‘காய்த்த மரத்தில் கல்லடி படும்’ என்று சொல்வார்கள். உலகம் புகழும் திருக்குறள் மீது சொல்லடிபடுகிறது, அவ்வளவுதான். நெருப்பு என்றால் நாக்கு வெந்து போய்விடாது. குப்பையில் வீசினாலும் மாணிக்கம் எப்போதும் மாணிக்கம்தான். அதன் மதிப்பு குறைந்து விடாது. இந்தத் திருக்குறளும் அப்படித்தான்.
பார்வையற்றவர்கள் யானையைப் பார்ப்பது போன்று சிலர் திருக்குறளைப் பார்க்கின்றனர். வானத்துக்குக் கீழேயுள்ள எல்லாம் விமர்சனத்திற்கு உரியதுதான். ஆனால் அதற்கு நடுநிலைமையும், நல்ல எண்ணமும் இருக்க வேண்டும். நடுநிலைமை தவறிய விமர்சனங்கள் ஒரு சார்பான தூற்றலேயாகும். அதற்கு யாரும் கவலைப்பட வேண்டியதில்லை.
தமிழ் கூறு நல்லுலகம் திருக்குறளைத் தலைமேல் வைத்துக் கொண்டாடுகிறது. அவரவர் பிள்ளைகளை அவரவர் கொண்டாடுவது இயற்கைதான். தமிழுக்கு அப்பாற்பட்ட உலகங்களும் இதனைக் கொண்டாடுகின்றன. அதனால்தான் அது உண்மையாகிறது.
“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”
என்று பாரதி பாடுகிறார்.
“வள்ளுவன்செய் திருக்குறளை
மறுவற நன்குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மனுவாதி
ஒருகுலத்துக் கொருநீதி?”
என்று மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை பாடுகிறார்.
மனுதரும சாஸ்திரம் என்பது மனித இனத்துக்கும், குறிப்பாக பெண்களுக்கும் எதிரான நச்சுக் கருத்துக்களைக் கூறுகிறது என்று கூறுகின்றனர். மனுவை ஆதரிப்பவர்களும் இதனை இல்லை என்று மறுக்கவில்லை.
‘மனுநீதியில் மொத்தம் உள்ள 2685 ஸ்லோகங்களில் இன்றைய சமூகத்துக்குத் தேறுபவை சில என்றாலும், அவை எல்லோருக்கும் பொதுவானவை. காலத்துக்கு ஏற்றவற்றைப் படித்துப் பயன் பெறலாம்’ என்று கட்டுரையாளர் கூறுகிறார். இதன் மூலம் அவர் கூறுவது என்ன? பெரும்பாலான ஸ்லோகங்கள் காலத்துக்குப் பொருந்தாதவை என்பதுதானே!
‘அந்தக் கால சூழ்நிலைக்கு ஏற்ப அறிஞர்கள் தங்கள் மனதில் பட்டதைச் சொன்னார்கள். இந்தக் காலத்துக்குப் பொருந்தாவிட்டால் பொருந்தாதவற்றை ஒதுக்கி விடலாம்’ என்று கூறுகிறார். ஆனால் எக்காலத்துக்கும் பொருந்தும் திருக்குறளை இதில் இழுக்க வேண்டிய தேவை என்ன?
மனுதர்மம் சாதிக்கொரு நீதி சொல்கிறது. திருக்குறளோ, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று கூறுகிறது. பிறப்பினால் ஏற்றத் தாழ்வு உண்டு என்னும் நூலை, ‘பிறப்பினால் எல்லோரும் சமம்’ என்று கூறும் நூலோடு ஒப்ப வைப்பது என்ன நியாயம்? என்ன நீதி?
அப்படிப் பொருத்திக் காட்டுவது காழ்ப்புணர்ச்சியின் உச்சம் இல்லையா? காய்தல் உவத்தல் இல்லாத நடுநிலைமை ஆகுமா?
உழவுத் தொழிலைத் திருவள்ளுவர் மிகச் சிறப்பான தொழிலாகக் குறிப்பிடுகிறார். ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்’ என்றும், ‘மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்’ என்றும் கூறுகிறார். அத்துடன் உழுதொழில் செய்பவர் உலகத்தாருக்கு அச்சாணி போன்றவர் என்பதை, ‘உழுவார் உலகத்தார்க்கு ஆணி’ என்கிறார். இதற்காகவே ‘உழவு’ என்று ஓர் அதிகாரத்தையே உருவாக்கியுள்ளார்.
ஆனால் மனுதருமம் கூறுவது என்ன? உழவுத் தொழிலை இழிவாகக் கூறுகிறது.
“பயிரிடுதலை மேலான தொழில் என்று சிலர் கருதுகின்றனர். ஆயினும் பெரியோர்கள் அதனைப் பாராட்டவில்லை. ஏனெனில் இரும்புக் கொழு நுனியுடைய கலப்பை, மண்வெட்டி இவற்றைக் கொண்டு பூமியையும், பூமியில் வாழும் சிறிய உயிரினங்களையும் வெட்ட நேரிடுகிறதன்றோ?” (அதிகாரம் 10 பிரிவு 84).
இவ்வாறு திருக்குறளுக்கும், மனுதருமத்துக்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. பொதுவாக ஒத்த கருத்துடைய நூல்களையே ஒப்புமை காட்ட வேண்டும். ‘இந்த நூலைக் குறை கூறுகிறாயா? அந்த நூலை நான் குறை கூறுவேன்’ என்று ஏட்டிக்குப் போட்டியாகப் பேசுவது அறிவுடைமையாகாது. வெறுப்புணர்ச்சியே யாகும். வெறுப்பை வளர்ப்பது நீதி நூல்களின் நோக்கமாக இருக்கக் கூடாது.
‘இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று’
இனிய சொற்கள் இருக்கும் போது இன்னாத சொற்களைக் கூறுதல் இனிய கனி இருக்கவும், காயைத் தின்பது போன்றதாகவும் என்று குறள் கூறுகிறது.
தாங்கள் மதிக்கும் ஒரு நூலைப் பற்றித் தவறான கருத்துகள் வருமாயின் அதற்குச் சரியான மறுப்புரை தருவதை யாரும் குறை கூற முடியாது. அது அவர்களது கடமையாகும். அதற்காக மற்றொரு நூலை வம்புக்கு இழுப்பது எப்படிச் சரியாகும்? எனக்கு ஒரு கண் போனாலும், அடுத்தவருக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என்று நினைப்பது போன்றதாகும்.
“மனுதர்ம சாஸ்திரம் தடை செய்யப்பட வேண்டுமானால் அதே காரணத்திற்காக திருக்குறளும் தடை செய்யப்பட வேண்டியதே” என்று கட்டுரையாளர் கூறுகிறார். இப்படி இவர் கூறக் காரணம் என்ன?
அறிவின் அடையாளமான நூல்களைத் தடை செய்வதை அறிவுலகம் எப்போதும் ஏற்றுக் கொள்வதில்லை. அதனை எதிர்க்கலாம், மறுக்கலாம், திறனாய்வு செய்யலாம். இதற்கெல்லாம் தடையில்லை. ஒரு நூலை ஏற்பதா? வேண்டாமா? என்பதைக் காலம் முடிவு செய்யும். தாங்கிச் சுமந்தாலும், தூக்கிப் பிடித்தாலும் அது இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
பிரெஞ்சுப் புரட்சியின் பிதாமகன் வால்டேர் இதுபற்றிக் கூறியது கவனிக்கத்தக்கது. “நீ சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் நான் மறுக்கிறேன். ஆனால் அதைச் சொல்ல உனக்குள்ள உரிமைக்காக இறுதி வரை போராடுவேன்” என்றான். கருத்துச் சுதந்திரம் என்பது அதுதான்.
இதுவரை கருத்துச் சுதந்திரத்தைப் பற்றியே கவலைப்படாதவர்கள் இப்போது தங்களுக்கு வரும்போது மட்டுமே கவலைப்படுகிறார்கள். இவ்வளவு ஆரவாரம் செய்வதற்குக் காரணம் அதுதான்.
“எனக்கு அடுத்த பிறவி எடுக்க நேர்ந்தால் தமிழனாகவே பிறக்க ஆசைப்படுகிறேன். அந்த மொழியிலுள்ள திருக்குறளை அம்மொழி மூலமாகவே படிக்க வேண்டுமென்ற ஆவலேயாகும்” என்றார் காந்தியடிகள். அவ்வாறு கூறியதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. அதற்குக் காரணம் அவரது அகிம்சைக் கொள்கைகளே!
“உலகத்திற்கு உபதேசிக்க புதிதாக என்னிடம் எதுவும் இல்லை. மலைகள் எவ்வளவு பழமையானவையோ அவ்வளவு பழமையானவை சத்தியமும், அகிம்சையும்” என்றார் அவர். அவர் குருவாக மதித்து வந்த ரஷ்யாவின் லியோ டால்ஸ்டாய் என்ற ஞானியையும் கவர்ந்தது திருக்குறள் என்று அறியும்போது நாம் பெருமிதம் அடைய வேண்டும்.
துன்பம் செய்தவரை எப்படித் தண்டிப்பது? எத்தனையோ தண்டனைகள் இருக்கின்றன. அவை காலம் காலமாக நடைமுறையில் இருக்கின்றன. ஒரே குற்றத்திற்கு சாதிக்கு ஒரு தண்டனையை மனுதருமம் கூறுகிறது. திருக்குறள் கூறுவது என்ன?
‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்’
துன்பம் செய்தவரைத் தண்டிப்பது என்பது அவரே தம் செயலுக்கு நாணும்படி நன்மை செய்து விடுவதாகும். இது எல்லோருக்கும் பொதுவானது.
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு
நமக்குத் தீமை செய்தவர்களுக்கும் நன்மை செய்யாவிட்டால் சான்றாண்மையால் பயன் என்ன? இவை அகிம்சையின் வழிகாட்டியல்லவா! அந்த இருபெரும் ஞானிகளைத் திருக்குறள் கவர்ந்ததில் வியப்பேதும் இல்லை.
“திருக்குறளை விடவும் சிறந்த அறநெறி இலக்கியம் உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லை” என்று ஆல்பர்ட் சுவிட்சர் என்ற ஜெர்மானிய தத்துவஞானி கூறியுள்ளார். உலக நீதி நூல்களை ஆராய்ந்து இந்த முடிவுக்கு இவர் வந்துள்ளார்.
ஐரோப்பிய மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் அதன் மதிப்பை உயர்த்தின. ஆங்கிலம், ஜெர்மன், இலத்தீன், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் முதலில் மொழிபெயர்க்கப்பட்டது. அதன்பின் இப்போது எல்லா மொழிகளிலுமே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆய்வு நூல்களும் கணக்கில. இதனால் மட்டுமே ஒரு நூல் பெருமை பெற்று விடாது. சமயச் சார்பற்ற ஒரு பொது நீதி நூல் என்பது இதற்கான தனிச் சிறப்பாகும்.
அறிவுலகம் புதிய நூல்களைத் தேடிக் கொண்டேயிருக்கிறது. பழங்கால படைப்புகள் மட்டுமல்லாமல் புதிய புதிய படைப்புகளையும் தேடிக் கொண்டே இருக்கிறது. அதற்கு நாடு, மொழி என்ற வேறுபாடு கிடையாது. மனுதர்மம் என்றோ திருக்குறள் என்றோ வேற்றுமை இல்லை. உயர்ந்தது, தாழ்ந்தது என்ற மதிப்பீடு இல்லை. அதில் என்னதான் கூறப்பட்டிருக்கிறது என்று ஆய்வதே அதன் பணியாகும்.
ஆய்வுலகமும், அறிவுலகமும் எப்போதும் அப்படித்தான். அதற்கு வேண்டுதல், வேண்டாமை கிடையாது. விருப்பு வெறுப்பும் கிடையாது. மொழி, இனம், நிறம், தேசம் என்னும் எல்லைகள் இல்லை. பரந்த மனமும், திறந்த பேச்சும், சிறந்த எண்ணமும் வேண்டும். அறிவுலகம் அப்படித்தான் இருக்கிறது, அப்படித்தான் இருக்க வேண்டும்.
திருக்குறளும் மனுதருமமும் இரு வேறு எல்லைகள். இவற்றை ஒப்பிட்டு ஆய்வு செய்வதே அதருமமாகும். அதர்மத்தை எல்லாம் தருமம் என்று கூறும் மனுதருமம் பற்றி யார் வேண்டுமானாலும் பேசலாம். இதில் திருக்குறளை ஒப்பிடக்கூடாது.
- உதயை மு.வீரையன்