நாடா கொன்றோ காடா கொன்றோ

அவலா கொன்றோ மிசையா கொன்றோ

எவ்வழி நல்லவ ராடவர்

அவ்வழி நல்லை, வாழிய நிலனே (புறம் - 187)

மேற்கண்ட பாடல் புறநானூற்றில் வருகின்ற புகழ் பெற்ற பாடலாகும். மிகவும் அழகான சிறிய பாடல். இதில் வரும் நாடு, காடு, ஒன்று, வழி, நல்லவர், ஆடவர், வாழிய, நிலன் போன்ற சொற்கள் இன்றும் புழக்கத்தில் உள்ளதால் பாடலும் சற்று எளிதாகவே புரிந்து விடுகின்றது. அவல் என்ற சொல் ‘பள்ளம்’ என்ற பொருளையும் மிசை என்ற சொல் ‘மேடு’ என்ற பொருளையும் உணர்த்துகின்றன. மிசை என்ற சொல் “மீது” என்ற பொருளில் சொல்லுருபாகவும் பழந்தமிழில் வந்துள்ளது. ‘மலர்மிசை ஏகினான்’ என்ற குறளில் இதனைப் பார்க்கலாம். ‘நல்லை’ என்பது முன்னிலை ஒருமை குறிப்பு வினைமுற்று. நிலனே! நீ நல்லை என்று கொண்டு தற்காலத் தமிழில் சொல்வதானால் நிலமே! நீ நல்லவள் என்று பொருள் கொள்ளலாம். ஆடவர் என்ற சொல்லுக்கு ‘ஆண்மக்கள்’ என்று பொருள் கொள்ளப்படுகின்றது.

நிலத்தை இழித்துக் கூறினாரா?

இப்பாடலுக்கு ஒளவை துரைசாமிப்பிள்ளை அவர்கள் கீழ்க்கண்டவாறு உரை தருகின்றார்.

“நிலனே, நீ ஒன்றில் நாடேயாக; ஒன்றிற் காடேயாக; ஒன்றிற் பள்ளமேயாக; ஒன்றில் மேடேயாக; எவ்வாறாயினும் எவ்விடத்து நல்லர் ஆண்மக்கள் அவ்விடத்து நீயும் நல்லை யல்லது நினக்கென ஒரு நலமும் உடையை யல்லை வாழி”.

“தீய நிலனே யாயினும் நல்லோருறையின் நன்றெனவும், நல்ல நிலனே யாயினும் தீயோ ருறையின் தீதெனவும், தன்னிடத்து வாழ்வாரியல் பல்லது தனக்கென ஓரியல்புடைய தன்றென நிலத்தை பழித்துக் கூறுவதுபோல உலகத்தியற்கை கூறியவாறாயிற்று” (புறநானூறு 187 பக் 526)

ஆடவர் என்ற இப்பாடலில் வரும் சொல் ஆண் மக்களை மட்டும் குறித்ததா அல்லது ஆண்மக்கள் பெண்மக்கள் இருபாலரையும் குறித்ததா? நிலம் ஓரிடத்தில் காடாகவும் மற்றோரிடத்தில் மேடாகவும் இன்னொரு இடத்தில் பள்ளமாகவும் வடிவம் வேறு பட்டு இருப்பதால் “நினக்கென ஒரு நலமும் உடையை யல்லை என்று உரை தருவது சரியாகுமா? ஒளவையார் ‘நிலத்தை இழித்துக் கூறுவது போல’ இப்பாடலை எழுதினாரா? அல்லது மக்களை இழித்துக் கூறுவது போல நிலத்தை வாழ்த்தி இருக்கிறாரா என்ற ஐயமும் எழுகின்றது.

தெ.பொ.மீயின் ஒப்பீடு

ஒளவையார் எழுதிய இத்தமிழ்ப் பாடலைத் தம்மபதப் பாடல் ஒன்றோடு ஒப்பிட்டுத் தெ.பொ.மீ ஒரு கட்டுரை எழுதியுள்ளார். தெ.பொ.மீயின் கட்டுரையைத் தமிழில் மொழிபெயர்த்து அதன் தொடர்ச்சியாக ஒளவையின் இலக்கிய மொழிநடை குறித்து பேராசிரியர் செ.வை.சண்முகனார் ஓர் ஆய்வுக்கட்டுரை படைத்துள்ளார். (காண்க: செ.வை சண்முகம்; 2012;பக் - 131-38) செ.வை.சண்முகம் அவர்களின் நூலிலிருந்து தம்மபதப் பாடல் கீழே தரப்படுகின்றது.

காமே வா யதிவா ரஞ்ஞே

மிந்நே வா யதிவா தளே

யதா அரஹந்தோ விகரந்தி

தம் பூமி ரமனேய்யகம்

(அரஹந்த வக்க; பாடல் - 98)

காமே - கிராமத்தில், ரஞ்ஞே - ஆரண்யத்தில் (காடு) மிந்நே (நிந்நே) பள்ளத்தில், தளே - தளத்தில் (மேடு) விகரந்தி - வாழ்கின்ற (இடம்), ‘‘arhat’’ என்ற சொல் ‘perfected one’ என்ற பொருளில் புத்த துறவி களைக் குறித்திருக்கும். “கிராமத்தில் அல்லது வனத்தில் பள்ளத்தில் அல்லது மேட்டில் எங்கே அரஹந் வாழ் கின்றாரோ அந்த இடம் மகிழ்ச்சிகரமானது”. இப் பாடலை ஒளவையின் பாட்டோடு ஒப்பிட்டுக் காட்டிய தெ.பொ.மீயின் கருத்துக்களைக் காண்போம். இரண்டு பாடல்களிலும் கருத்துவரிசை ஒன்றாக இருப்பதால் அது தற்செயலாக இருக்க முடியாது. ஒளவையார் தம்மபதத்திலிருந்து கருத்துக்களைக் கடனாகப் பெற்றிருக்கிறார். ஆனாலும் கூட அவரது கவித்திறமை இப்பாடலில் நன்கு புலனாகிறது.

“ஒளவை அந்தச் செய்யுளைக் கவித்துவமும் நாடகப் பாங்கும் நிறைந்துள்ளதாக ஆக்கியுள்ளார். அவருடைய கவிதை வெறும் கருத்துத் தொகுப்பு அல்ல. நிலத்தை மனிதனாக உருவகப்படுத்தி, அவர் தன் கண்ணெதிரே நிற்பது போலக் காட்சிப் படுத்தி யுள்ளார். இயற்கை எவ்வளவுதான் குறையுடையதாக இருந்தாலும் அவ்வப்போது எழுகிற சவால்களை எதிர்க்கும் சக்தியும் விடாமுயற்சியும் தன்னம்பிக்கை உடையவனாக மனிதன் இருந்தால் இயற்கை உதவி யாகவே இருக்கும். இயற்கையின் இந்த இளக்கப் பண்பு அதன் பேராற்றலைப் பொய்யாக்குகிறது. அந்தப் பண்பே ஒளவைக்குப் பிடித்திருக்க வேண்டும். அந்த ஆற்றலின் சக்தியே “வாழிய நிலனே” என்று உரக்கக் கூவும்படி வைத்திருக்க வேண்டும். ஒளவை பெரிய மனிதர்களின் சிறப்பை வெளிப்படுத்துவதோடு இயற்கை மனிதனுக்குத் தடையாக இல்லாமல் துணையாக இருப்பதாக வலியுறுத்தியுள்ளார்” (காண்க; சண்முகம் 2014, பக்-133) தம்மபதம் “அரஹத்” என்று குறிப்பிட ஒளவை எல்லாத் துறைகளிலும் உள்ள மனிதர்களையும் “ஆடவர்” என்று பொதுமைப்படுத்தினார். விழிப்புடன் செய்யப் படும் இதுபோன்ற ஒப்பாய்வு சுவையானதாக இருக்கும் என்றும் தெ.பொ.மீ ஒப்பிலக்கிய ஆராய்ச்சியை ஊக்கப்படுத்தியுள்ளார்.

செ.வை.சண்முகனார் விளக்கம்

“கிராமம் என்ற சொல் தமிழில் நாடு என்று மாற்றப்பட்டது பொழிப்பு எதுகைக்கு மட்டும் அல்லாமல் பொருண்மை நிலையில் பொருள் விரிவு ஏற்படவும் காரணமாக அமைந்துள்ளது. கவிதையின் தொடர் அமைப்பு (எவ்வழி / அவ்வழி) வழியாக ஆடவர்களின் நல்ல பண்பும் நிலத்தின் நல்ல பண்பும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கிற உறவு புலப்படுத்தப்பட்டு விடுகிறது. நிலம் அழியாதது, நிலைத்திருப்பது ஆடவர் இறக்கக்கூடியவர், நிலையாமை உடையவர், எனவே நிலைத்து நிற்கிற நிலத்தை “வாழிய நிலனே” என்று வாழ்த்துகிறார் என்று விளக்குகிறார். ஒளவையின் கவிதை நடையில் இணைபெயரெச்சத் தொடர் திரும்பத் திரும்ப வருவதைக் கொண்டு அதனை ஒளவையின் நடையியற் கூறாகக் காட்டுகிறார்.

எவ்வழி நல்லவர்         -           அவ்வழி நல்லை

எத்திசைச் செலினும்   -           அத்திசைச் சோறே

வடமொழி அறிவும் வைதீக சமய அறிவும் உடைய ஒளவையார் பௌத்த சமயப் பாடலை மொழி பெயர்த்திருப்பது அக்காலத்தில் சமய நல்லிணக்கம் நிலவியிருந்ததைப் புலப்படுத்துகிறது என்றும் செ.வை சண்முகனார் விளக்கம் தருகிறார். முழுவதும் மொழி பெயர்ப்பாக அல்லாமல் மொழியாக்கம் Transcreation என்ற நிலையிலும் ஒளவை புதுமையைச் செய்துள்ளார். விரிவான விளக்கத்திற்கு செ.வை.சண்முகம் அவர்களின் கட்டுரையைக் காண்க.

அபபிரம்சா பாடல்

இனி, இதே சாயலில் அமைந்த ஓர் அபபிரம்சா பாடலைக் காண்போம்.

சரிஹிம் ன சரேஹிம் ன சரவரேஹிம் ன வி உஜ்ஜானவனேஹிம்!

தேச ரவண்ணா ஹோந்தி வட நிவசந்தேஹிம் சுஅனேஹிம்!!

இப்பாடலில் வரும் சரிஹி, சரேஹி, சரவரேஹி உஜ்ஜானவனம் ஆகிய சொற்கள் முறையே ஆறு, குளம், ஏரி, பூஞ்சோலை ஆகிய தமிழ்ச் சொற்களுக்கு இணையான சொற்கள். “ன” என்பது எதிர்மறைச் சொல். “ஆற்றால் இல்லை; குளத்தால் இல்லை; ஏரியால் இல்லை; பூஞ்சோலையால்கூட இல்லை” என்பது

முதல் வரியின் பொருள். இரண்டாவது வரியில் வரும் சொற்கள்: தேச - நாடு; ரவண்ணா ஹோந்தி - அழகாகின்றது; வட - மூர்க்கனே!, நிவசந்தேஹிம் - வாழ்கின்ற, சுஅனேஹிம் - நல்லவர்களால் ஆகிய இவற்றைக் கொண்டு தேசத்தில் வாழும் நல்லவர்களால் அத்தேசம் இன்பமான / அழகான இடமாக மாறுகிறது, மூர்க்கனே!”. இது இரண்டாவது வரியின் பொருள். இந்த அபபிரம்சா பாடலின் சமஸ்கிருத மொழி பெயர்ப்பும் கீழே தரப்படுகின்றது.

சரித்பிஹின சரோபிஹின சரோவரைஹி ன அபி உத்யானவனனறி!

தேஷாஹ ரம்யா பவந்தி மூர்க்! நிவசத்பிஹி சுஜனைஹி!!

ஆறு, குளம், ஏரி, உத்யானவனம் இவற்றால் தேசம், அழகு பெறுவதில்லை, மூர்க்கனே! அங்கு வாழும் நல்லவர்களால் (சு+ஜன) அழகு பெறுகின்றது என்று பாடலுக்குப் பொருள் காணலாம்.

நாடு, காடு, மேடு, பள்ளம் ஆகிய சொற்களைக் கொண்டு தமிழ்ப் பாடலும் தம்மபதப் பாடலும் அமைந்துள்ளன. ஆறு, குளம், ஏரி, உத்யானவனம் ஆகிய சொற்களைக் கொண்டு அபபிரம்சா பாடல் அமைந்துள்ளது. அபபிரம்சா பாடலில் நிலப்பகுதி களுக்குப் பதிலாக நீர்நிலைகள் வந்துள்ளன. நிலமும் நீரும் தானே பூமியின் இருபெருங் கூறுகள். வாழிய நிலனே என்று ஒளவை நிலத்தை முன்னிலைப்படுத்தி முழங்குகிறார். தம்மபதப் பாடல் யாரையும் முன்னிலைப்படுத்திப் பாடப்படவில்லை. அரஹத் வசிக்குமிடம் அழகாக இருக்கும் என்று பௌத்தர் தமது சீடர்களை நோக்கிச் சொன்னதாகக் கொள்ளலாம். ஆனால் பாடலில் வெளிப்படையாக விளிச்சொல் இல்லை. மூன்றாவதாக அபபிரம்சா பாடலில் மூர்க்கனே என்று விளிச்சொல் அமைகின்றது. மூர்க்கர்களை முன்னிலைப்படுத்திப் பாடல் புனையப் பெற்றுள்ளது. நல்லவர்களைச் சுட்டிக்காட்டி முட்டாள்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக பாடல் அமைந்துள்ளது. மூர்க்கனே என்று விளிப்பதிலிருந்து புலவரின் சினத்தையும் உணர்ந்துகொள்ள முடிகிறது. ஒளவை அந்தச் சினத்தை மறைத்து மென்மையாகக் கருத்தை வெளிப்படுத்து கிறார். இயல்பான சாதாரண உரையாடலில் மக்கள் மக்களை முன்னிறுத்தியே உரையாட முடியும். பேசுவோர் - கேட்போர் இருநிலைகளும் உரை யாடலுக்கு அவசியம். இது உரையாடல் விதி. ஆனால் இலக்கிய உரையாடலில் மக்கள் இயற்கையோடு உரையாட முடியும். இது இலக்கிய மொழியின் பண்பு. நிலமோ, பூமியோ, தேசமோ நல்லவர்களாலே சிறப்படைகின்றது, இதனை முட்டாள்கள் உணர வேண்டும்; மனம் மாற வேண்டும்; திருந்தி வாழ வேண்டும் என்பதே ஒளவையாரின் உள்ளக்கிடக்கையாக இருக்க வேண்டும். முட்டாள்களே என்று அவர்களை விளித்துச் சொல்லாமல் மறைமுகமாக “வாழிய நிலனே” என்று ஒளவை புனைந்திருப்பது தமிழ்ப்பாடலின் தனித்துவமாகத் திகழ்கின்றது.

அடிக்குறிப்புகள்

In a village or in a forest

in a valley or on a hill

wherever arhats dwell

that place is delightful. (dhammapada)

It is not by rivers, nor ponds, nor lakes,

nor by gardens and sylvan parks that

the regions look delightful, you silly one!

(But it is) from the good persons

living there (that these places derive

their charms). - (Apabrahmsa verse)

பார்வை நூல்கள்

  1. சண்முகம், செ.வை, (2012) இலக்கியமும் மொழி அமைப்பும். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட் சென்னை - 600 098.
  2. புறநூனூறு (செவ்விலக்கியக் கருவூலம்) (2008). தமிழ் மண் அறக்கட்டளை வெளியீடு, தி.நகர், சென்னை - 17.
Pin It