காலனியாதிக்கம் என்பது ஒரு இராட்சதப் பேய்ச் சிலந்தியான ஆக்டோபஸைப் போன்றது. அதன் ஒரு கால் பெரும் நகரங்களில் வாழும் பாட்டாளி வர்க்கத்தையும், மற்றொன்று காலனி களிலுள்ள பாட்டாளிகளையும் சுற்றிப் பின்னி யுள்ளது. அந்த ஆக்டோபஸைக் கொல்ல வேண்டு மெனில் அந்த இரு கால்களையும் வெட்டி எறிய வேண்டும். அவற்றில் ஏதேனும் ஒன்றை வெட்டி னாலும் மற்றொன்று தொடர்ந்து பாட்டாளி களின் ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டேயிருக்கும். அந்த ஆக்டோபஸ் உயிருடனிருந்து கொண்டு, வெட்டி எறியப்பட்ட காலை மீண்டும் வளர்த்துக் கொள்ளும்.
ரஷ்யப் புரட்சி அதனை நன்கறிந்திருந்தது. அதனால்தான், போல்ஷிவிக்குகள் ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்த வெறும் சொல் அலங்காரப் பேச்சுக் களுடனும், மனித நேயங்கொண்ட தீர்மானங் களுடனும் மட்டுமே நில்லாது, அவர்கள் எவ்வாறு போரிடவேண்டும் என்பதையும் போதித்து வருகின்றனர். காலனிப் பிரச்சினை பற்றிய தனது விரிவுரையில் லெனின் கூறியுள்ளதைப் போல, அந்த மக்களுக்கு தார்மீக, பொருளாயத உதவி களையும் வழங்கி வருகின்றனர்.
பாகூவில் அவர்கள் கூட்டிய காங்கிரஸில், கீழைய நாடுகளைச் சேர்ந்த 21 தேசிய இனங்களின் பிரதிநிதிகளும், மேலைய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். வரலாற்றி லேயே முதன் முறையாக, வெற்றி பெற்ற நாடு களின் தொழிலாளிகளும், தோல்வியடைந்த நாடு களைச் சேர்ந்த தொழிலாளிகளும், தங்களது பொது வான எதிரியான ஏகாதிபத்தியத்தை முறியடிப் பதற்குப் புதிய வழிகளைக் கண்டுபிடிக்கப் பாடு படுவதற்காக ஒருவர்க்கொருவர் நேசக்கரம் நீட்டினர்.
வரலாற்றுப் பிரசித்தமான இந்த மாநாட்டிற்கும் பின்னர், புரட்சிகர ரஷ்யாவுக்கு எத்தனை உள் நாட்டு இன்னல்களும், வெளிக் கஷ்டங்களும் இருந்த போதும், அதன் வெற்றிகரமான புரட்சி எந்த மக்களை உறக்கத்திலிருந்து விழிக்கச் செய்ததோ, அம்மக்களுக்கு உதவத் தயக்கமின்றி முன்வந்தது. கீழைய மக்களுக்கான பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவியது ரஷ்யா மேற்கொண்ட ஆரம்பப் பணி களில் ஒன்றாகும்.
இந்தப் பல்கலைக்கழகத்தில் தற்போது 1022 மாணவர்கள் உள்ளனர்; அவர்களில் 151 பேர் பெண்கள்; 895 பேர் கம்யூனிஸ்டுகள்; 547 மாணவர் விவசாயப் பின்னணி உள்ளவர்கள்; 265 பேர் தொழிலாளர் குடும்பங்களிலிருந்தும், 210 பேர் உழைக்கும் அறிவுத் துறையினரிடையிலிருந்தும் வந்தவர்கள் ஆவர். கீழைய நாடுகள் அனைத்துமே பிரதானமாக விவசாய நாடுகளாதலால், மாணவர் களில் பெருவாரியானவர்கள் விவசாயப் பின்னணி யுடன் கூடியவர்கள் என்பது புரிந்து கொள்ளக் கூடியதே. இந்தியா, ஜப்பான், சீனா ஆகிய நாடு களில், குறிப்பாகத் தொழிலாள வர்க்கத்தின் நலன் களுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட அறிவுத் துறையைச் சேர்ந்தவர்களே, அநேகமாக அதன் தலைவர்களாக உள்ளனர். பல்கலைக்கழக மாணவர்களிடையே அறிவுத் துறையைச் சேர்ந் தோரின் எண்ணிக்கையை நிர்ணயிப்பது அதுவே. தொழிலாளர் குடும்பங்களிலிருந்து குறைந்த அளவு மாணவர்களே இருப்பதற்குக் காரணம், ஜப்பான் ஒன்றைத் தவிர, பிற கீழைய நாடுகளில் தொழில், வர்த்தகத் துறை ஒப்பீட்டளவில் வளர்ச்சி குன்றியதாகவே இருந்ததுதான்.
10க்கும் 16க்கும் இடைப்பட்ட வயதுடைய 75 குழந்தைகளும் இப்பல்கலைக்கழகத்தில் பயின்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கணிதம், வரலாற்றியல் பொருள்முதல்வாதம், தொழிலாளி வர்க்க வரலாறு, இயற்கை விஞ்ஞானம், புரட்சிகளின் வரலாறு, அரசியல் பொருளாதாரம் போன்ற பல்வேறு இயல்களையும் போதிப்பதற்கென 150 ஆசிரியர்கள் அப்பல்கலைக்கழகத்தில் உள்ளனர். அங்கு உள்ள மாணவர்கள் 62 தேசிய இனங்களின் சகோதரத்துவ உணர்வில் வாழ்பவர்கள்.
இந்தப் பல்கலைக்கழகம் 10 பெரிய கட்டடங் களைக் கொண்டது; அதற்கெனத் தனியாகத் திரைப்பட அரங்கும் உள்ளது. ஞாயிற்றுக் கிழமை களிலும், வியாழக் கிழமைகளிலும் மாணவர் களுக்கு இலவச சினிமாக் காட்சிகள் நடைபெறு கின்றன; பிற தினங்களில் அந்த அரங்கு மற்ற ஸ்தாபனங்களின் உபயோகத்திற்குக் கொடுக்கப் படுகிறது. 47,000 நூல்களைக் கொண்ட இரண்டு நூல் நிலையங்கள், இளம் புரட்சிவாதிகளின் அறிவைப் பெருக்கவும், அவர்கள் பல்வேறு துறை களில் ஞானம் பெறவும் உதவுகின்றன. ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் அல்லது குழுவுக்கும், அதற் கெனச் சொந்தமாக, அந்தந்த மொழி நூல் களையும், சஞ்சிகைகளையும், பத்திரிகைகளையும் கொண்ட நூலகங்களும் உள்ளன. மாணவர் களால் கலையழகுடன் அலங்கரிக்கப்பட்டுள்ள படிப்பகம் எல்லா வகையான செய்திப் பத்திரிகை களையும் சஞ்சிகைகளையும் கொண்டுள்ளது.
மாணவர்கள் ஒரு சுவர்ப் பத்திரிகையை நடத்துகின்றனர்; படிப்பகத்தின் நுழைவாயிலில் அது ஒட்டப்படுகிறது.
பல்கலைக்கழக பாலி-கிளினிக்கில், நோயுற் றோர் வைத்திய உதவி பெறுகின்றனர்; நலிவுற் றோர் உடல்நலம் பெறுவதற்காக கிரைமியாவில் ஓர் ஓய்வு இல்லமும் உள்ளது, ஒன்பது வீடுகளைக் கொண்ட இரண்டு பண்ணைகளையும் இப்பல்கலைக் கழகத்திற்கு சோவியத் அரசாங்கம் தந்துள்ளது; விடுமுறைக் காலங்களில் மாணவர்கள் இங்குத் தங்குகின்றனர். ஒவ்வொரு பண்ணையிலும் ஒரு கோழி வளர்ப்புக்கூடமும், கால்நடைத் தொழுவமும் உள்ளன. கால்நடைகளைப் பராமரிக்கவும் வளர்க்கவு மான பல்வேறு முறைகளையும் மாணவர்கள் இங்குக் கற்றுக் கொள்கின்றனர். “ஏற்கெனவே எங்களிடம் 30 பசுக்களும், 50 பன்றிகளும் உள்ளன” என்று என்னிடம் ஒரு மாணவர் ஒளிவு மறைவற்ற பெருமையுணர்வுடன் கூறினார். இப் பண்ணைகளுக்கு ஏறக்குறைய 100 ஹெக்டார் நிலம் உள்ளது; விவசாயத் துறையில் கோடைகாலப் பயிற்சியின் போது, மாணவர்கள் இங்குப் பயிரிடு கின்றனர். வகுப்பறைகளில் பாடங்களைப் படித்த பின்னர், அவர்கள் விவசாயிகளுக்கு உதவுகின்றனர்.
தற்செயலாக, அப்பண்ணைகளில் ஒன்று, புரட்சிக்கு முன்னர் ஒரு பெரிய கோமகனுக்குச் சொந்தமானதாக இருந்தது. அந்தக் கோமகனது சின்னம் பொறித்த கோபுரத்தின் உச்சியில் ஒரு செங்கொடி கம்பீரமாகப் பறந்து கொண்டிருப் பதையும், “விவசாயிகள்” - கொரியர்களும், ஆர்மீனியர்களும்- மகா கனம் பொருந்திய மன்னர் பிரானைப் பற்றி அவரது தர்பார் மண்டபத்தி லேயே “கௌரவக் குறைவாகப்” பேசுவதையும் காணப் பெரிதும் வேடிக்கையாக உள்ளது.
மாணவர்களுக்கு இலவச உணவும், தங்கு மிடமும், உடைகளும் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருக்கும் மாதந்தோறும் சில்லறைச் செலவு களுக்காக 5 தங்க ரூபிள்கள் கொடுக்கப்படுகிறது. மாணவர்களுக்குக் குழந்தை வளர்ப்பைக் கற்றுக் கொடுப்பதற்காக, இப்பல்கலைக்கழகம் ஒரு குழந்தைகள் இல்லத்தையும் ஒரு மாதிரிப் பாலர் விடுதியையும் நடத்திவருகிறது. 60 அழகான குழந் தைகள், பல்கலைக்கழக ஆதரவில் அங்கு வளர்க்கப் பட்டு வருகின்றனர்.
இப்பல்கலைக்கழகத்தின் வருடாந்திரச் செலவு 5,16,000 தங்க ரூபிள்கள் ஆகும். இங்கு பயிலும் 62 தேசிய இனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் ஒரு “கம்யூன்” வாழ்வு நடத்துகின்றனர். மாணவர் களின் பொதுக்குழுக் கூட்டத்தில் மூன்று மாத காலத்திற்கென ஒரு தலைவரும், கம்யூனின் தீவிர ஊழியர்களும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இப் பல்கலைக்கழகத்தின் பொருளாதார, நிர்வாக வேலையில் நிரந்தரமாகப் பங்கு கொள்ள ஒரு மாணவர் பிரதிநிதி நியமிக்கப்பட்டுள்ளார். எல்லா மாணவர்களும், முறை போட்டுக் கொண்டு உணவகம், நூல் நிலையம், சங்கம் ஆகிய இடங் களில் பணியாற்றுகின்றனர்.
எல்லா “சிறு குற்றங்களும்”, வேறுபாடுகளும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு விசாரணைக் குழு வினால் தீர்த்து வைக்கப்படுகின்றன. இந்த விசாரணைக் குழுக் கூட்டத்தில் எல்லாத் தோழர் களும் கலந்து கொள்ளுகின்றனர். வாரத்திற்கு ஒருமுறை “கம்யூன்” கூடி, சர்வதேச அரசியல், பொருளாதார நிலையை விவாதிக்கிறது. அப் போதைக்கப்போது மாலை விருந்துகள் நடை பெறுவதுண்டு; அது போது மாணவர்கள் தங்கள் தேசியக் கலையைப் பிறருக்கு நிகழ்ச்சிகள் மூலம் திறம்பட நடத்திக் காட்டுகின்றனர்.
போல்ஷிவிக்குகளது “காட்டுமிராண்டித் தனத்தை” எடுத்துக்காட்டக் கூடிய மிகச் சிறந்த உண்மை என்னவெனில், அவர்கள் காலனி மக்களைத் தாழ்ந்தவர்களாகக் கருதுவது கிடையாது; அவர் களைத் தங்கள் சகோதரர்களாகப் பாவித்து, ரஷ்யாவின் அரசியல் வாழ்விலும் பங்கு கொள்ளு மாறு அழைக்கவும் செய்கின்றனர். சோவியத்துக் களுக்கு நடைபெறும் தேர்தல்களில் அந்த மாணவர் களும் கூடப் பங்கு கொள்கின்றனர்; அவர்கள் பிரதிநிதிகளையும் தேர்ந்தெடுத்து அனுப்புகின்றனர். இந்தக் காலனி மக்கள் தாங்கள் பிறந்த நாடுகளில் “ஆளப்படுபவர்களாக”க் கருதப்படுகின்றனர்; அங்கு அவர்களுக்கு ஒரே ஒரு உரிமை - வரி கொடுக்கும் உரிமைதான் - உண்டு. தங்களது சொந்த நாட்டின் வாழ்வு பற்றிப் பேசவோ அல்லது தேர்தல்களில் வாக்களிக்கவோ, வாக்கு களைப் பெறவோ அவர்கள் அனுமதிக்கப்படு வதில்லை. தங்கள் சொந்த நாடுகளிலேயே “குடி யுரிமை”க்காக வீணாகக் கெஞ்சிக் கொண்டிருக்கும் காலனி நாடுகளிலுள்ள எனது சகோதரர்கள், பூர்ஷுவா ஜனநாயகத்தையும், தொழிலாளர் ஜனநாயகத்தையும் ஒத்திட்டுப் பார்க்கட்டும்.
இந்த மாணவர்கள் அனைவருமே பல கஷ்டங் களுக்கு உள்ளாகியுள்ளனர்; பிறரது கஷ்டங் களையும் கண்டவர்கள். அவர்கள் அனைவரும் ஒரு “உயர்ந்த நாகரீகத்தின்” ஒடுக்குமுறையின்
கீழ் வாழ்ந்தவர்கள்; அன்னிய மூலதனத்தினால் சுரண்டப்பட்டவர்கள்; அடக்கப்பட்டவர்கள். அதனால் தான் அவர்களுக்கு அறிவைப் பெறு வதில் அத்துணை உற்சாகமும், ஆர்வமும் உள்ளது. அவர்களுக்குக் காரியார்த்தமாகவும் இருக்கத் தெரியும்; களிப்புடன் இருக்கவும் தெரியும். லத்தீன் வட்டாரத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர்களைப் போன்றோ, அல்லது பாரிஸிலும், ஆக்ஸ்ஃபோர் டிலும், பெர்லினிலும் காணப்படும் இளம் கீழ் திசையாளர்களைப் போன்றோ அவர்கள் சிறிதும் காணப்படவில்லை. காலனி மக்களின் எதிர் காலத்தை இந்தப் பல்கலைக்கழகம் தனது பொறுப்பாக ஏற்றுக்கொண்டு விட்டது என்று கூறுதல் மிகையாகாது.
காலனி நாடுகளையும், அரைக் காலனி நாடுகளையும் மட்டுமே எடுத்துக் கொண்டால், மத்திய கிழக்கு, தூர கிழக்கு நாடுகள் - சிரியாவுக்கும், கொரியாவுக்கும் இடையேயுள்ள நாடுகள் - ஆகியவற்றின் பரப்பு 1 கோடி 50 லட்சம் சதுர கிலோ மீட்டர்களாகும்; இங்கு வசிக்கும் மக்கள் தொகை 120 கோடி கீழைய நாடுகள் முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் ஆகியவற்றின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளன. அவர்களது எண்ணிக் கையிலேயே அவர்தம் சக்தி அடங்கியிருந்த போதும், அவர்கள் மிகப்பலராக இருந்தபோதும், இந்த ஒடுக்கப்பட்ட மக்கள், தங்களது சொந்த எதிர்காலத்தைத் தாங்களே நிர்ணயித்துக் கொள்ள முயன்றதில்லை; அதாவது, சர்வதேச ஒருமைப் பாட்டின் முக்கியத்துவம் பற்றி அவர்கள் இன்னும் சரிவர உணர்ந்து கொள்ளவில்லை; ஒரு போராட்டம் நடத்துவதற்கான அவர்கள் ஒன்றுசேரத் தவறி விட்டனர். அவர்களுக்கு எவ்வித சர்வதேச உறவு களும் கிடையாது. தாங்கள் மிகப் பெரும் அசுர பலம் கொண்ட சக்தி என்பதைக் கூட அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. கீழ்த்திசை மக்களுக்கான பல்கலைக்கழகத்தை நிறுவியதானது ஒரு புதிய சகாப்தத்தைத் தோற்றுவித்தது. காலனி நாடு களிலுள்ள இளம், செயலூக்க மூலம் இந்தப் பல்கலைக்கழகம் மாபெரும் பணியாற்றும். இந்தப் பல்கலைக்கழகத்தின் நோக்கங்களாவன:
(அ) எதிர்காலப் போராட்ட வீரர்களுக்கு வர்க்கப் போராட்டக் கோட்பாடுகளைக் கற்றுக் கொடுப்பது; ஒரு புறம் இனவெறி மோதல்களும், மறுபுறம் தந்தை வழிச் சமுதாய வழக்கங்களும் அவர்களது கண்ணோட்டத்தைக் குழப்பியுள்ளது என்பதை விளக்குவது;
(ஆ) சர்வதேசத் தொழிலாளி வர்க்கத்தை இறுதி வெற்றிக்கு இட்டுச் செல்வதற்கான எதிர்கால ஒத்துழைப்புப் பாதையைச் சமைக்கும் நோக்குடன், காலனிகளிலுள்ள தொழிலாளி மக்களின் தலைமை யணிக்கும், மேலை நாடுகளிலுள்ள பாட்டாளி களுக்குமிடையே நெருங்கிய தொடர்பை ஏற் படுத்துதல்;
(இ) ஒருவர்க்கொருவர் இதுகாறும் பிணைப்புக் களின்றி இருந்து வரும் காலனி மக்கள் ஒருவரை யொருவர் நன்கு அறிந்து கொள்ளவும், அவர்கள் ஐக்கியப்படவும் அவர்களுக்கு போதிப்பது; அதன் மூலம் தொழிலாளி வர்க்கத்தின் புரட்சி அணிகளில் ஒன்றாக வளரவிருக்கும், கீழ்த்திசை மக்களின் எதிர்கால நேசக் கூட்டிற்கான அஸ்திவாரத்தை அமைத்தல். இறுதியாக, ஏகாதிபத்தியவாதிகளால் ஒடுக்கப்பட்டுவரும் அவர் தம் சகோதரர்களுக்கு தொழிலாளி வர்க்கம் என்ன செய்ய முடியும், என்ன செய்ய வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுவது.
(நிகுயன் ஐ குயோக் என்ற பெயரில் ‘லா வி ஓவிரியா’ என்ற பிரெஞ்சு இதழில் ஹோ சி மின் எழுதிய கட்டுரை. 1920ஆம் ஆண்டில் லெனின் தம் பார்வையைக் கீழே நாடுகள் பக்கம் வலுவாகத் திருப்பினார். 1920 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாகூ நகரில் கீழைநாட்டு மக்களின் முதலாவது மாநாடு நடைபெற்றது. அது முதல் ஆசிய, ஆப்பிரிக்க, தென்னமெரிக்க மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு உதவும் பொருட்டு, கீழைநாட்டு மக்களுக்கான பல்கலைக்கழகம் எனப்படும் ‘கோமிண்டர்ன்’ நிறுவப்பட்டது. அடுத்த வந்த இரு தலைமுறை கீழைநாடுகளின் புரட்சியாளர்களுக்கு இப்பல்கலைக்கழகம் பயிற்சி அளித்தது. ருஷ்யப் புரட்சி கீழைநாட்டு மக்களுக்கு பருண்மையாக வழங்கிய விடுதலைப் போராட்ட ஆதரவு வெளிப்பாடே இப்பல்கலைக்கழகம். இக்கட்டுரை கீழைநாட்டு மக்களுக்கு ‘ருஷ்யப் புரட்சி’ வழங்கிய செல்வத்தைத் தெட்டத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டுகிறது.]