உலகம் செழிக்க அடிப்படையாய் விளங்குவது நீராகும். மனிதர்கள் உணவு உண்ணாமல் கூட சில நாட்கள் இருந்திட இயலும். நீரினைப் பருகாமல் இருப்பது என்பது எளிதான செயல் கிடையாது. உலகத்தில் உயிர்கள் வாழவும் மிக மிக அவசியம் தண்ணீரின் தேவையாகும். ஆறு, ஏரி, வாய்க்கால், குளம், கிணறு போன்ற நீர் நிலைகளில் கைகளிலேயே நீரினை அள்ளிக்குடிக்கும் பழக்கம் போய் இன்று பாட்டில்களில் அடைத்து வைத்து விலைக்கு வாங்கிக் குடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆய்வுச் சுருக்கம்:

நம் முன்னோர்களால் மிகவும் போற்றிப் பாதுகாக்கப் பெற்று பயன்படுத்தப்பட்டு வந்த நீரை நாம் வீணாக்கியதால் இன்று நீரினை எப்படியெல்லாம் மேம்படுத்தலாம் என்ற நிலை இன்று உருவாகியுள்ளது. இதனை வள்ளுவர்.

"விசும்பின் துளிவீழின் அல்லால்மற்று ஆங்கே

பசும்புல் தலைகாண்ப தரிது"1

வான்பொழியும் நீரே உயிர்ப்பு என்பதற்கு அடிப்படையாய் அமைகின்றது. அப்படிப்பட்ட நீராதாரத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதே ஆய்வுச் சுருக்கமாக அமைந்துள்ளது.

உள்ளடக்கம்:

மழைநீரினை சேமித்து வைப்பதற்கு ஏற்ற நீர் நிலைகளை அமைக்கவேண்டும்.மழைநீரைச் சேமித்து சேமித்த நீரை திறம்படப் பயன்படுத்துவது என்பதையும் அறிந்திருக்க வேண்டும். இந்த மழை நீரினை ஏரிகள், குளங்களில் சேமித்து அவற்றை தக்க முறையில் பயன்படுத்தியும் நாட்டினை வளம்பெறச் செய்ய வேண்டும்.tamilnadu farming 502பதினெண் கீழ்க்கணக்கு இலக்கியங்களில் நீர் மேலாண்மை

இனியவை நாற்பது:

குளம்:

 "காவோடு அறக்குளம் தொட்டல் மிகஇனிதே"2

என்ற பாடல்வரிகள் குளம் வெட்டுவித்தல் என்பது மிகப்பெரும் அறச்செயல் என்று போற்றப்பெறுகின்றது. மழைப் பொழிவினைத் தேக்கி வைத்துப் பயன்படுத்த ஏரிகள், குளங்கள் வெட்டுவிக்க வேண்டும் என்று இப்பாடலின் வரிகள் மூலம் இனியவை நாற்பது எடுத்துரைக்கின்றது.

நீர் வரும் வரத்துக்கால் நன்கு அமையாதகுளம் இருப்பின் அதனால் பயன் குறையும் என்ற செய்தியினை,

"வாய்நன் கமையாக் குளனும் வயிறாரத்

தாய்முலை யுண்ணாக் குழவியும் சேய்மரபில்

கல்விமாண் பில்லாத மாந்தரும் இம்மூவர்

நல்குரவு சேரப்பட்டார்3"

தாய்ப்பால் அருந்தாத குழந்தையும், கல்வி கற்க முடியாத நிலையில் உள்ளவர்களும் எப்படி உயர்வடைய முடியாதோ அதேபோல் வாய் நன்கு அமையாத குளமும் இருக்கும் என்பதை திரிகடுகம் என்ற நூலின் வழி எடுத்துக்காட்டப்பட்டுள்ளது,மேலும் சிறுபஞ்ச மூலம் என்ற நீதி நூலில் குளம் அமைக்கும் முறை பற்றியும், அதில் பொதுக்கிணறு அமைத்தல், வரத்துக்கால், மதகுகள், மிகைநீர் வெளியேறும் கலிங்கு, தூம்பு போன்றவைகளையும் எப்படி அமைக்க வேண்டும் என்ற செய்தியினை எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

 "காவோடு அறக்குளம் தொட்டானும் நாவினால்4"

சோலையை உண்டாக்குவதோடு, அறத்திற்குரிய குளத்தைத் தோண்டுவித்தவனும் உண்டு. குளம் வெட்டி நீரைச் சேமித்துப் பாதுகாப்பது மிகப்பெரிய அறச்செயலாக இங்கு உணர்த்தப்படுகிறது.

சோலைகளை அமைப்பதற்கு அடிப்படைத் தேவையே நீர். அத்தகைய நீரினை சேமிப்பதற்கு குளங்களையும்,கிணறுகளையும்,ஆற்றினையும்,ஏரிகளையும்,மேம்படுத்துவது அறச்செயளாக திரிகடுகம் உணர்த்துகின்றது.

ஏரி:

மிகுதியாக வரும் ஆற்று வெள்ளநீரை தம்முள் அடக்கிக் கொள்ளக்கூடிய பெரும் ஏரிகள் இருப்பதைத் தரும் என்பதை,

"யாறுள் அடங்குங்குளமுள வீறுசால்5"

இப்பாடலில் குறிப்பிடப்பெறும் ஆறு உள் அடங்கும் குளம் என்ற சொற்றொடர் நீர் மேலாண்மைத் திறத்தின் ஒரு முக்கிய வெளிப்பாடாகும்.பெருவெள்ளம் ஏற்படும் காலங்களில் அந்நீரினை உரிய முறையில் சேமித்து நீர் இல்லாத காலங்களில் பயன்படுத்தக் கூடிய நிகழ்வை இப்பாடல் வரிகள் எடுத்துக்காட்டுகின்றது. ஆற்றின் மிகுதியான நீரை உள்வாங்கிக் கொள்ளக்கூடிய பேரேரிகள் உரிய ஆழ அகலத்துடன் இருக்கவேண்டும். அப்படி இருந்தால்தான் வெள்ளக்காலங்களில் வரும் அதிகப்படியான நீர் வீணாகக் கடலில் கலக்காமல் முழுவதையும் சேமித்துப் பயன் பெறமுடியும்.

கிணறு:

மக்களுக்கு குடிநீர் தரவல்ல கிணறுகளை குறைவில்லாமல் செய்வது முதன்மையான அறச்செயலாகும். இதனை,

"கூவல் குறைவின்றித் தொட்டனும்"6

என்று திரிகடுகம் நூல் கூறுகின்றது.ஆழமான கிணற்றுநீர் தூய நீராக இருக்கும் என்பதையும்,கோடைகாலங்களில் குளிர்ச்சியாகவும்,குளிர்காலங்களில் வெது வெதுப்பாகவும் திகழும் தன்மை கிணற்று நீருக்கு மட்டுமே உள்ளது என்பதை திரிகடுகத்தின் வழியாக அறிய முடிகிறது.

கிணறு:

"குளந்தொட்டுக் கோடுப்பதித்து வழிசீத்து உளந்தொட்டு

உழுவயலாக்கி வளந்தொட்டுப் பாடுபடும் கிணற்

றோடென்றிவ்வைம் பாற்படுத்தான் ஏகுஞ்சுவர்க்கத் திளிது7

என்ற பாடல்வரிகளில் ஏரிகளில் அமைக்கப்பட வேண்டிய முறையை சிறுபஞ்சமூலம் என்ற நூலின் வழி எடுத்துரைக்கப்படுகிறது

1.            குளம், 2.கலிங்கு, 3.வரத்துக்கால், மதகுகள், மிகைநீர் போகும் கால்கள் ஆகிய வழிகளை அமைத்தல் வேண்டும். 4. பொதுக்கிணறு அமைத்தல் வேண்டும்.

ஏரிகளில் நீர் குறைவாக இருக்கும் போது ஏரி மதகுகள் மூலம் தண்ணீர் பாய்ச்சுவது அதிக நீர் வீணாகும் வழியாகும். அந்த நேரங்களில் மதகுகள் மூலம் நீர்பாய்ச்சுவதை விட நிலத்தடி நீரைப் பயன்படுத்துவது சிறந்த நீர் மேலாண்மை ஆகும்.

சுனை:

கடினமான பாறைப்பகுதிகளில் கூட கிணறுகள் வெட்டி மழை நீரைச் சேமித்துப் பயன்படுத்திய திறம் வெளிப்படுகின்றது. இன்றும் கூட மலைமீதமைந்த கோயில்களை ஒட்டிச் சுனை அமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

கடல்:

"கடனீர் முகந்த கமன்ஞ்சூ லெழிலி

குடமலை யாகத்துக் கொள்ளம் பிறைக்கும்.8"

"கருங்கடல் மேய்ந்த கமஞ்சூ லெழிலி

இருங்க லிறுவரை யேறி யுயிர்க்கும்9"

காற்றினால் மோதப்பட்ட மேகம் மின்னலையும், இருளையும், மாறி மாறிப் பரப்பித் தன் இனத்துடன் போய்ச் சைய மலையை அடைந்து அதனைச் சூழ்ந்து, இடைவிடாமல் மழைப் பொழியச் செய்கின்றது.

"நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி

தான் நல்காதாகி விடின் "10

மேகமானது கடலிலிருந்து நீரை மொண்டு வந்து அக்கடலிலேயே மழையாகப் பெய்யாவிடில் பெரியகடலும் தன் வளம்குறைந்து போகும்.

கடல்நீரே மழையை பெய்துவிக்க பெரிதும் ஆதாரமாக உள்ளது. மழைநீரால் தான் நாடுவளம் பெறும்; அத்தகைய மழைநீரை சேமித்து வைக்கத்தான் நாம் குளம், கிணறு, ஆறு, ஏரிகள் ஆகியவற்றை அமைத்துப் பயன்படுத்துகின்றோம்.

ஏலாதி:

"உண்ணீர்வளம்"11

குளம், கிணறு, வாய்க்கால் வெட்டுதல், ஊற்றுக்குழி தோண்டுதல் முதலியவற்றால் அதனை ஆங்காங்கு வளம்படுத்தித் தருபவற்றை ‘உண்ணீர் வளம்' என்று ஏலாதி நூலின் பாடல் வரி எடுத்துரைக்கின்றது.

தண்ணீரின் பயன்பாட்டையும் தண்ணீர் இல்லாக் காலங்களில் ஊற்றுநீர் பயன்படுத்தும் முறையும் எடுத்துரைக்கின்றது.

கடல்நீர்:

"மாவலந்த நோக்கினா யூணீய்ந்தார் மாக்கடல்சூழ்

நாவலந்தீ வாள் வாரே நன்கு.12"

நம் இந்திய நாடு மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட பகுதி அதனால் நாவலந்தீவு என்று அழைக்கப்படுகின்றது. இக்கடல் நீரையே மேகம் முகண்டு சென்று காற்றுடன் மழையை பெய்வித்தால்தான் நாடு செழிப்படையும்.நீர் கிடைப்பதற்கு ஒரே ஆதாரம் மழைநீரே! அத்தகை மழையை பொழியச் செய்ய வழியாக உள்ளது கடை நீரே.

கிணறு:

 "உணற்(கு) இனிய இன்னீர் பிறி(து) உழி இல் என்னும்

"கிணற்(று) அகத்துத் தேரைபோல் ஆகார்.13"

குடிப்பதற்கு உவர்ப்பு இல்லாத நல்லநீர் என்று கிணற்று நீரை சங்க நூலாகிய பழமொழி நானூறும் சுட்டுகின்றது.

"எற்றொன்றும் இல்லா இடத்துங் குடிப்பிறந்தார்

அற்றுத்தற் சேர்ந்தார்க் கசைவிடத் தூற்றாவர்

அற்றக் கடைத்தும் அகல்யா றகழ்ந்தக்கால்

தெற்றெனத் தெண்ணீர் படும்".

ஆற்றுநீர்:

ஆற்றுநீர் வற்றிய காலங்களில் அகன்ற ஆற்றில் சிறிது குழி தோண்டினால் தூய தெளிந்த குடிநீர் கிடைக்கும். ஆற்றில் நீர் இல்லாத காலத்திலும் ஊற்றுநீர் பயன்படுத்திய செய்தியை நாலடியார் பாடல்வரி விளக்குகின்றது.

"உறுபுனல் தந்துல கூட்டி அறுமிடத்தும்

கல்லூற் றுழியூறும் ஆறேபோல்"14

நீர் வரத்து அதிகம் உள்ள காலத்திலும் உலக உயிர்களை காத்தும், உண்பதற்கு நீராகவும் பயன்பட்டு நீர் வற்றிய காலங்களிலும் மணற் பரப்பில் ஊற்று தோண்டி ஊற்று நீர் அளிக்கும் ஆற்றின் சிறப்புப் பற்றி சொல்லப்பட்டிருக்கின்றது.

கிணறு:

"உறைப்பருங் காலத்தும் ஊற்றுநீர்க்கேணி

இறைத்துணினும் ஊராற்றும் என்பர்”15

மழைத்துளித்தலில்லாத காலத்திலும் ஊற்று நீரையுடைய சிறிய நீர்நிலையை உண்பதற்கு நீராகவும் வயல் வெளிகளை வளம்பெறச் செய்ய இறைத்து உண்ணுவதற்கும் ஊரில் உள்ள அனைவர்க்கும் உதவுவதாக உள்ளது.

நீர் மேலாண்மையில் ஆறு, குளம், இவற்றை விட கேணி முதன்மையாக இடம் பெறுகின்றன என்பதை எடுத்துக்காட்டுகின்றது.

"கேளாற்றக் கொள்ளாக் குளத்தின் கீழ்ப் பைங்கூழ்போற்"16

அதிக மழை நீரைக் கொள்ளாத குளத்திலிருந்து வழிந்து ஓடும் நீர் ஏரியின் கண் அடைகின்றது. ஏரியில் வழிந்து ஓடும் நீர் கீழுள்ள பயிர்களை வளம் பெறச்செய்கின்றது. ஏரியின் சிறப்பு இங்குச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஊற்றுநீர்:

 நீர்வரத்து இல்லாத கோடைகாலங்களில் ஆற்று மணலில் குழி தோண்டி அதிலிருந்து ஊறுகின்ற ஊற்று நீரினை உண்ணும் வழக்கம் நெடுங்காலமாக நம் மண்ணில் பயன்பட்டு வந்திருப்பது தெரியவருகிறது.

முடிவுரை:

1.            குளம்,கேணி,ஆறு ஆகிய நீர்நிலைகளை பராமரிப்பதின் முக்கியத்துவத்தையும்,

2.            ஆற்றுநீர் வற்றிய காலங்களில் ஊற்றுநீர் தோண்டி பயன்படுத்தியதும் இன்று ஆறுகளில் மணலே இல்லாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

அடிக்குறிப்பு:

1.            திருக்குறள்                 கு.எண், 16

2.            இனியவை நாற்பது,            பா.எண், 84

3.            திரிகடுகம்                  பா.எண், 84

4             .மேலது                           பா.எண், 70

5.            நான்மணிக்கடிகை,            பா.எண், 54

6.            திரிகடுகம்                  பா.எண், 6

7.            சிறுபஞ்சமூலம்       பா.எண், 65

8.            கார்நாற்பது                              பா.எண், 33

9.            மேலது                            பா.எண், 37

10.         திருக்குறள்                 கு.எண், 17

11.         ஏலாதி                                            பா.எண், 51

12.         மேலது                            பா.எண், 56

13.         பழமொழி நானூறு               பா.எண், 6

14.         நாலடியார்                  பா.எண், 150

15.         மேலது                            பா.எண், 185

16.         மேலது                            பா.எண், 191.

- ஜெ.அமுதராணி, முனைவர்பட்ட ஆய்வாளர் தமிழாய்வுத்துறை, மா.மன்னர் கல்லூரி (த), புதுக்கோட்டை.

Pin It