இந்தியாவில் காசி, தட்சசீலம், பாஞ்சாலம், காஞ்சி போன்ற இடங்களிலிருந்த பல்கலைக்கழகங்களில் சிறந்த நூலகங்கள் இயங்கி வந்ததாக குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் ஆந்திரப் பிரதேசம் குண்டூரிலிருந்து நாகார்ஜூன் பல்கலைக் கழக நூலகமும், கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் மிகவும் புகழ் பெற்றிருந்த நாளந்தா பல்கலைக் கழக நூலகமும் மிகவும் பழமையான நூல்களைக் கொண்டிருந்ததாக யுவான் சுவாங் போன்ற ஆய்வாளர்களின் குறிப்புகளிலிருந்து அறிய முடிகிறது. இது போன்று இந்தியாவிலிருந்த புத்த விகாரங்களிலும், ஜைன மடங்களிலும் நூலகங்கள் இருந்தமைக்கு சான்றுகள் கிடைக்கின்றன. இந்தியாவி­லிருந்த நூலகங்கள் கிரந்த கிருதி, ஞானபாண்டார், புஸ்தக பாண்டார், சரஸ்வதி பாண்டார், சரசுவதி மகால், தர்ம கஞ்சா, கிதாப் கானா எனப் பெயரிட்டு அழைக்கப்பட்டன. இவ்வாறு உருவான பல்வேறு நூலகங்கள் அழிவுற்றாலும் நம் பண்டைக்கால கலை. இலக்கண, இலக்கியங்களை பதிவு செய்யப்பட்ட பனை ஓலைச்சுவடிகள், பிற்கால காகிதச் சுவடிகள், அரிய நூல்கள், வரைபடங்கள், ஒவியங்களைக் கொண்டு திகழும் தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகம் இன்று இந்தியாவில் உள்ள நூலங்களில் மிகவும் பழமையான நூலகமாகத் திகழ்கிறது. இந்நூலகம் தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருதம், மராத்தி போன்ற மொழிகளில் கலை, மருத்துவம், இலக்கியம், இலக்கணம், புராணம், தத்துவம், சமயம் சார்ந்த சுவடிகளைக் கொண்டுள்ளது. இந்நூலகத்தில் உள்ள சுவடி தமிழ்நாட்டு மக்களின் கல்வி, கலை மற்றும் பண்பாட்டை எடுத்துக் கூறும் அறிவுப் பெட்டகமாகத் திகழ்கின்றது.

உலகமெங்கும் கல்வி வளர்ச்சி என்பது ஆற்றங்கரை நாகரிகத்தின் வழி நடைபெற்றது என்பதற்கிணங்க தஞ்சைத் தரணியின் கல்வி, கலை, பண்பாட்டு வளர்ச்சியானது காவிரி தந்த கொடை என்றால் அது மிகையாகாது.saraswathi mahal libraryமேலும் சைவ, வைணவ சமய வளர்ச்சியுடன் கலை வளர்ச்சியும் மேன்மையடைந்ததால் காவிரிக் கரையின் இரு பக்கமும் கோயில்கள் உருவாக்கப்பட்டன. ஆரம்ப காலங்களில் நூலகங்கள் மக்கள் கூடுமிடமான கோயில்களில் வைத்து பாதுகாக்கப்பட்டன. இவ்வாறு சுவடிகள் பாதுகாக்கப்பட்ட அறை­யினைத் திருக்கை கோட்டி என்று கூறப்பட்டது. கற்றறிந்த மக்களால் மற்றவர்கள் அறிந்து கொள்ள சுவடிகள் வாசிக்கப்பட்டன. அவ்வாறு கோயில்களில் வாசிக்கப்பட்ட மண்டபம் “பட்டண மண்டபம்” என்று குறிப்பிடப்பட்டன. கோயில் நூலகங்களை பராமரிக்கும் நூலகருக்கான ஊதியம் வழங்குவதற்கான நில மானிய விபரம் போன்ற தகவல்களை கோயில் கல்வெட்டுகளில் காண முடிகிறது. தஞ்சை சரசுவதி மகால் நூலகம் தஞ்சைப் பெரிய கோயிலிலிருந்த நூலகத்தின் தொடர்ச்சி என சில அறிஞர்கள் குறிப்பிட்டாலும். பிற்காலச் சோழர் காலத்திய சில சுவடிகளின் பிரதிகளைத் தவிர வேறு எந்தவித வரலாற்றுச் சான்றுகளும் கிடைக்கப் பெறாமையால் அதனை உறுதி செய்ய இயலவில்லை. ஆகையால் கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் இந்நூலகம் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களின் காலத்திலிருந்து இருந்துள்ளது என அறிய முடிகிறது.

தஞ்சையை ஆட்சி செய்த மன்னர்களின் வரிசையில் விஜயநகர மன்னர்களுக்குப் பின் அவர்களது தளபதியாக இருந்து பின் மன்னர்களான நாயக்க மன்னர்கள் நூலகத்தைப் போற்றி வளர்த்தனர். நாயக்க மன்னர்களுக்குப் பின் மராத்திய மன்னர்கள் ஆட்சி புரிந்தனர்.

1675 முதல் 1855 வரை 10 மன்னர்களுக்குப் பின் மராத்திய மன்னர்கள் ஆட்சி புரிந்தனர். அனைவரும் கல்வி, கலையில் ஆர்வமிக்கவர்களாகவே இருந்துள்ளனர். இருப்பினும் மிகச் சிறந்த கல்வியாளராகத் திகழ்ந்தவர் ஏகோஜி மன்னரின் மூத்த மகன் ஷாஜி மன்னராவார். இவர் சிறந்த கல்வியாளராகவும். இசை வல்லுநராகவும் தெலுங்கு மொழியில் வல்லுநராகவும் திகழ்ந்துள்ளார். தெலுங்கு மொழியில் இவர் இயற்றிய திருவாரூர் தியாகராசரைப் பற்றிப் பாடிய தியாகேச கீர்த்தனைகள் மிகவும் குறிப்பிடத் தக்கவையாகும். இவர் காலத்தில் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், மராட்டி ஆகிய மொழிகளின் புலவர்களை ஆதரித்து எண்ணற்ற இலக்கியங்கள் வெளிவர வழிகோலினார். இதனால் இவர் 18 ஆம் நூற்றாண்டின் போஜன் என்று அழைக்கப்பட்டார். இவருக்குப் பின் வந்த மராத்திய மன்னர்களுள் குறிப்பிடத்தக்கவர் இரண்டாம் சரபோஜி மன்னராவார். அவருடைய காலத்தில் அதிக நூல்களும். சுவடிகளும் நூலகத்திற்கு சேர்க்கப்பட்டன.

இரண்டாம் சரபோஜி மன்னர் (கி.பி. 1798-1832)

சரசுவதி மகால் நூலகம் நாயக்கர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு இருப்பினும் அங்கு உள்ள சுவடிகளுக்கு சரியான அட்டவணை இல்லாமையால் சரபோஜி மன்னர் ஆட்சிக்கு வந்தவுடன் அவருடைய உத்தரவின்படி அட்டவணை தயாரிக்கப்பட்டது. ஓலைச் சுவடிகளுக்கான அட்டவணை கி.பி. 1801 ஆம் ஆண்டும் காகிதச் சுவடிகளுக்கான அட்டவணை கி.பி. 1807 லும் தயாரிக்கப்பட்டுள்ளன. ஓலைச்சுவடி அட்டவணையின் முதல் ஏட்டில் கீழே குறிப்பிட்டுள்ள தகவல் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டுள்ளது.

“சரபோஜி மகாராஜாவிற்கு பட்டம் கட்டுவதற்கு முன்பு இந்த சரசுவதி மகால் நூலகத்திற்கு விவரமான அட்டவணை இல்லை.” 1720 ஆம் ஆண்டு காளயுக்தி சம்வத்ரம் சரபோஜி மகாராஜாவிற்கு பட்டம் கட்டிய பின் மன்னியம் பட்டராக இருக்கிற கங்காதரபட் சதாசிவபட்க்கு அதிகாரம் கொடுத்தபின் இந்த சரசுவதி மகால் ஓலைச்சுவடிகளுக்கும். காகித சுவடிகளுக்கும் சரியான நபர்களை நியமித்து சரிபார்த்து இந்த அட்டவணை சாலிவாகன சக வருடம் 1722. ஆங்கில வருடம் 1801ல் அட்டவணை செய்யப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சரபோஜி மன்னர் நூலகத்தின் வளர்ச்சியின்பால் கொண்ட ஆர்வத்தை காணமுடிகிறது.

நூலகத்தில் உள்ள நூல்கள் அனைத்தையும் சரபோஜி படித்தமைக்குச் சான்றாக, ஒவ்வொரு நூலிலும் அவரே தம் கைப்படக் குறிப்புகளை எழுதி வைத்துள்ளார். இவர் தாம் கண்ட காட்சிகளை ஓவியமாக வரையச் செய்து அவற்றை இந்நூலகத்தில் சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சரபோஜி மன்னர் காலத்திலிருந்து திப்புசுல்தானும் ஒரு நல்ல நூலகத்தைத் தம் அரண்மனையில் வைத்திருந்தார். ஆங்கிலேயரின் பகையின் காரணமாக அந்நூலகம் அழிக்கப்பட்டுவிட்டது. ஆனால், சரபோஜி மன்னர் ஆங்கிலேயருடன் நல்லுறவு கொண்டிருந்ததால் சரசுவதி மகால் நூலகம் அழியாமல் பாதுகாக்கப்பட்டது. பழமையைக் காப்பதிலும் புதுமையை நேசிப்பதிலும் பெரிதும் ஆர்வம் காட்டிய இவர் தலைசிறந்த நூல் ஆர்வலராகவும் மாமன்னராகவும் திகழ்ந்துள்ளார் என்பது தெளிவாகின்றது.

சரபோஜி மன்னருக்குப் பின் அவரது மகன் இரண்டாம் சிவாஜி 1832 முதல் 1855 வரை மன்னராக இருந்தார். அவருக்குப் பின் ஆண் வாரிசு இல்லாததால் அரண்மனை சொத்துக்களுடன் நூலகத்தையும் கும்பெனி அரசு எடுத்துக் கொண்டது.

கும்பெனி அரசிடமிருந்து சரசுவதி மகால் நூலகத்தினைக் காப்பாற்றியதில் ராணி காமாட்சிபாயின் மனைவி பங்கு: சிவாஜி II

25.09.1856 இல் சரசுவதி மகால் நூலகம் கும்பெனி அரசுக்குச் சொந்தமானது என்று அறிவிக்கப்பட்டது. 18.10.1856 இல் தஞ்சை அரண்மனையின் ஆணையர் எச்.பார்பஸ் நூலகம் மற்றும் அரசுடைமைச் சொத்துக்களுக்குத் தமது பாதுகாப்பில்லை என்றும் சென்னை அரசு காரியதரிசிக்கு கடிதம் எழுதினார். மேலும் இச¢செய்தியை ராணி காமாட்சிபாய் அவர்களுக்கும் தெரிவித்தார். ஆனால், இம்முடிவினைக் கைவிடுமாறு ராணி அவர்கள் ஜே.பி. நார்ட்டன் எனும் தமது வழக்கறிஞர் மூலம் அரசுக்குத் தெரிவித்தார். 18-11-1856 இல் சென்னை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடையுத்தரவும் பெற்றார்.

11-02-1857 இல் தீர்ப்பளித்த சென்னை உச்சநீதிமன்றம் பட்டத்து ராணியே அரசின் வாரிசு என்றும் டிகும்பெனி அரசின் செயல் கண்டிக்கத்தக்கது என்று அறிவித்தது. இதனை எதிர்த்து கும்பெனி அரசு இலண்டன் மகாராணியின் உயர்நீதிமன்றத்தில் (privy council) மேல் முறையீடு செய்தது. 27-07-1859 இல் தீர்ப்பளித்த நீதிபதி கும்பெனி அரசின் செயல் கண்டிக்கத்தக்கதே என்றும், இந்த வழக்கைப்பற்றி விசாரித்துத் தீர்ப்பளிக்க எந்த உள்நாட்டு நீதிமன்றத்திற்கும் அதிகாரம் இல்லை என்று மன்னரின் சொத்துக்களைச் சென்னை அரசிடம் சேர்க்கும் படியும் உத்தரவிட்டது. நார்ட்டன் அவர்களின் பெருமுயற்சியின் பயனாய், இங்கிலாந்து பாராளுமன்றம் இது தொடர்பாக விவாதித்து, சிவாஜி மன்னரின் சொந்த சொத்துக்கள் அனைத்தையும் மூத்த பட்டத்தரசி காமாட்சிபாய் மற்றும் மன்னரின் மகள் முக்தாம்பாள்பாயிடம் அளிக்கச் செய்தது. இது தொடர்பாக 21-08-1862 சென்னை அரசினால் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

கும்பெனி அரசு 21-09-1862 மற்றும் கடித எண் 336/26-09-1862 ஆகிய நாளிட்ட கடிதங்களின்படி சரசுவதி மகால் நூலகத்தினைச் சென்னை நூலகச் சங்கத்துடன் இணைக்கும் எண்ணத்துடன் தமக்கு விலைக்குக் கொடுக்குமாறு வேண்டியது. இம்முடிவை ராணி நிராகரித்தார். இந்நிலையில் இவரது சுவீகாரபுத்திரனால் நூலகம் நன்கு பராமரிக்கப்பட்டுச் செயல்பட்டு வந்தது.

மன்னரின் சொத்துக்களை நிர்வகிக்கும் விதத்தில் ராணிகளுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தஞ்சை நீதிமன்றத்தில் 1867இல் வழக்கு தொடரப்பட்டது.

1912 இல் கடைசி ராணியின் மறைவிற்குப் பின், அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த நூலகமும், அரண்மனை சொத்துக்களும் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டிற்குட்பட்டது. நீதிமன்றம் சீனிவாசம் பிள்ளை அவர்களைத் தலைவராகவும், பி. ஆர். நடேசய்யர், பி.உமா மகேசுவரம் பிள்ளை, டி. சாம்பமூர்த்திராவ் ஆகியோரை உறுப்பினராகவும் கொண்ட குழுவை அமைத்து நூலகத்தை பராமரித்தது.

இந்நூலகத்தின் முதல் கௌரவ செயலாளராக மராத்தி மொழி அறிஞரும் வழக்குரைஞருமான திரு. டி.சாம்பசிவ மூர்த்திராவ் நியமிக்கப்பட்டார். அவர் 20 ஆண்டுகள் கௌரவ செயலாளராக இருந்தார். இவரது காலத்தில் சுவடிகள் மற்றும் அரிய நூல்களுக்கு அட்டவணைப்படுத்தும் பணி செய்யப்பட்டது. திரு. சாம்பசிவ மூர்த்திராவுக்குப் பின் திரு. எஸ். கோபாலன் கௌரவச் செயலாளராக 25 ஆண்டுகள் பணியாற்றினார். இவருடைய காலத்தில் அட்டவணைப்படுத்தும் பணிகளுடன் நூல்கள் வெளியிடும் பணியும் செய்யப்பட்டது.

தமிழ்நாடு அரசால் திரு. நாராயணசாமிப் பிள்ளை தலைமையில் பல மொழி வல்லுநர்களைக் கொண்டு குழு அமைத்து இந்நூலகச் சுவடிகள் மற்றும் சென்னையில் உள்ள அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்திலிருந்து 1000 சுவடிகளைத் தேர்வு செய்து பதிப்பித்து நூல்கள் வெளியிடப்பட்டன. அவ்வகையில் “முத்ரக்ச நாடக கதா” என்னும் வடமொழி சுவடி திரு.வி.ராகவனால் பதிப்பித்து வெளியிடப்பட்டது. அதுவே இந்நூலகத்தின் முதல் வெளியீட்டு நூலாகும். மேலும் கௌரவ செயலரின் முயற்சியில் சிறிய சுவடிகள் மற்றும் இதரத் தகவல்களை வெளி­யிடுவதற்காக பருவ இதழ் ஆரம்பிக்கப்பட்டது. இவருக்குப்பின் திரு. ஓ.ஏ.நாராயணசாமி அய்யர் ஐந்து ஆண்டு காலம் செயலாளராகப் பணியாற்றினார். அவருடைய காலத்தில் மத்திய அரசிடமிருந்து நிதியுதவி பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். மேலும் மத்திய அரசின் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சராக இருந்த திருமதி இந்திரா காந்தி அம்மையாரை நூலகத்தை பார்வை­யிடச் செய்து இந்நூலகத்தை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன்படி இந்நூலகத்தினை மேம்படுத்துவதற்கு இந்திய நூலகவியல் தந்தை திரு.எஸ்.ஆர். ரங்கநாதன் தலைமையில் குழு அமைத்து 1969 இல் தன் அறிக்கையை சமர்ப்பித்தது. திரு.ஒ.ஏ. நாராயணசாமிக்குப் பின் தமிழ்ப் பேராசிரியர் திரு.நீ. கந்தசாமிப்பிள்ளை செயலாளராக ஐந்தாண்டுகள் பணிபுரிந்தார். அவர் முன்பு நடைபெற்ற பணிகளைத் தொடர்ந்ததுடன் அதிகமான தமிழ் நூல்கள் வெளிவரச் செய்தார். அவருக்குப்பின் திரு.அ.வடிவேலன் கௌரவ செயலராகப் பணியாற்றினார். அவருடைய காலத்தில் மத்திய அரசின் நிதி உதவியுடன் 22 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன. மேலும் நுண்படப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டது.

1979 இல் கௌரவச் செயலாளருக்கு இணையான நிருவாக அலுவலர் பணியிடம் உருவாக்கப்பட்டது. 1982இல் இந்நூலகத்தை மேம்படுத்தும் நோக்கில் ஐந்து பேர் கொண்ட நிருவாகக் குழுவைக் கலைத்துவிட்டு தமிழக அரசின் பள்ளிக்கல்வி அமைச்சரைத் தலைவராகவும், மத்திய மாநில அலுவலர்கள் மற்றும் அரச குடும்பப் பிரதிநிதி என 13 பேர் கொண்ட ஆளுமைக்குழு ஏற்படுத்தப்பட்டது. இந்நூலகத்தை தமிழக அரசின் பதிவுச் சட்டம் 1975- ன் படி பதிவு செய்யப்பட்டது. 1982 இல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தப்படி மத்திய அரசு வளர்ச்சி நிதியையும், தமிழக அரசு பராமரிப்பு நிதியாக பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் சில்லறைச் செலவினங்களுக்காக வழங்குகிறது. இந்நூலகம் சுவடிகளைப் பாதுகாத்தல், அட்டவணைப் படுத்துதல், நூல்களாக வெளியிடுதல் மற்றும் ஆய்வாளர்களுக்கு தேவையான நூல்கள் வழங்குதல் போன்ற பணிகளைச் செய்து வருகிறது. மேலும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்குகள் நடத்தி தகவல்களை வெளியுலகிற்கு எடுத்துரைக்கின்றது.

உலகின் பல நாடுகளிலிருந்தும் இந்தியாவின் அனைத்தும் மாநிலங்களிலிருந்தும் ஆராய்ச்சியாளர்கள் இந்நூலகத்தால் சிறப்பான பயன்பெற்று வருகின்றனர். பல்கலைக்கழகம், கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனங்களிலிருந்து ஆய்வாளர்கள் பலர் தினமும் இந்நூலகத்திற்கு வந்து பயன்படுத்துகின்றனர். பிரிட்டிஷ் மியூசியம் காப்பாளராக இருந்த பானிஸ்ஸியின் கருத்துப்படியே இந்நூலகம் இந்திய நாட்டின் பண்பாடு தொடர்பான பல இந்திய மொழிகளின் இலக்கியங்களை உள்ளடக்கிய ஒரு தேசிய நூலகமாக விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது. பண்டார்க்கர் நூலகம் இந்தியாவில் பெரிய நூலகமாகும். ஆயினும், வரலாற்றுக் காரணங்களால் தஞ்சை சரசுவதி மகால் நூலகமே மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.

- டாக்டர். சு. நரேந்திரன், சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக சிறப்புநிலைப் பேராசிரியர்.

Pin It