உலகமயமாக்கல் என்ற பெயரில் மூன்றாம் உலக நாடுகளில் நுழைந்து,“அந்த நாடுகளின் மக்கள் தங்கள் செல்வத்தையும் உழைப்பையும் எங்களிடம் வாரிக் கொடுத்துவிட்டுக் குட்டிச் சுவராக நிற்கட்டும்”என்ற மன விழைவுடன் கொள்ளைக்கு விதை போடத் தொடங்கியுள்ளன - உலகப் பெரு முதலாளிகளின் நிறுவனங்கள்.

‘மூன்றாம் உலக நாடுகளுள் எங்கள் நாடு வளரும் நாடு, வளரும் நாடு’ என்று சொல்லிக்கொண்டே இந்தியாவை ஆளும் இந்திரா காங்கிரஸ் கட்சியினர்,பிறநாட்டு, உள்நாட்டுப் பெருமுதலாளிகளை வளர வைத்துக் கொண்டிருக்கின்றனர். அதன் விளைவு வர்க்க முரண்பாடு தாராளமாக முற்றிக் கொண்டே செல்கிறது.

அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் களமிறங்கியுள்ளதை எதிர்த்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தில் சென்னையில் வால்மார்ட் நிறுவனத்தின் கடை எதிரில் அண்மையில் முற்றுகைப் போராட்டம் நடத்தியது.

இந்தப் போராட்டம் ஏன் நடைபெற்றது,இது தேவைதானா,இவ்வாறு எதிர்த்து நின்று போராடாது வாளாவிருந்தால் வால்மார்ட் நிறுவனத்தால் இந்திய சில்லறை வர்த்தகத்தில் என்னென்ன விளைவுகள் ஏற்படும்,அதனால்,இந்திய நாட்டுக்கே எவ்வாறு சீர்குலைவு ஏற்படும் என்று விளக்கி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினருமான தா. பாண்டியன் சிறுநூல் ஒன்றை எழுதியுள்ளார்.
“சில்லறை வர்த்தகத்தில் அந்நியர் வேண்டாம்- வால்மார்ட்டே வெளியேறு” என்னும் தலைப்பிலான அந்த நூலை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

“சில ஆண்டுகளுக்கு முன்பு ஒற்றை முத்திரை சில்லறை வர்த்தகத்தில் (Single Brand Retail Trade)51 விழுக்காடு அந்நிய முதலீட்டிற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.  இதிலும் உச்ச வரம்பைத் தளர்த்தி 100 விழுக்காடாக அந்நிய முதலீட்டை உயர்த்தியுள்ளது.”

காங்கிரஸ் எவ்வாறு பெருமுதலாளிகளை இரு கரம் கூப்பி வரவேற்று,இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாகத் தளம் அமைத்துக் கொடுக்கிறது என்று குறிப்பிட்டு, நூலாசிரியர் தா. பாண்டியன், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டைக் கொண்டு வருவதை எதிர்த்த பல மாநில அரசாங்கங்களைக் காங்கிரஸ் கட்சி எப்படிச் சமாளித்தது என்று அம்பலப்படுத்துகிறார்.

தெலுங்கானா தனிமாநிலக் கோரிக்கை, காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை, மாநிலங்களில் மின்சார உற்பத்தி, பகிர்வு எனப் பல்வேறு பிரச் சினைகள் தீர்க்கப்படாமல், மாநிலங்களில் அமைதி குலைந்து, மக்கள் அவதியுறுகையில், இவற்றில் எல்லாம் கவனத்தைச் செலுத்தாத காங்கிரஸ் கட்சி அந்நியப் பெருமுதலாளிகளைச் சில்லறை வர்த்தகத்தில் கொண்டு வருவதை மட்டும் பெரும் இயக்கப் பணியாகச் செய்கிறதே என்று இந்நூலில் சுட்டிக்காட்டும் தா. பாண்டியன்,“அந்நியர்களை அழைத்துச் சில்லறை வாணி பத்தில் ஈடுபடச் சொல்லுங்கள் என மக்கள் கேட்டார்களா?” என்று வினாவெழுப்புகிறார்.

இந்தியாவில் கடை விரிக்க,வால்மார்ட் நிறுவனம் 2010-ஆம் ஆண்டு ‘லாபி’செய்ய 123 பில்லியன் டாலர் - அதாவது, 6, 54, 200 கோடி ரூபாய் பணத்தைச் செலவு செய்தார்களாம்.  ‘லாபி’ என்றால் என்ன? ஒரு செயலைச் செய்வதற்கான ஒப்புதலை அதிகாரத்தில் உள்ளவர்கள் அல்லது அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மூலம் அரசியல் வட்டாரத்தில் அல்லது மக்கள் மன்றத்தில் பெறு வதற்காகச் செய்யும் தந்திர உத்தி. இந்த உத்தியில் பணத்தை மட்டும் அல்ல; ‘எதை’ வேண்டுமானாலும் பயன்படுத்துவார்கள்.

அப்படித்தான் இந்த வால்மார்ட் நிறுவனமும் செய்துள்ளது. அப்படி,இவ்வளவு பெரிய தொகையை இலஞ்சமாகக் கொடுத்துள்ளது என்றால்,அதன் நோக்கம் இந்தியர்களைக் கொள்ளையடிக்கவா, அல்லது அவர்களுக்குத் தொண்டு செய்யவா?

மேலும் வால்மார்ட் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் என்பதால் இடதுசாரியினர் எதிர்க்கின்றனர் என்று காங்கிரஸ் கட்சி பேய்க்கதை கூறிவருகிறது.

சில்லறை வர்த்தகத்தில் எந்த நாட்டு நிறுவனம் நுழைந்தாலும், அதனால், இந்திய அடித்தட்டு மக்கள்,நடுத்தர மக்கள் சுரண்டப்படுகிற வேளையில் கட்சி கண்டிப்பாக எதிர்த்துக் களம்காணும் என்று கூறி, இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளில் பொருளாதாரக் கட்டுப்பாடுகள் எவ்வெப்படி இயக்கப் படுகின்றன என்று விளக்குகிறார் நூலாசிரியர்
தா.பாண்டியன்.

மேலும், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டின் நுழைவு என்பது, உள்நாட்டு வர்த்தக உறவுகளை எப்படிச் சீரழிக்கும் என்றும்,பன்னாட்டு நிறுவனங்கள் பணப் பேராசையால், ஆயுத உற்பத்தியிலும் போர்த் தளவாடத் தயாரிப்பிலும் ஈடுபட்டு,இந்தியாவை நாசம் செய்வதற்கான வாய்ப்புகளும் உண்டு என்றும் “சில்லறை வர்த்தகத்தில் அந்நியர் வேண்டாம்- வால்மார்ட்டே வெளியேறு” என்னும் இந்த நூல் எச்சரிக்கிறது.

“வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்”
என்கிறது திருக்குறள்.

“குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல்போர் போல் அழிந்து விடும்” என்பதே இதன் பொருள்!

Pin It