சங்க இலக்கியம், சிறார் இலக்கியம், தற்கால இலக்கியம், விளிம்பு நிலையினர் இலக்கியம், பெண்ணியம், சுற்றுச்சூழலியல் போன்ற பல்வேறு தடங்களில் தம் கருத்துகளை விதையாகத் தூவிச் செல்பவர் இந்நூலாசிரியர், அக்சிலியம் கல்லூரி முதல்வர் முனைவர் அருட்சகோ.அ. ஆரோக்கிய ஜெயசீலி அவர்கள். எப்பொழுதும் முப்பொழுதும் வாசிப்பை நேசமாக்கியவர். சூழலியலைப் பாதுகாக்க வேண்டும் என்ற துடிப்பைத் தன் இதயத்துடிப்பிற்கு நிகராக மதித்தவர். அதன் விளைவாக ‘பசுமைப் பெண்கள்' என்னும் நூல் உயிர்ப்புப் பெற்றது. இது ஆசிரியரின் ஆறாவது நூல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நூல் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கப் போராடிய பெண்களின் வாழ்வியலை, வரலாறுகளைப் பதிவுகளாய் தாங்கியுள்ளது.
இலக்கியக் காலந்தொட்டு இன்று வரையிலுமான இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்ற பெண்களின் எண்ணம் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது என்பது உண்மை. பேரிடர்கள் பல தோன்றி மக்களை மிரளவும் அலறவும் வைத்திருக்கின்ற இவ்வேளையில், அதனைப் போக்குவதற்கான வழிகளையும், சூழலியலை, இயற்கையைப் பாதுகாத்துப் பராமரிக்கின்ற நெறிகளையும் நம் கண்முன்னே பசுமைப் பெண்களாய் கொண்டுவந்து நிறுத்தும் ஆசிரியரின் சிந்தனை போற்றுதற்குரியது.
பெண்களால் என்ன செய்ய முடியும்? என்ற கேள்விக் கணைக்கு ‘பெண்களால் எல்லாம் முடியும்’ என்ற பதில் விதை போடுகிறது இப்புத்தகம்.
இந்நூலில் இடம்பெற்றுள்ள பத்துக் கட்டுரைகளும் பத்துப் பெண்களின் துல்லியமான சிந்தனையையும், இயற்கைப் பாதுகாப்பில் இவர்கள் மேற்கொண்ட துணிவானப் பணிகளையும் இவர்களின் முழுமையான பங்களிப்பையும் விரித்துரைக்கின்றது.
இவர் சூட்டியிருக்கும் ஒவ்வொரு தலைப்பிற்கான சிறப்புப் பெயரும் அப்பெண்களின் சாதுர்யத்தை வெளிப்படுத்துவதோடு அதனை முழுமையாக படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது. படிக்கின்ற போதே நாம் சூழலியலைப் பாதுகாக்க முயற்சிகளை மேற்கொண்டோமா என்ற கேள்விகள் நம்மையே நிலைகுலுங்க வைப்பதும் உண்மைதான்.
மரம் நட்டு, வளர்த்து, பாதுகாத்து தாய்மைக்கான உன்னதத்தன்மையை உலகப் பார்வைக்கு முன் நிறுத்தியுள்ளார் சாலுமரத்த திம்மக்கா அவர்கள்.
பருவநிலை மாற்றம், நெகிழிகளின் பயன்பாட்டை குறைத்தல், புதைவடிவ எரிமங்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்ற எச்சரிக்கைக் குரலைக் கொடுத்தவர் பருவநிலைப் பாதுகாப்புப் போராளி லிசிபிரியா கங்குசம் எனும் சிறுமி.
ஆறுகளைப் பாதுகாத்து, மின்சாரத்தை எடுக்காமலும், அணைகள் எழுப்பாமலும் தடுத்து ஆற்றையும் ஆற்றொழுக்கத்தோடு வாழும் மக்களின் வாழ்வையும் மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டவர் ஆறுகளின் அன்னை மேத்தா பட்கர்.
பருவநிலை மாற்றம் விவசாயிகளிடம் ஏற்படுத்தும் பாதிப்பைக் குறித்தும் சமத்துவமான எதிர்காலம் குறித்தும் பேசியவர் பசுமை அரசியல்வாதி சுனிதா நரேன்.
வனப்பாதுகாப்பு, புலிகள் பாதுகாப்பு, முப்பதுக்கும் மேற்பட்ட உயிரின வகைகள் பாதுகாப்பு, காட்டுத் தீ பரவாமல் தடுத்தல், வன விலங்குகளை வேட்டையாடாமல் தடுத்தல் போன்ற முயற்சிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் காடுகளின் தாய்த் தெய்வம் துளசி கவுடா அவர்கள்.
பசுமைப் புரட்சி விவசாயத்தின் மரபுத் தன்மையை அழித்துவிடக்கூடாது என்ற அக்கறையில் 40க்கும் மேற்பட்ட விதை வங்கிகளை உருவாக்கி பலதரப்பட்ட விதைகளைப் பாதுகாத்தவர் விதைகளின் வித்தகி வந்தனா சிவா.
மக்களின் வாழ்வாதாரம் உயர வேண்டுமென்றால் மண்ணையும், மக்களையும் பாதுகாக்க கென்யா முழுவதும் மரம் நட வேண்டும் என்பதனைப் புரிந்துகொண்டு ‘பசுமைப் பகுதி இயக்கத்தைத்’ தோற்றுவித்தவர் வனராணி வான்காரி மாத்தாய்.
நிலம், நீர், பறவை, விலங்கு, மண், மக்கள் என அனைத்தையும் தொடர்புப் படுத்துவது, ஒன்றை அழிக்க நினைத்தால் மொத்தமும் அழிந்துவிடும் என்ற எச்சரிக்கையை விடுத்தவார் இயற்கையின் தீர்க்கதரிசி ரெய்ச்சல் கார்சன்.
இயற்கைப் பாதுகாப்பு, பாலின சமத்துவம், அனைவருக்குமான வேலைவாய்ப்பு இம்மூன்று கருத்தையும் மையப்படுத்தி ‘ப்ளு ஸ்டோன்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கி, திடக்கழிவுகள், கண்ணாடிகள் போன்றவற்றை மறுசுழற்சி செய்து அலங்காரக் கற்களை உருவாக்கியவர் மண்காக்கும் மங்கை ரவான் ரசாப்.
பொதுவாகனங்களில் பயணிப்பது, விமானப் பயணத்தைத் தவிர்ப்பது, இறைச்சி உணவைத் தவிர்ப்பது, காய்கறித் தோட்டங்களை அமைப்பது, மின்சாரப் பயன்பாட்டிற்கு சூரியஒளி கலன்களைப் பயன்படுத்துவது போன்றவை காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் என்கிறார் காலநிலைக் கலங்கரை கிரேட்டா.
மேற்கூறிய பசுமைச் சிந்தனையாளர்களின் கருத்தினை உள்ளடக்கிய இந்நூலானது பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், தொழில்நுட்பத் துறையினர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் வாசிக்க வேண்டிய நூலாகும்.
இன்றைய வாசிப்பிற்கும் சூழலியல் சிந்தனைக்கும் ஏற்றதொரு கருத்தினை முன்வைக்கின்ற ஒரு சிறந்த நூல். இனிவரும் காலங்களில் சமூகத்தில் குறிப்பாகச் சூழலியலில் பல மாற்றங்களை இந்த நூல் கொண்டு வரும்.
மரம் வளர்த்தல், ஆறுகளைப் பாதுகாத்தல், நீரை சேகரித்தல், வீட்டில் வளர்க்கும் தாவரம், செடி, கொடிகளுக்கு நீர்ப்பாய்ச்சுதல், காகிதத்தை அளவோடு பயன்படுத்தல், மின்சாரம் பாதுகாத்தல், நெகிழிகளை பயன்படுத்தாமை, பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாமை, வாகனங்களை அதிகளவில் பயன்படுத்தாமை போன்ற நற்சிந்தனைகள் வாசகர்களின் உள்ளத்தில் இந்நூல் பதியம்போடும் என்று நம்புகிறேன்.
எப்பொழுதும் சேவையாற்றும் கண்ணெதிர் கடவுளர்களாய் நிற்கும் இயற்கையைப் பாதுகாப்போம்! சூழலியல் பராமரிப்பில் நாம் காட்டுகின்ற அக்கறையால் இயற்கை மீளட்டும்! மானுடம் மிளிரட்டும்!!
இந்த நூலை அச்சிட்டு வெளியிட்ட நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட். பதிப்பகத்தின் நூலாக்கப் பணி அருமை.
நூல் பெயர் - பசுமைப் பெண்கள்
முனைவர் அருட்சகோ. அ. ஆரோக்கிய ஜெயசீலி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
நூலின் விலை: 50
- முனைவர் ஜ.பபிதா, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, அக்சிலியம் கல்லூரி, வேலூர் - 6