farming laboursஇந்தியாவில் இன்று நிலவும் சூழ்நிலைகளில் தொழிலாளர் பிரச்சனைகள் பல்வேறு விதமாகக் காணப்படுகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் விவசாயப் பண்ணைத் தொழிலாளிகளை சீர்குலைக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் இருந்து கொண்டுதான் வருகின்றன. இப்பிரச்சனைகள் ஆண், பெண் இருபாலரும் அறிந்ததே. இவ்வகையில் தமிழ்நாட்டில் தஞ்சைத் தரணி வாழ் மக்களின் வேளாண் தொழிலாளர்களுக்கு ஏற்படும் சிக்கல்களையும் தண்டனைகளையும் தம் படைப்புகளான வாட்டாக்குடி இரணியன், சாம்பவான் ஓடைச்சிவராமன், மலைப்பாம்பு மனிதர்கள் ஆகிய மூன்று வட்டாரப் புதினங்களில் பதிவு செய்துள்ள, அடிமைப்பட்டுக் கிடந்த தாழ்த்தப்பட்ட மக்களின் உண்மை நிலையைப் படம்பிடித்துக் காட்டுவதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது.

பொதுவுடைமைக் கருத்துக்களின் மூலம் தஞ்சை மாவட்ட பொதுவுடைமைப் போராளிகள் தொழிலாளர்களுக்காகத் தங்களது உடல், பொருள், ஆவி அனைத்தையும் கொடுத்து இன்னுயிர் நீத்தார்கள் என்பது இக்கட்டுரையின்வழி புலனாகிறது.

தொழிலாளர் ஒரு நாட்டின் முதுகெலும்பாய்த் திகழ்கின்றனர். தொழிலாளர் இல்லையேல் பலரின் பாடு பெரும்பாடாய் திண்டாட்டமாகிவிடும். அப்படிப்பட்டத் தொழிலாளர்களுக்குத் தங்களின் உழைப்பில் சுகபோக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் பண்ணையார்களின் மூலமாகவும், இயற்கைச் சீற்றத்தின் காரணமாகவும் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பொதுவாக இந்தியா ஒரு விவசாய நாடு. குறிப்பாக தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும். தஞ்சை வட்டார தொழிலாளர்களின் பிரச்சினைகள் இங்கு ஆசிரியர் விளக்கியுள்ளார்.

பண்ணையார்கள் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான ஏக்கர்களுக்குச் சொந்தக்காரர்கள். பல கிராமங்கள் இவர்களுக்குச் சொந்தம். கிராமத்திற்கு ஒரு பண்ணை அதற்கு ஒரு பங்களா நிர்வகிக்கத் தலையாரி, கங்காணி கணக்கர் என்ற ஆட்கள், எட்டு, பத்து பண்ணையாட்கள் வைத்துக் கொள்வார்கள். ஒரு பகுதியைச் சாகுபடிக்கும் கொடுப்பார்கள். சில கிராமங்களில் இரு பண்ணைகள் இருப்பதும் உண்டு. இவர்களிடம் பண்ணையாட்களாக இருப்பவர்கள் பரம்பரை பரம்பரையாக அடிமைகளாகவே இருப்பவர்கள். ஒரு பண்ணையில் இருப்பவர்கள் அடுத்த பண்ணைக்கு வேலைக்குப் போய்விடக் கூடாது. இந்த பண்ணையார் குடும்பமும் மொத்த குத்தகைக்காரர் பண்ணையாட்களை நடத்துவதைவிட கடுமையாக நடத்துவார்கள்.

இவர்களைப் போலவே தஞ்சை மாவட்டத்தில் இருந்த பண்ணை முதலாளிகளும் நிலவுடைமை ஆதிக்கம் உடையவர்களாகவும் தொழிலாளர்களை அடிமைப்படுத்தக் கூடியவர்களாகவும் இருந்தார்கள் என்பதை ஆசிரியர் விளக்கியுள்ளார்.

பண்ணையார்கள் அளவுக்கு அதிகமான நிலம் வைத்திருப்பவர்களாகவும் அதிக அளவு ஆடு, மாடுகள் உடையவர்களாகவும் காணப்படுகிறார்கள். பண்ணைக்குச் சொந்தமான நிலங்களில் தான் அந்தக் கிராமத்தில் உள்ள அனைத்துத் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த மக்களும் வேலை செய்யவேண்டும். பண்ணை சொல்வதே பஞ்சாயத்து, அவர் செய்வதே நியாயம் என்று சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு செயல்படக் கூடியவர்களாகவும், கண்மூடித்தனமான தண்டனைகள் கொடுக்கக் கூடியவர்களாகவும் இருந்தார்கள். சமுதாயத்தின் மேல்மட்டத்தில் இருந்த இவர்கள் பண்ணை முதலாளிகளாக மாற்றம் அடைந்தார்கள் என்பதை ஆசிரியர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அனைத்து பண்ணைகளிலும் வேலை செய்பவர்கள் இந்து மதம் சார்ந்த தீண்டத்தகாதவர்களே. இந்தியாவில் தீண்டாமையால் ஏற்பட்ட பாதிப்பை பி.ஆர்.அம்பேத்கர்,

இந்துக்கள் அல்லாதவர்களோ, பாதிக்கப் பட்டவர்களைத் தள்ளி வைத்து விடுவார்கள். ஆனால் இந்துக்கள் ஏற்படுத்திய தீண்டாமையோ ஒரு வர்க்கத்தையே கறைப்படுத்தி விட்டது1

என்று கூறுவது தீண்டத்தகாத மக்களின் வாழ்க்கை நிலையைப் படம்பிடித்துக் காட்டுவதாக உள்ளது. சாதி, தீண்டாமை போன்றவையே உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து விடுகின்றன.

பெரிய பண்ணை என்று அழைக்கப்படும் தருமலிங்கத்திடம் இருக்கும் நிலம் அனைத்தும் ஒரு காலத்தில் கோயிலுக்குச் சொந்தமானதாக இருந்தது. தருமலிங்கத்தின் முன்னோர்கள் கோயில் நிலங்களுக்குரிய குத்தகை வசூலிப்பது போன்றவற்றைச் செய்து வந்தனர். இவ்வாறு வசூல் செய்த பணமும், குத்தகை நெல்லும் சாமியின் பெயரில் கட்டப்பட்டதால், அவர்களுடைய பிள்ளைகளுக்குச் சாமியின் பெயரை வைத்து அப்படியே அதை மாற்றி உரிமையாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

கோயில் நிலத்தை இப்படி மாற்றிக் கொண்டவர்கள் மாடிமேல் மாடி கட்டி வசதியாக வாழ்கின்றார்கள். அந்தக் கோயில் பூசை செய்பவர் குடும்பம் பசி பட்டினியால் வாடிக்கொண்டு இருக்கிறாராம் (ம.ம., ப.145)

மேலும் கள்ளக் கடத்தலில் ஈடுபடுதல், கருப்புப் பணம் மாற்றுதல் என்று எல்லா வேலைகளிலும் தருமலிங்கம் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்கடத்தலில் வந்த விலைமதிப்பற்ற பொருட்களைக் கோயிலில் உள்ள சாமியின் கர்ப்பக்கிரகத்தில் வைத்து யாருக்கும் சந்தேகம் வராதபடி அளவுக்கு அதிகமான பொருளை சம்பாதித்தார் என்பதை ஆசிரியர் அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.

தருமலிங்கத்தின் உறவினரான பண்ணையார் பரமசிவத்திடம் இருக்கின்ற சொத்தும் உழைத்துச் சம்பாதித்தவை அல்ல. கீழையூரில் ஒரு மடம் இருந்தது. அந்த மடத்திற்கு அருகில் பண்ணையார் பரமசிவத்தின் குடும்பம் இருந்திருக்கிறது மடத்தில் சாமியார்கள் வந்து தங்குவார்கள். தங்குகின்றவர்களுக்கு சோறு தண்ணீர் கொடுப்பது இவரது குடும்ப வழக்கமாக இருந்தது. இப்படி வந்த சாமியார்களில் ஒருவர் இறந்துவிடவே அவருடைய அழுக்குத்துணி மூட்டையில் இருந்த வைரக்கற்களைச் செட்டியாரிடம் கொடுத்துவிட்டு அவரிடம் இருந்த நிலம் முழுவதையும் எழுதி வாங்கிக் கொண்டனர். இவ்வாறு உருவானதுதான் பரமசிவத்தின் பண்ணை என ஆசிரியர் விளக்கியுள்ளார்.

இவ்வாறு பண்ணை முதலாளிகள் பிறரை ஏமாற்றியும் பிறருடைய உழைப்பைச் சுரண்டியும், சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைந்தனர்.

பண்ணை முதலாளிகள் தங்களின் கீழ் அடிமைகளாக வேலை செய்யும் கீழ்வர்க்க மக்களை இழிவாகப் பேசுதல், அடித்தல், எதிர்க்கின்றவர்களைத் தங்கள் செல்வாக்கால் அழித்தல், தண்டனைகள் கொடுத்தல் போன்ற செயல்களைச் செய்து வந்தனர்.

வயலில் வேலை செய்யும் பண்ணைத் தொழிலாளிகள் கூலியை உயர்த்திக் கேட்டால் பண்ணையார் பரமசிவம் தனது பண்ணையில் அடிமையாக வேலை செய்யும் பொன்னனிடம் அவனுடைய இனத்தாரை இழிவாகப் பேசுவதை,

நாய் கொலச்சு பொழுது விடியாது கோழி கூவுனாத்தான் விடியும் கூலி அதிகமாக கொடுக்க முடியாது யாரும் அறுக்கவும் வேண்டாம் போங்கடா (ம.ம., ப.26)

என எழுதுகிறார்

களத்துமேட்டில் தாழ்ந்த சாதியைச் சேர்ந்த மாரியம்மாள் தன் கணவனுக்கு இலையில் சோறு போட்டாள் என்பதற்காக,

என்ன எல போட்ட சாப்பாடு நடக்குதா? வௌக்கமத்துக்குப் பட்டுக்குஞ்சமா? (ம.ம., ப.140)

இலை போட்ட சாப்பாடு என்பது பண்ணைகளுக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது என்பதை ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.

உடம்பு சரியில்லை என்று வேலைக்கு வராமல் இருந்தாலோ செய்கின்ற வேலையைச் சரியாகச் செய்து முடிக்காமல் வந்தாலோ பண்ணைக்குத் தெரியாமல் தப்பிக்க நினைத்தாலோ, பண்ணை முதலாளியோ அல்லது பண்ணையின் பெயரில் வேறு ஒருவரோ சாட்டையடி கொடுத்துத் தண்டித்தக் கொடுமைகளை மலைப்பாம்பு மனிதர்கள் புதினத்தில் ஆசிரியர் விளக்கியுள்ளார்.

இரவு முழுவதும் காத்திருந்து சுடுகாட்டில் பிணம் எரிக்காமல் விட்டதற்காக பிணம் எரிக்கச் சென்ற ஐந்து பேரையும் மரத்தில் கட்டி வைத்து அடித்ததைப் பொன்னன் நினைத்துப் பார்ப்பதை,

வீரப்பன் அண்ணன் மகன் ஊரில் வந்து சொன்னான். உடனடியாக ஐந்து பேரையும் பிடித்துக்கட்டி வைத்து அடித்தார்கள். வீரப்பன் இருந்தும் அடிச்சாரு செத்தும் அடிச்சாறு (ம.ம., ப.62)

என்று சேரி மக்கள் புலம்பியதை ஆசிரியர் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

பண்ணை வேலையிலிருந்து விடுதலை பெற்று பட்டாளத்திற்குச் செல்ல வேண்டும் என்று அர்ச்சுனன் சாம்பான் இருவரும் ஆள் சேர்ப்பதற்காகப் பொன்னன் சாம்பான், அருச்சுனன் மூவருக்கும் சாட்டையடி கொடுத்தார்கள். எல்லாக் கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு மீண்டும் பண்ணைக்கே வேலைக்குச் செல்லவேண்டும் என்பது பண்ணையாரின் உத்தரவாக இருந்தது.

சொந்த நிலம் இல்லாது கூலி உழைப்பின் மூலம் தான் உயிர் வாழமுடியும் என்றிருந்த ஏழைகள் ஆண்டாண்டு காலமாகக் குடும்பம் முழுவதுமாக உழைத்தார்கள். இவர்களின் முன்னோர்கள் வாங்கிய கடனுக்காக உழைத்தார்கள். இந்நிலையில் அவர்கள் ஏதாவது எதிர்த்துப் பேசினால் பொய்க்குற்றம் சாற்றப்பட்டு அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டது.

பொன்னனின் அப்பன் கார்வரிக்கு எதிராகப் பேசி­விட்டார் என்பதற்காக ஏதோ ஒரு காரணம் காட்டிப் பொய்க்குற்றம் சாட்டி சாணியைக் கரைத்து வாயில் ஊற்றுவார்கள். கொஞ்ச கொஞ்சமாய் அவர்களின் உயிர் பிரிந்துவிடும். “சாணிப்பால் குடித்தவர்கள் வாழ்க்கை அதோடு முடிந்துவிடும் என்பதை அப்பனைப் பார்த்து பொன்னன் அறிந்து கொண்டான்.”

பண்ணைக்கு எதிராகச் செயல்பட்டவர்களைப் பிடித்து வந்து கட்டி வைத்து முதுகிலோ அல்லது கெண்டைக் காலிலோ சிலுவைக் குறிபோல சூட்டுக்கோலால் சூடு வைத்தல் போன்ற பல கொடுமைகளைச் செய்தார்கள்.

பண்ணையார் பரமசிவம் மூன்று பேருக்குச் சூடு போட்டது அக்கம் பக்கத்திலுள்ள கிராமங்கள், நகரங்கள் எங்கும் அமைதியான குளத்தில் கல் விழுந்ததும் சிறு அலை பேரலைகளாகப் பரவுவதைப் போலப் பரவியது. அருச்சுனன் அடிபட்டுச் சூடும் வாங்கி செத்தும் போய்விட்டான். மனுசனை மனுசன் சூடு போடுறது மனித குலத்துக்கே ஒரு அவமானம் என்பதை பண்ணையார் உணரவில்லை. அவர்கள் படும் துன்ப நிகழ்வினை ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார்.

பொன்னனின் மனைவி ஆராயி நடவு வயலுக்கு நேரம் தவறி வந்ததால் பச்சைப் பிள்ளைக்காரி என்றும் பார்க்காமல் அவள் தலையில் நாற்றுக்கட்டை வைத்து நீண்டநேரம் சுமக்கச் சொன்னார்கள்.

தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் சம்பளம் உயர்ந்தது. ஆனால் அவர்களின் வாழ்க்கைத்தரம் மட்டும் உயரவே இல்லை. அவர்கள் குடித்தே கூலியைச் செலவு செய்தனர். குடிப்பழக்கத்திற்காகவே சம்பளத்தின் பெரும்பகுதியை செலவிட்டனர். அடிமைப்பபட்ட மக்கள் விழிப்புணர்வு பெறாமல் இருக்கவே வெள்ளைக்காரன் மதுவை இறக்குமதி செய்தனர். இதை அறியாத தொழிலாளர்கள் மது அருந்தி அறியாமை என்னும் இருளிலேயே மூழ்கிக் கிடந்தனர்.

தமிழ்நாட்டில் உள்ள விவசாயத் தொழிலாளர்களின் பிரச்சினைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாகவும், விவசாயக்கூலி வேலை செய்யும் கீழ்த்தட்டு மக்களுக்கு இழைக்கும் அநீதிகள், அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை வாட்டாக்குடி இரணியன் எனும் புதினத்தில் ஆசிரியர் கூறியுள்ளார்.3

பண்ணையில் கூலி வேலை செய்யும் மக்களுக்குச் சரியான கூலிக் கொடுப்பதில்லை. மேலும் அவர்களைச் சாதிப் பெயரைச் சொல்லிக் கீழ்த்தரமாகத் திட்டுவார்கள்.

சுதந்திர நாட்டுல எங்களுக்கு எதுவும் வேணாம் ஒடம்பத் தெண்டனிட்டதுக்குக் கூலி கொடுக்கட்டும் சாதிய வச்சு எங்கள இழிவு படுத்தாம இருந்தா போதும் (மா.வா.இ., ப.141).

மேலும் பண்ணையில் வேலை செய்யும் மக்கள் எவரும் விரும்பி வேலை செய்வதில்லை. வாய்ப்புக் கிடைத்தால் முதலாளிக்குத் தெரியாமல் பலர் கப்பல் ஏறி சிங்கப்பூர் சென்று விடுவார்கள்.

கூலிவேலை செய்யும் மக்களுக்குச் சாட்டையடி, சாணிப்பால் கொடுப்பார்கள். தலையில் மண்கூடை சுமத்தல், புருஷன் பார்க்கப் பெண்டாட்டியையும் பெண்டாட்டி பார்க்கப் புருசனையும் கட்டி வைத்து அடித்தல், தலைகீழாகத் தொங்கவிட்டு கீழே நெருப்பைக் கொளுத்துதல், கட்டை விரலை வெட்டுதல் இதுபோன்ற பல்வேறு கொடுமைகள் செய்யப்பட்டனர். இத்தகைய வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் சூழல் பற்றி ஆசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார்.

“இராயர் பண்ணையைச் சேர்ந்தவர்களும் கூலி வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் உகந்த கூலியைக் கொடுக்காது அவர்களுடைய உழைப்பைச் சுரண்டி செல்வந்தர் ஆகிறார்கள்” (மா.வா.இ., ப.168).

உத்திராபதி மடத்தைச் சேர்ந்த பண்ணை முதலாளி விவசாயக் கூலிகளின் உழைப்பைச் சுரண்டியும், புறம்போக்கு நிலத்தை அபகரித்தும் முதலாளி ஆகின்றனர் (மா.வ.இ., ப.151).

தஞ்சாவூர் மாவட்டம் தொழிலாளர்களின் தோழன் வாட்டாக்குடியில் பிறந்த இரணியன் பாட்டாளி மக்களுக்காக வாழ்ந்து பல போராட்டங்களையும் புரட்சிகளையும் செய்துள்ளான். வாட்டாக்குடியில் உள்ள முக்கியமானவர்கள் ஏழைகளுக்குச் சேர வேண்டிய நிலத்தைக் கொடுக்காமல் ஏரியை நிலமாக்கி விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையை மாற்று நிலத்தை அவர்களிடமிருந்து மீட்டு ஏழை மக்களுக்கு கொடுக்கிறான் (மா.வா.இ., ப.161).

இரணியன் பண்ணை முதலாளிக்கு எதிராகப் போராடியதால் அவனுடைய வீடு இடிக்கப்பட்டு அவன் மனைவி வேறொருவனுக்கு மனைவியாக்கப்படுகிறாள். அரசாங்கம் அவனுடைய தலைக்கு விலை வைத்து அவனைச் சுட்டனர்.

மன உறுதியும் பொய்மைக் கண்டு பொங்கி எழுந்த ஓர் இளைஞன் இளம்வயதிலேயே பொதுவுடைமை கோட்பாட்டில் ஈடுபாடு கொண்டு வரலாற்றில் நிலைபேறு பெற்றுவிட்ட ஒரு வீரன் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டு தனது உடல், பொருள் ஆவியை விட்ட தியாகி தான் இரணியன்.

வெங்கடாசலம் என்ற இரு விவசாயத் தொழிலாளர்களின் குடிசை வீடுகளை நெடும்பலம் நிலக்கிழாரின் ஆட்கள் இருந்த இடம் தெரியாமல் அழிக்கின்றார்கள். இந்த ஆத்திரத்தில் உழைக்கும் மக்களிடையே உணர்வைத் தூண்டிவிடக் கள்ளிக்குடியில் நடந்த மலயா தியாகிகள் நினைவுநாள் கூட்டத்திற்குச் சுமார் பத்தாயிரம் பேர் ஆவேசமாகத் திரண்டிருந்தனர். அப்போது கம்யூனிஸ்டுக் கட்சி தடை செய்யப்பட்டிருந்தது. பொதுக்கூட்டம் நடத்தத் தடை இருந்தது. அந்தத் தடையை மீறி விழிகளில் நெருப்புப்பொறி பறக்க விவசாய மக்கள் அங்கே கூடி­யிருந்தனர். காவல் துறையினர் தங்கள் தடையாணையை நிறைவேற்ற முடியவில்லை. அந்தக் கூட்டத்தில் ஓர் இளைஞன் ஆவேசமாகப் பேசுகிறான். வெங்கடாசலம் வீடுகளை இடித்தவர்களைச் சும்மாவிடக் கூடாது, பழிக்குப்பழி வாங்குவோம். அந்த இளைஞன் தான் சாம்பவான் ஓடைச்சிவராமன்.4

தஞ்சை மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் விவசாயக் கூலி செய்து வாழ்ந்து வருஜீறார்கள். இப்பகுதியில் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் பண்ணையாளர்களுக்கு உரிமையானது. இந்நிலையில் வேலை செய்யும் சேரி மக்களை எப்படி ஒடுக்கினார்கள் என்பதை,

நல்ல உடற்கட்டும் திறமையும் உள்ள சேரி மக்களைப் பண்ணையார்கள் யானையை அங்கு சத்தத்தால் அடக்கி வைத்தாற்போலத் தீண்டாமையாலும் வறுமையாலும் அடக்கி வைத்து வேலை வாங்கினார்கள் (சா.ஓ.சி., ப.38).

தை மாதத்தில் கிடைக்கும் கூலியை நம்பி வருடம் முழுவதும் கடன் வாங்குவார்கள். இவர்களிடம் கடன் கொடுத்தே இந்த ஊரில் பணக்காரர் ஆனவர்கள் அதிகம் பேர். சேரி மக்கள் அனைவரும் ஊரில் உள்ளவர்களுக்கே குடிவேலை செய்வது, மாடு செத்தால் தூக்குவது, யாரும் செத்துப் போனால் துக்கம் சொல்வது, தப்புக் கொட்டுவது, குழி வெட்டுவது, எரிப்பது முதல் எல்லா வேலைகளையும் சேரியைச் சேர்ந்தவர்கள் தான் செய்ய வேண்டும். இவர்களின் வாழ்க்கையே திசைமாறி போனதை ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார்.

சேரியைச் சேர்ந்த வயதான ஒருவர் வயற்காட்டைச் சுற்றிக் கொண்டே வந்தார். வெப்பம் மிகுதியால் அவரின் நாக்கு வறண்டு விட்டது. தண்ணீர் குடிக்க வீட்டிற்குச் செல்லலாம் என்றால் சேரி தூரத்தில் இருந்தது. அவரின் அருகே குளம் இருந்தது. அந்தக் குளமோ மீன் பிடித்துத் தண்ணீர் குழம்பிப் போய்க் கக்கலும் கரைசலுமாகக் கிடந்தது. கிழவன் சுற்றிப் பார்த்துவிட்டு குளத்தில் தண்ணீர் குடிக்கப் போனார். அதற்குள், பண்ணையாரின் மகன்கள் பச்சைக் கம்பால் அடித்தார்கள். சேரி மக்கள் தாகம் தணிக்க தண்ணீர் கூடக் குடிக்க முடியாமல் தவித்தனர்.

இத்தகைய போராட்டங்களுக்கு இடையில் வாழ்கின்ற கூலித் தொழிலாளர்களுக்கு சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளும் தாங்கள் வாழ்கின்ற கிராமியச் சூழலுக்கு ஏற்றவாறு உணவு, உடை, பழக்க வழக்கங்களை உடையவராக வாழ்ந்து வருகின்றனர்.

“யாதும் ஊரே! யாவரும் கேளிர்! எல்லோர்க்கும் எல்லாமும் இருக்கின்ற இடம் நோக்கி நகர்கின்றது இத்திசையாம்” என்ற பொதுவுடைமைக் கருத்துக்களின் மூலம் மக்களின் நிலையை அறிந்து அனைவரும் இனிவரும் காலங்களில் அடிமைத்தனம் ஒழிய வேண்டும் என்ற உயரிய நோக்கோடு சரிநிகர் சமமாக இன்றைய சமுதாயத்தில் ஒவ்வொருவரும் வாழ வேண்டும் என்பதை இவ்வாய்வுக் கட்டுரையின் வழி வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

சான்றெண் குறிப்புகள்

1 பி.ஆர்.அம்பேத்கர், தீண்டப்படாதவர் வரலாறு, ப.29.
2. ச.சுபாஷ் சந்திரபோஸ், மலைப்பாம்பு மனிதர்கள், ப.24.
3. ச.சுபாஷ் சந்திரபோஸ், மாவீரன் வாட்டாக்குடி இரணியன், ப.31.
4. ச.சுபாஷ் சந்திரபோஸ், சாம்பவான் ஓடைச்சிவராமன், ப.28.

குறிப்புதவி நூல்கள்

• அக்னிபுத்ரன், எல்.கே., வர்க்கப் போராட்டமும் மானுடவியல் கோட்பாடும், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, மு.ப., 2009.

• சுபாஷ் சந்திரபோஸ், ச., வாட்டாக்குடி இரணியன், அலைகள் வெளியீட்டகம், சென்னை, மு.ப., 1999.

• ---. மலைபாம்பு மனிதர்கள், அலைகள் வெளியீட்டகம், சென்னை, மு.ப., 1999.

• ---. சாம்பவான் ஓடைச் சிவராமன், இயல் வெளியீடு, தஞ்சாவூர், மு.ப., 2012.

 - பி.சா.மாதவி

Pin It