தகடூர்க்காரன் அதியமானோடும் அவன் ஒரு மூதாட்டிக்கு கொடுத்த சாகாப் பழம் நெல்லியோடும் தொடர்புடையது போலத் தோற்றம் கொண்ட பெயரை உடைய அந்த ஊருக்கு மின்சாரம் வெள்ளைக்காரன் நாட்டை விட்டு ஓட்டம் எடுப்பதற்கு முன்பே வந்ததாக பாவடித் தெரு டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து கிழவர்கள் வெகுகாலம் பேசியபடி இருந்தார்கள். என்றாலும் திட்டவட்டமாய் மின்சாரம் வந்த அந்த நாள் யாருக்கும் தெரியாமல் இருந்தது. அது தெரிந்து ஆகப்போவதென்ன என்று அசட்டு சோம்பேறித்தனம் அனேகருக்கு இருந்ததால் அந்த முக்கிய நாள் நெலிகத்து சரித்திரத்தில் காணாமலே போயிருந்தது. அதுவுமில்லாமல் மின்சாரம் வந்த நாளை பிரயத்தனப்பட்டு அறிந்து அந்த சரித்திரத்தை பெருமாள் கோயிலின் சிதைந்த கல்சுவற்றின் கல்வெட்டாய் வெட்டும் ஆர்வத்தில் யாரும் அந்த ஊரில் கிடையாது.

மின்சாரம் வந்த நாள் யாருக்கும் தெரியாவிட்டாலும் தற்போதைய நாளில் மின்சாரம் இல்லாத ஒரு நாள் வந்துவிட்டால் ஊரே பதைபதைத்து பயித்தியமாகி இருள் வீதிக்கும் பழய வீட்டுக்குமாக சோற்றுக்கலையும் பால்மடி நாய் போல அல்லாடிப் போவார்கள். காற்றில்லா விட்டாலும் மனுசன் உயிரோடிருக்க சாத்தியமுண்டு. கரண்ட் இல்லாவிட்டால் ஒரு நாளைக்கே உயிர் தரித்திருக்க சாத்தியமில்லை என்று காலவோட்டத்தில் மாறிப்போன கிராம நகர பெருநகரங்களின் பொதுவான வாழும் பரிணாம விதிகள் நெலிகத்திற்கும் பொதுவானதாகவே இருந்தது.

மொத்தம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இருப்பதாக ஊர்காரர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அதற்கும் மேல் வீடுகள் இருக்கும் என்று வலம் சுற்றி வந்தவர்களுக்குத் தோன்றும். ஊரில் இருக்கும் வீட்டிற்கு சில வைக்கோல் கூரை வீடுகளைத் தவிர்த்து மற்ற வீடுகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழல் விளக்குகளும், குண்டு பல்புகளும், டிவி கிரைண்டர் மிக்சி போன்றவையும், மின்இயக்கம் பெற்ற தறி, தையல்மெஷின், மாவு மில் போன்றவையும் இருந்தன.

அனேகப்பல மின்சாதனங்களைக் கொண்டு வாழ்க்கையை கட்டமைத்துக் கொண்ட நெலிகத்தார் மின்சாரத்தில் சாத்தியப்பட்ட அத்தனை சாத்தியப்பாடுகளையும் ருசித்தவர்களாக இருந்தார்கள். மின்சாரத்தினால் மனிதனை உயிர்ப்பிக்கும் வித்தையும், மனிதர்களின் கலவியும் மட்டுமே ஊரில் நடைபெறாமலிருந்தது. அதற்கு காரணம் அதில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை, அல்லது தெரியாது, அல்லது சாதனங்கள் கிடைக்காமல் இருந்தார்கள் என்று எப்படி வேண்டுமானாலும் கொள்ளலாம்.
மின்சார உபகரணங்கள் மிக அதிகம் கொண்ட அந்த ஊரில் எப்படிப்பட்ட மின்சார சம்மந்தமான பொருட்களின் பழுதுகளையும் நீக்கி உயிர் காப்பாற்றிக் கொடுக்கும் கடவுளாக ஒருத்தன் இருந்தான்.

அவன் சுயம்புவாய் முளைவிட்டு ஊருக்குள் அவதரித்த கரண்ட் கடவுள். பெயர் குமரன். அரதப்பழசாகி சுடுகாட்டுக்கு போகும் நிலவரத்தில் இருக்கும் கிழடுதட்டிய உபகரணங்களை கொஞ்சம் ஈயமும் ஒரு சூட்டுக்கோலும் மட்டும் வைத்துக்கொண்டு ஊதுவத்தியில் பட்டாசுக்கு சூடு வைப்பது போல சூடு வைத்து புகை எழுப்பி அதை மரணத்திலிருந்து காப்பாற்றும் மிக எளிமையான கடவுளாக அவன் இருந்தான்.

பரண் சுடுகாட்டுக்குப் போகாமல் அவனால் காப்பாற்றப்பட்ட பழம்பெரும் மின் பொருட்கள் ஏராளம் அந்த ஊரில் உண்டு. அவனால் உயிர்பெற்ற சில சாதனங்கள் சாகுங்காலத்து பெரிய மனுசர்களைப் போல இருமிக் கொண்டும் தும்மிக் கொண்டும் இப்பொழுதும் நெலிகத்து வீடுகளில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் வீட்டுக்கு ஒயரிங் செய்வது, பழுதுபட்ட எல்லாவிதமான மோட்டார்களுக்கும் காயில் கட்டுவது, புத்தம் புதுசாய் வந்த உத்தரவாதம் வழங்கப்படாத அகலத் தொலைபொம்மைப் பெட்டிகள் முதலாக எம்.பி. மூன்றுரக குறுந்தகட்டு ஓட்டுனர் (மெகா டெலிவிஷன், மற்றும் எம். பி - 3 பிளேயர் என்று தமிழ் உச்சரிக்க கடினப் படுபவர்கள் சொல்லலாம்) வரை அவன் சரிசெய்துகொண்டிருந்தான்.

குறைப்பிரசவத்தில் அவதரித்து ஊருக்குள் வந்துவிட்ட அந்த அப்பாவி அரை வேக்காட்டு தயாரிப்புகளை வில்லேந்திய கடவுள் போல் சூட்டுக்கோல் ஏந்தி காப்பாற்றும் வேலையை குமரன் எந்த காகிதப் படிப்பின் மூலமாகவும் கற்றெடுக்காமல் சின்ன வயதில் தனக்கிருந்த சினிமாப் பாட்டை விரும்பிக் கேட்கும் ஆர்வத்தினாலேயே சுயமாகக் கண்டு கொண்டான். வெறும் பாட்டு கேட்கும் ஆர்வம் எப்படி ஒருத்தனுக்கு உபகரணத்தைக் காப்பாற்றும் கடவுள் ஞானத்தைத் தரும் என்பது ஒரு அர்த்தமுள்ள கேள்விதான்.

ஒருமுறை ஏழாம் கை மாறி விற்பனைக்கு வந்த கிடைமட்டமாய் படுத்து பாட்டுப்பாடும் அந்தக்கால டேப் ரிக்கார்டர் ஒன்றை பத்தில் ஒரு பங்கு சில்லறை விலைக்கு வாங்கினான் குமரன். பாட்டு கேட்கும் ஒரே ஆர்வத்திற்காக வாங்கப்பட்ட அந்த டேப் ரிக்கார்டர் தனக்கு இருந்த முழு பலத்தையும் உபயோகப்படுத்தியும் ஒரு பாட்டை முழுசாகப் பாடி முடிக்க முடியாமல் தடுமாறியது. ஒரு பாட்டைப் பாட ஒரு வாரம் எடுத்துக் கொண்ட அது சிலபோது நின்று நின்று பாடியதோடில்லாமல் பாட்டு அல்லாத இன்ன பிற சத்தங்களை அதிக அளவுக்கு எழுப்புவதாகவும் இருந்தது.

டேப் ரிக்கார்டரின் தலைவிதியை மாற்றி எழுதும் பிரம்மாக்கள் ஊரில் அப்பொழுது யாரும் இல்லாததால் அதை ஒரு அழுக்கு மஞ்சள் துணிப்பையில் போட்டு எடுத்துக்கொண்டு போய் டவுனில் இருக்கும் பிரம்மாவிடம் காட்டினான். அந்த டவுன் பிரம்மா புதிதாக வாங்கும் அளவுக்கு இரு மடங்கு அதிக காசு செலவாகும் என்று சொன்னான். மாட்டு வண்டியில் சொந்த பந்தத்தோடு போன நோய்வந்த மனுசன் மாலை மரியாதையோடு மரணமடைந்து குதிரைவண்டியில் பிணமாக திரும்பிய கதையாக, மஞ்சள் பையில் கொண்டு போன டேப் ரிக்கார்டரை வெறும் காகிதத்தில் பொட்டலம் கட்டிக்கொண்டு வந்தான் குமரன். அந்த அழுக்கு மஞ்சள் பையில் சந்தையில் வாங்கிய காய்கறிகள் இருந்ததுதான் அதற்கு காரணம்.

அந்த டேப் ரிக்கார்டர் மூச்சு பேச்சில்லாமல் கட்டை பீரோவுக்கு அடியில் வெகு காலம் சும்மாய்த்தான் இருந்தது. ஒருநாள் வீட்டில் எதையோ தேடப்போய் அது கிடைத்ததால் ஒரு டேப் ரிக்கார்டரில் அப்படி என்னதான் இருக்கிறது என்று அறியும் ஆர்வம் ஏற்பட்டு ஒரு தேங்காய் கீறும் கத்தியின் உதவியால் அதை திறந்து பார்த்தான் குமரன். வேலை இல்லாமல் சும்மாயிருக்கிற ஒரே காரணத்திற்காகத்தான் அதை திறந்து பார்த்தான் என்றாலும் தேங்காய் கீறும் கத்தியால் திறக்கப்பட்ட டேப் ரிக்கார்டருக்குள் கெப்பாசிட்டர், டிரேன்ஸ்சிஸ்டர், ஐசி, ரெஸிஸ்டர் என்று ஒரு மின்சார மின்னனு பால்வெளி உலகம் சகல நட்சத்திர சூரியர்களோடு அவனுக்குத் தெரிந்தது. ஒரு டேப் ரிக்கார்டரை அகலத் திறந்த அந்த கணத்தில் குமரனுக்கு மின் உபகரணம் காப்பாற்றும் கடவுள் ஞானம் முதன் முதலாக கிடைத்தது.

அவன் எதையோ தொட என்னவோ ஆகி எப்படியோ தனக்குத் தானே பாட ஆரம்பித்த டேப் ரிக்கார்டர் ஒரு பாட்டை முழுசாக பாடி முடித்து பிறகு பரம திருப்தியோடு உயிர்விட்டது. குமரன் அச்சப்படவில்லை. திரும்பவும் அதை தட்டி எழுப்பினான்.அது ஒவ்வொரு முறை பாடலை நிறுத்தி மரணமடைந்த போதும் அதன் உலகத்தை திறந்து புது சிருஷ்டி செய்தான் குமரன். அப்படி செய்ய ஆரம்பித்ததன் விளைவாகத்தான் அவன் புதுசாக ஸ்குரு டிரைவர், சூட்டுக் கோல், ஈயம், சில கெப்பாசிட்டர்கள், டிரேன்ஸ்பார்மர் ரெஸிஸ்டர்கள் போன்றவற்றை வாங்க ஆரம்பித்தான். அதன் வழியே இன்றைக்கு ஊரின் மிகப் பெரிய மின்சார மெக்கானிக்காக ஆகிவிட்டிருந்தான்.

அவனுக்கு தினப்படி வருமானமும் வசதி வாய்ப்புகளும் அந்த உத்யோகத்தால் சிரமமில்லாமல் வந்தது. அழகான மனைவியும், இரண்டு பிள்ளைகளும் கிடைத்ததுகூட அந்த தொழில் கவுரவுத்தினால்தான். குடும்பத்திற்கான அத்தியாவசியம் தவிர, அவன் மனைவி விரும்பும் புதுப்புது உடைகள், சில நகைநட்டுக்கள், அலங்காரப் பொருட்கள் போன்றவற்றையும் அந்த தொழில் ஈட்டித் தந்தது.

குமரனுக்கு ஊரில் காற்றோட்டமான நல்ல வீடும், வாகன வசதியும், வீடு நிறைய அத்தியாவசிய மற்றும் அனாவசியப் பொருட்களும் இருந்தது. வீட்டில் அவன் மனைவிக்கு இருப்பதைவிட அதிகமான உடைகள் குமரனுக்குத்தான் இருந்தது. அவனுக்கு உடை என்றால் கொள்ளைப் பிரியம். விதவிதமான உடைகளை அது உலகில் அவதரித்த நாளிலேயே வாங்கி அணிவதில் அவனுக்கு மிக விருப்பம் இருந்தது. உடைக்காக எத்தனை காசும் அவன் செலவளித்தான்.

சின்ன படிப்பு படிக்கிற காலத்தில் தன்னோடு படித்த பையன்கள் தன்னைவிட நன்றாக படிக்கிறார்கள் என்றோ, தன்னைவிட அழகாக இருக்கிறார்கள் என்றோ அவன் பொறாமைப்பட்டதே இல்லை. மாறாக தன்னைவிட அழகாக உடை உடுத்துகிறார்களே என்று வேதனைப்பட்டு தன் கிழிந்த உடைகளின் தையல் தழும்புகளை அவமானத்தோடு மறைத்துக் கொள்வான். இத்தனைக்கும் அவன் வெகு சின்ன பிள்ளையாக இருந்தபொழுது ஊரிலேயே அழகான உடை உடுத்திய குழந்தையாக அத்தனை பேர் பொறாமையையும் வாரி இறைத்துக் கொண்டதாக அம்மா சொல்வாள்.

என்றைக்கோ போட்ட அழகான துணியின் ஒய்யார அழகிற்காக கர்வப்பட்டு இன்றைக்கு பழந்துணிகளின் கிழிசல்களால் மான அவமானத்தை மறைக்க முடியாது என்ற தெளிவு அவனுக்கு இல்லாவிட்டாலும் அழுதான். அம்மாவிடம் புதுத் துணி கேட்டால் உடை கிடைக்காது உதைதான் கிடைக்கும் என்று அவனின் சதுரித்து வெட்டிய தலைமுடிக்குள் இருந்த மூளைக்கு அத்தனை சின்ன வயசிலேயே தெரிந்திருந்தது. அன்று நல்ல உடை கிடைக்காத அந்த ஏமாற்றமும், அந்த ஏக்கமும்தான் இன்றைக்கு அவனை பலப்பல புதுரக உடைகளை வாங்கிக் குவித்து நன்றாக உடுத்த வைத்தது.

கவுரவமானவனாகவும், ஒரு தப்பான வார்த்தை ஊரில் கேட்காதவனாகவும், மானஸ்தனாகவும் வாழ்ந்துகொண்டிருந்த அப்படிப்பட்ட குமரன் ஒரு வெள்ளிக்கிழமை நடுமத்தியானத்தில் ஊரில் யாருமே செய்வதற்கும், யோசிப்பதற்கும்கூட அச்சப்படும் ஒரு வினோதமான காரியம் செய்தான். விரும்பிய உடைகளை பலப்பல தினுசுகளில் உடுத்தி உள்ளத் திருப்தியோடு இருந்த குமரன் அந்த வினோத வெள்ளிக்கிழமையின் உச்சி வெயில் நேரத்தில் உடுத்தியிருந்த உடைகள் அத்தனையும் உருத்தெரியாமல் கிழித்து எறிந்துவிட்டு, உடையற்ற வெய்யிலில் உடல் மினுமினுக்க தெருவெல்லாம் வினோதமாக கத்திக்கொண்டே ஓடி முடிவாக நெலிகத்தார் அத்தனைபேரின் கண்களும் அகலத் திறந்து அதிர்ச்சியில் உறைந்து நிற்க ஒரு உயரமான மரத்தில் ஏறி பக்கத்தில் இருந்த ஊர்ப் பொதுக் கிணற்றில் தலைகுப்புற விழுந்தான்.
2
நெலிகம் கிராமம் தோன்றி எத்தனை வருசங்கள் ஆயிற்று, அங்கு மனிதர்கள் துணி உடுத்துவதை எப்பொழுதிலிருந்து ஆரம்பித்தார்கள், உடல் மறைக்கும் நாகரீகம் தோன்றி எத்தனை வருசம் ஆயிற்று என்பது, மின்சாரம் வந்த நாள் அறியப்படாதது போலவே அறியப்படாத சங்கதியாக ஊரில் இருந்தது. அதே சமயம் நெலிகத்தில் இப்பொழுது உயிரோடிருப்பவர்களின் நினைவுக்கு குழப்பமற்று தெளிவாகத் தெரிந்தவரையில், காலாதி காலமாக ஊருக்குள் யாரும் உடையில்லாமல் நடமாடியதாக பேச்சு வழக்கில்கூட கதைகள் கிடையாது. இரவின் கண் தெரியாத வீட்டுச் சுவற்றுக்குள்ளும், தென்னை ஓலையின் துவாரம் மிகுந்த குளியல் தடுக்குக்குள்ளும், நடக்கமுடியாத நோயாளியின் படுக்கை மீதும் மட்டுமே நிர்வாணமாக சில மனுஷ மனுஷிகள் நெலிகத்தில் இருந்தார்களேயன்றி குமரனைப் போல பலபேர் முன்னிலையில் பட்டப் பகலில் நிர்வாணமாக யாரும் அலறியபடி அத்தனை வேகமாக ஓடியதே கிடையாது. அந்தக் காட்சியை இன்றைக்குத்தான் நெலிகம் மண் கண்டிருக்கிறது.

உடை உடுத்துவதுதான் மானத்தை காப்பாற்ற ஒரே உத்தமமான வழி என்று நெலிகத்து ஜனங்கள் நம்பித் தொலைத்ததால் குமரன் செய்த இந்த உடையற்ற ஓடும் சேட்டைகளை ஒருவராலுமே ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. பெண்கள் முற்றிலுமாகவும், ஆண்கள் பாதியளவுக்கும் இது குறித்து அதிருப்தி தெரிவித்தார்கள். குமரனின் உடையற்ற ஓட்டம் ஊருக்குள் ஒரு பிரச்சனையை கிளப்பியதென்றால் அவன் கடைசியாக போய் ஏறிய உயரமான மரமும் குப்புற விழுந்த கிணறும் இன்னொரு விதமான பிரச்சினையை ஏற்படுத்தியது.

குமரன் விழுந்த அந்தக் கிணறு ஊருக்கு மேற்கில் வெகு தொலைவில் வயல்களுக்கு நடுவே இருக்கிறது. நெலிகத்தின் மொத்த பேருக்கும் அதிலிருந்துதான் குடிக்க தண்ணீர் கிடைக்கிறது. சவுள்மண் பூமி என்பதால் ஊரின் பிற அத்தனைக் கிணறுகளும் உப்பின் சுவையோடு இருக்க அந்தக் கிணறு மட்டுமே வெல்லமென தித்திக்கும் நீரை ஊருக்கு தந்துகொண்டிருந்தது. அந்தக் கிணறு தெய்வீகக் கிணறு என்றும் ஊரில் பேச்சு உண்டு. ஊரில் ஒரு முறை தண்ணீர்த் தரித்திரம் ஏற்பட்டு சொட்டு நீர் இல்லாமல் இருந்தபொழுது, ஊரின் அக்னிமூலைக் கோயிலில் லிங்க வடிவில் இருக்கிற ஈஸ்வரன் வந்து அந்த கிணற்றை வெட்டிக் கொடுத்ததாக ஊரில் கதை இருக்கிறது.

ஈஸ்வரன் கிணறு வெட்டிய அந்தக் கதையை எட்டு வருடத்திற்கு முன்பு கூட விலாவரியாக சொல்ல சுப்பன் கிழவன் இருந்தான். இப்பொழுது அவன் செத்துப்போனதால் கதை சொல்லவும் ஆள் இல்லை, சொன்னால் நம்பவும் ஆள் இல்லை. ‘உலகத்தில் பஞ்சம் பார்க்காத ஊர் எது? தண்ணீருக்கு சாகாத தேசம் எது? உலகத்துக்கெல்லாம் பொதுவான ஈஸ்வரன் நெலிகத்திற்கு மட்டும் கிணறு வெட்டித் தந்தானா?’ என்று பரம்பரை பரம்பரையாக ஈஸ்வரனை கும்பிடும் பட்டை போட்ட நெற்றிக்காரர்களே எதிர்க் கதையாடியதால் கதையை சொல்லவும் கேட்கவும் முற்றாக மறந்திருந்தது ஊர்.

கிணறு வெட்டக் காரணமான அந்த பஞ்சத்தை அப்பொழுது யாரும் பஞ்சாங்கத்தில் குறித்து வைத்து பஞ்சாகத்தை பத்திரப்படுத்தி வைக்கவில்லை. அதனால் விளைந்த விபரீதம் என்னவென்றால் பஞ்சம் குறித்து சில வயசாலிகள் பேசிக்கொள்ளும்போது, அந்த பஞ்சம் தாது வருசப் பஞ்சத்துக்கு முந்தைய பஞ்சம் என்றும் , இல்லை அது தாது வருசத்துக்கு பிந்தைய பஞ்சம் என்றும், இல்லை அது தாது வருசத்து பஞ்சமேதான் என்றும் வாய்க்கு வாய் விவாதம் செய்யும்படி ஆயிற்று. அது எந்த வருசத்துப் பஞ்சம் என்று சரியாக இப்பொழுது முடிவெடுக்க முடியாது. காரணம் அதைப்பற்றி கடைசியாக கதை சொன்ன சுப்பன் கிழவன்தான் எட்டு வருசத்துக்கு முன்பே சொர்கத்துக்கு போய்விட்டானே. நெலிகத்திற்கு நவீன காலத்தின் எல்லா வசதிகளும் வந்திருந்தாலும் செத்தவர்கள் போன இடத்திற்கே போய் சந்தேகத்தை கேட்டுக்கொண்டு வரும் வசதி வாய்ப்புகள் இன்னும் வந்திருக்கவில்லை. வசதிகள் சாத்தியப்பட்டால் கிணறு வெட்டியது அக்னிமூலை லிங்கம்தானா என்பது தெரிந்துவிடும்.

குமரன் குப்புற விழுந்த பிறகு கிணற்றுக் கதை ஊருக்குள் பெரும் கதையாக உருவெடுத்தது. மனுசன் ஏறக்கூடாத மரத்தில் அவன் ஏறி ஆள் இறங்கக்கூடாத கிணற்றில் குதித்து விட்டானே இது ஊருக்கு கெட்டதாயிற்றே என்று அடுத்த தலைமுறைக் கிழவர்கள் தங்களுக்குத் தெரிந்த பாரம்பரியக் கதைகளை அடியொற்றி விசனப்பட்டார்கள். கிணற்றுக் கதை உண்மையாகத்தான் இருக்குமோ என்று கதையை நம்பாத சிலபேரும் நம்பத் தலைப்பட்டார்கள்.

பஞ்சம் வருவதற்கு முன் நெலிகத்து ஜனங்கள் எல்லாம் அன்னாடங்காய்ச்சிகளாகவும் சிலபேர் இரண்டு நாளுக்கு ஒருமுறை காய்ச்சிகளாகவும் இருந்தார்கள். பஞ்சம் வந்த பிறகு அதே ஜனங்கள் வாரத்திற்கொரு நாள், அல்லது மாசத்துக்கு இரண்டு நாள் காய்ச்சிகளாக ஆனார்கள். (ஊரில் பாதிப்பேர் சாப்பாட்டுக்கில்லாமல் பஞ்சத்தில் செத்துப்போனதாய் சுப்பன் கிழவன் சொல்லியிருக்கிறான். ஆனால் இதுவரை குவியலாக மண்டை ஓடு கண்டெடுக்கப்படாததால் நம்பமாட்டேன் என்று அரசு கலைக்கல்லூரியில் சரித்திரம் படிக்கும் பையன் ஒருத்தன் வீம்பாகவும் விரைப்பாகவும் மறுத்திருக்கிறான்.) பாதிப்பேரை தின்ற அந்த பஞ்சம் வந்த காலத்திலும் நல்ல செல்வத்தோடும் சிறப்போடும் தினங்காய்ச்சியாக ஒரு பணக்காரன் நெலிகத்தில் இருந்திருக்கிறான்.

இன்றைக்கு அப்பனாண்டி என்று பெரிய மாடிவீடு கட்டிய ஒரு பணக்காரன் இருக்கிறானே அவனின் கொள்ளு தாத்தாதான் அந்த பணக்காரர் என்பார்கள். கொள்ளுதாத்தா இல்லை எள்ளு தாத்தா என்றும், இல்லை, இல்லை, அது எலிப் புளுக்கை தாத்தா என்றும் பலவிதமான குழப்பங்கள் அந்த பணக்கார தாத்தாவைப் பற்றி உண்டு.

அப்பனாண்டியின் அந்த எலிப்புளுக்கை தாத்தா ஏகத்திற்கும் நிலம் நீச்சு வைத்திருந்தார். நெலிகத்தின் ஏரி மொத்தம் நூறு ஏக்கர் பரப்பும், இரண்டு ஆள் ஆழமும் கொண்டது. அதன் மதகுத் தண்ணீரில் விளைந்த ஏரியின் கீழ் பாசன நிலம் மொத்தம் நூத்திப் பத்து ஏக்கரும் அப்பனாண்டியின் தாத்தாவிற்கு சொந்தமானது. இல்லை அது ஈஸ்வரன் கோயில் மானிய நிலம் என்றும் சிலர் சொல்லியிருக்கிறார்கள்.

அப்பனாண்டியின் தாத்தாவிற்கு இரண்டு குதிரைகள் பூட்டிய ஒரு வண்டி உண்டு. நிலங்களில் வேலை செய்ய நிறைய வேலைக்காரர்கள் உண்டு. தினமும் குதிரை வண்டியில் போய்தான் நிலங்களை அவர் மேற்பார்வை செய்வார். குதிரைவண்டியில் அவர் போகும்போது வண்டிக்கு முன்பாக ஏழு வேட்டை நாய்கள் ஓடும். பக்கத்தில் காடுகளே இல்லாத ஊரில் அந்த வேட்டை நாய்கள் குதிரை வண்டிக்கு முன்பாக ஓடியதைத் தவிர வேறு என்ன வேலை செய்தன என்று யாருக்கும் தெரியவில்லை. (இப்படி கதை முழுசும் அது தெரியாது, இது தெரியாது என்று மழுப்பிக்கொண்டே கதை நீள்வதால் நாய் வந்த இடத்திலேயே கதை போதும் என்று பலபேர் போய்விட்டதாக சுப்பன் கிழவன் அப்பனாண்டியிடம் சொல்லியிருக்கிறான். அதை அப்பனாண்டி இன்றைக்கும் குழப்பமில்லாமல் சொல்வான். அது ஒன்றுதான் குழப்பமற்ற தெளிவான கதையாக இருக்கிறது)

பஞ்சம் வந்ததால் அப்பனாண்டித் தாத்தாவின் நிலமும் வறண்டு போனது. நெலிகத்து ஏரியில் தண்ணீர் இருந்தால்தான் அப்பனாண்டியின் தாத்தா நிலமும் விளையும், கோமேரி ஏரியில் தண்ணீர் இருந்தால்தான் நெலிகத்து கிணறுகளில் தண்ணீர் ஊரும். இப்பொழுது இரண்டு ஏரிகளுமே வறண்டு இருந்தது. மழை பெய்து நான்கு வருடமாகிவிட்டது. நெலிகத்துக்கு மேல் இருந்த ஆகாயத்திலோ கீழ் இருந்த மண்ணிலோ எங்குமே ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் போயிற்று. நீரற்ற நிலம் சுடுகாட்டு நெருப்புபோல தகித்ததாக கதை சொன்ன கிழவன்; சொல்லியிருக்கிறான். தண்ணீர் தரித்திரம் ஊருக்குள் வந்துவிட்டதால் ஊரே அழுது புலம்பியபடி அப்பனாண்டியின் தாத்தாவைப் போய் பார்திருக்கிறார்கள்.

அப்பனாண்டியின் தாத்தா பெரிய ஈஸ்வர பக்தன். மழை வரவைப்பதற்காக அவர் ஈஸ்வரனுக்கு பெரிய அளவுக்கு பூசை செய்திருக்கிறார். பூசைக்காக வெளியூரில் இருந்து நிறைய காசு செலவு செய்து மாட்டு வண்டியில் தண்ணீர் கொண்டு வந்திருக்கிறார். அந்த தண்ணீரை அதிசயமாகப் பார்த்த மக்களின் கண் முன்பாக தண்ணீர் வீணானதுதான் மிச்சம். மழை வரவில்லை.

அடுத்து அப்பனாண்டியின் தாத்தா ஒரு யோசனை சொன்னார். அதன்படி ஊரில் இருந்த சில கல்யாணமாகாத கன்னிப் பெண்கள் உடை இல்லாமல் ஜாமத்தில் ஊர் சுற்றி வந்து பூசை செய்திருக்கிறார்கள். அப்பொழுதும் மழை பெய்யவில்லை.
‘மழையில்லாத ஊரின் உடம்பு தெரியாத இருட்டில் எத்தனையோ கன்னிப் பெண்கள் மழைக்காக நடந்துகொண்டேதான் இருக்கிறார்கள். இதுவரையில் எந்த ஊரிலாவது மழை பெய்திருக்கிறதா? இதென்ன மூடத்தனம்’ என்று ஒரு துடுக்குப் பையன் அப்பனாண்டியின் தாத்தாவிடம் தகிறியமாகக் கேட்டிருக்கிறான். திகைத்துப்போன அப்பனாண்டித் தாத்தா ‘ஆமாமில்லே...!’ என்று பேசமுடியாமல் வாயடைத்து தலைமட்டும் ஆட்டியிருக்கிறார்.

அதற்காக மழை வரவைக்கிற முயற்சியை கைவிட முடியுமா? இன்னும் சிலபேர் புது யோசனை சொன்னார்கள். அதன்படி எங்குமே கேள்விப்படாத புது மாதிரியாக ஊரில் இருந்த அத்தனை ஆண்களும் (ஆறு மாச சிசு உட்பட) உடை இல்லாமல் நட்ட நடு ராத்திரியில் ஊரைச் சுற்றி வந்திருக்கிறார்கள். அப்படியும் மழை பெய்யவில்லை அம்மணமாய்ச் சுற்றியதற்கா வெட்கத்தில் பெரிது பெரிதாக சிரிப்புதான் வந்தது.

பெண்கள் உடையற்று சுற்றியதற்கு தர்க்கம் பேசிய அதே துடுக்குப் பையன் திரும்பவும், ‘உடையற்ற மனுசர்களுக்காக உலகத்தில் மழை பெய்யுமென்றால் உடை கண்டுபிடிக்காத காலத்தில் எல்லா மனுசர்களும் உடையில்லாமல் இருந்திருப்பார்கள். அப்பொழுது விடாமல் மழை பெய்து உலகமே அழிந்திருக்கும். உலகம் அழியாமல் இன்னும் இருப்பது உண்மை என்றால் பெண்களின் நிர்வாணத்திற்கோ ஆண்களின் நிர்வாணத்திற்கோ வானம் பெய்யாது, அது பெய்யும்பொழுதுதான் பெய்யும்’ என்று உரக்க சொல்லியிருக்கிறான்.

அவன் அப்படி சொன்னபிறகு ஊரில் இருந்தவர்களெல்லாம் ஒன்றாக கூடி மூன்று நாள் இரவு பகலாக விடாமல் பேசி ஒரு முடிவு எடுத்தார்கள். இனிமேல் அந்த குதர்க்கம் பேசும் பையனை ஊருக்குள் சேர்க்கக்கூடாது என்பதுதான் அந்த முடிவு. முடிவின்படி அந்த தர்க்கம் பேசுபவனை ஊரை விட்டு விரட்டியிருக்கிறார்கள். போகும்போது அவன் ஊர் எல்லையில் நின்றுகொண்டு, ‘இந்த பனங்காட்டு மூதூரானோட உதவி இந்த ஊருக்கு ஒருநாள் தேவைப்படும், பாத்துக்கங்க’ என்று சொல்லிவிட்டு போயிருக்கிறான். பனங்காட்டு மூதூரான் மழை வரவைப்பதற்கான சூட்சுமத்தை தேடி எங்கோ மலைமீது போனதாக ஊரில் ஒரு கதை இருக்கிறது. ஆனால் அதுவும் ஆதாரமற்ற அனாமத்துக் கதைதான்.

பனங்காட்டு மூதூரான் போனபிறகு நெலிகத்து ஜனங்களெல்லாம் ஒன்றாக கூடி சந்தோசமாக ஒன்றை தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள். ‘நெலிகத்தில் ஒரு சொட்டு மழையும் இல்ல, பனங்காட்டு மூதூரான்னு ஒரு மனுசனும் இல்ல, ஆகாசத்துக்கும் பூமிக்கும் நடுவில கும்பிட ஒரு சாமியும் இல்ல’ சொல்லிவிட்டு விசனத்தோடு உட்கார்ந்துவிட்டார்கள்.
‘இல்லைன்னு சொன்னா அப்பவே வருவான்’ என்று கடவுளைக் குறித்து பணக்காரன் அப்பனாண்டி போன வருசம் ஊரில் விழுந்த ஒரு துர்மரணம் குறித்து பேசும் பொழுது சொல்லியிருக்கிறான். அந்த வார்த்தையின்படி ஜனங்கள் இல்லை என்று சொன்ன அன்றைக்கே கடவுள் நெலிகத்திற்கு வந்திருக்கிறார். (அந்தக்காலத்தில் கடவுள் அடிக்கடி மனுசங்க மத்தியில வந்து போவாரு. அந்தக்கால மனுசங்க மனசு அப்படி என்று சுப்பன் கிழவனின் அடிக்கடி துணை தருமம் சொல்வான்.)

ஒரே ஒரு மண்வெட்டியும் ஒரு கூடையுமாக ஊருக்குள் வந்தான் ஒரு கிழவன். அப்பொழுது அவன் ஈஸ்வரன்தான் என்று யாருக்கும் தெரியாது. “நான் இந்த ஊர் தண்ணி பஞ்சம் போக்க கிணறு வெட்டித் தரேன். அதுக்கு உபகாரமா இந்த ஊர்க்காரங்க எனக்கு என்ன செய்வீங்க?” அப்படின்னு கேட்டிருக்கான். ஊர் ஜனங்க அவனை ஒரு மாதிரியாகப் பார்த்து “நீ எந்த ஊர்க் காரண்டா? மண்ணை தோண்டினா இங்க நெருப்புதான் வரும், தண்ணி வராது தெரியுமில்ல?” என்று வறண்ட நாக்கை துருத்திக்கொண்டு சிரித்திருக்கிறார்கள்.

சிரிப்பதைப் பார்த்த கிழவன் கொண்டை போட்டு வைத்திருந்த தன் சடைமுடியை காற்றில் பறக்க அவிழ்த்து விட்டு “இந்த இடத்தில்தான் நான் சமுத்திரம் மாதிரி கிணறு வெட்டப்போறேன்” என்று சொல்லிக் கொண்டே மண் வெட்டியில் தரை மீது ஓங்கி ஒரு வெட்டு வெட்டியிருக்கிறான். கிழவன் மண்வெட்டியில் வெட்டிய அந்த இடம் அப்பனாண்டித் தாத்தாவின் விளைநிலம்.

மண்மீது அவன் ஓங்கி வெட்டவும் புகை புகையாய் புழுதி பறந்து கிழவன் மறைந்தே போனான். சற்றுக் கழித்துப் பார்த்தால் கிழவன் வெட்டிய இடத்தில் இடுப்பளவு குழி இருக்கிறது. மிருக பலம் கொண்டவனாக இருக்கிற கிழவன் ஒருவேளை சமுத்திரம் மாதிரி கிணறு வெட்டி நீர் வந்தாலும் வரும் என்று நம்பிய ஜனங்கள் ‘எதைக் கேட்டாலும் தருகிறோம் கிணறு வெட்டு’ என்று சொன்னார்கள்.

மண் வெட்டியும் கூடையுமாக வேலை ஆரம்பித்த கிழவன் முரட்டு எலிக்கு பேய் பிடித்து மலையைக் குடைவது போல அசுர வேகத்தோடு ஒரே நாளில் சூரியன் மறைவதற்குள் கிணற்றை வெட்டி முடித்தான். பதநீரின் தித்திப்பில் தண்ணீர் ஊற்றெடுக்கிறது. அத்தனை ஜனங்களும், அள்ளி அள்ளி குடித்து சந்தோசத்தில் துள்ள ஆரம்பித்தார்கள். கிணற்றை வெட்டி முடித்த கிழவன் தன் விறித்துப்போட்ட சடையை சிக்கலெடுத்தபடியும், கொண்டை ஊசியை வாயில் கடித்தபடியும் சொல்லியிருக்கிறான், “இந்த கிணற்று நீர் அமிர்தம், இந்தத் தண்ணியை குடிக்கலாம் ஆனா வேறு காரியங்களுக்கு உபயோகம் பண்ணக்கூடாது. பண்ணிட்டா கிணறு வத்திப்போகும்.”

“சாகக் கிடந்த பிணத்தின் மாமிசத்திற்குள் உயிரை மீண்டும் புகுத்தியிருக்கிறாய், நீ சொன்னபடி கேட்கிறோம். வெட்டிய கிணற்றுக்கு உபகாரமாக என்ன கேட்கிறாய்” என்று ஜனங்கள் கேட்டார்கள். கிழவன் கேட்டானாம், “ஊரில் இருக்கிற அத்தனை கன்னிப் பெண்களையும் எனக்கு கல்யாணம் செய்து கொடுங்கள்.” என்று. ஒற்றை நாளில் பதநீர் வடியும் ஒரு கிணற்றை வெட்டியவன் புஜபலத்தோடுதான் இருப்பான் என்றாலும் அத்தனை பெண்களை கல்யாணம் செய்கொண்டு கிழவன் என்ன செய்வான் என்று ஊர்க்காரர்கள் திகைத்தார்கள். நெலிகத்து கன்னிப் பெண்கள் யாரும் கிழவனை கல்யாணம் செய்துகொள்ள ஒப்பவில்லை.

சோறு தருகிறோம், கிடாய்க் கறி தருகிறோம், சாராயம் தருகிறோம் சந்தோசமாய் தின்று, கடித்து, குடித்துவிட்டுப் போ. கன்னிப் பெண் கிடைக்கமாட்டாள் என்று ஊரார் சொன்னதும் அவன் ஒற்றைக் காலில் நின்று, “கன்னிகளை கல்யாணம் செய்துகொள்ளாமல் நான் போகமாட்டேன். இங்கேயே ஒற்றை மரமாகி நிற்பேன். ஊரிலேயே பெரிய மரமாக நான் வளர்வேன். மரத்தில் ஒரே பூ பூக்கும். கனி இருக்காது. மரமாகி நிற்பது நான் என்பதால் எத்தனைக் காலம் ஆனாலும் மரத்தில் யாரும் ஏறக்கூடாது. மரத்தின் கிளைகளை அடுப்பெறிக்கக் கூடாது. இன்றிலிருந்து ஊருக்கு ஒரு சாபம் வரும். சாபத்தின் கொடுமை பெரிசாய் இருக்கும்” என்று கிழவன் தன்பாட்டுக்கு என்னென்னவோ சொல்லிக்கொண்டே இருக்கிறான்.

இருட்ட ஆரம்பித்த பிறகும் அவன் பேசுவதை நிறுத்தவேயில்லை. ஊரில் இருந்து தீப்பந்தத்தை எடுத்துக்கொண்டு வந்து அந்த வெளிச்சத்தில் அவனை சமாதானம் செய்தார்கள். அவன் சமாதானமாகவில்லை. அப்பொழுது பெரும் இடிச் சத்தத்துடன் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது. தீப்பந்தங்கள் அணைந்து போயிற்று. வெகுநாளுக்கு பிறகு மழை வந்ததால் இருட்டில் மின்னல் வெளிச்சத்தில் எகிறி எகிறி குதித்து ஜனங்கள் ஆடிப்பாட ஆரம்பித்தார்கள். கொஞ்ச நேரம்தான் அந்த ஆட்டம். மழையில் அத்தனைபேர் உடம்பும் மரணம் தரும் குளிரில் வெடவெடத்துப் போயிற்று. எல்லோரும் ஊருக்குள் போய் வீட்டில் பதுங்கிவிட்டார்கள். கிழவன் நின்றது நின்றவாக்கிலேயே இருப்பது வெட்டும் மின்னல் வெளிச்சத்தில் தெரிந்து தெரிந்து மறைகிறது.

இரவு முழுசும் பிரளயம் வந்தது போல இடி மின்னலோடு ஆலங்கட்டி மழை பெய்கிறது. இரவு முழுதும் மழையில நின்ற கிழவன் ஒன்று இடி இறங்கி செத்திருப்பான் அல்லது எங்காவது ஓடியிருப்பான் என்று மறுநாள் வந்து ஜனங்கள் பார்த்தார்கள். துளுதுளுவென்று வளர்ந்த ஒரு செடி மட்டும் ஆளுயரத்திற்கு ஒற்றைப் பூவோடு நிற்கிறது. கிழவன் சொன்னது போல மரமாகிவிட்டான்.

கிழவன் சொன்ன அந்த சாபம் ஊருக்குள் வந்துவிட்டது. ஊரில் எந்த பையனுக்கும் பெண்ணுக்கும் கல்யாணமே ஆகவில்லை. கல்யாணம் ஆனவர்களுக்கு கர்ப்பம் தரிக்கவில்லை. கர்பமானவர்களுக்கு உயிரோடு குழந்தை பிறக்கவில்லை. எல்லோருக்கும் வெகு சீக்கிரமே நரைமுடியும் உடல் சுருக்கமும் வந்தது. ஆண் பெண் சேர்க்கையே ஊரில் இல்லாமல் போயிற்று.
“அந்த பெரிய மரத்தில் என்றைக்கு ஒரு கனி விட்டு பறவைகள் பறந்து வந்து மரத்தின் கிளையில் உட்கார்கிறதோ அன்றைக்கு ஊரில் சாபம் விலகும்” என்று கிழவன் யாருமற்ற தனிமையில் பேசியதைக் கேட்டதாக கடைசியாக மழைக்கு ஓடிவந்த ஒருத்தன் சொன்னான்.

அதன்பிறகு எப்பொழுது அந்த மரத்தில் கனிவிடும் எப்பொழுது பறவை வந்து உட்காரும் என்று நெலிகத்து மொத்தப்பேரும் அண்ணாந்து பார்த்துக்கொண்டே இருந்ததாக கதை முடிகிறது. அந்த மரத்தில் எப்பொழுது கனி விட்டது எப்பொழுது பறவை வந்து உட்கார்ந்தது எப்பொழுது ஊரின் சாபம் விலகி எல்லோருக்கும் கல்யாணமாகி கர்ப்பம் தரித்து சாகாத பிள்ளையைப் பெற்றார்கள் என்ற சரியான விவரணக்கதைகள் இன்றைக்கு ஊரில் கிடையாது. ஆனால் குமரன் ஏறிய மரமும் குப்புற விழுந்த கிணறும் அதுதான் என்று எல்லோருமே இப்பொழுது சொன்னார்கள்.

அப்படியானால் ஏறக்கூடாத மரத்தில் ஏறியதற்காகவும், விழக்கூடாத கிணற்றில் விழுந்ததற்காகவும் ஊருக்கு ஒரு பெரும் கேடு வருமே என்று எல்லோரும் பயந்தார்கள். அது குறித்து அப்பனாண்டிப் பணக்காரனிடம் முறையிட்டார்கள். அவன் ஆவதைச் செய்வதாக சொன்னான்.

3
சுடுகாட்டுக்கு நடுராத்திரியில் போய் அர்த்த சாம பூசைகள் செய்து பேய் பிசாசு, குரளி, ரத்தக்காட்டேறி, போன்றவற்றை தன் கட்டுக்குள் கொண்டுவந்து நிறுத்தி பிறகு பில்லி சூன்யம் ஏவல் செய்வினை போன்றவற்றை தீர்த்துவிடுவதால் சூராதி சூரன் என்று பெயர் எடுத்த தாத்தாவுக்கு பேரனாகப் பிறந்தவன் சாம்பமூர்த்தி. அவன் இப்பொழுது அப்படி எதுவும் வினோத பூசைகளை தொப்பூர் சுடுகாட்டுக்குப் போய் செய்வதில்லை. காரணம் சுடுகாட்டு பயம் ஊர் மக்களுக்கு சுத்தமாக இல்லாமல் போய், இப்பொழுது சுடுகாட்டுக்கு நடுவிலேயே நான்கைந்து வீடுகள் கட்டி குடும்பமாக குடியிருக்க ஆரம்பித்து விட்டார்கள்.

நள்ளிரவில் பிணங்கள் எரிவதை சிறுநீர் கழிக்க வரும் சிறுபையன்களும் தகிறியமாகப் பார்த்துவிட்டு கெட்ட கனவுகள் இல்லாமல் சுடுகாட்டுக்கு நடுவீட்டில தூங்கவும் ஆரம்பித்துவிட்டார்கள். சுடுகாட்டில் கொல்லிவாய்ப் பேய் குட்டை முனி போன்றவை இருக்காது என்று ஊர் ஜனங்களுக்கு அத்துப்படியாக தெரிந்துவிட்டது. அதுவும் இல்லாமல் இப்பொழுது செல்போனும் கம்ப்யூட்டரும் வைத்திருக்கும் ஒரு நவீன யந்திர மந்திர தந்திர நிபுணனாக இருக்கும் பிரபலஸ்தன் போயும் போயும் சுடுகாட்டு தலைச்சான் பிள்ளையின் கபாலத்து மை எடுத்து வெற்றிலையில் தடவி வித்தைக்காட்டி காசு சம்பாதிப்பதை அவமானம் என்றும் நினைத்தான்.

பெரிய பெரிய புத்தகங்களும், தன் தாத்தா வைத்திருந்த ஊதினால் உடைந்துபோகும் மலையால மாந்ரீக ஓலைச்சுவடிகளும் அவன் நிறைய வைத்திருந்தான் என்றாலும் அதை எதையும் படித்துப் பார்க்காமலேயே தன் தவ வலிமையால் சித்து வேலைகளைச் செய்வதாக அவன் சொன்னான். அப்படி தன் தவவலிமையை அதிகரித்துக் கொள்வதற்காக அவன் வருசத்திற்கு ஒருதரம் கொல்லிமலைக்கு போய் ஒரு மாசம் இருந்துவிட்டும் வந்தான்.

அவனிருக்கும் வீட்டிற்கு வெளியே காலையில் ஆரம்பித்து நள்ளிரவு வரை பற்பலவிதமான வினோத சேட்டைகள் செய்கிற குட்டிப் பேய், பெரும் பேய், மோகினி, பிடித்த ஆண்களும் பெண்களும் கத்தியவண்ணம் இருந்தார்கள். அவன் பழைய பாணியில் உடுக்கை அடித்து பாட்டுப்பாடி பேய்களை விரட்டுவதில்லை. சவுக்கு, வேப்பிலை கொண்டு பேய்களை அடிப்பதும் இல்லை. கண்மூடிக்கொண்டு பேய்பிடித்தவன் நெற்றிப் பொட்டில் கைவைத்து மந்திரத்தை மனசுக்குள் சொன்ன மாத்திரத்தில் எல்லாவிதமான பேய்களும் சத்தமில்லாமல் போய்வருகிறேன் என்று கூட சொல்லாமல் போய்விடுகின்றன. அதனால் அவன் இருக்கிற ஊரில் எந்த வேப்பமரத்திலும் புலியமரத்திலும் தலைமுடியுடன் கூடிய ஆணிகள் இருக்காது. சாம்பமூர்த்தியிடம்தான் குமரனை இன்று அழைத்துவந்தார்கள்.

‘குமரனுக்கு பேயும் பிடித்திருக்காது ஒன்றும் பிடித்திருக்காது, அவனுக்கு என்னவோ மனப் பிறழ்வு. நல்ல பெங்களூர் வைத்தியரிடம் காண்பித்தால் சரியாகிவிடும்’ என்று சொன்ன சத்தியனும், பேய் பிசாசுகளில் அதிக நம்பிக்கை கொண்ட சக்திவேலும்தான் குமரனை ஒரு டிரேக்டரில் ஏற்றி இங்கே கொண்டு வந்தார்கள். அவனுடைய மனைவி அழுதுகொண்டே வந்தாள். வருகிற வழியெல்லாம் குமரன் கத்திக்கொண்டே வந்தான். உடையோடு இருப்பதால் அவனுக்கு தாங்கமுடியாத வேதனை இருந்தது. நெருப்பு போல போடப்பட்டிருந்த உடைகளை பற்களாலும் நகத்தாலும் கிழித்தபடியும் தடுத்தவர்களை கடித்தபடியும் வந்தான். பாதி வழியிலேயே தப்பித்து இன்னொரு கிணற்றில் விழப்போனவனை எருது கட்டும் கயிற்றைக் கட்டி, பெரிய போர்வையால் போர்த்திக் கொண்டுவந்து சாம்பமூர்த்தி முன்பாக நிறுத்தினார்கள்.

சாம்பமூர்த்தி ஒரு தடித்த புருவமும், பெரிய புடைத்த கழுத்தும், பட்டை கிறுதாவுமாக இருந்தான். கழுத்தில் பல வண்ணங்களில் மின்னும் மணிகளும் சுண்டுவிரல் தடிமனுக்கு தங்கச்செயினும் அதன் கீழ் பரம்பரையாக வரும் தாயத்தும் புலிநகமும் கோர்த்துவைத்திருந்தான். ஏகப்பட்ட பயமுறுத்தும் கடவுளுக்கு முன்பாக உட்கார்ந்திருந்த சாம்பமூர்த்தி குமரனோடு வந்தர்களை விறைத்துப் பார்த்து, “நல்லா வாழ்ந்த ஒருத்தன் கட்டின துணிய கிழிச்சிகிட்டு கிணத்தில விழுந்திருக்கான். ஒரு பொட்டு துணி மேல பட்டாலும் கத்தி கிழிக்கிறான் அதானே விசயம்?” என்று கேட்டான்.

அது வரை பில்லி சூன்யங்களை நம்பாமல் இருந்த சத்தியன் ஆடிப்போனான். அப்பனாண்டி இங்கு வந்துபோன விசயம் சத்தியனுக்குத் தெரியாது. சாம்பமூர்த்தி கண்ணை மூடி சிறிது நேரம் வாய்க்குள் வார்த்தையை உருட்டிவிட்டு, “வீட்டு ஈசான்யத்தில சல்லியம் இருக்கு. அதை எடுத்தா சரியாயிடும்” என்றான். “எடுத்துடுங்க சாமி. எம் புருசன் குணமாகட்டும். உங்களுக்கு புண்ணியமா போகட்டும் எடுத்துடுங்க சாமி” என்று காலில் விழப்போனாள் குமரன் மனைவி.

“சரி பண்ணிடலாம் அம்மணி. காசு கொஞ்சம் செலவாகும்.”

“எவ்வளோ?”

“ஐயாயிரம்.”

“ஐயாயிரமா? அநியாயத்துக்கு அதிகமா கேக்கறீங்களே... கொஞ்சம் கம்மி பண்ணிக்கக்கூடாதா?” என்று கேட்டாள் அவள்.
சிரித்துக்கொண்டே பார்த்த சாம்பமூர்த்தி “சரி அம்மணி. நீ அப்படியே உன் புருசனை கூட்டிக்கிட்டு வந்த தடமே போயிடு. அவன் அப்படியே இருக்கட்டும். உனக்கு குணமாக்கற செலவும் மிச்சம், உன் புருசன் இனிமேல உடையே உடுத்தமாட்டான் அதனால உடை எடுக்கிற செலவும் மிச்சம்” என்றான்.

“ஐயோ பாவங்க. நல்ல குடும்பம். கெட்டுப்போச்சி. சரிபண்ணி விடுங்க காசு பணத்தில என்ன இருக்கு” என்று சக்திவேல் இடையே பேசினான்.

“ஐயாயிரத்தில் ஐம்பது காசு கொறைச்சலா இருந்தாலும் தொப்பூர் மலைக்காட்டு முனி உன் வீட்டுக்கு வந்து சல்லியம் பார்க்காது” என்று சாம்பமூர்த்தி சொல்லிவிட வேறு வழி இல்லாமல் ஒப்புக்கொண்டாள் குமரனின் மனைவி.

நான்கு உதவியாட்களை அழைத்துக்கொண்டு காரில் பிரயாணப்பட்டு நெலிகத்தில் குமரன் வீட்டு முன்பாக வந்து நின்றான். பெரிய பெரிய பூசை எதுவும் செய்யாமல் வெறும் எலுமிச்சையை உருட்டி உருட்டி வீட்டின் பின்னால் இருந்த மரத்தடிக்கு வந்து உதவியாட்களுக்கு கண் காட்டினான்.

அவர்கள் அங்கே குழி தோண்ட ஆரம்பித்தார்கள். ஒரு முழங்கால் அளவுக்கு குழி தோன்டியதுமே நிறைய எலும்புத் துண்டுகள் வெளிவர ஆரம்பித்தது. அத்தனையும் ஏதோ ஒரு மிருகத்தின் கால் எலும்புகள். எலும்புகளை தோண்டி எடுத்ததும் டிரெக்டரில் கட்டப்பட்டிருந்த குமரனின் கட்டுகளை அவிழ்க்கச் சொன்னான் சாம்பமூர்த்த்தி. “வேணனாம், வேணாம், அவர் வெத்துடம்போட ஓடுவாரு” என்று பதறினாள் மனைவி.

குமரனின் கட்டை அவிழ்த்தார்கள். அவிழ்த்த அடுத்த நிமிசம் குமரன் பதறியடித்துக்கொண்டு வீட்டுக்குள் வந்து முதலில் கிடைத்த மனைவியின் புடவையை உடம்பெல்லாம் சுற்றிக்கொண்டு “எனக்கு என்ன ஆச்சி?” என்று கேட்டான்.
சாம்பமூர்த்தி சொன்னதுபோல குமரன் குணமானதால் காசை வாங்கிக்கொண்டு கிளம்பினான். போகும்போது அவன், “இந்த எலும்புங்க ஏழு வேட்டை நாய்களோட எலும்புங்க. இதை யாரோ கொண்ணு இங்க புதைச்சிருக்காங்க இதை முழுசா எரியவிட்டு கிணத்திலயோ ஆத்துலையோ கலந்துடுங்க” என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.

அதன் பிறகு ஊர் முழுசும் இதே பேச்சாக இருந்தது. வேட்டை நாயை குமரனின் குடும்பத்தில் யாரோதான் கொலைசெய்து புதைத்திருக்கிறார்கள் என்று பேசிக்கொண்டார்கள். மரத்திற்கும் கிணற்றுக்கும் இருந்த புனிதத்தை கெடுத்த அந்த குடும்பத்தை ஊரைவிட்டே துரத்தவேண்டும் என்றும் பேச ஆரம்பித்தார்கள்.

குணமாகிவிட்ட குமரன் கிழியாத உடை போட்டுக்கொண்டு தன்னுடைய அப்பாவின் போட்டோ முன்பாக போய் நின்று அழ ஆரம்பித்தான். “அது வேட்டை நாயோட எலும்பு இல்ல... எனக்குத் தெரியும் அது வேட்டை நாயோட எலும்பு இல்ல...” என்று கத்தினான். அவன் மனைவி “வேற என்ன எலும்பு அது?” என்று கேட்டாள். அவன் பதில் பேசாமல் அப்பாவின் போட்டோவையே பார்த்துக்கொண்டு அழ ஆரம்பித்தான்.

4
மின்சாரம் வந்த நாள் பற்றியோ, கிணறு வெட்டித் தந்த ஈஸ்வரன் பற்றியொ முற்றும் முழுசுமாக தெரியாதது போலவே நெலிகத்தின் முதல் தையல்காரன் யார் என்ற விசயமும் நெலிகத்தாருக்கு தெரியவில்லை. மரப்பட்டைகளை உடுத்திய பின், நெய்யப்பட்ட உடைகளை உடுத்த ஆரம்பித்த வித்தை அங்கு யார் கொண்டு வந்தார்கள் என்றும் தெரியவில்லை. ஆனால், உத்தாண்டி என்ற தையல்காரனைப் பற்றியும் உத்தாண்டியின் அம்மாவைப் பற்றியும் நெலிகத்தில் சிலபேருக்கு கொஞ்சமாக விசயம் தெரிந்திருந்தது.

உத்தாண்டியின்... (உத்தாண்டியையும், அப்பனாண்டியையும் கதை போகிற வேகத்தில் போட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது. உத்தாண்டி வேறு, அப்பனாண்டி வேறு.) இந்த உத்தாண்டியின் அம்மாதான் நெலிகத்தில் அறியப்பட்ட முதல் தையல்காரியாகத் தெரிகிறாள். அவள் நெலிகத்தில் பிறந்தவள் கிடையாது. நெலிகத்திற்கு வெகு தூரத்தில் உள்ள ஊரில் சாப்பாட்டுக் கஷ்டத்தோடு இருந்தவள். பசிக்கிற மகனுக்காக மடி நிறைய சோளக்கதிர்களை நிலத்துக்காரனுக்கு தெரியமல் திருடியதால் பிடிபட்டு, ஊர் மக்கள் முன்பாக நிறுத்தப்பட்டு, கோயில் பூசாரியால் மும்முறை எச்சில் துப்பப்பட்ட அவமானத்திற்கு ஆளாகி பிறகு ஊரை விட்டுத் துரத்தப்பட்டவள்.

அதன் பிறகு உத்தாண்டியை இடுப்பில் இறுக்கிக்கொண்டு நடைநடையாக நடந்து நெலிகத்திற்கு வந்து சேர்ந்தாள். அப்பொழுது உத்தாண்டிக்கு வயசு நாலு. உத்தாண்டியின் அம்மாவுக்காக இல்லை என்றாலும் செத்துவிடும் அழகில் இருந்த உத்தாண்டிக்காக ஒன்றிரண்டு பேர் சாப்பாடு போட்டிருக்கிறார்கள் நெலிகத்தில். பையன் போட்டிருந்த உடைக்காக இல்லாவிட்டாலும் உத்தாண்டியின் அம்மா போட்டிருந்த உடை அலங்கோலத்தைப் பார்த்து சில பெண்கள் முக்கால் பாகம் கிழிந்த சீலைகளை அவளுக்கு தந்திருக்கிறார்கள். ஒரு சீலையை உடுத்தினால் உடம்பின் பாதிகூட மறைக்காது என்பதால் இரண்டு சீலைகளை ஒன்றாக தைத்து உடுத்தலாம் என்று நினைத்திருக்கிறாள் அவள்.

எத்தனையோ பேரிடம் அவள் சீலை தைப்பதற்காக ஊசி கேட்டும் யாருமே தரவில்லை. காரணம் ஊசி இருக்கிற வீடே அங்கு இல்லை. ஒரே ஒருத்தி மட்டும் ஊசி வைத்திருந்தாள். அவளிடம் தைப்பதற்கு நூல் இல்லை. கிழிந்த சீலையில் இருந்து நூல் எடுத்து துணிகளை தைக்க முடியும் என்று உத்தாண்டியின் அம்மா சொன்னதும் ஊசியைத் தந்த அவள் என்னுடைய சீலையையும் தைத்துத் தரவேண்டும் என்று கறாராக சொல்லியிருக்கிறாள்.

அதன்படி ஊசியை கடனாக வாங்கிய உத்தாண்டி அம்மா தன்னுடைய சீலையை தைத்துத் கட்டிக் கொண்டு பிறகு ஊசி தந்தவளின் நைந்த சீலைகளை தைத்துக் கொடுத்தாள். அதை அறிந்துகொண்ட இன்னும் சில பெண்கள் தங்களின் சீலைகளையும் தைத்துத் தரும்படி கெஞ்ச ஆரம்பித்தார்கள். வெளியூரில் மட்டுமே கிழிந்த சீலைகளை தைக்கும் ஆள் இருக்கிறார்கள் என்று நம்பிய பெண்களுக்கு தங்கள் ஊரிலேயே சீலை தைக்க ஆள் வந்ததும் சந்தோசமாகிவிட்டது. சீலைதைத்துத் தருவதன் மூலமாக அவளுக்கும் மகனுக்கும் வேளா வேளைக்கு கூலியாக சாப்பாடும் கிடைத்தது.

முதலில் சீலைத் துணிகளை மட்டுமே தைக்க ஆரம்பித்தவள் பிறகு பழைய சோமம், துண்டு, லங்கோட்டு, பாவாடை, போர்வை, கொசுவலை, குடைத்துணி என்று எல்லாவற்றையுமே தைக்க ஆரம்பித்தாள். வேலை அதிகமாக கிடைத்ததால் அவள் துணிகளின் தகுதிக்கு தக்க ஊசியையும் துணிகளின் வண்ணத்திற்கு தக்க நூல்களையும் வெளியூரில் இருந்து தருவித்து தைக்க ஆரம்பித்தாள். அவளிம் புதுப் புது ஊசிகளும் வண்ண வண்ண நூல்களும் ஏராளமாக சேர்ந்தது.

அம்மா தைக்கும்பொழுது வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த உத்தாண்டி தன் பிஞ்சு விரல்களால் ஊசி எடுத்து சில துணிகளை தைக்கப் பழகினான். அப்படி தைக்கப் பழகும்பொழுது பிஞ்சு விரல்களைக் குத்தி ரத்தம் வந்திருக்கிறது. ஆனாலும் அவன் துணி தைக்கக் கற்றுக்கொண்டு ஒன்றிரண்டு துணிகளை தைத்துக் கொடுத்தான். அந்த பிஞ்சுவிரல்களில் செய்யப்பட்ட தையல் நகாசையும், நேர்த்தியையும் பார்த்தவர்கள் உத்தாண்டிதான் தங்கள் துணிகளை தைக்கவேண்டும் என்று அடம்பிடித்தார்கள். உத்தாண்டி சின்ன வசயில் பெரும் துணிதைப்பவனாக ஆனான்.

உத்தாண்டி தினமும் விதவிதமான கலைநயம் மிக்க அழகோடு பழந்துணிகளை தைத்துத் தந்தான். பிறகு புதுத் துணிகளிலும் தன்னுடைய கலையழகை காண்பித்து புதுவிதமான உடைகளை தைக்கவும் அவன் முயற்சி செய்தான். அவன் தைத்துக் கொடுத்த புதுத் துணிகளின் அழகில் எல்லோரும் மயங்கிப் போனார்கள். நிறைய புது உடைகள் தைக்கும் வேலை அவனுக்கு வந்தது. ஒரே ஒரு ஊசியை வைத்துக்கொண்டு இரவு பகல் என்று இடைவிடாமல் தைத்தும் கேட்ட அத்தனை பேருக்கும் உடை தைத்துத் தரமுடியாமல் திணறினான் உத்தாண்டி. சீமையில் இருக்கிறவர்கள் இயந்திரத்தில் உடைகளை தைக்கிறார்கள் என்று அறிந்த உத்தாண்டி ஒரு பழைய தையல் இயந்திரத்தை வாங்கிக்கொண்டு வந்தான். அந்த இயந்திரம் கையினால் சக்கரத்தை சுற்றி இயக்குவதாக இருந்தது. பிறகு பிசிறில்லாமல் வெட்டும் கத்திரிக்கோலையும் வாங்கிக்கொண்டு வந்தான். உத்தாண்டி தைத்த உடையைத்தான் நெலிகத்தின் அத்தனை பேரும் உடுத்தினார்கள். உத்தாண்டிக்குப் பிறந்தவன்தான் ஆகாசம்.

ஆசாசம் அப்பனைப் போலவே தையல்காரனாகத்தான் இருந்தான். உத்தாண்டியைவிட வேகமாகவும் விருவிருப்பாகவும் அதிக உருப்படிகளை தைப்பவனாக இருந்தான். அவன்தான் அளவெடுத்து தைப்பதற்கு அளக்கிற நாடாவை உபயோகப் படுத்தியவன். நெலிகத்தை தவிற சுற்றி இருந்த கிராமங்களான தின்னப்பட்டி ரெட்டிப்பட்டி கொமத்தம்மபட்டி நார்த்தம்பட்டி கோயிலூர் சவுடூர் போன்ற ஊரில் இருந்தும் அவனுக்கு உருப்படிகள் வந்து சேர்ந்தன.

ஒருத்தன் ஒரு ஜதை உடுப்புகள் மட்டும்தான் வைத்திருக்கலாம், அதற்கு மேல் இன்னொரு உருப்படி இருந்தால் அவன் கொலுப்பெடுத்தவன் என்ற நெலிகத்தாரின் எண்ணம் மெல்ல மறைந்து இரண்டு ஜதை துணிகளைக்கூட வைத்திருக்கலாம் தப்பில்லை என்ற எண்ணம் வந்திருந்தது. உடுத்திய உடை கிழிந்தால் மட்டுமே அடுத்த உடை எடுக்கலாம் என்ற எண்ணம் போய் வருசமானால் புது உடை எடுக்கலாம் என்ற எண்ணமும் வந்திருந்தது. அதனால் பண்டிகைக்காக மட்டுமே உடை எடுத்து பழகியகியவர்கள் பண்டிகை அல்லாத தினத்திலும் உடை எடுத்தார்கள். கல்யாண காலம், பண்டிகைக் காலம், பள்ளிக்கூடங்கள் திறக்கிற காலங்கள் வந்துவிட்டால் ஆகாசத்தின் தையல் இயந்திரம் இடைவிடாமல் சுற்றிக்கொண்டே இருந்தது.

ஒரு மாதத்திற்கு முன்பே ஆகாசத்திடம் துணி கொடுத்தால்தான் தேவையான நேரத்தில் புது உடை கிடைக்கும் என்ற நிலைமை நெலிகத்தில் வந்தது. ஆகாசமும் அதிகமான காசு புலங்கும் ஆள் ஆனான். புதிய தையல் மெஷினும் அதற்கு மின்சார மோட்டார் ஒன்றும் பொறுத்தினான்.


ஆகாசத்திற்கும் ஒரே மகன்தான். அவனை தன்னைப் போல தையல்காரனாக ஆக்க ஆகாசத்திற்கு விருப்பம் இல்லை. வாத்தியார் ஆகவேண்டும் என்று விரும்பினான். காரணம் வாத்தியார் எப்படி ஊரில் அத்தனைபேருக்கும் பாடம் சொல்லித் தந்தாரோ அப்படியேதான் ஊரில் அத்தனை பேருக்கும் ஆகாசம் உடை தைத்துத் தந்தான். ஆனால் ஆகாசமும் வாத்தியாரும் ஒன்றாக போகும் பொழுது ஊர் ஜனங்கள் வாத்தியாருக்கு மட்டுமே வணக்கம் சொன்னார்கள். அதனால் தையல் தொழிலைவிட வாத்தியார் தொழில் மரியாதைப்பட்டது என்று முடிவுக்கு வந்தான்.

காசு பணம் அதிகம் சேர்ந்ததால் மகனை படிக்க வைக்க பஞ்சமில்லாமல் இருந்தது போலவே ஆகாசத்திற்கு ஊத்துப்பள்ளத்தில் காய்ச்சப்படும் சாராயத்தை குடிப்பதற்கும் பஞ்சம் இல்லாமல் இருந்தது. அவன் குடிக்க பழகிவிட்டான், அப்படி பழகியபிறகு சூரியன் மறையும் வரைதான் தையல் தைப்பேன் என்று நியதியும் வகுத்துக்கொண்டான். தீர்த்தம் குடிக்கப் போனதால் இரவில் தைக்கும் பழக்கம் சுத்தமாக நின்றது. மலைமலையாக தைக்க வேண்டிய துணிகள் தேங்க ஆரம்பித்தது. தீபாவளிக்கு உடுத்துவதற்காக கொடுக்கப்பட்ட துணிகள் அடுத்த பொங்கலுக்குத்தான் நெலிகத்தாருக்கு கிடைத்தது. கல்யாணத்தில் பழைய சொக்காய் போட்டு மாப்பிள்ளை தாலிகட்டிய கூத்தும் ஆகாசத்தால் ஊரில் நடந்திருக்கிறது. அப்படியும் நெலிகத்து ஜனங்கள் ஆகாசத்திடம் துணி தைக்க கொடுப்பதை நிறுத்தவில்லை. காரணம் ஆகாசம்தான் ஊரின் ஒரே தையல்காரன்.

கொஞ்சம் நாளிலேயே ஆகாசம் பகலில் தைப்பதையும் நிறுத்திக்கொண்டான், அப்படியே தைக்க உட்கார்ந்தாலும் துணிகளை மாற்றியும், பெரிய பெரிய அளவோடும் துணிகளை தைத்துத் தர ஆரம்பித்தான். அதனால் நெலிகத்தில் எல்லோருமே பூம்பூம் மாட்டுக்கு துணி போட்டது போலவும், மாட்டு வண்டி மேல் போர்வை காயப்போட்டது போலவும் தொளதொளப்பான உடைகளை போட்டுக்கொண்டு கோமாளிகளைப்போல திரிந்தார்கள். முழங்காலுக்கு கீழ் தொங்கும்படி பெரிய டவுசர்களை மாட்டிக்கொண்டு ஆண்களும் சிறுவர்களும் திரிந்தார்கள். அதைவிட மோசம் தளர்த்தியான மோசமான பெண்களின் ரவிக்கைகள்தான்.

இப்படி இருக்க நெலிகத்திற்கு முதன் முதலாக மோட்டார் பஸ் வந்தது. அது வந்த பிறகு நெலிகத்திலிருந்து சிலபேர் வேலைக்காகவும், படிப்பதற்காகவும் பஸ் ஏறி போக ஆரம்பித்தார்கள். அப்படிப் போனவர்களில் ஒருத்தன் தயாராக தைத்து விற்கப்பட்ட புது சொக்காய் ஒன்றை வாங்கிவந்தான். வாலிபப் பையன்கள் அதைக் கண்டு அதிசயித்துப் போனார்கள். அந்த உடை கனகச்சிதமாகவும், அழகாகவும் விலை குறைவாகவும் இருக்கக் கண்டார்கள். நிறைய வாலிபப் பையன்கள் தயாராகி விற்பனைக்கு வந்த உடைகளுக்கு மாறிக்கொண்டார்கள். அதன் பிறகு கிழவர்களும், பெண்களும்கூட தைத்த உடை வாங்கினார்கள். சுடிதார், பேண்ட், நைட்டி போன்ற வினோத உடைகள் அங்கே அறிமுகமாகி சர்வ சாதாரணமாயிற்று.

ஆகாசத்திடம் புதுத்துணிகளின் வரத்து குறைந்துபோனது. புடவை அல்லது வேட்டிகளின் ஓரத்தை தைக்க மட்டுமே சில துணிகள் வந்தது. கடைசியில் ஒரு தீபாவளி தினத்தன்று ஓரம் தைப்பதற்குகூட ஒற்றைத் துணி வராத நிலை ஆகாசத்திற்கு ஏற்பட்டது. இத்தனைக்கும் அது தீபாவளிக்கு முந்தைய சில நாள்.

ஊரில இல்லாத மாதிரி புதுவிதமான உடைகளைத் தைத்து தன் மனைவிக்கும் மகனுக்கும் பண்டிகைக் காலங்களில் தருவான் ஆகாசம். இந்த தீபாவளிக்கு துணி எடுக்க முடியாத அளவுக்கு காசில்லாமல் இருந்தான். உடையே இல்லாத இந்தக் கஷ்டத்தில் எனக்கு பட்டாசு வேணும், பலகாரம் வேணும் என்று மகன் நச்சரித்தான். எல்லோரிடமும் கடன் வாங்கியாயிற்று. இனி யாரும் தரமாட்டார்கள்.

விடிந்தால் தீபாவளி. முதல் நாள் இரவு நிறைய குடித்துவிட்டு ஒரு பெரிய சாக்குப் பை அளவுக்கு ஆட்டுக் கறியை வீட்டுக்கு கொண்டுவந்தான் ஆகாசம். பலகாரம் பட்சணம் இனிப்பு என்று பலதும் வாங்கி வந்திருந்தான். ஒரு பெரிய அண்டாவில் மணக்க மணக்க கறியை குழம்பு வைத்து வீட்டின் பின்புறமுள்ள மரத்தடியில் மனைவி மகனோடு தின்றான். மலையளவு சேர்ந்துவிட்ட ஆட்டின் கால்களை மரத்தடியில் குழிதோண்டி புதைத்தான். வானத்தை பார்த்து படுத்துக்கொண்டு தன் மகன் பெரிய வாத்தியார் ஆகணும் என்று பேசினான். தீபாவளிக்கு முந்தைய இரவென்பதால் தொலைவில் அங்கொன்றும் இங்கொன்றும் பட்டாசு சத்தம் கேட்டது. மகன் அப்பா பட்டாசு என்றான்.

கறி வாங்க காசிருந்தது. மகனுக்கு பட்டாசு வாங்கவும், புது உடை வாங்கவும் காசு இல்லை. நாளைக்கு உனக்கு வாங்கித் தரேன் என்று மகனிடம் சொன்ன ஆகாசம் மகனையும் மனைவியையும் தூங்க அனுப்பிவிட்டு மரத்தடியிலேயே படுத்திருந்தான். விடிந்துவிட்டது. புதுத்துணி கேட்க அப்பாவை தேடினான் மகன். ஆகாசம் வீட்டின் பின்னால் இருந்த மரத்திலிருந்து குப்புற விழுந்து ரத்தம் வர செத்திருக்கிறான். தீபாவளி பட்டாசு வெடிச் சத்தத்தில் அப்பன் மண்டை வெடித்தது அவனுக்கு கேட்கவில்லை. தனக்கு உடை கொடுக்க முடியாத துக்கத்தில் அப்பன் செத்தது பெரும் துக்கத்தை தந்தது குமரனுக்கு. இத்தனை நாள் பளபளப்பான உடை போட்டதற்காக மிக வருந்தினான். வியாழக்கிழமை இரவு துருத்திக்கொண்டு வெளிவந்த எலும்பு அப்பனின் துக்கத்தை அவனுக்குள் கிளறியது. அதன்பிறகு நடந்தது குமரனுக்கு தெரியாது.

“அவன் சல்லியம் பாத்து எடுத்தது வேட்டை நாயோட எலும்பு இல்லை, என் அப்பன் தின்ன ஆட்டுக்கால் எலும்பு” என்று இரவெல்லாம் புலம்பினான் குமரன். உண்மையா பொய்யா என்று உணரமுடியாத நெலிகத்து கதையில் கிணற்றை காவல் காத்த வேட்டை நாய்களை கொன்ற குற்றத்திற்காக குமரனை ஊரைவிட்டு போய்விடும்படி சொல்லிவிட்டது ஊர். சோளக்கதிர் திருடிய குற்றத்திற்காக ஊரைவிட்டு துரத்தப்பட்டு நெலிகத்திற்கு வந்த அந்த குடும்பம் வேட்டை நாய் கொன்ற குற்றத்திற்காக முற்றாக வெளியேறியது.

குமரன் பஞ்சம் பிழைக்கப் போய் சேர்ந்த ஊரிலும் ஒரு கதை இருந்தது. நாலு தலைமுறைக்கு ஒரு முறை ஊரைவிட்டு துரத்தப்படும் ஒரு குடும்பத்தின் சாபத்தைப் பற்றிய கதை அது. ஒரு வேலை அந்த சாபமுள்ள குடும்பம் குமரனின் குடும்பமாக இருக்கலாம். சோளக்கதிர் திருடி வெளியேறிய அந்த பெண் பிறந்த பூமியாகவும் இருக்கலாம். எதுவாக இருந்தால் என்ன, குமரன் குடும்பம் துரத்தப்பட்ட அந்த நாளும் நெலிகத்து சரித்திரத்தில் எழுதப்படாமல் மறைந்து போகும் என்பது மட்டும் உண்மை.



- எழில் வரதன்(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It