னுரை) என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். தமிழ் இலக்கண இலக்கியங்கள் யாதொரு கூட்டத்திற்கு மட்டும் பயனுடையதாக அமையாமல் படிப்பறிவுடைய எல்லோருக்கும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவர் ‘தெளிவுரை’ எழுதியுள்ளார்.

கலித்தொகை முன்னுரையில் புலியூர்க்கேசிகன் ‘தமிழறிந்தார் யாவரும் எளிதில் பெற்றுக் கற்றுத் திளைப்பதற்கு’ எனக் குறிப்பிட்டிருப்பதில் ‘பெற்று’ எனும் சொல் கவனத்திற்குரிய சொல்லாகும். இலக்கிய நூல்களைப் பெருந்தொகை கொடுத்து வாங்கிப் படிப்பது எல்லோராலும் இயலாது. அவ்வாறு இயலாமல் போனால் அவரே குறிப்பிட்டிருப்பது போலத் தமிழறிந்த யாவருக்கும் அது சென்று சேராது. எனவே எல்லோரும் வாங்கிப் படிக்கும் வகையில் ‘மக்கள் பதிப்பாக’ வெளியிடுவதையும் அவர் விரும்பிச் செய்துள்ளார்.

புலியூர்க்கேசிகன் உரைநூல்களில் தலைப்பிட்டு உரை எழுதியிருப்பதும் கவனத்திற்குரியதாகும். குறிப்பிட்ட ஒரு பாடலின் கருத்தை மையமிட்டுத் தலைப்பிட்டுள்ளார். பாடல்களைப் படிப்போர் பாடற்கருத்தைப் புரிந்துகொள்ள வைக்கும் வா­யிலாக இத்தலைப்புக்கள் இடம்பெற்றுள்ளன. அகநானூறு - களிற்றியானை நிரையிலுள்ள முதல் ஐந்து பாடல்களுக்குப் ‘பிரியலம் என்ற சொல்’ ‘கங்குல் வருதலும் உர¤யை’, ‘பின்நின்று துரக்கும் நெஞ்சம்’, ‘கவின்பெறு கானம்’, ‘பிழையலள் மாதோ?’ எனத் தலைப்பிட்டுள்ளார். புலியூர்க்கேசிகன் எழுதியுள்ள எல்லா உரைநூல்களிலும் இத்தலைப்பிடும் வழக்கத்தைக் கொண்டுள்ளார்.

பெயர் தெரியாப் பழைய உரையாசிரியர்கள், இளம்பூரணர்,சேனாவரையர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர் உள்ளிட்ட உரையாசிரியர்களின் உரையைக் கற்கின்றபொழுது அவர்களின் உரைகளில் அடிப்படையாக மூவகைக் கூறுகள் இடம்பெற்றிருப்பதைக் காணலாம். ஒன்று - நூற்பா அல்லது பாடலடிகளுக்கான பொருள். இரண்டு- உரையாசிரியர் தம் அறிவுசார், பிற பதிவுகள். மூன்று-அவர்தம் கொள்கைசார்(சமயம் சார்) பதிவுகள். இம்மூன்றனுள், பின்னிரண்டும் உரையைக் கடந்து உரையாசிரியர்களை அடையாளப்படுத்தும் பதிவுகளாகும். அதாவது அவர்தம் உரைகளில் ‘தான்’ என்ற அடையாளம் இருப்பதைக் கண்டுகொள்ளலாம்.

ஆனால், புலியூர்க்கேசிகனின் உரையில் அதுபோன்ற அடையாளங்களைக் காண முடியவில்லை. தனித்தமிழ் இயக்கத்தின் நிறுவுநர்களில் ஒருவரான மறைமலையடிகளின் மகள் நீலாம்பிகை அம்மையாரின் குடும்பத்தோடு தொடர்புடையவர், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டவர் என்பன உள்ளிட்ட அடையாளங்கள் இருப்பினும் அவரது உரைகளில் தனித்தமிழ்ச் சொற்களையோ முற்றும் முழுதாக வடமொழி கலக்காத நிலையையோ காண முடியவில்லை. தமிழ் கற்றவார்களுக்கு உரை சென்று சேர வேண்டும் என்ற நோக்கில் மக்கள் பயன்படுத்தும் சில வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தியே உரை எழுதியுள்ளார். வடமொழிக்கு இணையான தமிழ்ச் சொற்களையும் பயன்படுத்தியுள்ளார். அதாவது, உரையாசிரியரின் அடையாளத்தைக் காட்டிலும் / உரையாசிரியரின் அறிவாற்றலின் அடையாளத்தைக் காட்டிலும் ‘உரை’ என்பதை மட்டுமே கவனத்தில் கொண்டு பனுவல்களுக்கு உரை எழுதியுள்ளார்.

அவ்வுரைகளுள், சுருக்கி உரைத்தல், ஒப்பிட்டுக் காட்டல், விளக்கி உரைத்தல் எனப் பல கூறுகளும் இடம்பெற்றுள்ளன. என்றாலும், தெளிவுரை என்ற பெயரையே பெற்றுள்ளன. பாடல் கருத்தைக் கூறுதல் என்பதிலேயே கவனம் செலுத்தியுள்ளார். அதேபோன்று பாடலுக்குத் தலைப்பிட்டு உரை எழுதும் முறையையும் கையாண்டுள்ளார். மேலும், ‘தான்’ என்ற அடையாளத்தைத் தவிர்த்து உரை எழுதியுள்ளனர். இவை மூன்றும் புலியூர்க்கேசிகனின் உரைமரபாகப் பின்பற்றப்பட்டு வருவதனை 1992ஆம் ஆண்டுக்குப் பிறகான உரைகளில் காண முடிகின்றது.

புலியூர்க்கேசிகனின் உரை படிப்பதற்கு ஏற்ற உரை அன்று என்ற எண்ணம் பலரிடம் இருந்துள்ளது. அவர் வாழ்ந்த காலத்திலேயே இதனைக் கூறி வந்துள்ளனர். அவரது உரையைப் பற்றியதான இதுபோன்ற எந்தக் கருத்துரைகளுக்கும் எதிராக அவர் மறுத்துரைத்து எழுதவில்லை. அதுபோன்ற பதிவுகளையும் காண முடியவில்லை.

ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்கும்மேல் நூல் எழுதும் பணியை இடைவிடாது செய்து வந்த புலியூர்க்கேசிகனின் நூற்றாண்டு இம்மாதத்தோடு நிறைவுக்கு வருகிறது. அவர் எழுதியுள்ள நூல்களோ நாட்டுடைமை ஆக்கப்பட்டு இன்னும் பல நூற்றாண்டுகள் கடந்து நிற்கும்!

துணைநூற்பட்டியல்

புலியூர்க் கேசிகன்(உரை),1957, ஏர் பிடித்தவார் ஏற்றம், தேனருவிப் பதிப்பகம், சென்னை.

.......................1958, கலித்தொகை-தெளிவுரை, தேனருவிப் பதிப்பகம், சென்னை.

.......................1960, அகநானூறு- களிற்றியானை நிரை தெளிவுரை, தேனருவிப் பதிப்பகம், சென்னை.

.......................1967, நற்றினை- தெளிவுரை, பாரி நிலையம், சென்னை.

- அ.செல்வராசு, உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தந்தைப் பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (த), திருச்சி.

Pin It