workers village2015 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பதிப்பகம் “அதிகாரப்பரவல், அதிகாரப்படுத்துதல், ஊரக மேம்பாடு" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டது. அந்தப் புத்தகம் கனடா நாட்டின் நிதி உதவியுடன் நிகழ்த்தப்பட்ட ஓர் ஆய்வின் அறிக்கை தான். இந்தியாவில் அதிகாரப் பரவல் சம்பந்தமாக தயாரிக்கப்பட்ட ஆய்வுகளிலேயே மிக வலுவானதாகவும், ஆழமானதாகவும் நிகழ்த்தப்பட்ட ஒன்று.

இந்த ஆய்வினை புது டெல்லியில் அமைந்துள்ள என்.சி.ஏ.இ.ஆர் என்ற தேசிய பொருளாதார ஆராய்ச்சிக்கான நிறுவனம் நடத்தியது. இந்த ஆய்வினை பேரா.ஹரி நாகராஜன் அவர்களும், முன்னாள் இந்திய ஊரக வளர்ச்சித்துறைச் செயலர் முனைவர் எஸ்.எஸ்.மீனாட்சிசுந்தரம் அவர்களும், உலக வங்கி ஆய்வாளர் முனைவர் ஹான்ஸ் பிஸ்வாங்கர் அவர்களும் இணைந்து நடத்தினர்.

இந்த ஆய்வு ஏறத்தாழ 7 கோடி ரூபாய் செலவில் ஐந்தாண்டு காலம் நடத்தப்பட்ட ஒன்று. இந்த ஆய்வினை மேற்கொள்ள ஒரு ஆலோசனைக் குழு சர்வதேச அறிஞர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு அவர்களின் மேற்பார்வையில் நடத்தப்பட்ட ஒன்று என்பதுதான் அதன் சிறப்பு.

அந்த ஆய்வு அறிக்கையை பன்னாட்டு அறிஞர்களை அழைத்து ராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்வார் என்ற நகரில் விவாதம் செய்யப்பட்டு சரிபார்த்து இறுதி செய்யப்பட்டது. அந்த அறிக்கை புத்தகமாக வெளிவந்தவுடன் தலை சிறந்த சமூகவியல் நிபுணர் ஜேம்ஸ் மெனோர் அந்தப் புத்தகம் பற்றிய ஓர் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். அவர் இந்தியா பற்றிய பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர். உலக வங்கிக்கு அதிகாரப்பரவல் பற்றி உலகநாடுகளை ஆய்வு செய்யும் நிபுணர்.

அவர் அந்தப் புத்தகம் பற்றி பின்வருமாறு அந்தக் கட்டுரையில் குறிப்பிடுகிறார். “இதுவரை இந்த இருபது ஆண்டு காலத்தில் அதிகாரப்பரவல் மற்றும் கிராம மேம்பாடு பற்றி இவ்வளவு ஆழமாக இந்தியாவில் இதுவரை ஆய்வு அறிக்கை வந்ததில்லை.

இந்தியாவில் 17 மாநிலங்களில் கிராமப்புறங்களில் குடும்பத் தரவுகளைத் திரட்டி மிகவும் நுணுக்கமான கணக்கியல் நுட்பத்தைப் பயன்படுத்தி ஆய்வு செய்து பல ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகளைக் கொண்டு வந்துள்ளனர் இந்த ஆய்வில்.

இதைக் கட்டாயம் முடிவெடுக்கும் நிலையில் இருக்கும் மத்திய மாநில அரசின் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் பரிசீலனை செய்து பார்க்க வேண்டும். இந்த ஆய்வு அறிக்கையை ஆழமாகப் படித்து புரிந்து கொண்டு இந்தியாவுக்குத் தேவையான மாற்றங்களை கொள்கைகளில் கொண்டு வரவேண்டும்.

மத்திய மாநில அரசுகள் இதற்குத் தேவையான முன்னெடுப்புக்களைச் செய்ய வேண்டும் என அந்தக் கட்டுரையில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அந்தப் புத்தகத்தை கதை படிப்பதுபோல் படிக்க முடியாது. ஏனென்றால் அந்தப் புத்தகம் அறிக்கையாக பதிப்பிக்க கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பதிப்பகத்திற்குச் சென்ற போது, அதற்கு மதிப்பீடு செய்ய என்னைக் கேட்டுக்கொண்டதன் விளைவு, நான் அந்த அறிக்கையை படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அந்த ஆய்வறிக்கையை நான் ஆறுமாதகாலம் மிகவும் நிதானமாகப் படித்து அதற்கு மதிப்பீட்டு அறிக்கையை தயார் செய்தேன். அந்தப் புத்தகம் முழுக்க முழுக்க கணக்கியல் தேற்றங்களாகவே இருக்கும். அதைப் படித்து புரிந்து கொள்ள கணிதப் பின்புலமும் வேண்டும், அத்துடன் பொருளாதார கோட்பாட்டின் பின்புலமும் இருக்க வேண்டும்.

இந்த இரண்டும் தெரியாமல் இந்தப் புத்தகத்தின் முழுக் கருத்துச் சாரத்தையும் புரிந்து கொள்ள முடியாது. அந்தப் புத்தகத்தில் அதிகாரப்பரவலால் கிராமப்புற குடும்பங்களில் நடந்த மேம்பாடுகள், கிராமத்தில் நடந்த மேம்பாட்டுச் செயல்பாடுகள் அனைத்தையும் படம்பிடித்துக் காண்பித்து அதிகாரப் பரவலுக்கு இருக்கும் வீச்சை படம்பிடித்துக் காட்டியுள்ளனர்.

இவ்வளவு குறைவான அதிகாரத்தைக் கொண்டு, குறைவான நிதியினைக் கொண்டு மிகப்பெரும் மாறுதல்களை உருவாக்கியுள்ளதை படம்பிடித்துக் காட்டியுள்ளனர். அதே நேரத்தில் அதிகாரப் பரவலால் நிகழ்ந்த சில தவறான செயல்பாடுகளையும் கண்டுபிடித்து அவைகளை எப்படிப் போக்குவது என்பதற்கும் வழிவகை கண்டுள்ளனர்.

உள்ளாட்சியை வலுப்படுத்த பல ஆலோசனைகள் வைக்கப்பட்டிருந்தாலும் ஒரு முக்கியமான கருத்து வெளிப்படுவதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

மத்திய மாநில அரசாங்க அமைப்புக்கள் வலுவாக கட்டப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் அடித்தளத்தில் அமைக்கப்பட்ட பஞ்சாயத்து அமைப்புக்களை நாணல்போல் வைத்திருப்பதும், மக்கள் மத்தியில் செயல்படுத்தப்படும் அனைத்து மக்கள் நலத் திட்டங்களை முறையாக நிபுணத்துவத்துடன் ஆற்றல் மிக்கவர்களை வைத்து நடைமுறைப்படுத்த இயலாத நிலையையும் எடுத்துக் காட்டியுள்ளது.

நிபுணத்துவமில்லா ஊரக மேம்பாட்டுச் செயல்பாடுகளால்தான் திட்டங்களில் எதிர்பார்க்கப்பட்ட விளைவுகள் நம் கிராமங்களுக்குக் கிடைக்கவில்லை என்பதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அடித்தட்டில் மக்களுக்கு நலன் சார்ந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தும் இடத்தில் தான் அதிக நிபுணத்துவம் தேவைப்படுகிறது. ஆனால் அடித்தட்டு செயல்பாடுகளுக்கு நிபுணத்துவம் தேவை என்பதை உணராத நிலையில்தான் நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த நிபுணத்துவமற்ற செயல்பாடுதான் இவ்வளவு பணத்தை வாரி இரைத்தும், மக்கள் நலம் பெருமளவில் பேணமுடிவதில்லை.

அத்துடன் பெருமளவு நிதி விரயமும் நடைபெற்றுக் கொண்டுள்ளது. இதைச் சீர் செய்ய வந்ததுதான் புதிய உள்ளாட்சி அரசாங்கம். இந்த அரசாங்கத்தில் இந்தியாவில் 2.5 லட்சம் நிறுவனங்கள் ஆளுகைக்காக உருவாக்கப்பட்டுள்ளன. இதில் 32 லட்சம் மக்கள் பிரதிநிதிகள் அமர்ந்துள்ளனர். அதில் 14 லட்சம் பேர் பெண்கள். இந்திய உள்ளாட்சியில் இருப்போரின் எண்ணிக்கை என்பது உலக நாடுகள் அனைத்திலும் உள்ளாட்சிகளில் இருக்கும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையைவிட அதிகமானது.

இன்று இந்தியாவில் 20 மாநிலங்களில் 50% பெண்களை பதவிகளுக்குக் கொண்டுவர சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளன. மூன்று லட்சம் கோடி ரூபாய் இந்த உள்ளாட்சிகள் மூலம் மக்கள் மேம்பாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஒதுக்கப்படுகிறது. அதேபோல் மத்திய நிதி ஆணையம் உள்ளாட்சியை வலுப்படுத்த தொடர்ந்து 4% அளவிற்கு நிதியை உயர்த்தி, வழங்கிக் கொண்டே இருக்கின்றது.

இதன் விளைவுகள் என்னென்ன என்று இந்த ஆய்வு வினவி விடைகண்டது. 1999லிருந்து 2007 வரை குடும்பங்களில் என்னென்ன முன்னேற்றங்கள் கிராமங்களில் என்னென்ன முன்னேற்றங்கள் கிடைத்தன என்று ஆய்வு செய்தபோது, மக்கள் தொகை வளர்ச்சி குறைய ஆரம்பிக்கிறது, குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை குறைகிறது, குடும்பத்தில் சாகுபடி செய்யும் நிலம் குறைய ஆரம்பிக்கிறது, தனிமனித வருமானம் கூடுகிறது, விவசாயம் அல்லாத தொழில்களில் வேலை கிடைத்து வருமானம் கூடுகின்றது, கிராமங்கள் அதிக வசதிகளைப் பெறுகின்றன, கூடுதல் எண்ணிக்கையில் கிராம வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன, கூலி உயர்கிறது, பெண்களின் கூலியும் எப்போதும் இல்லாத அளவுக்கு கூடுகின்றது, விவசாய நிலங்களின் விலை உச்சத்தைத் தொடுகின்றது, கிராம சபை கூட்டப்படுகிறது தொடர்ந்து, மக்கள் பங்கேற்பு அதிகரிக்கின்றது, பெண்கள் பிரச்சினை விவாதிக்கப்படுகின்றன, தலித்துக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள், பெண் பஞ்சாயத்துத் தலைவர்கள் நடத்தும் பஞ்சாயத்துக்களில் லஞ்சம் குறைகிறது, பஞ்சாயத்துக்கள் வறுமைக்குள் விழும் குடும்பங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கின்றன, குடும்பங்களின் பொருளாதார மேம்பாடு குடும்ப உறுப்பினர்களின் சுதந்திரமான செயல்பாட்டிற்கு வழிவகை செய்கிறது, பெண் பஞ்சாயத்துத் தலைவர்கள் விதிகளைப் பின்பற்றி நிர்வாகம் செய்வதில் ஆண் தலைவர்களை விஞ்சியவர்களாக இருக்கின்றார்கள், குறைந்த நிதியில் நிறைந்த பணிகளை பஞ்சாயத்துக்கள் செய்து தரமான சேவைகளை வழங்குவது போன்ற எண்ணற்ற செயல்பாடுகள் செய்கின்றன.

இந்தச் செயல்பாடுகளை நிபுணத்துவத்துடன் செய்து விளைவுகளை உருவாக்க 324 செயல்பாடுகளை மாநில அரசுகள் உள்ளாட்சிச் செயல்பாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. 2015லிருந்து 2020 வரை நான்கு லட்சம் கோடி இந்த நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் சராசரியாக 40,000 கோடி ரூபாய் ஆண்டுக்கு செலவிடப்பட்டுள்ளது. அடிப்படையில் இந்தப் புதிய உள்ளாட்சி அரசாங்கம் செய்ய வேண்டிய பணியான பொருளாதார மேம்பாட்டுக்கு செயல்படவில்லை என்பதை சுட்டிக் காட்டும் அறிக்கை மற்றொரு முக்கியமான கருத்தையும் தெரிவித்துள்ளது.

அதாவது பொருளாதாரச் செயல்பாடுகளுக்குத் தேவையான களச் செயல்பாட்டாளர்களிடம் எந்த நிபுணத்துவமுமின்றி செயல்படுவதுதான் எதிர்பார்த்த விளைவைக் கொண்டுவரவில்லை என்பதை படம் பிடித்துக் காண்பித்துள்ளது இந்த அறிக்கை. இந்தப் புதிய உள்ளாட்சிச் செயல்பாடுகளில் அடிப்படையானது பொருளாதாரச் செயல்பாடு. அந்தச் செயல்பாடு என்பதும் திட்டமிட்டதாக அதுவும் மக்கள் பங்கேற்போடு நடைபெற வேண்டும் என்று பணிக்கப்பட்டுள்ளது.

ஏனென்றால் இந்திய மக்கள் தொகையில், விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள், கைவினைஞர்கள், சிறு தொழில் நடத்துவோர், நாடோடிகள், மீனவர்கள், ஆதிவாசிகள் ஆகியவர்களின் கூட்டு என்பது இந்திய மக்கள் தொகையில் 68% உள்ளது. எனவே இவர்களுடைய வாழ்க்கையில் மாற்றம் கொண்டுவருவதற்கு அடித்தட்டு மேம்பாட்டுச் செயல்பாடுகள் அனைத்தும் நிபுணத்துவம் மிக்கதாக மாற்றப்படாமல் கிராம மேம்பாடு நடைபெற இயலாது என்பதைப் படம் பிடித்துக் காண்பிக்கிறது.

இந்தச் சூழலை மாற்ற வேண்டுமென்றால் பஞ்சாயத்துத் தலைவர்கள் கிராம மேம்பாட்டுத் திட்டத்தை உருவாக்க வேண்டும். அதற்குத் தேவையான புரிதலை தலைவர்களுக்கு உருவாக்க வேண்டும். அத்துடன் பொருளாதார மேம்பாட்டுக்கு பணியாற்ற வேண்டும் மக்கள் பங்கேற்புடன் என்பதை தெள்ளத் தெளிவாக்கியது இந்த அறிக்கை. இந்தப் புரிதல் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு உருவாக்கப்படவில்லை.

இந்தப் புரிதல் ஏற்பட்டிருந்தால் பஞ்சாயத்துத் தலைவர்கள் ஊரக வளர்ச்சிக்காக பணி செய்யும் 37 துறைகளையும் தாங்கள் உருவாக்கிய மக்கள் திட்டத்தில் பணி செய்ய வைத்திருப்பார்கள். இதற்கு பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு ஒரு புரிதல் வேண்டும்.

பொருளாதார மேம்பாடு என்பதை கிராமங்களில் எப்படிச் செய்ய வேண்டும் என்பதற்கான சிந்தனைத் தெளிவை தலைவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அதை ஏற்படுத்தாததின் விளைவுதான் தெருவிளக்கு பராமரிப்பது, பாலங்கள் கட்டுவது, தண்ணீர் தருவது, சாலைகள் அமைப்பது போன்ற கட்டுமானப் பணிகளுடன் நின்றுவிடுகின்றனர்.

கிராமங்களில் செய்ய வேண்டிய பணிகளில் மிக முக்கியமான பணி கிராமங்களின் பொருளாதார மேம்பாடு. இந்தப் பணி நடைபெற வேண்டுமானால் நம் தலைவர்கள் மிக ஆழமான சிந்தனைக்கும், புரிதலுக்கும் செல்ல வேண்டும்.

கிராமங்களில் இதற்குத் தேவையான பொதுச் சொத்துக்கள் தரமானதாக உருவாக்கப்பட வேண்டும். அது பள்ளிக்கூடமாக இருக்கலாம், சத்துணவுக்கூடமாக இருக்கலாம், துணை சுகாதார மையமாக இருக்கலாம், சாலைகளாக இருக்கலாம், எதுவாக இருந்தாலும் அவைகள் அனைத்தும் தரமானதாக உருவாக்கப்பட வேண்டும்.

அதேபோல் அந்தப் பொதுச் சொத்துக்கள் முறையாக பராமரிக்கப்படல் வேண்டும். 100 நாள் வேலை நடைபெறுகின்றது என்றால் அங்கு வழங்கப்படும் வேலைகளில் உருவாக்கப்படும் சொத்துக்கள் என்பது தரமானதாக, கிராமத்திற்கு பயன்படும் அளவுக்கு உருவாக்கப்படல் வேண்டும். பெரும்பாலான பொதுச் சொத்துக்கள் என்பது தரமற்றவையாகவே உருவாக்கி விடுகின்றோம்.

அதன் விளைவுதான் நம் கிராமங்களில் பொருளாதார மேம்பாட்டை உருவாக்க முடியவில்லை. சிற்றூராட்சித் தலைவர்களின் திறன் கூட்டும்போது அவர்களுக்கு மிக முக்கியமாக தலைமைத்துவம் பயிற்சியும் அத்துடன் கிராம பொருளாதார மேம்பாட்டுக்கான பயிற்சியும் கொடுத்து அவர்கள் ஆற்றல் மிக்க தலைவர்களாக உருவாக்க வேண்டும்.

அது இந்திய நாட்டில் நடைபெறவில்லை என்பதுதான் பெரும் குறை என்பதை இந்த அறிக்கை எடுத்துக் காட்டுகின்றது. எனவே கிராமங்களில் நடைபெறும் அத்தனைப் பணிகளும் நிபுணத்துடன் முறையாக, அறிவியல் பூர்வமாக, நுட்பமாக நடைமுறைப்படுத்த, தேவையான தலைமையையும் களப் பணியாளர்களையும் உருவாக்குவதுதான் இன்றைய தேவையாக இருக்கின்றது.

- க.பழனித்துரை

Pin It