jeeva 376

மும்மொழிக் கொள்கை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை. இதை 1957இல் திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு மற்றும் சிறப்புக் கூட்டங்களில் ஜீவா பேசிய பேச்சுக்கள் விளக்குகின்றன.

“கோவை கலைக் கல்லூரியில் போதனா மொழியாக்குவதைப் பரீட்சைக்கு வைத்துள்ளனர். இதன் வெற்றி தோல்விகளைக் கண்ட மற்ற கல்லூரிகளிலும் பரப்பலாம் என்று சர்க்கார் அறிவித்துள்ளது. இதுவே ஒரு பலவீனத்தைத்தான் காட்டுகிறது. தமிழைப் போதனா மொழியாக்குவதைப் பரீட்சை பண்ண வேண்டிய காலம் மலையேறி விட்டது.

ராஜாஜி, லட்சுமணசாமி முதலியார், சர்.சி.பி. ராமசாமி அய்யர் முதலிய பெருமக்களிடமிருந்தே எதிர்ப்பு வந்துள்ளது. தமிழுக்குத் தகுதியில்லை என்று அவர்கள் பச்சையாகச் சொல்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல.

தங்கு தடையின்றி வளர்ச்சி பெறும் வண்ணம் தமிழை இருக்க வேண்டிய இடமெல்லாம் இருக்கச் செய்தால் வட்டார மொழிக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கமும் காலந்தாழ்த்தாது நடைமுறையில் போக்க முன் வந்தால் தமிழனின் மனப்பூர்வமான ஒப்புதலோடு இந்தியை அகில இந்திய இணைப்பு மொழியாக்க முடியும் என்பது எம் போன்றோர் கருத்து.

சென்ற சில ஆண்டுகளில் 150க்கு மேல் புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடித்துள்ளோம் என்று சோவியத்து நாட்டார் இன்று நியாயமாகவே பெருமையடித்துக் கொள்கிறார்கள். இந்தப் பெருமைக்குக் காரணம் என்ன - கார்க்கி அன்று கூறியதுபோல் பாமரத் தன்மையில் மூழ்கிக் கிடந்த கோடானுகோடி பொது மக்களின் சிருஷ்டித்திறன் கட்டவிழ்த்து விடப்பட்டதே காரணம் என்பதை நாம் உணர வேண்டும். இதற்கு முக்கிய காரணம் நவீன உலகியல் அறிவு முழுவதும் மிகக் குறுகிய காலத்தில் வெகுவிரைவாகப் பொது மக்களுக்குக் கிடைக்கச் செய்ததே! தாய்மொழியால் மாத்திரமே பாமர ஜனசமுத்திரத்தைக் கப்பிக் கிடக்கும் அறியாமைக் காரிருளைக் கிழித்தெறிந்து, அறிவியல் ஒளிவீசச் செய்ய முடியும் என்பதில் யாருக்கும் இரண்டு கருத்துக்கள் இருக்க முடியாது.

நம்மைப் பொறுத்தமட்டில் தமிழ் இருக்க வேண்டிய இடங்களில் தமிழை இருக்கவிடாமல் செய்து இன்று அதீதமாக இருந்து கொண்டிருக்கும் மொழி எது? சட்டசபையிலும் சர்க்கார் காரியாலயங்களிலும், கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும், விஞ்ஞானத் தொழில் நுட்பக் கல்விகளிலும் நீதிமன்றங்களிலும் இன்னபிற இடங்களிலெல்லாம் ஆதிக்கம் வகிப்பது இன்றும் ஆங்கிலமே. சுதந்திரம் கிடைத்து பத்து ஆண்டுகளுக்குப் பின்னாலும் இன்னும் ஆங்கிலமே இருக்கிறது என்பதை நாம் மறந்து விடக்கூடதாது...

பல்கலைக்கழகச் சுயாட்சிக்குப் பயந்து கல்லூரிகளிலும் தமிழை அரியணை ஏற்றத் தயங்கித் தயங்கி நின்ற ஆளவந்தார்களும் கல்லூரிகளில் இனி தமிழைப் போதனா மொழியாக ஆக்குவோம் என்று தீர்மானித்து விட்டார்கள். சர்வஜன சம்மதமாக வரவேற்கத் தகுந்த இந்த நற்செய்தியும் நம் ‘நல்லறிவாளர்கள்’ அறியாததல்ல. இவ்வளவுக்கும் பின் இந்த ‘நல்லறிவாளர்கள்’ ஆங்கிலம்தான் விஞ்ஞான மொழியாக இருக்க முடியும் என்று கூறினால் இது எதைக் காட்டுகிறது. சுடச்சுட கண்டுபிடிக்கப்படும் புத்தம் புது விஞ்ஞான உண்மைகளைச் சுடச்சுடத் தெரிந்து கொள்ளும் பொருட்டு விஞ்ஞானத் துறை ஆராய்ச்சி மாணவர்கள் அண்ணாமலை, சென்னைப் பல்கலைக்கழகங்களிலும் சரி, ஆங்கிலம் போதாதென்று ஜெர்மன் மொழியைக் கூடுதலாகக் கற்றுக் கொள்கிறார்களென்று நமது நல்லறிவாளர்களுக்குத் தெரியாதா என்ன?

ராஜாஜியாலும், அண்ணாதுரையாலும், நெடுஞ்செழியனாலும், ராமசாமி, லட்சுமணசாமி முதலியார்களாலும், அவர்கள் காலத்தில் கல்லூரியில் தமிழை விஞ்ஞான மொழியாக்க முடியாதென்றால் யார் அந்தப் பெரும்பணியைச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள்? அவர்களுக்குப் பின் வரும், தலைமுறையிலும், தோன்றும் சுரணை கொண்ட தமிழர்கள் செய்ய வேண்டுமென்பதுதானா அவர்களின் கருத்து?

ஆகவே மூன்று கோடித் தமிழ் மக்களும் எத்தகைய பேதமும் பாராட்டாது கல்லூரிகளில் விஞ்ஞானத் துறையில், தொழில் நுட்பத் துறையில் தமிழ்நாட்டில் தமிழ் மக்களின் சகல துறைகளிலும் தமிழே ஆட்சி செலுத்தத் தகுந்த சிறந்த சூழ்நிலையை ஒன்றுபட்டு உருவாக்குவதே அவசர அவசியக் கடமையாகும். இதுதான் கம்யூனிஸ்ட் கட்சியின் பணிவான வேண்டுகோள்.

இந்தியின் தேவை

மத்திய சர்க்கார் நிருவாக மொழியாகவும், மத்திய ராஜ்ய சர்க்கார் இணைப்பு மொழியாகவும், இந்திய மக்கள் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ளும் ஒற்றுமைக்குத் துணை மொழியாகவும் இருக்க வேண்டிய அளவே, இந்தி மொழிக்குப் பொதுத் தேவை இருக்கும்.

ஆங்கிலத்தின் இருப்பிடம்

நவீன உலகியல் கருத்துக்களைத் தெரிந்து கொள்வதற்கு உலக விவகாரங்களுக்கு உதவிகரமாக இருப்பதற்குத் தேவைப்படுகிறவர்கள் பிரெஞ்சு, ரஷ்ய, ஜெர்மன், சீன மொழிகளைப் போன்று ஆங்கிலமும் கற்றால் போதுமென்ற நிலைமை ஏற்படும். அந்தச் சூழ்நிலை ஏற்படுகிற வரையில் ஆங்கிலம் நீடிக்க வேண்டும் என்பதைக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சேபிக்கவில்லை.

இந்தி நிருவாக மொழி

இந்திய மொழிகளில் ஒரு மொழிதான் இந்திய அரசாங்கத்தின் நிர்வாக மொழியாக இருக்க முடியும். இருக்க வேண்டும். இச்சொற்பொழிவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை.

ஜீவா அவர்கள் குறிப்பிட்டுப் பேசிய மேற்கண்ட திட்டங்களே (1985) 60ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் விளக்கம் வருமாறு:

“எல்லா மாநிலங்களும் ஒத்துக் கொள்கின்ற வரை இந்தியுடன் ஆங்கிலமும் ஒரு தொடர்பு மொழியாக இருக்கும்.

பள்ளிகளிலிருந்து பல்கலைக்கழகம் வரை ஆட்சிமொழிச் சட்டம் ஆங்கிலப் பயிற்று மொழியிலிருந்து வட்டார மொழிக்கு மாறும். இத்துடன் சிறுபான்மை இனத்தவரின் மொழி இதிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்படும்.

இந்தியைப் பேசாத எல்லா மாநிலங்களிலும் இந்தி பாடமாகவும், இந்தி பேசும் மாநிலங்களில் 8வது சரத்தில் காணப்படும் ஒரு மொழியைக் கற்க வேண்டும் என்பதே மும்மொழிக் கொள்கை."

இந்த உரையின் வாயிலாக பொதுவுடைமைக் கட்சியின் பயிற்றுமொழி நிலைப்பாட்டை அறிய முடிகிறது.

இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டு அரசியல் சூழல் எவ்வாறிருந்தது?

தமிழ் வழிக்கான பாடத்திட்டம் தேவை மாநாட்டுத் தீர்மானம்

இதன் பிறகு 1950 மே மாதம் கோவை நகரில் பைந்தமிழ் மாநாடு நடைபெற்றதில் தமிழ¢நாட்டில் தமிழ்மொழி கட்டாயப் பாடமாக அமைந்திருப்பது அவசியமாகையால் அதை அனுசரித்து பாடத் திட்டத்தை அமைக்க வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்திய தீர்மானத்தை தி.சு.அவினாசிலிங்கமும், கி.வா.ஜகந்நாதனும் முன் மொழிந்தனர் என்பதையும் இங்கு நினைவு கூர வேண்டியுள்ளது.

1950இல் மாதவராவைக் கல்வியமைச்சராகக் கொண்டபோது பிறப்பிக்கப்பட்ட ஆணையிலும் 6ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை இரண்டாவது மொழி ஆங்கிலம் கட்டாயம். மூன்றாம் மொழி இந்தி கட்டாயம். முதல் மொழியாக இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்று அது தமிழாக இருக்கலாம். இல்லாமலும் போகலாம் என்று கூறுகிறது. ஆக இதிலும் தமிழ் கட்டாயம் என்கிற நிலை உருவாகவில்லை. எவ்வாறு என்றால் தமிழ். இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், உருது, குஜராத்தி ஏதேனும் ஒன்றினைப் பயிற்சி மொழியாகக் கொள்ளலாம் என்று இவ்வறிக்கை கூறியது. ஆக இவ்வறிக்கை தமிழின்றி உயர்நிலைப் பள்ளி படிக்க வழி வகுத்தது. ஆனால் காமராசர் முதலமைச்சர் பதவி ஏற்றதும் தமிழுக்கு ஏற்றம் கொடுத்தார்.

5ஆம் வகுப்பிலிருந்து ஆங்கிலம்

காமராசரின் கல்வி அமைச்சரான சி.சுப்ரமணியம் ஆங்கிலத்தை 5ஆம் வகுப்பிலிருந்து மொழிப் பயிற்சிக்கான ஆணையைப் பிறப்பித்தார். மேலும் எல்லாப் பள்ளிகளிலும் இந்தியைப் புகு த்தினார்.

இந்தித் திணிப்பு குறித்து ஆளுநர் உரையின்மீது (2.8.55) பி.அரங்கசாமி ரெட்டியார் பேசியதாவது: “சமீபத்தில் 2 வார காலமாகத் தென்னாட்டில் ஒரு புரட்சிகரமான செய்தி வந்தது. இந்தி மொழியை எதிர்ப்பதன் அறிகுறியாக 1.8.1955இல் தேசியக் கொடியை எரிப்பது எனத் திராவிடக் கழகத்தார் முடிவு செய்து ஒரு பெரிய கிளர்ச்சியைச் செய்துவந்தார்கள். 10, 15 நாட்கள் கிளர்ச்சி இருந்திருக்கிறது. இது பெருமைப்படக்கூடிய விஷயம் அல்ல. தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் தமிழ்மொழி ஆட்சி மொழியாக இருக்க வேண்டுமானால், அதற்கு விரோதமான செயல்கள் இருக்கக் கூடாது. இப்பொழுது கார்டு, கவர் முதலியவைகளில் பூராவும் இந்தி மணியார்டர் பாரங்கள் பி.ஏ., படித்தவர்கள் கூட வாங்கிப் பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இருக்கின்றன... இந்தியைக் கட்டாயமாகப் போதித்து அதை ஆட்சி மொழியாக ஆக்க வேண்டுமென்ற ஏற்பாடு இல்லையென்று சொல்லுகிறார்களேயொழிய, தமிழை ஆட்சிமொழி ஆக்குவதற்கு இப்போது எந்த விதி ஏற்பாடும் செய்யப்படவில்லை.”

விவாதத்தில் பொதுவுடைமை உறுப்பினர்கள் பங்களிப்பு

இவ்வுரைக்கு அடுத்த நாள் (3.8.1955) ப.ஜீவானந்தம் பேசுகையில், “இந்த இராஜ்ஜியத்தின் ஆட்சிமொழி, இந்த இராஜ்ஜியத்தின் கல்லூரிகளில் இருக்க வேண்டிய போதனா மொழி. இதைப்பற்றி ஒரு வார்த்தைகூட கவர்னர் உரையில் குறிப்பிடாதது வருந்தத்தக்கது... கல்லூரிகளிலும் கூட ஆங்கிலம் இருந்த ஸ்தானத்தில் இந்தி போதனா மொழியாகத் திணிக்கக்கூடிய ஆபத்தும் இருக்கிறது. ஆகவேதான் உடனடியாக நமது இராஜ்ஜியக் கல்லூரிகளில் நம் நாட்டில் வழங்கும் தமிழ்மொழியைப் போதனா மொழியாக ஏற்படுத்த வேண்டும் என்று நான் குறிப்பிட விரும்புகிறேன்” என்று உரையாற்றினார்.

இங்கு நாம் நினைவில் நிறுத்த வேண்டியது 1953ஆம் ஆண்டிலே ஆந்திரமும் 1956இல் கருநாடகமும், கேரளமும் சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்தன என்பதாகும். இதன் பிறகு சில முக்கிய நிகழ்வுகள் தமிழகத்தில் நடைபெற்றன.

ஆளுநர் உரையின் மீது நடந்த விவாதத்திற்குப் பதிலளித்து நிதி அமைச்சர் சி.சுப்பிரமணியம் 1955 ஆகஸ்டு 5ஆம் நாள் பேசும்போது, “எங்களைப் பொறுத்த வரை வட்டார மொழிதான் பயிற்று மொழியாக இருக்க முடியும் என்பதைத் திட்டவட்டமாக அறிவித்துள்ளோம்” என்றார். இதன் பிறகு அதே ஆண்டு செப்டம்பர் 29ஆம் நாள் ப.ஜீவானந்தம் பேசுகையில், “பிரதேச மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். நான் தமிழன். என்னுடைய மொழியே இந்த இராஜ்யத்தில் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை.... கல்விக் கூடங்களிலும், ஆட்சி மன்றத்திலும், நியாய மன்றத்திலும் நிருவாகத்துறையிலும், பிரதேச மொழியே விளங்க வேண்டும்..."

“கல்வியைப் பொருத்த அளவில் பல படிகளிலும் தமிழ் மொழியே போதனா மொழியாக இருக்க வேண்டும்... சுயராஜ்யம் கிடைத்த பிறகு ஆரம்பப் பாடசாலைகளில் நாம் தமிழையே போதனா மொழி ஆக்கிவிட்டோம். அதற்கு அடுத்தபடியாக உயர்நிலைப் பள்ளிகளிலும் தமிழையே போதனா மொழி ஆக்கிவிட்டோம். தர்க்க ரீதியாக தொடர்ந்து தமிழையே கல்லூரிகளிலும் போதனா மொழியாக்குவதுதான் நியாயம்” என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய குமாரராஜா முத்தையா செட்டியார், “கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் ஆங்கிலமே தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்பதை ஆதரிக்கிறேன். இன்று மத்திய அரசில் ஆட்சி மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. பதினைந்து ஆண்டு முடிவில் இந்தி புகுத்தப்பட வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தி ஆட்சி மொழி ஆவதில் எனக்கு ஆட்சேபணை ஏதுமில்லை” என்றார். இதனையே பி.ஜி.கருத்திருமனும் முழுமையாக ஆதரித்தார்.

இதன்பிறகு பி.ராமமூர்த்தி, “பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்க்க வேண்டுமென்ற உணர்ச்சி மேலிட்டபோதே நம் நாட்டில் எந்தப் பிரதேசத்தை எடுத்துப் பார்த்தாலும் சரி, அந்தக் காலகட்டத்தில் மொழிப்பற்றும் கூடவே வளர்ந்து வந்திருக்கிறது... தமிழ்மொழி வளர்ச்சி அடைந்தபிறகு, அதைக் கொண்டு வரலாம் என்று சொல்வது எப்படி இருக்கிறது என்றால், நீந்திப் பழகிய பிறகு தண்ணீரில் இறங்க வேண்டும் என்று ஒருவன் இருந்தால், இவன் ஒரு நாளும் நீந்தக் கற்றுக் கொள்ளப் போவதில்லை. அதைப் போல இருக்கிறது, தமிழ்மொழி வளர்ச்சி அடைந்தபிறகு அதைக் கொண்டு வரலாம் என்று சொல்வது.... நம்முடைய இராஜ்ஜியத்தில் தமிழாகிய தேசிய மொழியே வேண்டும் என்று சொல்கிறார்கள். அந்த மொழியில்தான் நம் நாட்டில் சகலவிதமான நடவடிக்கைகளும் நடக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள். போதனைகளும் நடக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள். போதனையையும் அதில்தான் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். தமிழ்மொழியில்தான் எல்லா நடவடிக்கைகளும் நடக்க வேண்டும் என்று அரசாங்கம் சொல்லிவிட்டால், அந்த மொழி வளர்ச்சி அடைய வசதி ஏற்பட்டுவிடும்... ஒரு மொழி வளர்ச்சி அடைய சந்தர்ப்பம் கொடுக்காமல் இருந்தால் அது எப்படி வளர்ச்சி அடைய முடியும்?” என்று உரையாற்றினார்.

அவர் மற்றோர் சமயம் பேசுகையில், “தமிழ் ஆட்சி மொழியாக அரசாங்கத் துறைகளில் தமிழில் போதிப்பது என்பதும் முக்கியமான பிரச்சனையாகும். நமது அரசாங்கம் தமிழ் மொழியில் ஆட்சி நடத்த வேண்டுமென்று ஏற்படும் போது போதனா முறையும் தமிழில் இருக்க வேண்டும்... பள்ளிகளில் ஆங்கிலம் பயின்றுவிட்டு, நிருவாகத்தில் வரும் போது, அது தமிழில் இருந்தால் வேலை செய்ய முடியாமல் திணறல் மிகப் பெரிய அளவில் ஏற்படும். ஆகவே, தமிழ் ஆட்சி மொழியாகி அது அமலில் சீக்கிரம் நடக்க வேண்டுமென்றால் இதற்குத் தகுந்தாற்போல், இன்றைக்குக் கல்விபோதனா முறையை மாற்றியமைக்க வேண்டுமென்று சொல்லிக் கொள்கிறேன்.” என்று தமிழ்ப் பயிற்சிமொழி அவசியத்தை வலியுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து எம்.கல்யாணசுந்தரம் “ஆட்சிமொழி மசோதாவுடன் தமிழ்தான் நம் சர்வகலாசாலைகளில் போதனா மொழியாக இருக்க வேண்டும் என்ற பிரிவைச் சேர்த்திருந்தால் நாம் எல்லோரும் இருகரங்களைக் கூப்பி இந்த மசோதாவை வரவேற்கக் கூடிய நிலையிலிருந்திருப்போம்... காலக் கிரமத்தில் அதற்கு ஒரு சந்தர்ப்பம் வந்தே தீரும். அப்பொழுது ஓர் எதிர்ப்பும் இருக்க முடியாது” என்று முழக்கமிட்டார்.

இப்படியாக நடைபெற்ற நெடிய போராட்ட பின்புலத்தில் 1956 டிசம்பர் 27 அன்று தமிழ் ஆட்சி மொழி மசோதாவினை சி.சுப்பிரமணியம் முன் மொழிந்தார். இதன் மீது நடைபெற்ற விவாதங்கள் உயிர்த் துடிப்புடன் உள்ளன. இதைப் பற்றி அமைச்சர் கூறுகையில் “ஐம்பது, அறுபது வருட முயற்சியின் பலன்” என்றார். இது குறித்து அவர் உரையாற்றும் போது “ஒரு பூ மலர்கிறது. அது மலர்கின்ற மலர்ச்சி நம் எல்லாருக்கும் மகிழ்வைக் கொடுக்கிறது. அம்மலர்ச்சி ஒரு தனிப்பட்ட மகிழ்ச்சி அல்ல, செடி வளர்ந்து, அரும்பு விட்டு போதாகி அது மலர்கிறது. இது மலர்வதோடு நின்றுவிடுவதில்லை. அதில் காய் ஏற்பட்டு அது மக்களுக்கும் உதவுகிறது.

அதே மாதிரி தான் தமிழ் மலர்கிறது என்றால் அது ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சி அல்ல. நாட்டிலே இந்த ஐம்பது, அறுபது வருட காலமாக நடந்த நிகழ்ச்சியின் பலனாக இன்றைக்கு ஒரு செடியிலே ஒரு பூ மலர்கிறது” என்றார். (சு.பொ. அகத்தியலிங்கம், 2010:38)

விவாதத்தில் உரையாற்றிய ப. ஜீவானந்தம் “இன்று தமிழ் ஆட்சி மொழி ஆவது கல்லூரிகளில் தமிழ் போதனா மொழியாகுவதற்குள்ள ஒரு படியாகும். இந்த அபிப்பிராயத்தை நிதியமைச்சர் கலைச்சொற்கள் ஒப்படைப்பு விழாவில் வெளியிட்டார். தமிழ் அறிஞர்களைக் கொண்ட ஒரு குழு அமைத்துக் கலைச் சொற்களையும், பல்வேறு துறைகளில் உள்ள சொற்களையும் சேர்த்து ஒரு அகராதி வெளியிட வேண்டும். அவ்வாறு செய்வார்களாயின் எல்லாரும் ஒட்டிக் கொள்ளக் கூடிய தமிழை, அதிகாரப் பூர்வமான சொற்களைக் கொண்டு வந்து தமிழ் மொழியாவதை நன்கு வளரச் செய்யலாம்.

இந்த விவாதத்திற்குப் பதில் அளித்துப் பேசிய அமைச்சர் சி.சுப்பிரமணியம், “தமிழ்ச் சொற்களை எப்படி அமைக்க வேண்டும் என்பதில் ஒரு சில அபிப்பிராய பேதங்கள் காணப்பட்டன. இந்த அபிப்பிராய பேதங்களைக் கவனித்துக் கொண்டிருந்தால் நாம் முன்னேற்றம் அடைய முடியாது. ப. ஜீவானந்தம் அவர்கள் சொன்ன மாதிரி கரடுமுரடான கல்லை உருட்டி விட்டால் அது எப்படி கடைசியில் நல்ல உருளைக் கல்லாக மாறிவிடுமோ அது போல பழக்க வழக்கத்தில் இது வந்துவிடும் என்று நினைக்கிறேன்” என்று கூறினார்.

திரு.சி.சுப்பிரமணியம் நிறைவுரையாற்றும் போது “..... இன்று பாரதியார் சொன்ன வார்த்தைகளுடன் என்னுடைய உரையையும் சட்டசபையின் அலுவலையும் முடித்துக் கொள்கிறேன். பாரதியார் ‘வாழ்க செந்தமிழ்’ என்றார். அந்த வாழ்வு ஏதோ பிரிந்த வாழ்வு என்று அவர் கருதவில்லை. வாழிய பாரத மணித்திருநாடு என்று சொன்னார். அப்பேர்ப்பட்ட வாழ்வு எங்கெங்கும் ஓங்க வேண்டும். வாழ்க தமிழ்! வாழ்க தமிழ்! வாழ்க தமிழ்!" என்று பலத்த கரவொலிக்கிடையே பெருமையுடன் ஆட்சித் தமிழை அரியணை ஏற்றினார்.

தமிழ் ஆட்சி மொழி மசோதா ஆளுநர் இசைவுடன் 1957 ஜனவரி 19 அன்று நிறைவேற்றப்பட்டு, ஜனவரி 23 அன்று தமிழ்நாடு அரசிதழில் ஆணை வெளியிடப்பட்டது.

இவ்வாறாக சுதந்திரம் பெற்ற பிறகு நடைபெற்ற சட்டசபைக் கூட்டங்களில் தாய் மொழியின் தேவை தீர்மானம் முதல் ஆட்சித்தமிழ் மசோதா ஈறாகப் பல்வேறான மொழி வளர்ச்சிப் பணிகள் நிறைவெய்தின.

டாக்டர் சு.நரேந்திரன்

Pin It