மனிதன் வேட்டைச் சமூகமாக வாழ்ந்த காலகட்டத்தில் உணவுக்காக விலங்குகளை வேட்டையாடினான். வேட்டையில் விலங்குகள் கிடைக்காத நிலையில் அவன் உடும்பு, ஈசல், தவளை போன்றவற்றையும் பிடித்து உண்டான். அவ்வாறான அவலநிலையில்தான் சமூகம் இருந்தது.

"உடும்பு கொலீஇ வரிநுணல் அகழ்ந்து

நெடுங்கோட்டுப் புற்றத்து ஈசல் கெண்டி

எல்லுமுயல் எறிந்த வேட்டுவன்"

(உடும்பைக்கொன்றும் வரித்தவளையை அகழ்ந்தெடுத்தும் நெடிய புற்றுக்களை சிதைத்து ஈசலை அள்ளி எடுத்தும் முயலை வேட்டையாடியும் வாழும் வேட்டுவன்) என்று கபிலர் நற்றிணை (59)யில் இதுகுறித்து கூறுகிறார்.

வருத்தும் பசியைப்போக்கிக்கொள்ள மனிதன் ஈசலும் தவளையும் மட்டுமல்லாது, செந்நாய், புலி முதலியவற்றால் கொல்லப்பட்ட விலங்குகளின் ஊனையும் சுட்டுத்தின்றான்.

"ஓய்பசிச் செந்நாய் உயங்குமரை தொலைச்சி

ஆர்ந்தன; ஒழிந்த மிச்சில் சேய்நாட்டு

அருஞ்சுரம்செல் வோர்க்கு வல்சி ஆகும்"

-நற்றிணை: 43

(பசி மிக்க செந்நாய், வாடிய மரையாவைத் துரத்திக் கொன்றது. கொன்ற அது தின்றது போக எஞ்சிய மிச்சிலானது பாலை நிலத்து மாந்தர்களுக்கு உணவானது) என்று புலவர் எயினந்தையார் கூறுகிறார்.

வேனிற்காலத்தில் வெயிலின் கொடுமையால் மரங்கள் வாடி இலைகளை உதிர்த்த காடு ஒன்றில் பசியால் வாடியபுலியானது யானையைக் கொன்று வீழ்த்தியது. கொன்று குருதியைக் குடித்த புலி, தன் பசியடங்க யானையின் உடலைக் கடித்துக் குதறித் தின்றது. தின்றதுபோக எஞ்சியதை அங்கேயே போட்டுவிட்டுப் போனது.

புலி போனபின் பாலை நில மாந்தரான ஆறலை கள்வர்கள் அங்கு வந்தனர். மிக்க பசியுடன் வந்த அவர்கள் புலி புசித்துப்போட்டுவிட்டுப்போன யானையின் ஊனைக் கண்டனர். அவர்கள் அதனை எடுத்துத் தீயில் இட்டுச் சுட்டுத்தின்றனர். சுனை நீரைக் குடித்துப் பசியைப் போக்கிக் கொண்டார்கள். யானையின் ஊனைத்தின்று பசியாறிய அவர்கள் அவ்விடம் விட்டு அகன்றபின் உப்பு வணிகரான உமணர்கள் அங்கு வந்தனர். அவர்கள் புலியும் ஆறலை கள்வரும் உண்டதுபோக எஞ்சியிருந்த யானையின் ஊனைக் கண்டார்கள். பசியால் வருந்தி வந்த அவர்கள் எஞ்சியிருந்த அவ்வூனைக் எடுத்து அறுத்து, தாம் கொண்டு வந்திருந்த பானையில் இட்டுச் சுனை நீரை உலை நீராகப் பெய்து கல்லடுப்பில் ஏற்றி வேக வைத்து உண்டு பசியாறினர்.

"மரம் தலைகரிந்து நிலம் பயம் வாட

அலங்கு கதிர்வேய்ந்த அழல்திகழ் புனந்தலைப்

புலி தொலைத்து உண்டபெருங்களிற்று ஒழிஊன்

கலிகெழு மறவர் காழ் கோத்து ஒழிந்ததை

ஞெலிகோற் சிறுதீ மாட்டி ஒலிதிரைக்

கடல்விளை அமிழ்தின் கணஞ்சால் உமணர்

சுனைகொள் தீநீர்ச் சோற்று உலை கூட்டும்"

என்று புலி புசித்துப்போட்டு போன யானைiயின் ஊனைப் பாலை நில மாந்தரான எயினரும் உப்பு வணிகரான உமணரும் சுட்டும் அவித்தும் உண்ட நிகழ்வுகளை அகநாநூறு (169) அமைவுறக் கூறுகிறது.

காட்டுப்பன்றிகளை வேட்டையாட முயன்ற வேட்டுவர்கள், அவை விரும்பி மூழ்கிப்புரளும் சேற்றில் சுருக்கு வார்களால் ஆன கண்ணிகளைப் புதைத்து வைத்தனர். சேற்றில் இரங்கிப் புரண்ட பன்றி ஒன்று அக்கண்ணியில் அகப்பட்டுக்கொண்டு வெளியேற முயன்றது. அப்போது பன்றியை விரட்டிவந்த காட்டுநாய்கள் அதனைக் கடித்துக் கொன்றன. பன்றிக் கண்ணிவைத்த வேட்டுவர்கள், அதனைக் கடித்துக் குதறிய நாய்களை விரட்டிவிட்டு அதன் தசையைத் தம் சிறுகுடிக்குக் கொண்டு சென்றனர்.

"சிறுகட் பன்றிப் பெருஞ்சின ஒறுத்தல்

சேறாடு இரும்புறம் நீறொடு சிவண

வெள்வசிப் படீ இயர் மொய்த்த வள்பு அழீஇ

கோள்நாய் கொண்ட கொள்ளைக்

கானவர் பெயர்க்கும் சிறு குடியானே"

என்பது நற்றிணை (82) கூறுகிறது.

பெண் நாய் கடித்துக் கொண்டு வந்த முள்ளம்பன்றியின் தசையை எயினர் சமைத்து உண்ட நிகழ்வை,

"முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை

பிணவுநாய் முடுகிய தடியொடு விரைஇ"

என்று மலைபடுகடாம் (176-77) கூறுகிறது. இவ்வாறு வேட்டைச் சமூகத்தவர் ஆன எயினர்கள் உடும்பு, பன்றி மரையான், முள்ளம்பன்றி, முயல், யானை முதலியவற்றின் ஊனை வெறுமனே தான் சுட்டுத் தின்றனர். அதனுடன் உப்பு, உறைப்பு, நெய் முதலிய எதனையும் சேர்க்கவில்லை. அதற்குரிய சமூகச் சூழலும் வாய்ப்பும் அவர்களுக்கு அமையவில்லை.

காலவோட்டத்தில் சமூகமாற்றம் ஓசையின்றிப் படிப்படியாக நிகழ்ந்தது. சமூகத்தில் வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்பட்டன. உணவுக்காக விலங்குகளை விரட்டி வேட்டையாடித் திரிந்த மனிதன் பயிர் சாகுபடியில் ஈடுபட்டான். சுட்டும் வெட்டியும் காட்டைத் திருத்தினான். அவரையும் துவரையும் தினையும் வரகும் கொள்ளும் பயறும் விதைத்துச் சாகுபடி செய்தான். கால்நடைகளை வளர்த்து மேய்த்தான். சமூக மாற்றம் படிப்படியாக நிகழ்ந்தது. உணவு, உடை, உறையுள் ஆகியவற்றிலும் மாற்றம் ஏற்பட்டது. உற்பத்தியிலும்உற்பத்தி முறையிலும் உற்பத்தி உறவுகளிலும் மாற்றம் நிகழ்ந்தது.

இரும்பு கண்டுபிடிக்கப்பட்டுப் பயன்பாட்டுக்கு வந்திருந்தது. அதனால் அரிவாள், கடப்பாரை, கலப்பை, குந்தாலி, கொழு, கோடரி போன்ற வேளாண் கருவிகள் செய்யப்பட்டன. நீர்வளம் மிக்க ஆற்றங்கரைப் பகுதிகளில் காடுகள் திருத்தப்பட்டு ஏரிகளும் குளங்களும் வயல்களும் வாய்க்கால்களும் அமைக்கப்பட்டன. வரகும் தினையும் விளைந்த வன்னிலப்பகுதிகள் இஞ்சியும் மஞ்சளும் கரும்பும் நெல்லும் வாழையும் கமுகும் விளையும் மென்னிலங்கள் ஆயின. இலக்கியங்கள் இந்நிலங்களை மருதநிலம் எனக் கூறின. உழைக்கும் மக்களின் அயராத உழைப்பாலும் நதிகளின் வற்றாத நீர் வளத்தாலும் இந்நிலங்களில் "தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைந்தது". உற்பத்தி உபரி நிலையை எட்டியது. உழைக்கும் மக்களே இதனைச் சாதித்தனர். ஆனால் அம்மக்கள் அடிமைகளாக்கப்பட்டனர். இதுவரையிலும் சமூகம் முழுவதற்கும் பொதுவாக இருந்த நிலங்கள் இப்போது ஆண்டைகளின் தனியுடைமையாக்கப்பட்டன. ஆண்டைகள் உழைக்கும் மக்களை அடிமைகளாக்கி உற்பத்திப் பெருக்கத்துக்கான பணிகளில் ஈடுபடுத்தினர்.

இந்நிலையில், உப்பும் உறைப்பும் இன்றி ஊனைப் பச்சையாகவும் சுட்டும் தின்று பசி ஆறிய நிலை மாறியது. 'நறவுண் செவ்வாய் நாத்திரம் பெயர்ப்ப உண்டும் தின்றும் இரப்போர்க்கு ஈந்தும்" மனிதன் மகிழ்ந்தான். இச்செய்தியைச் சங்க இலக்கியங்கள் நமக்குத்தெளிவாகக் கூறுகின்றன.

நெடுநீர நிறை கயத்துப்

படுமாரித் துளிபோல

நெய்துள்ளிய வறை முகக்கவும்

சூடு கிழித்து வாடூன் மிசையவும்

ஊன் கொண்ட வெண்மண்டை

ஆன்பயத்தான் முற்றளிப்பவும்

வெய்துண்ட வியர்ப்பல்லது

செய் தொழிலால் வியர்ப் பறியாமை

ஈத்தோன் எந்தை"        -புறநானூறு : 386

என்று செல்வர்களான ஆண்டைகள் நெய்யிற் பொரித்த ஊன் துண்டங்களையும் ஆவின் பாலையும் சூடாகத் தாமும் உண்டு பாணர்க்கும் வழங்கிய நிகழ்வுகளைப் புலவர்கள் புகழ்ச்சியாகப் பாடினார்கள்.

ஆனால் சமூகத்தில் ஏற்பட்ட இவ்வளர்ச்சியும் முன்னேற்றமும் அவை நிகழ்ந்திடக் காரணமான உழைக்கும் மக்களைச் சென்றடையவில்லை. சமூக மாற்றத்தால் ஏற்பட்ட மிகு வளர்ச்சியும் உபரி உற்பத்தியும் அவர்களை அடிமையாக்கவே பயன்பட்டன. சமூகத்தின் செல்வப்பெருக்கத்தை ஆண்டைகளான ஒருசிலரே அனுபவித்தனர். மிகப்பலரான உழைக்கும் மக்கள் அடிமைகளாக்கப்பட்டு அவதிக்கு ஆளாயினர்.

மனிதன் காட்டுமிராண்டி நிலையில் வேட்டையாடியும் நிரை மேய்த்தும் கண சமூகமாக வாழ்ந்த கால கட்டத்தில் 'களர் வளர் ஈந்தின் காழ் சுண்டன்ன சவல் விளை- நெல்லின் செவ்வவிழ்ச் சொன்றியையும் ஞமலிதந்த மனவுச் சூழ் உடும்பின் வறைகால் யாக்ததனை"யும் "இருங்கிளை ஞெண்டின் சிறுபார்ப்பன்ன பசுந்தினை மூரலை"யும் உண்ட நிகழ்வையும் "பச்சூன் தின்றதனை"யும் நமக்குக் காட்டிய சங்க இலக்கியங்கள், சமூக மாற்றத்துக்குப்பின் அடிமைச் சமூகத்தில்

"பெருஞ்செய்நெல்லின் கொக்கு, நிர் நிமிரல்

பசுங்கட் கருனைச் சூட்டோடு மாந்தி"யதையும்

"நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை

நீர் நாண நெய் பெய்து" உண்டதனையும் நமக்குக் காட்டுகின்றன.

உயர்தரமான நெல்லைப் "பறவைப்பெயர் படுவத்தம்" என்று பெரும் பாணாற்றுப்படை கூறுகிறது. இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் "ராசான்னம் என்னும் பெயர் பெற்ற நெல்லு. ஆகுதி பண்ணுதற்கு இந்நெல்லுச் சோறே சிறந்தது என்று இதனைக் கூறினார்" என்று உரை கூறினார். ராசான்னம் என்னும் உயர்தரமான நெல்லில் சோறு சமைத்து, நெய்யிற் பொரித்த கொழுவிய இறைச்சித்துண்டுகளுடன் சேர்த்துச் சுவையாக ஆண்டைகள் உண்ட செய்தியை உரையாசிரியர் நச்சினார்க்கினியர் பெருமை பொங்கப் பேசுகிறார். இவ்வாறு ஆண்டைகளும் அடிமை எஜமானர்களும் ஊனும் நெய்யும் பெய்து உயர்தரமானதும் கொக்கின் நகம்போன்றதும் ஆன அரிசியுடன் சமைத்துச் சுவையும் சூடும் குன்றாமல் உண்டமையைச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

அடிமைச் சமூகத்திலும் நிலப்பிரபுத்துவ சமூகத்திலும் ஆண்டைகளுக்காக அனைத்துவிதமான வேலைகளையும் அடிமைகளே செய்தனர். ஆனாலும் ஆண்டைகள் அடிமைகளுக்குப் பழைய சோற்றையே உண்ணக்கொடுத்தனர். இதனை,

"அளிகளிற் படுநர் களியட வைகின்

பழஞ்சோறு அயிலும்"-புறநானூறு : 399

என்றும்,

"பழஞ்சோற்றுப் புக அருந்தி" - புறநானூறு : 395

என்றும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

அடிமைச் சமூகத்தில் உழைக்கும் மக்களான அடிமைகள் தம் வயிற்றுப் பசியைத் தணிப்பதற்காக வயல்களில் தாம் பிடித்த மீன், ஆமை முதலியவற்றின் தசைத் துண்டங்களைச் சுட்டும் அவித்தும் (நெய் பெய்யாமல் உப்பும் உறைப்பும் சேர்க்காமல்) உண்டனர்.

"குருகு உடைத்து உண்ட வெள்ளக்கட்டு யாமை

அரிப்பறை வினைஞர் அல்குமிசை கூட்டும்"

(அரித்த ஓசையையுடைய பறையை முழக்கி வயல்களில் விளைந்த நெற்கதிர்களில் வந்து படியும் பறவைகளை ஓட்டுதலும் நெல்லரிதலும் ஆகிய தொழில்களைச் செய்கின்ற வினைஞர்களான களமர் நாரைகள் உடைத்து உண்டவெளுத்த வயிற்றையுடைய ஆமையினது இறைச்சியை எடுத்து வந்து சமைத்துஉண்டனர்)என்று ஐங்குறுநூறு (81) கூறுகிறது.

"பழன யாமைப் பாசடைப் புறத்து

கழனி காவலர் சுரிநந்து உடைக்கும்"

என்று, விலங்குகளும் பறவைகளும் நெற்கதிர்களை மேய்ந்து அழித்து விடாமல் காவல்காத்த களமர் ஆமையின்இலை போன்ற முதுகில் நத்தைகளைத் தட்டி உடைத்து உண்டனர் என்ற செய்தியை நற்றிணை (280) கூறுகிறது.

வேட்டைச் சமூகமாக மக்கள் வாழ்ந்த காலகட்டத்தில் வேட்டை நாய்களும் செந்நாய்களும் கடித்துப்போட்ட எச்சிலான மரையான், உடும்பு, முள்ளம் பன்றி முதலியவற்றின் இறைச்சியைச் சமைத்து உண்ட காட்சியை நமக்குக் காட்டி சங்க இலக்கியங்கள், வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்பட்டிருந்த அடிமைச் சமூகத்திலும் நிலப்பிரபுத்துவ சமூகத்திலும் நாரைகள் உண்டு கழித்த எச்சிலாகிய ஆமை இறைச்சியையும் நத்தைகளையும் அடிமைகளான களமர் சமைத்து உண்ட காட்சியையும் நமக்குக் காட்டின.

வேட்டைச் சமூகத்து அவலம் அடிமைகளின் வாழ்வில் தொடர் கதையாகத் தொடர்ந்த செய்தியைச் சங்க இலக்கியங்கள் தெளிவாகக் கூறுகின்றன.

உழைக்கும் மக்களான ஏழைகள் தவளை மற்றும் நத்தைகளை உண்ணும் வழக்கம் இன்றும் நீடிக்கவே செய்கிறது. தலித்துகளான பறையர்களில் ஒருபிரிவினர் "தவளை தின்னிப்பறையர்" எனப்படுகின்றனர். அவர்கள் மணலைக் கிளைத்துத் தவளைகளை எடுத்து உண்கின்றனர். அதனால் அவர்கள் அவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்.

உழைக்கும் மக்கள் நத்தைகளைச் சமைத்து உண்ணும் நிகழ்வு தற்கால இலக்கியங்களிலும் பதிவாகி உள்ளது. தோழர் சோலை சுந்தரப்பெருமாள் அவர்கள் எழுதியுள்ள 'செந்நெல்' நாவலில், வயல்களில் உழைக்கும் மக்கள்தவளைகளையும் நத்தைகளையும்  ருசிக்காக உண்ணவில்லை. பசிக்காகவே உண்கின்றனர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஏழை எளிய மக்கள் பசியாலும் பட்டினியாலும் வருந்தும் நிலையில் வயல் பரப்புக்களில் இருந்து எடுத்து வந்த நத்தைகளையும் மணலைக் கிளைத்து எடுத்து வந்த தவளைகளையும் வேக வைத்து உண்டு பசியைப் போக்கிக் கொள்ளும்அவலம் இன்றும் முடிவில்லா நெடுந்தொடர்களாக நீடித்துக் கொண்டுதான் உள்ளது.

- வெ. பெருமாள்சாமி

Pin It