தேசிய நெடுஞ்சாலை நாற்பத்தேழில்

அலைபேசி விளையாட்டில்

வேகம் கூட்டப்பட்ட பாம்பு

இரையை விழுங்க விரைவதைப் போல்

அந்த நள்ளிரவில் சீறிச் செல்கிறேன்

கனரக வாகனத்தில்

என் குழந்தையின் வருடலாய்

சிலிர்க்க வைக்கும் குளிர்காற்று

கண்ணாடியில் படியும் பனியயன

களைத்த கண்கள் மீது கவிழும் இமைகளை

நான் திறக்க தூக்கம் அடைக்க

தொடங்கியது துவந்தயுத்தம் அதற்குமெனக்கும்

தனிமையைத் தவிர்க்க ஒலிக்கவிட்ட குறுந்தகடும்

விறைத்து நகரும் கருத்த தேளின்

உருவம் பொறித்த சிறு பாக்கெட்டும்

என் ஆயுதங்கள்

ஒரு சிட்டிகை தூளை உள்ளங்கையில் அள்ளி வைத்து

கசக்கி உருட்டி திரட்டிய சிறு உருண்டையை

கீழ் உதட்டிற்கும் பற்களுக்குமிடையில் வைக்க

ஊறும் எச்சிலை உமிழ்ந்தபடி

பயணத்தைத் தொடர்கிறேன்

போதைச்சாறு கடவாயோரம் வழிந்தகணம்

கறுத்த நதியயன நீளும் தார்ச்சாலையின் குறுக்கே

ஒரு படகென கடந்தவனின் அலறல்

சடன் பிரேக்கிட

கிரீச்சிடும் டயரின் ஒலியாய் எதிரொலிக்க

தெறிக்கும் ரத்தத்தில்

தேய்பிறையின் சிதைந்த நிலா சிவந்த நொடியில்

சாலையோர மிகுந்த பெருமரங்களுக்கு பதிலியாக

சாலை நடுவே இருக்கும் அரளிச்செடிகள்

தம் அசைவை நிறுத்தின

என் வாகனத்தின் கீழே தார்ச்சாலை நழுவியபோது

மீண்டும் அசைய ஆரம்பித்தன

- சக்தி அருளானந்தம்

 

More articles by சக்தி அருளானந்தம்

Comments

1 comment

1
இளம்பிறை
நான்கு வழிச் சாலை யாருக்கு? உள்ளூர் மக்கள் சாலை வரி கட்டியும் சாலையைக் கடக்க முடியா நிலையில்தான் 4வழிச்சாலையை அரசு திட்டமிட்டுள்ளது. ஓரங்களில் இருந்த மரங்கள் இல்லை. அவற்றில் குடியிருந்த பறவைகள் இல்லை. அவற்றின் இனியகுரலோசை இல்லை. நிழல்கள் இல்லாததால் நிற்பதற்கும் மனமில்லை. நின்றால் எவனாவது வந்து அற்றுக் கொண்டு போகும் மரும மனிதர்கள் நடமாடும் கொள்ளையர்கள் மட்டுமே.எங்கிருந்தோ வரும் மனிதர்கள் விரைவாகப் பயணம் தொடர எங்கள் இடத்தில் எங்களுக்கு மதிப்பு இல்லை. கடக்கும்போதெல்லாம் எமனாக வந்து உயிரை எடுக்கும் உந்துகள் வந்துவிடுமே என்கிற பதற்றத்திலேயே சாலையைக் கடக்கும் மனிதர்கள். எங்களுக்குப் பாதுகாப்பு இல்லா நிலையில் ஏன் 4வழிச்சாலை, 6வழிச்சாலை எனும் கொள்ளை அடிக்கும் திட்டம்?

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.