தனித்தன்மை நிறைந்த அண்மைக்கால நாவல்களில் குறிப்பிடத்தகுந்த நாவல் பேட்டையான் சத்திரம். நாவலின் களம் புதுக்கோட்டை. இங்கு வாழும் மக்களின் வாழ்க்கைமுறைகள் தமிழக மக்களின் வாழ்க்கை முறையிலிருந்து மாறுபட்ட தோற்றம் கொண்டதாகக் காணப்படுகிறது. அதற்குக் காரணம் அந்தப் பகுதி பிரெஞ்சு நாட்டின் காலனியாக இருந்து விடுதலை பெற்றதுதான். இங்குவாழும் மக்களின் பல பகுதிகளின் காலனி அமைப்பு பிரெஞ்சு சார்ந்ததாகவே உள்ளது. அதன் பதிவுகள் அடங்கிய வாழ்க்கை உறவுகளும், நிகழ்வுகளும் நாவலின் உள்ளடக்கமாகவும், உயிரோட்டமாகவும் அமைந்துள்ளன.

pettaiyaansathiram novelஇன்றைய புதிய வாழ்க்கையுடன் அன்றைய பழைய வாழ்க்கையோடு ஒப்பிடுவது போன்ற ஒருவிதக் கருத்து மனதில் வடிவம் பெற்று மனதை நெகிழச் செய்கிறது.

இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் மக்களின் உறவுகள் எப்படி இருந்தன என்பதை இன்றைய வாழ்க்கை முறையை ஒப்பிடும் வகையில் சிதறலான வாழ்க்கை நிகழ்ச்சிகளை கால வரையில்லாமல் ஒருங்கிணைத்துப் பார்க்கும் போது மக்களின் வாழ்க்கை மாற்றங்களும் வளர்ச்சியும் உயர்வும் தனிப்பட்ட ஒரு மக்கள் வரலாறாக வாழ்க்கை வடிவம் பெறுவதை அறிய முடிகிறது.

அறியாமை, ஏழ்மை, வறுமை போன்ற பின்தங்கிய வாழ்நிலைமைகளிலிருந்து உழைப்புத்திறனின் விளைவாக படிப்படியாக முன்னேறி வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளும் நிகழ்வுகளை இயல்பாகச் சித்தரிக்கிறார் நாவலாசிரியர்.

நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ள மனிதர்கள், நிகழ்ச்சிகள், மாற்றங்கள் எல்லாமே கற்பனை கலவாத எதார்த்தமாக வடிவம் பெற்றுள்ளன. நாவலின் மொழியும், மக்களின் இயல்பான பேச்சு மொழியும் பின்னிப்பிணைந்து மன நெகிழ்ச்சியைத் தருகின்றன.

இந்த அனுபவத்தைத் தனது முன்னுரையின் தொடக்கத்திலேயே திருப்பூர் கிருஷ்ணன் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

“புதுவை ரா. ரஜனி எழுதியுள்ள, பேட்டையான் சத்திரம் என்ற புதினம் இன்றைய சமகால வாழ்வின் யதார்த்தமான பிரதிபலிப்பு. புதுச்சேரியைச் சார்ந்த ஒரு பகுதியாக பேட்டையான் சத்திரத்தை சித்திரிக்கிறார் ஆசிரியர். அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த மனிதர்களே இதில் வரும் பாத்திரங்கள். ”

“அந்த மனிதர்கள் பல தரப்பட்டவர்கள். அவர்களிடையே வம்பு தும்பு உண்டு வறுமை, வலிமை எல்லாம் உண்டு. இந்துக்கள், கிறிஸ்துவர்கள் எனப் பல மதத்தவர் உண்டு. அவர்களின் நம்பிக்கைகளும் மூடநம்பிக்கைகளும் ஒரு சேர உண்டு. இவற்றையெல்லாம் மீறி, தேவைப்படும்போது பொங்கும் உயர்தர மனிதாபிமானமும் உண்டு. ”

“பேட்டையான் சத்திரத்தை நம் ஊரின் அருகே கூட நாம் பார்க்கமுடியும். அங்கே வசிக்கும் மனிதர்களை நாம் தெருக்களிலும் ஏன் வீட்டிலும் கூட நாம் காண முடியும். அப்படி உணரச் செய்திருப்பதே ஆசிரியரின் வெற்றி. ” தொடக்கத்திலேயே நாவலாசிரியர் பேட்டையான் சத்திரத்தை அதன் தனித்தன்மையோடு விளக்குவது வியப்பளிக்கிறது.

“பேட்டையான் சத்திரம் என்ற திகிலான பெயரைக் கொண்ட அந்தப் பகுதியில் மேகநாத் புத்தர் காலனி புற்றுக் கோயிலும் பிரசித்தி பெற்றவை. அந்தக்கோயிலில் தான் காலனிக்குச் செல்லும் வழிக்கு அடையாளமாகச் சொல்லப்படும் ஒல்லியான வேப்பமரம் முதலில் வளர்ந்திருந்தது. பிறகு அதனைச் சுற்றிக் கரையான் புற்று உருவாகியிருந்தது. கைக்குழந்தை அளவுக்குப் புற்று வளர்ந்து நின்றதும், மாரியாத்தாவின் செல்லக்குழந்தையான பாம்பு ஒன்று தஞ்சம் புகுந்து அந்த வீட்டைத் தனதாக்கிக் கொண்டது. முட்டையும் பாலும் அது கேட்காமலே வைக்கப்பட்டிருந்தன. அதற்கும் அவை ருசிகரமாக இருந்தன.

இந்த விவரிப்பின் வாயிலாக பேட்டையான் சத்திரத்தின் மரபு வழிப்பட்ட சூழலை அவர் புலப்படுத்துகிறார்.

“மேகநாத் புத்தர் காலனி மனிதர்கள் அநேகம் பேர் வாழ்க்கை வலைவீசித் தேடிப் பாவப்பட்ட ஜீவன்கள். பணம் என்னும் பயங்கரப்பேய் பயமுறுத்திக் கொண்டே இருந்தது அவர்களை. ”

“ஒரு நாளில் இருபத்து நான்குமணி நேரங்கள் ஓட்டுவது என்பது காலனி மக்களுக்கு நீண்ட போராட்டமாகத் தான் இருந்தது. சிறுவர்களான நாங்கள் மட்டும் ஜாலியாய் இருந்தோம். ”

அங்கங்கே குறிப்பிட்ட தனித்தன்மை வாய்ந்த ராணுவ அதிகாரி சந்திரநாத், இந்திக்காரி போன்றவர்களையும் நாவலாசிரியர் குறிப்பிடுகிறார்.

நாவலை இரண்டு பாகங்களாகப் பிரித்துத் தன் வாழ்க்கையில் வளரும் நிலையில் பெற்ற, கண்ட, அனுபவித்த நிகழ்வுகளை அங்கொன்றும், இங்கொன்றுமாக நாவல் முழுவதும் விறுவிறுப்பாகவும், மனநெகிழ்ச்சியோடும் தொடர்ந்து சித்தரித்துக் கொண்டே செல்கிறார். அவையெல்லாம் ஒவ்வொரு நபரின் வாழ்வியல் அனுபவங்களை நினைவூட்டி மன எழுச்சி பெறத் தூண்டுகின்றன.

மேகநாத புத்தர் காலனியில் வாழும் தனித்தன்மை வாய்ந்த இராணுவ அதிகாரி சந்திரநாத் பற்றிக் குறிப்பிடுகிறார் நாவலாசிரியர்.

“ராணுவ அதிகாரி சந்திரநாத் அவரது நீண்டமூக்கு மனைவி, சுரேந்திரநாத் கோபால நாத், கோபால்நாத் கந்தநாத் என்ற பெரிய மகன்கள். சந்திரநாத் மனைவியை ‘மணி’ என்று கூப்பிடுவார். நான், அவங்களோடு பேர் ‘மணிநாத்’ என்று இருந்தால் நன்றாயிருக்கும் என்று எண்ணுவேன். காலனிக்கு மறைமுகமாய் பெயர் ஒன்று உண்டு. அது மூக்கு நீட்டி. ”

அடுத்து காலனியில் வசிப்பவர்களின் கவனத்துக்கு உள்ளான ஒன்று இந்திக்காரி வீடு. காலனி மக்கள் ராட்சசி என்ற சொல்லை அவளை வைத்துத் தான் உருவகப்படுத்தியிருந்தார்கள். இப்படி காலனிப்பகுதிகளில் மனிதர்களின் குணநலன்களை வைத்து அடையாளப்படுத்தும் வழக்கம் இருந்து வந்ததையும் தன்னுடைய படைப்பில் குறிப்பிட்டுக் காட்டுகிறார்.

தன்னுடைய இளம்பருவ அனுபவங்களையும் கூட நினைவுகளிலிருந்து தேர்ந்தெடுத்து அங்கங்கு பதிவு செய்து மனம் நெகிழச் செய்கிறார் நாவலாசிரியர்.

“பத்து நாட்களுக்குப் பெரிய வாத்தியார் வரவேயில்லை. கணக்கு மிசேதான் அலுவலக வேலைகளைக் கவனித்துக் கொண்டார். பெவா நாற்காலியில் பெருமையாக அமர்ந்து கொண்டார். அந்த வாரம் முழுவதும் கணக்குப் பாடத்தில் இம்சை இல்லாமல் இருந்தது. பதினோறாவது நாள் காலை பள்ளிக்குச் சென்ற எனக்குப் பெரும் அதிர்ச்சியும், பயமும் சூழ்ந்து கொண்டது. பள்ளியே திமிலோகப்பட்டு கொண்டிருந்தது. பெவா அறைவாசலுக்கு அருகில் இருக்கும் கரும்பலகையில் வெள்ளைச் சாக்பீஸால் எழுதப்பட்ட பளீர் வாசகம்.

கண்ணீர் அஞ்சலி

நமது பள்ளியின் தலைமையாசிரியர் அவர்கள்

இன்றுகாலை இயற்கை எய்தினார்கள்

அன்னாரின் பிரிவுக்கு எங்கள் கண்ணீரை

மாலையாக்குகிறோம்!

பெவா விடியற்காலையில் தூக்கு மாட்டிக் கொண்டார். எனக்கு பெவா என்ற பிம்பம் இல்லாத பள்ளியை நினைத்துப் பார்க்க பிடிக்கவில்லை. என்ன அறிவாளி அவர். அவருக்குத் தெரியாத விஷயமே கிடையாது! மாணவர்களின் ஒவ்வொரு பெயரும் அவருக்கு ஞாபகத்தில் இருக்கும். அவர்களது குடும்பமும் அத்துப்படி.                நாவலாசிரியர், ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சிகளை சுவைபடச் சித்திரிப்பார். அந்த வகையில் அவர் குறிப்பிடத்தகுந்த ஒரு நிகழ்ச்சியைக் காட்சிப்படுத்துகிறார்.

“ஆர்மோனியப் பெட்டி, கித்தார், வண்ண மணிகள் கொண்ட கைப்பிடி வைத்த ஷேங்காய் வாத்தியம் சகிதமாக வெள்ள வேட்டி, ஜிப்பா, வெள்ளைப் புடவை, ஜாக்கெட் அணிந்த குழுவொன்று ‘ஜிப்புகள்’ வைத்த புத்தகங்களுடன் வந்து சேருவார்கள்.

கண்ணீர் விட்டு ஜெபம் செய்வார்கள். இடையிடையே வித்தியாசமாக கூச்சல்களை இடுவார்கள். பாடல்கள் பாடி பக்தியை வளப்பார்கள். தம்புவும் தன் பெற்றோருடன் பாடல்களை மனம் விட்டுப் பாடுவான். காலனியே இசை வெள்ளத்தில் நிறையும். எட்டு மணிக்கு ஆரம்பமாகும் இந்த நிகழ்ச்சி பத்து மணிக்கு முடியும். மந்தையில் தவறிய வெள்ளாட்டுக் குட்டி மூலம் மனிதநேயம் வெளிப்படும். பத்துமணிக்குப் பிறகு தம்பு அப்பா ஆட்டிறைச்சியோ (அ) மீன்களோ வாங்கச் செல்வார்.

இவ்வாறு எதிரும் புதிருமாக நிகழும் வாழ்க்கை முறைகளை வியப்புக்குரிய விதத்தில் நாவலாசிரியர் அடையாளப்படுத்துகிறார்.

அத்துடன் அகம் அறியாமல் பேசி, முகம் அறியாமல் உறவாகும் மனிதர்களையும் அடையாளப்படுத்தத் தவறுவது இல்லை.

நாவலாசிரியர் தன் படைப்பை இரண்டு பாகங்களாகப் பிரித்து. முதல் பகுதியை விரிவாகவும், மாறுபட்ட நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தும் வடிவமைத்துள்ளார். இந்தப் பகுதியில் இளம் தலைமுறையின் படிப்படியான மாற்றத்துடனும், வளர்ச்சியுடனும் சித்திரித்திருக்கிறார். இது, நாட்டின் விடுதலைக்குப் பிறகு தொடர்ந்து நிகழ்ந்த கலாச்சாரப் பண்பாட்டு வளர்ச்சியை இனம் காட்டுகிறது.

அறியாமையும், வறுமையும், ஏழ்மையும் காணப்பட்ட பரவலான இடங்கள், கல்வி, கலாச்சார பண்பாடு, தொழில் முறைகளில் அறிவுக்கண்ணோட்டத்தில் எப்படியெல்லாம் மாற்றம் அடைந்தன என்பதை ஓர் இளம் சிறுவனின் வாழ்க்கை வரலாற்றுப் பின்னணியை எதார்த்தமாகவும், துல்லியமாகவும் நாவலில் அவர் பதிவு செய்துள்ளார்

அடுத்து, இரண்டாவது பாகத்தில் வளர்ச்சியடைந்த சமுதாயத்தில் மனிதர்களின் மனப்போக்குகளும் நடைமுறைகளும், வாழ்வியல் கண்ணோட்டங்களும் என்னவிதமான மாற்றங்களையும் விளைவுகளையும் ஏற்படுத்தின என்பதை எதார்த்தமான மனிதர்களின் வாழ்விலிருந்து தேர்ந்தெடுத்து. நாவல் என்ற வடிவத்தில் ஒரு வாழ்க்கைத் தொகுப்பாக வழங்கியுள்ளார். இது இந்திய விடுதலைக்குப் பின்பு அதன் தொடர்ச்சியான வரலாறாகவும் அமைந்துள்ளது.

திறந்த மனத்துடன் விருப்பு வெறுப்பு இல்லாத கண்ணோட்டத்தில் நாவலாசிரியர் வடிவமைத்த இந்தப் படைப்புக்குறித்த திருப்பூர் கிருஷ்ணன் தெளிவான ஒரு மதிப்புரையை முன் வைக்கிறார்.

“போலித் துறவிகளும், போலி ஆன்மிகவாதிகளும் மட்டும் இல்லை. எல்லா மதத்திலும் ஊடுருவியிருக்கிறார்கள். ஒரு மதத்தைச் சார்ந்து சொன்னாலும் மேற்கண்ட சம்பவத்தை எல்லா மதங்களின் ஒட்டு மொத்தக் குறியீடாகவே கொள்ள வேண்டும்.

மதங்களின் எதிரி அல்ல ஆசிரியர். ஆன்மிகத்தின் எதிரியும் அல்லர் அவர் ஆனால். மதம் சார்ந்தும் ஆன்மிகம் சார்ந்தும் பொய்யாக இட்டுக் கட்டப்படும் எல்லா மூடநபிக்கைகளையும் தீவிரமாக எதிர்க்கும் ஒரு தார்மிகக் கோபம் அவரிடம் இருக்கிறது. இத்தகைய அறநெறி சார்ந்த சீற்றம் பகுத்தறிவுள்ள எல்லா ஆன்மிகவாதிகளிடமும் இருப்பது இயல்புதானே”

“மிகக் கட்டுக் கோப்பான ஒரே இழையைக் கொண்ட கதை என்று இந்த நாவலைச் சொல்ல முடியாது. பல காட்சிகளின் சித்தரிப்பை இணைப்பை நாவலாக்கியிருக்கிறார் என்பதே பொருந்தும். ஓர் ஊருக்கு நேரில் போய் வந்தது பல்வேறு குடும்பங்களைப் பற்றி அறிந்து கொண்டது போன்ற உணர்வையே இந்நாவல் தருகிறது. நாவல் வடிவாக்கத்தில் இவ்விதம் அமைப்பது பல உயர்தரத் தமிழ் நாவல்களில் காணக்கிடைக்கும் போக்குத்தான்.

“நாவலின் முடிவு மனத்தில் பாரத்தை ஏற்றுவதாக நெடுநேரம் யோசிக்க வைக்கிறது. ஒரு முழுவாழ்வை வாழ்ந்ததான உணர்வு நாவலை முடிக்கும் போது எழுகிறது. நாவலை வாசிக்கும் பெரும்பாலானவர்கள் இதே மதிப்பீடுகளுக்கு உள்ளாவார்கள் என்பதில் சந்தேகமில்லை. “இந்தப் புதினத்தை வாசித்து முடித்தவுடன் மனத்தில் தங்குவது இதன் சரளமான நடை. தங்குதடையில்லாமல் விறுவிறுவென்று பொங்கிப் பாயும் நீரோடை போல் இதன் நடை ஓடுகிறது. சிடுக்குமுடுக்கான சொற்றொடர்கள், புரிந்து கொள்ளச் சிரமமான வாக்கிய அமைப்புக்கள் போன்றவையும் எங்கேயும் இல்லை. பாரதி கவிதையிலும், வ. ரா. , கல்கி போன்றவர்கள் உரைநடைகளிலும் இல்லாத தனிநடையாகக் கொண்டிருக்கிறார் ஆசிரியர். ”

நாவலில் மாறுபட்ட பல வகையான அனுபவங்கள் பதிவாகியுள்ளன. அவை நிகழ்காலத்தோடும் அதைச் சார்ந்த கடந்த காலத்தோடும் ஒன்று கலந்து பிணைந்துள்ளன. இந்திய விடுதலைக்குப்பின் பெருமைப்படும் வகையில் புதிய வாழ்க்கையினை அமைத்துத் தொடர்ந்து முன்னேறும் மக்களின் வாழ்க்கை முறைகளை ஓர் எதார்த்தமான தற்கால வரலாறாகவும் இந்த நாவல் புதிய வடிவில் வெளிவந்துள்ளது.

இது குறிப்பிடத் தகுந்த ஒரு பகுதியின் குறுகிய வரலாறு. வாழும் மனிதர்களின் பிரச்சனைகளை நுட்பமாக உள்ளடக்கியிருக்கிறது.

- சி. ஆர். ரவீந்திரன்