தமிழின் ஆளுமை மிகவும் பெரியது. உலகளவில் பண்பாட்டு மேம்பாட்டில் தமிழ்மொழி உண்டாக்கிய தாக்கம் அளப்பரியது. இன்று உலகெலாம் தமிழ்மொழி பரவலுக்கான பன்னாட்டு மாநாடுகள் நடத்தி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ் இலக்கியங்கள் தலைசிறந்த புலவர்களால் உருவாக்கப்பட்டவை. தமிழினப் பண்பாட்டு வரலாற்றின் ஊற்றுக்கண்ணாக விளங்குபவை சங்கப் பாடல்கள். அகம், புறம் என்று பகுக்கப்பட்ட ஐந்திணை வாழ்வியலில் காதல் சார்ந்தவை அகப்பாடல்கள். காதல் தவிர்த்த போர், கொடை, ஈகை, புகழ் போன்ற பலவற்றையும் உள்ளடக்கியவை புறப்பாடல்கள்.

மூவேந்தர்கள் மற்றும் கடையெழு வள்ளல்களின் போர்க்குணத்தையும் மறத்தையும் உள்ளடக்கிய பாடல்களில் கொடைத் திறத்தையும், ஈகைத் திறத்தையும் வெளிப்படுத்தும் பாடல்கள் பல எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றில் காணக் கிடைக்கின்றன. புறநானூற்றில் சேரமன்னர்கள், சோழ மன்னர்கள், பாண்டிய மன்னர்கள் மற்றும் குறுநில மன்னர்களின் புகழேத்தும் பாடல்களில் காணப்படும் வரலாற்றுக் குறிப்புகள் எண்ணற்றவை. தமிழர் பண்பாட்டின் தொன்மைச் சிறப்பை ஆய்வதற்குப் பயனுள்ளவை. தம்மை நாடி வந்து பாடிய புலவர்களுக்கும் இரவலர்களுக்கும் ஆடல், பாடல், கூத்து நிகழ்த்திய பாணர்கள், விறலியர் முதலான கலைஞர்களுக்கும் யானைகள், குதிரைகள், தேர்கள், பொற்காசுகள் எனப்பல விலைமதிப்பற்ற பொருட்களை மன்னர்களும் மறவர்களும் கொடையாகத் தந்ததை அறிவார்ந்த புலவர்கள் புறநானூற்றுப் பாடல்களில் பதிவு செய்துள்ளனர். அக்கால அரசியல் சூழல்கள், இறையாண்மை, செங்கோல் ஆட்சிச் சிறப்பு, வீரம், போர்த்திறம், நீர்மேலாண்மை, கொடைத்திறம், மொழிப்புலமை போன்றவற்றோடு ஊர்புறங்களில் வாழும் குடிமக்களின் வாழ்க்கை முறைமைகளையும் ஈகைக் குணத்தையும் தெளிவாக வெளிப்படுத்தும் குறிப்புகளை அள்ளித்தரும் வரலாற்று ஆவணமாகத் திகழ்வது புறநானூறு. குடிமக்களின் தலைவர்களும் தம்மை நாடி வந்த இரவலர்களுக்குக் கொடை தந்திருக்கின்றனர். நற்குடிப் பெண்கள் விருப்போடு விருந்தோம்பல்கள் புரிந்ததையும் பாடல்களில் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு புலவரும் தாம் கண்ட காட்சியைக் கண்முன் காட்டுகின்றனர்.

புறநானூற்றுப் பாடல்களைக் கூர்ந்து பயின்று நுட்பமாக ஆய்வு செய்ததில் மன்னர்கள் மட்டுமன்றி, ஊர்களில் வாழும் படை மறவர்களும் குடித்தலைவர்களும் கொடை உள்ளத்தோடு விளங்கியதையும் மனையறம் காக்கும் மகளிர் விருந்தோம்பலில் சிறந்து விளங்கியதையும் அறிய முடிகிறது. குடித்தலைவனின் நற்பண்புகளும் மென்மையான குணங்களும் புலனாகின்றன. புறநானூற்றுப் பாடல்களை ஆய்ந்து பண்டைய தமிழரின் ஒப்பற்ற பண்பாட்டுக் கூறுகளான ஈகைத்திறம், விருந்தோம்பல், பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் குணத்தையும் தெளிவுற நிறுவும் ஆய்வுக் கட்டுரை இது.

குடிமக்களின் ஈகைப்பண்பும் விருந்தோம்பலும்

குடிமக்களிடையே பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் குணம் பண்டைக் காலத்தில் பரவலாக இருந்தது புறநானூற்றுப் பாடல்கள் மூலம் தெளிவாகத் தெரிகிறது. தமது வாழ்வில் வறுமை படர்ந்திருப்பினும் தமக்குக் கிடைக்கும் உண்பொருளைப் பலருக்கும் பகிர்ந்து பசியாறச் செய்து உண்ணும் உளப்பாங்கு வியக்கச் செய்யும். பிறரது பசி வருத்தத்தை நன்குணர்ந்து வாழும் கண்ணோட்டம் போற்ற வல்லது. இதற்குச் சான்றாகப் புறநானூற்றுப் பாடல்கள் காட்டும் உணர்வுகளைக் காட்டலாம். ஈகைக் குணத்தில் குடித்தலைவர்கள் எவ்வளவு மேம்பட்டிருந்தனர் என்று எடுத்துக்காட்டும் புறநானூற்றுப் பாடல்கள் பல உள. ஈகை என்பது வறியவர்க்கு பொருள் ஈவது என்று வள்ளுவர் “ஈகை” அதிகாரத்தில் கூறுகிறார். வறியவர் அல்லாதார்க்குக் கொடுப்பது ஈகை அல்ல. பசிக்கு உணவு தருவதை ஈகையில் வைக்கிறது வள்ளுவம். அற்றார் அழிபசி தீர்த்தல் என்கிறது. ஈகைக்குணம் இரக்கத்தால் வருவது. ஈகை, இரவு, இரவச்சம் எனும் அதிகாரங்களில் உள்ள குறள்களில் இரக்கத்தின் தன்மையைக் காண முடியும்.

பகுத்துண்ணும் பண்பு

புறநானூற்றில் புலவர் ஐயூர் முடவனார் பாடல் (புறம்-314) சிறந்த மனையாளுக்கு இனிய கணவனாக விளங்கும் தலைவனை அரிய மறவனாகப் பாடுகிறது. போர்முனையில் வெல்லும் நெடிய புகழையுடைய தலைவன். நடுகற்கள் மிகுந்த இடுகாட்டில் கடினமான நிலப்பரப்புள்ள சிற்றூர்க் குடியும் போற்றுபவனாக விளங்குபவன். வேந்தன் வருந்தினால் மனம் அடங்காது முந்திவரும் படைக்குச் செல்பவன். புலவர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் இயற்றிய புறநானூற்றுப் பாடல், சிறுகுடி மக்களின் வாழ்க்கையையும், பகுத்துண்ணும் பண்பினையும் குடித்தலைவன் மறத்தையும் அவனது ஈகைத் திறத்தையும் எடுத்துக் காட்டுகிறது.

முளவுமாத் தொலைச்சிய முழுச்சொலாடவர்

உடும்பிழு தறுத்த வொடுங்காழ்ப் படலைச்

சீறின் முன்றிற் கூறுசெய் திடுமார்

மறுகுடன் கமழு மதுகை மன்றத்

தலந்தலை யிரத்தி யலங்குபடு நீழற்

கயந்தலைச் சிறாஅர் கணைவிளை யாடும்

அருமிளை யிருக்கை யதுவே வென்வேல்

வேந்துதலை வரினுந் தாங்கும்

தாங்கா வீகை நெடுந்தகை யூரே.          (புறம் 325)

இப்பாடலில் குறிப்பிடப்பட்ட ஊர் எத்தகையது என்பதை உற்று நோக்க வேண்டும். பன்றிகள் புரண்டு புழுதியாக்கிய நிலப்பரப்பில் பெருமழை பொழிந்து நின்றிருக்க, குழிகளில் நிரம்பிய சிற்றளவு நீரைக் கன்றுடன் வரும் பசுக்கள் உண்டதால் சேறு கலங்கிய நீரை வரிசையாக முகந்துண்ணும் நிறைவில்லா வாழ்க்கை என்பதில் ஊர்மக்களின் ஏழ்மை நிலை வெளிப்படுகிறது. “கூறுபோட்டுப் பகுத்துக் கொடுப்பதற்காக வைத்த கொழுத்த நிணத்தின் மணம் தெருவெல்லாம் மணக்கும் பொதுவெளி” என்பதில் குடிமக்களின் பகுத்துண்ணும் நற்பண்பும் ஈகைக் குணமும் புலப்படுகிறது.

தலைவனின் நற்குணம்

மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனாரின் பாடல் சிற்றூரின் நிலையையும் குடித்தலைவனின் வள்ளல் குணத்தையும் ஈகைப் பண்பையும் உணர்த்துவதைக் காணலாம்.

……………………. . சில்குடிச் சீறூர்ப்

புடைநடு கல்லி னாட்பலி யூட்டி

நன்னீ ராட்டி நெய்ந்நறைக் கொளீஇய

மங்குன் மாப்புகை மறுகுடன் கமழும்

அருமுனை யிருக்கைத் தாயினும் வரிமிடற்

றரவுறை புற்றத் தற்றே நாளும்

புரவலர் புன்க ணோக்கா திரவலர்க்

கருகா தீயும் வண்மை

உரைசா னெடுந்தகை யோம்பு மூரே.   (புறம் 329)

விடியலில் நடுகல்லுக்கு பலியைப் படைத்து நன்னீராட்டி நெய் மணம் கொண்ட, முகில் போன்ற பெரும் புகையெழுந்து தெருவெங்கும் கமழும் சிறிய குடியிருப்புகள் உடைய ஊர். இரவலர்களுக்குக் குறைவில்லாமல் ஈகை செய்யும் வள்ளல் குணம் பொருந்தியவன் காக்கும் ஊரின் பெருமையைக் கூறும் வகையில் அமைந்த இப்பாடலில் அவ்வூரின் தலைவனின் வள்ளல் குணம் போற்றப்படுகிறது. தலைவனால் ஊரின் பெருமையும் உயர்ந்து நிற்கிறது.

புலவர் ஆலந்தூர் கிழார் பாடலில், வேந்தனுக்கு நல்ல துணைவனாக விளங்கும் குடித்தலைவனைப் பாடுகிறார்.

பாணரொ டிருந்த நாணுடை நெடுந்தகை

வலம்படு தானை வேந்தற்

குலந்துழி யுலக்கு நெஞ்சறி துணையே.             (புறம் 324)

வன்புலமான ஊரில் பாணரோடு கூடி இன்புறும் தலைவன். வேந்தனுக்குக் கேடு வந்தால், தானும் வருந்தும்படி வேந்தனின் நெஞ்சம் அறிந்த உயிர்த் துணைவன் குடித்தலைவன். முந்தையர் போன்றே தனது வேந்தன் வெற்றியில் கவனம் வைத்துப் போரில் நாட்டம் வைத்திருக்கும் தலைவன் என்று புலவர் காட்சிப்படுத்துகிறார்.

மனைக்கிழத்தியின் விருந்தோம்பல் பண்பும் கொடையுள்ளமும்

புறநானூற்றில் ஆலங்குடி வங்கனார் பாடிய பாடலில் போருக்குச் சென்ற குடித்தலைவனின் மறத்தையும் கொடைக் குணத்தையும் காண முடிகிறது.

……………………………………………. . அதனால்,

முயல்சுட்ட வாயினும் தருகுவேம் புகுதந்து

ஈங்குஇருந் தீமோ முதுவாய்ப் பாண!

………………………………………………………….

சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர்

வேந்துவிடு தொழிலொடு சென்றனன் வந்துநின்

பாடினி மாலை யணிய,

வாடாத் தாமரை சூட்டுவன் நினக்கே.                (புறம் 319)

இப்பாடலில் புலவர், முதற்கண் அவ்வூரின் நிலைமையைப் புரிய வைத்துக் குடித்தலைவனின் கொடையுள்ளத்தையும் வெளிப்படுத்துகிறார். இதில் பாணனின் மனநிலையை அறிந்த மனைக்கிழத்தி கூறுவது நெகிழ்த்தவல்லது.

சாடியில் இருப்பதோ சிறிதளவு மாசில்லாத நீர். முற்றத்தில் உலர்ந்த சிறுதினையைப் புறாவும் இதலும் முற்றிலும் உண்ண வரட்டும் என்று தூவுவதற்குச் சுடர் மறைந்து இரவுப் பொழுதானது. அதனால், சுட்ட முயல் கறியேனும் தருவோம்; இங்கு வந்து இருப்பீராக என்று தங்கள் நிலைமையைக் கூறிப் பாணனை அழைக்கிறார்கள். சிற்றூர்த் தலைவன் வேந்தன் ஏவிய தொழில் என்று சென்றுள்ளான். அவன் வந்து நின் பாடினி பொன்மாலை அணியவும், உனக்கு வாடாத பொற்றாமரையைச் சூடுவான் என்று கூறுவதில் மனைக்கிழத்தி ஒருத்தியின் இரக்க உணர்வும் கொடையுள்ளமும் விருந்தோம்பல் பண்பும் புலப்படுகிறது.

ஊரினர் விருந்தோம்பலும் கொடையும்

புலவர் தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார் பாடிய பாடலில் போருக்குச் சென்ற தலைவன் சார்ந்த குடிமக்களின் விருந்தோம்பலையும் கொடைக் குணத்தையும் காண முடிகிறது.

………………………………………. மனைவியும்,

வேட்டச் சிறாஅர் சேண் புலம் படராது

படப்பைக் கொண்ட குறுந் தாள் உடும்பின்

விழுக்கு நிணம் பெய்த தயிர்க் கண் விதவை

யாணர் நல்லவை பாணரொடு ஒராங்கு

வரு விருந்து அயரும் விருப்பினள்; கிழவனும்,

அருஞ் சமம் ததையத் தாக்கி பெருஞ் சமத்து

அண்ணல் யானை அணிந்த                                 

பொன் செய் ஓடைப் பெரும் பரிசிலனே.        (புறம் 326)

தமது வேட்டுவச் சிறுவர்கள் கொல்லைப் புறத்தில் இருந்து கொண்டு வந்த உடும்பின் கொழுத்தத் தசையில் பெய்த தயிருடனான சோற்றைப் புதிதாக வந்த பாணர் கூட்டத்தோடு உண்பிக்கும் மனையாள். தலைவனும் ஒரு பெரும் போரில் வென்று வந்த யானைகளின் பொன் முகபடாம் தன்னைக் கொடையாகத் தரும் பெரும் பரிசிலன் என்பது புலவர் கூற்று. இப்பாடலில் குடும்பத்தலைவியின் விருந்தோம்பல் பண்பும் மறக்குடித் தலைவனின் கொடையுள்ளமும் புலப்படுகிறது.

மனையாளின் விருந்தோம்பலும் தலைவனின் கொடைப் பண்பும்

புறநானூற்றில் இப்பாடலைப் பாடிய புலவர் பெயர் தெரியவில்லை. புலவர்களை விளித்துப் பாடும் பாடலாக அமைந்தது.

ஆங்கண் படரின்,       

‘உண்க’ என உணரா உயவிற்று ஆயினும்,

தங்கினிர் சென்மோ, புலவிர்! நன்றும்;

சென்றதற் கொண்டு, மனையோள் விரும்பி,

வரகும் தினையும் உள்ளவை எல்லாம்

இரவல் மாக்கள் உணக்கொளத் தீர்ந்தென,       

குறித்து மாறு எதிர்ப்பை பெறாஅமையின்,

குரல்உணங்கு விதைத்தினை உரல்வாய்ப் பெய்து

(புறம் 333)

இரவலர்கள் சென்றால் அந்த இல்லத்தலைவி வீட்டில் இருக்கும் வரகு, தினை போன்ற பொருட்கள் அனைத்தையும் உண்ணத் தருவதோடு, குறியெதிர்ப்பு முறையில் பெறமுடியாத நிலையில் விதைத் தினையைக் குற்றியெடுத்து உண்ண வைத்தே அனுப்புவாள் என்று பாடுவது அக்கால விருந்தோம்பல் கோட்பாட்டினை உணர வைக்கிறது. வேந்தரே தம்மிடம் வந்தாலும் உண்ணக் கொடுப்பதையே இரவலர்களுக்கும் அந்த மனையாள் அளிப்பாள் என்பதும் புலவலர்களுக்குப் பரிசாகத் தருவன யாவும் போரில் வெற்றி பெற்றமைக்காக மன்னனிடம் பெற்ற பரிசுப் பொருட்களே என்று கூறுவதும் நெகிழ வைப்பவை.

புறநானூற்றில் புலவர் மதுரைத் தமிழ்க்கூத்தனார் பாடிய பாடலில் குடிமகன் ஒருவனின் மறத்தையும் விருந்தோம்பல் பண்பையும் கொடைக் குணத்தையும் காண முடிகிறது.

………………………………… மனையோள்

பாண ரார்த்தவும் பரிசில ரோம்பவும்

ஊணொலி யரவமொடு கைதூ வாளே

உயர்மருப் பியானைப் புகழ்முகத் தணிந்த

பொலம் புனையோடை. . . ப்

பரிசில் பரிசிலர்க் கீய

உரவுவேற் காளையுங் கைதூ வானே. (புறம் 334)

மனையாள் பாணர்களை உண்பிக்கவும் பரிசிலராகிய புலவர்களைப் பேணவும் உணவிடும் கை ஓயாதவள்; உயர்ந்த தந்தங்கள் கொண்ட யானைகளின் பொன் முகப்படாம் போன்ற பரிசுப் பொருட்களைப் பரிசிலர்க்கு வழங்குவதில் அவள் கணவனும் கை ஓயாதவனே. இருவருமே ஈகைப் பண்பில் சிறந்தவர்கள். கருத்தொருமித்து வாழும் கணவன் - மனைவி. வெற்றி பெற்றுள்ள வேந்தன். அடுத்து, புலவர் அள்ளூர் நன்முல்லையார் பாடிய பாடலில் ஊர்க்குடித்தலைவனின் மறத்தையும் விருந்தோம்பல் பண்பையும் காண முடிகிறது.

……………………………………… அரிவை

நடுகல் கைதொழுது பரவும் ஒடியாது

விருந்து எதிர் பெறுகதில் யானே என்ஐயும்

………………………………………………….

ஒ . . . . . . . . . . . . வேந்தனொடு,

நாடுதரு விழுப்பகை எய்துக எனவே.                (புறம் 306)

தவறாமல் நடுகல்லைக் கைதொழுது வணங்கி வரும் இளையவள் “இடையறாது விருந்தினரை எதிர்வரப் பெறுவேனாக நான்! அதற்காக என் கணவனும் வேந்தனோடு நாடுதரும் பெரும்பகையை எய்துவானாக” என்று வேண்டுகிறாள். தனக்கு விருந்தினர் வரவேண்டும் என்றும் தனது கணவனுக்குப் போர் வெற்றிகள் வேண்டுமென்றும் விரும்புகிறாள். கணவன் போரில் வென்று வந்தால் கொணரும் பரிசுப்பொருட்களை இரவலர்க்குக் கொடுத்து மகிழ்வதில் அவள் கொண்ட நாட்டம் நெகிழ்த்தவல்லது.

சீறூர்த் தலைவனின் கொடை நலம்

புலவர் உறையூர் முதுகூத்தனார் பாடிய பாடலில் ஊர்க்குடித்தலைவன் ஒருவனின் இல்லாண்மையைச் சிறப்பித்துக் கூறும் புலவர் அவன் ஈகையில் மன்னனுக்கே இணையானவன் என்பதைக் காண முடிகிறது.

காவன் மன்னர் கடைமுகத் துகுக்கும்

போகுபலி வெண்சோறு போலத்

தூவவும் வல்லனவன் றூவுங் காலே.   (புறம் 331)

நாடு காக்கும் மன்னன் மனை முன்றிலில் வாரி வழங்கும் வெண்சோறு போல அள்ளித் தரவும் வல்லவன் அவன்! வறியவன் என்றாலும் பிறரது குறிப்பறிந்து நன்மைகள் செய்பவன் தலைவன். மனையாளைப் போலவே மனம் கனிந்து விருதோம்புபவன். மன்னனைப்போல அள்ளித்தரவும் உள்ளம் வல்லவன் அவன் என்று பாராட்டிப் பாடுகிறார் புலவர்.

தானைத் தலைவனின் விருந்தோம்பல் பண்பு

புறநானூற்றில் புலவர் வீரை வெளியனார் பாடிய பாடல் ஒன்றில் தானைத் தலைவன் ஒருவனது ஊராரின் பகுத்துண்ணும் விருந்தோம்பல் பண்பை எடுத்துக்கூறி, பாணனை அவனிடம் செல்லுமாறு அறிவுறுத்துகிறார்.

மானதட் பெய்த வுணங்குதினை வல்சி

கானக் கோழியொ டிதல்கவர்ந் துண்டென

ஆர நெருப்பி னார னாறத்

தடிவார்ந் திட்ட முழுவள் ளூரம்

இரும்பே ரொக்கலொ டொருங்கினி தருந்தித்

தங்கினை சென்மோ பாண! தங்காது

வேந்துதரு விழுக்கூழ் பரிசிலர்க் கென்றும்

அருகா தீயும் வண்மை

உரைசா னெடுந்தகை யோம்பு மூரே.   (புறம் 320)

பரப்பியுலர வைத்த தினையரிசியை காட்டுக்கோழியும் இதல் பறவையும் உண்டனவாக, ஆரல் மீன் மணம் ஒருபுறம் கமழ, துண்டு போடப்பட்ட முழு இறைச்சியைக் குழுமியிருந்த பெரிய சுற்றத்தாரோடு இனிதே அருந்தும் ஊர். தனக்குப் பகைவேந்தர் திறையாகத் தந்த பெருஞ் செல்வத்தைப் பரிசிலர்க்குக் குறையாமல் கொடுக்கும் வள்ளல் குணம் கொண்டவன் என்று புகழப்படுகிறான்.

முடிவுரை

சோழ, சேர, பாண்டிய முடிவேந்தர்கள், கடையெழு வள்ளல்கள், குறுநில மன்னர்கள் எனப் பலரும் புறநானூற்றுப் பாடல்களில் கொடைப்பண்பு, விருந்தோம்பல் ஆகியவற்றிற்காகப் பாடப்பட்டுள்ளனர். வேந்தர்கள், வள்ளல்கள் மட்டுமன்றி இக்கோட்பாட்டில் சீறூர்த் தலைவர்களும், குடித்தலைவர்களும் குடிமக்களாக வாழும் ஆண்களும் பெண்களும் நிகராக இருந்துள்ளனர். ஈகையும் விருந்தோம்பலும் இரவலர்களுக்குப் பரிசில்கள் தருதலும் மகிழ்வோடு பகிர்ந்து உண்பதும் குறியெதிர்ப்பு பெற்றாவது பசியாற்றுவதும் பண்டைக் கால வாழ்வியல் கூறுகளில் இன்றியமையாதவையாக இருந்துள்ள நிலை இக்கட்டுரை வாயிலாக ஐயமற நிறுவப்பட்டுள்ளது.

துணை நூற்பட்டியல்

1.      புறநானூறு - மூலமும் உரையும் - உரைவேந்தர் ஒளவை துரைசாமிப்பிள்ளை

2.      புறநானூறு - செய்யுளும் செய்திகளும்- பேரா. முனைவர் ரா. சீனிவாசன்,

3.      டாக்டர் உ. வே. சாமிநாதையர் உரை

4.      புறநானூறு உணர்த்தும் வாழ்வியல் விழுமியங்கள், கட்டுரையாளர் கே. சிவப்பிரகாசம், பாரதியார் பல்கலைக்கழகம்.

5.      புறநானூறு உரை - புலியூர்க் கேசிகன்

6.      புறநானூற்றில் அறம் - கட்டுரை, களஞ்சியம் இதழ், சர்வதேச தமிழ் ஆய்விதழ்

7.      புறநானூறு - செய்யுளும் செய்திகளும் - பேராசிரியர் இரா. சீனிவாசன், அணியகம் வெளியீடு.

- கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு, முனைவர் பட்ட ஆய்வாளர், வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்பவியல், ஆராய்ச்சி நிறுவனம், சென்னை.

& முனைவர் ம. பிரபாகரன், உதவிப் பேராசிரியர், வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்பவியல், ஆராய்ச்சி நிறுவனம், சென்னை.