முன்பு அழகாயிருந்த பெண் அவள், எல்லாவித வாய்ப்புகளும் பொருந்தி வர அன்புக்காகவும், காதலுக்காவும் திருமணம் செய்து கொண்டாள். ஆனால் அவளது துரதிருஷ்டம் காரணமாக காலப்போக்கில் அக் காதல் காற்றோடு தூசியாகியது. அவளுக்கு பிறந்த ஆரோக்கியமான குழந்தைகள் மேல் அவளால் உண்மையாக அன்பு செலுத்தமுடியவில்லை. தன்னிடம் அவர்கள் தள்ளி விடப்பட்டதைப் போல் உணர்ந்தாள். குழந்தைகள் அவளைக் குற்றம் சாட்டும் பார்வையில் பார்க்கும் பொழுது, சமாளிக்க முயற்சி செய்வாள். ஆனாலும், அவளுக்கு எதை சமாளிக்க வேண்டும் என தெரிந்ததே இல்லை. எப்படி இருப்பினும் குழந்தைகளின் முன்னிலையில் அவளது இதயத்தின் ஆழத்தின் மையப்புள்ளி வெறுமையாகவும், கடினமாகவும் ஆவதை உணர்வாள்.

இது அவளை மிகவும் சலனப்படுத்தி, குழந்தைகளை மிகவும் மென்மையாகக் கையாளவும் கவனத்துடன் பார்த்துக் கொள்ளவும், ஏதோ அவர்கள் மேல் மிகுதியான அன்பு செலுத்துவதைப் போன்ற பாவனையை உருவாக்கியது. தனது இதயத்தின் மையத்தில் யாருக்கம், எதற்கும் அன்பு செலுத்துவதற்கு எதுவுமில்லை என்பது அவளுக்கு மட்டும் தான் தெரியும். மற்றவர்கள் அனைவரும் இப்பெண்ணை அன்பான தாயாராகவும் குழந்தைகளை மிகவும் நேசிப்பவளாகவும் தான் பார்த்தனர். குழந்தைகளுக்கும் அப்பெண்ணுக்கும் மட்டும் தான் இது உண்மையில்லை என்பது தெரியும். பரஸ்பரம் தங்கள் கண்களினால் இதை அவர்கள் உணர்ந்தார்கள்.

அவளுக்கு ஒரு பையனும் இரண்டு சிறிய பெண்களும் பிறந்திருந்தனர். அவர்கள் தோட்டத்துடன் கூடிய அழகான வீட்டில் குடியிருந்தனர். வாயாடாத அமைதியான வேலையாட்களையும் அவர்கள் பெற்றிருந்தனர். இதனால் மற்றவர்களை விட உசத்தியாக உணர்ந்தனர். அவர்கள் வசதியாக வாழ்ந்தாலும் எப்போதும் ஒரு வித தவிப்பும், படபடப்பும் வீட்டில் இருந்து கொண்டே இருப்பதை உணர்ந்தார்கள். போதுமான பணம் இல்லாமல் தட்டுப்பாடு இருந்து கொண்டே இருந்தது. தாயாருக்கு சிறிய வருமானமும், தகப்பனுக்கு கொஞ்சம் வருமானமும் வந்துக் கொண்டிருந்தாலும், தாங்கள் வாழ்ந்து கொண்டிருந்த பகட்டான வாழ்க்கைக்கு போதாத நிலையிலேயே அவர்களின் பொருளாதாரம் இருந்தது. தகப்பன் நகரத்தில் ஏதோ ஒரு அலுவலகத்தில் வேலை செய்து வந்தார். ஏராளமான தகுதிகள் அவருக்கு இருந்தும், பொருளாதாரத்தில் இது எதுவும் உதவி செய்யவில்லை. எப்போதும் பணத் தட்டுப்பாடு வீட்டில் இருந்து கொண்டே இருந்தது. ஆனாலும் அவர்கள் தங்கள் வசதியான வாழ்க்கை முறையைக் குறைத்துக் கொள்ளத் தயாராயில்லை.

முடிவாக தாயார், தான் ஏதாவது செய்தே ஆகவேண்டும் என நினைத்தாள். ஆனால் எங்கிருந்து தொடங்குவது எனப் புரியாமல் தனது மூளையைக் குழப்பிக் கொண்டு, பலதையும் முயன்று, எதுவும் வெற்றிகரமாக நடக்காமல் தோல்வியிலேயே முடிந்தது. இதனால் அவளது முகத்தில் வருத்தத்தின் கோடுகள் ஆழமாகப் பதிந்தன. குழந்தைகள் வளர்ந்து பள்ளிக்குப் போக வேண்டிய காலமும் வந்தது. மேலும் பணம் வேண்டியிருந்தது. எல்லா செலவுகளுக்கும் மேலும் பணம் தேவையாக இருந்து கொண்டே இருந்தது. அழகான தனது உயர் ரக ரசனைகளால் செலவு மிகுந்த நடையுடை பாவனைகளை உடைய தந்தையாரும் பொருளாதார ரீதியில் எதுவும் சிறப்பாகச் செய்யமுடியவில்லை. மிகுந்த தன்னம்பிக்கை உடைய தாயாராலும் எதுவும் சாதிக்க முடியவில்லை. அவளது வாழ்வியல் சுவைகளும் மிகவும் செலவு மிகுந்ததேயாகும்.

இதனால் அந்த வீட்டில் எப்போதும், மேலும் பணம் வேண்டும், மேலும் பணம் வேண்டும் என்ற வெளிப்படையாக யாரும் பேசாத, ஆனால் ஒலித்துக் கொண்டே இருக்கும் ஒரு அமானுஷ்யமான குரல் கேட்கத் துவங்கியது. யாரும் பேசாமலேயே குழந்தைகளுக்கும் இக்குரல் கேட்கத் தொடங்கியது. விலையுர்ந்த அழகான பொம்மைகளும் அலங்காரப் பொருட்களும் நிரம்பிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டக் காலங்களில், இக்குரல் உரத்து ஒலிக்கத் தொடங்கும். நவீன மோஸ்தரில் இருந்த சாய்ந்தாடும் பொம்மை குதிரையருகேயும் அழகான பொம்மை வீட்டின் அருகேயும், ஒரு குரல் கிசுகிசுக்கத் தொடங்கும், மேலும் பணம் வேண்டும் மேலும் பணம் வேண்டும். இக்குரல் கேட்டவுடன் குழந்தைகள் விளையாட்டை நிறுத்தி விட்டு இக் குரலைக் கேட்பார்கள். ஒவ்வொரு குழந்தையும் மற்றவை கேட்டனவா என்று பார்க்கும். எல்லோரும் அதை கேட்டிருக்கின்றனர் என்ற உண்மை அவர்கள் கண்களில் தெரியும். மேலும் பணம் வேண்டும், மேலும் பணம் வேண்டும்.

இக்குரல், லேசாக ஆடிக்கொண்டிருக்கும் சாய்மான குதிரை பொம்மையின் கீழிலிருந்து கிசுகிசுக்க ஆரம்பிக்கும். பொம்மை குதிரை கூட தன் மரத்தாலான முகத்தினை நீட்டிட இந்த குரலை கேட்டது. அழகான பெண் பொம்மையும், முட்டாள்தனமாக காட்சியளித்த நாய் பொம்மையும் இக்குரலை தெளிவாகக் கேட்டன. வீடு முழுக்க இக்குரல் கேட்டது. மேலும் பணம் வேண்டும்.

ஆனால் யாரும் சத்தமாக இதைச் சொல்லவில்லை. தாழ்ந்த இந்தக் குரல் எங்கும் ஒலிப்பதால் யாரும் இதைப்பற்றிப் பேசுவதில்லை. நாம் எப்போதும் இதைப்பற்றி பேசயதில்லை. நாம் எப்போதும் சுவாசித்துக் கொண்டிருப்பதால் யாரும் நான் மூச்சு விடுகிறேன் என்று சொல்லாதது போல் அவர்கள் ஏதும் பேசவில்லை.

அம்மா என்றான் பால் என்ற அந்த சிறுவன். நாம் ஏன் நமக்கே சொந்தமான கார் ஒன்றை வைத்துக் கொள்ளாமல் வாடகை வண்டியையோ அல்லது மாமாவின் காரையோ இரவல் வாங்குகிறோம்?

நாம் ஏழையாக இருப்பதால்தான் என்றாள் அம்மா.

நாம் ஏன் ஏழையாக இருக்கிறோம் அம்மா?

உனது அப்பாவின் துரதிர்ஷ்டம்தான் காரணம் என்று சலிப்புடன் கூறினாள் அம்மா.

பையன் சிறிது நேரம் மெளனமாக இருந்தான். அதிர்ஷ்டம் என்பது பணமா அம்மா? என்று மெதுவாகக் கேட்டான்.

இல்லை பால், பணம் பண்ணக் காரணமானது தான் அதிர்ஷ்டம்.

ஓ அப்படியா, ஆஸ்கர் மாமா குப்பை துட்டு என்றார் அப்படியென்றால் பணம்தானே அம்மா?

குப்பை துட்டு என்றால் பணம்தான் ஆனால் அது அதிர்ஷ்டத்தை பற்றி சொல்லவில்லை.

ஓ அப்படியா பின் அதிர்ஷ்டம் என்றால் என்ன அம்மா?

அதிர்ஷ்டமா? அதுதான் பணம் பெற உதவும். நீ பாக்கியவானாக இருந்தால் பணம் உன்னை வந்து சேரும். அதனால்தான் பணக்காரனாக இருப்பதை விட பிறவி பாக்கியவானாக இருப்பது நலம். பணக்காரன் கூட பணத்தை இழக்க நேரிடும். ஆனால் பாக்கியவான் எப்போதும் நலன்கள் பெற்று பணமும் சேரப் பெறுவான்.

ஓ அப்படியானால் நீ பாக்கியசாலியா?

அப்பா அதிர்ஷ்மில்லாதவரா?

உன் அப்பா மிகவும் துரதிர்ஷ்டசாலி என வெறுப்புடன் அம்மா கூறினாள்.

நிச்சயமற்ற பார்வையுடன் பையன் அம்மாவைப் பார்த்தான். ஏனம்மா?

எனக்குத் தெரியாது, ஒருவர் அதிர்ஷ்டசாலியா அல்லது மற்றவர் துரதிர்ஷ்டசாலியா என யாராலும் தெரிந்து கொள்ளமுடியாது.

கடவுளுக்குத் தெரியலாம். ஆனால் அவர் எப்பொழுதும் சொல்வதில்லை.

அவர் சொல்லத்தான் வேண்டும், நீயும் அதிர்ஷ்டம் இல்லாதவளா அம்மா?

ஆம், இல்லாதவளாகத்தான் இருக்கவேண்டும். துரதிர்ஷ்டசாலியான கணவனை அடைந்தால்..

ஆனால் அதற்கு முன்பு நீ அதிர்ஷ்டசாலியா?

ஆம், கல்யாணத்திற்கு முன்பு நான் அதிர்ஷ்டசாலி என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால்? இப்போது நான் துரதிர்ஷ்டசாலிதான்.

ஏன்?

சரி, அதைப் பற்றி நீ கவலைப்படாதே. நானும் பாக்கியமில்லாதவளாகக் கூட இருக்கலாம்.

குழந்தையான அவன், தன் தாய் என்ன சொல்கிறாள் என பார்த்தபோது, அவளது முகவாய்க் கோடுகளின் அழுத்தத்தில் அவனிடத்தில் எதையோ மறைக்க முயல்வதை உணர்ந்தான்.

சரி, எது எப்படியோ? நான் அதிர்ஷ்டக் காரன் என உறுதியாகக் கூறினான்.

எப்படி? என்றாள் அம்மா, ஒரு திடீர் சிரிப்புடன். அவன் அவளைக் கூர்ந்து பார்த்தான். அவன் ஏன் அப்படி சொன்னான் என்று அவனுக்கே தெரியாது.

கடவுள் என்னிடம் சொன்னார் என தைரியமாக சொன்னான்.

அப்படித்தான் சொல்லியிருப்பார் என நினைக்கிறேன் என் கண்ணே, என சலிப்பு பொங்கக் கூறினாள் அம்மா.

அவர் சொன்னார் அம்மா

அபாரம் என்றாள் அம்மா, தனது கணவன் அடிக்கடி உபயோகிக்கும் ஆச்சரியகரமான சொல்லை உபயோகப்படுத்தினாள்.

பையனுக்கு தான் சொன்னதை தனது தாய் நம்பவில்லை என்றபோது கோபம் வந்தது, இதனால் தனது தாயாரின் கவனத்தைக் கவர முயற்சி செய்தான்.

பையன் தனது குழந்தைத்தனமான வழியில் அதிர்ஷ்டத்தின் மூலத்தை துப்பறிய முயன்றான். மற்றவர்களை கவனிக்காமல், தனிமையாகவும் உள்ளார்ந்த முறையிலும் அதிர்ஷ்டத்தை அடைய முயன்றான். அவன் அதிர்ஷ்டத்தை அடைய விரும்பினான்? தனது சகோதரிகள் இருவரும் பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கையில், இவன் தனது பொம்மைக் குதிரையில் அமர்ந்து கொண்டு, மிக வேகமாக சாய்ந்து சாய்ந்து ஆடிக் கொண்டிருப்பான். அவனது சாய்ந்தாட்ட வேகம் மற்ற இரு குழந்தைகளை சலனப்படுத்தும். பொம்மை குதிரை மிக வேகமாக சாய்ந்து ஆடும் போது இவனின் நெளிநெளியான கருமுடி காற்றில் அலையும். அவனது கண்களில் ஒரு வித்தியாசமான ஒளி ஒளிரும். அப்போது அப்பெண் குழந்தைகள் அவனுடன் பேசவே பயப்படுவார்கள்.

தனது முரட்டுத்தனமான சாய்ந்தாட்டம் ஓய்ந்த பிறகு பொம்மை குதிரையிலிருந்து இறங்கி அதன் லேசாக திறந்த சிவந்த வாயையும், பெரிய விழித்துக் கொண்டிருக்கும் கண்களையும் உறுத்து பார்த்துக் கொண்டே இருப்பான்.

ம். இப்பொழுது என்னை அதிர்ஷ்டத்திடம் அழைத்துப்போ. இப்பொழுதே அழைத்துப்போ.

ஆஸ்கர் மாமா கொடுத்த சிறிய சாட்டையைக் கொண்டு பொம்மைக் குதிரையின் கழுத்தில் அடிப்பான். அவனுக்குத் தெரியும், குதிரையை நிர்பந்தப்படுத்தினால் அது அதிர்ஷ்டத்திடம் அழைத்து போகும் என்று அதனால் அவன் மறுபடியும் பொம்மைக் குதிரையில் ஏறி வீராவேச ஆட்டத்தை தொடங்குவான். எப்படியாவது பொம்மை குதிரை அவனை அங்கு கொண்டு போய் சேர்த்துவிடும் என அவன் நம்பினான்.

பால் உனது குதிரை பொம்மையை உடைத்து விடப் போகிறாய். என அவர்களை கவனித்துக் கொள்ளும் தாதி கூறினாள்.

அவன் எப்போதுமே இப்படித்தான் வேகமாக ஓட்டுகிறான். என அவனது மூத்த சகோதரி கூறினாள்.

அதற்கு அவன் முறைத்துப் பார்த்த விதத்திலேயே அவர்கள் மெளனமானார்கள். தாதியின் கட்டுப்பாட்டிற்கு மீறி அவன் வளர்ந்து வரலானான். அவளால் ஒன்றும் செய்ய இயலவில்லை.

ஒரு நாள் அவன் தனது பொம்மைக் குதிரையில் மிக வேகமாக ஆடிக் கொண்டிருந்த போது ஆஸ்கர் மாமாவும், அவனது தாயாரும் வந்தனர். அப்போது அவன் அவர்களுடன் ஏதும் பேசவில்லை.

என்ன? பந்தையக் குதிரை சவாரி வீரனே வெற்றி பெறு ம் குதிரையை ஒட்டிக் கொண்டிருக்கிறாயா? என மாமா கேட்டார்.

சாய்ந்தாடும் பொம்மை குதிரை ஓட்டும் வயதை கடந்து விட்டாய், நீ இன்னும் மிக சிறிய பையன் இல்லை என்பது உனக்கு தெரியாதா? என்றாள் அம்மா.

ஆனால், அவன் தனது, நெருங்கி அமைந்திருந்த இரு நீல நிற கண்களால் முறைத்துப் பார்த்தான். அவனது முரட்டு சவாரிகளின் போது அவன் யாருடனும் பேசுவதில்லை. அவனது தாய் ஒரு தவிப்பான பார்வையை அவன் மேல் செலுத்தினாள்.

பால், திடீர் என குதிரையிலிருந்து சரிந்து இறங்கிக் கொண்டு பொம்மை குதிரையைத் தானாக ஆடவிட்டான்.

நல்லது நான் அங்கு சென்று அடைந்து விட்டேன் என தனது நீலக் கண்கள் ஒளிர அழுத்தம் திருத்தமாகக் கூறினான் பால்.

எங்கு சென்று அடைந்தாய்? என்றாள் அம்மா எங்கு அடைய வேண்டுமோ அங்கே என்று பதில் வந்தது.

அது சரிதான் என்றார் ஆஸ்கர் மாமா,

அப்படித்தான் சென்று அடையும் இடம் வரும் வரை ஓயக்கூடாது. சரி அந்த குதிரையின் பெயர் என்ன?

அந்த குதிரைக்கு எந்த பெயருமில்லை என்றாள் பால்.

அந்த குதிரைக்கு எந்த பெயருமில்லையா? என்றார். ஆஸ்கர் மாமா.

அதாவது அந்தக் குதிரைக்கு பல்வேறு பெயர்கள் உள்ளன. போன வாரத்தில் அதன் பெயர் சான்சோவினோ என்றான்.

சான்சோவினோவா அது ஆஸ்கட் பந்தயத்தில் வென்ற குதிரையல்லவா, உனக்கு எப்படி அதன் பெயர் தெரிய வந்தது? என்றார் மாமா.

அவன் எப்பொழுதும் குதிரைப்பந்தய வி­யங்களைப் பற்றி பேசட்டுடன் பேசிக் கொண்டே இருக்கிறான் என்றாள் அம்மா ஜோன்.

தனது மருமகன் குதிரை பந்தய வி­யங்களை அறிந்துள்ளது மாமாவிற்கு மிகவும் சந்தோ­மளித்தது. போரில் காயமடைந்த, இளம் தோட்டக்காரன் பேசட், ஆஸ்கர் கிரெஸ்வெல் மாமா மூலம் வேலை கிடைக்கப் பெற்று, தற்போது மாமாவின் வேலையாளாக பணியாற்றுகிறான். பேசட்டிற்கு குதிரை பந்தயம் பற்றி எல்லா வி­யங்களும் அத்துப்படியாகத் தெரியும். இவன் மூலம் பால் எல்லா பந்தய வி­யங்களை அறிந்திருக்கக் கூடும்.

ஆஸ்கர் கிரெஸ்வெல், நடந்தவற்றை எல்லாம் பேசட்டிடமிருந்து கிரகித்தார்.

மாஸ்டர் பால் வந்து என்னிடம் பந்தயங்களைப் பற்றி கேட்கும் பொழுது சொல்லாமல் இருக்க முடியவில்லை என மிகத் தீவிரமான முகபாவத்துடன் மத சம்பந்தப்பட்ட வி­யத்தை பேசுவது போல் பேசட் சொன்னான்.

சரி பையன் தனது விருப்பப்பட்ட குதிரைமேல் பணயத் தொகை ஏதாவது கட்டினானா?

ஐயா, நான் பையனை காட்டிக் கொடுக்க விரும்பவில்லை அவன் ஒரு நல்ல விளையாட்டுக்காரன். இதைப் பற்றி அவனிடமே நீங்கள் கேட்டுக் கொள்ளுங்களேன் என்று பேசட் தேவாலயத்தில் உறுதியுடன் சொன்னான்.

ஆஸ்கர் மாமா பையனை காரில் அழைத்து கொண்டு சுற்றிவர சென்றார்.

பால் நல்ல பயலே நீ எப்பொழுதாவது குதிரைமேல் பந்தயம் கட்டியுள்ளாயா? என்றார் மாமா.

பையன் தனது அழகான மாமனை கூர்ந்து கவனித்தான். ஏன், நான் பணயம் கட்டக்கூடாது, என நினைக்கிறீர்களா? என எதிர் கேள்வியை கேட்டான்.

சேச்சே இல்லை இல்லை நீ எனக்கு ஏதாவது லிங்கன் பந்தயத்திற்கு துப்பு கொடுத்து உதவுவாய், என நினைத்தேன்.

கார் ஹேம்ப்­யரில் உள்ள ஆஸ்கர் மாமாவின் இடத்திற்கு, ஊரகப் பாதையில் விரைந்து கொண்டிருந்தது.

சத்தியமாக? என்றான் மருமகன்

சத்தியமாக பையா என்றார் மாமா.

அப்படியானால் சரி டேபோடில்

டேபோடில்லா? எனக்கு சந்தேகமாக உள்ளதே பையா, மிர்சாவைப் பற்றி என்ன நினைக்கிறாய்?

எனக்கு ஜெயிக்கும் குதிரையைப் பற்றி மட்டும்தான் தெரியும், அது டேபோடில்தான் என்றான் சிறுவன்.

ம்... டேபோடில்லா?

அழுத்தமான அமைதி நிலவியது . ஒப்பிட்டு பார்க்கும்பொழுது, டேபோடில் ஒரு மிக சாதாரண குதிரையாகப் பட்டது.

மாமா

என்ன பையா?

நீங்கள் யாரிடமும் சொல்ல மாட்டீர்கள் அல்லவா?

நான் பேசட்டிடம் சத்தியம் செய்துள்ளேன்.

பேசட்டை தூக்கி குப்பையில் போடு

அதற்கும் இவனுக்கும் என்ன சம்பந்தம்?

நாங்கள் இருவரும் கூட்டாளிகள். ஆரம்பம் முதலே நாங்கள் இருவரும் இணைந்து விளையாடி வருகிறோம். அவன் கொடுத்த ஐந்து ´ல்லிங் பணத்தில் தான் முதலில் பந்தயம் கட்டி தோற்றேன். நீங்கள் யாரிடமும் சொல்லக் கூடாது. பேசட்டிற்கு நான் சத்தியம் செய்து கொடுத்துள்ளேன். அதன்பின் நீங்கள் ஒரு நாள் கொடுத்த பத்து ´ல்லிங் நோட்டிலிருந்து தான் நான் ஜெயிக்க ஆரம்பித்தேன். அதனால்தான், நீங்கள் ஒரு அதிர்ஷ்டசாலி என நினைத்தேன். இதைப் பற்றியயல்லாம் நீங்கள் யாரிடமும் சொல்ல மாட்டீர்கள் அல்லவா?

பையன் தனது நெருங்கி அமைந்த பெரிய நீல நிறக் கண்களால் தீர்க்கமாக மாமாவைப் பார்த்தான். அவனது மாமா அவஸ்தையுடன் அசைந்துகொண்டே சிரித்தார்.

நல்லது சரி பையா நான் என்னுடனேயே வைத்துக் கொள்கிறேன். டேபோடில்லா?

அதன்மேல் நீ எவ்வளவு பணயம் கட்டியுள்ளாய்?

20 பவுண்டுகள் தவிர எல்லாவற்றையும் கட்டியுள்ளேன். இந்த 20 பவுண்டுகளை நான் கையிருப்பிற்காக வைத்துள்ளேன்.

மாமாவிற்கு இது ஒரு நல்ல தமாஷாக தெரிந்தது.

அட சின்னப்பயலே, 20 பவுண்டை கையிருப்பாக வைக்க முடிவெடுத்த நீ எவ்வளவுதான் பந்தயம் கட்டியுள்ளாய்?

300 பவுண்டுகள் என்றான் மிக அமைதியாக.

மாமா ஆனால் இது நமக்குள் மட்டும்தான் இருக்க வேண்டும், சத்தியமாக?

மாமா வெடிச் சிரிப்பு சிரித்தார்.

சரி நமக்குள்ளேயே இருக்கும். ஆனால் 300 பவுண்ட்கள் எங்க இருக்கு? என சிரித்தார்.

பேசட்டிடம் இருக்கிறது. நாங்கள் கூட்டாளிகள்

ஆமா ஆமாம் நீங்கள் கூட்டாளிகள் என்று சொன்னாய். பேசட் எவ்வளவு பந்தயம் கட்டுகிறான்?

அவனால் என்னளவிற்கு கட்டமுடியாது என நினைக்கிறேன். 150 கட்டுவான் என நினைக்கிறேன்.

என்ன பென்னிகளா? என சிரித்தார் மாமா.

இல்லை பவுண்ட்கள் என்றான் சிறுவன்.

அடிப்பட்ட ஆச்சரியத்துடன் மாமாவை பார்த்து பேசட் என்னை விட அதிக கையிருப்பை எப்போதும் வைத்திருப்பான். என்றான்.

ஆச்சரியமும், குறுகுறுப்பும் ஒரு சேர குவிய மாமா அமைதியானார். இதைப்பற்றி மேலும் தொடர விரும்பாமல், தனது மருமகனை லிங்கன் பந்தய மைதானத்திற்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தார்.

இப்போ பயலே நான் மிர்சா மேல் 20 கட்டப்போகிறேன். மற்றபடி நீ சொல்லப் போகும் குதிரைமேல் 5 கட்டப்போகிறேன்.

நீ எதை தேர்ந்தெடுக்கப்போகிறாய்?

டே போடில், மாமா

இல்லை டேபோடில் மேல் 5 வேண்டாம்.

எனது ஐந்து பவுண்டாக இருந்தால் நான் கட்டுவேன் என்றான் குழந்தை.

நல்லது நல்லது நீ சொல்வது போலவே ஆகட்டும், 5 நீயும், 5 நானுமாக டேபோடில் மேலே கட்டுவோம்.

சிறுவன் இதற்குமுன் பந்தய மைதானத்திற்கு வந்ததே யில்லை. அவன் கண்கள் நீல நெருப்பாக ஜொலித்தது. வாயை இறுக்கமாக மூடிக் கொண்டு உன்னிப்பாக கவனித்தான். அவனுக்கு முன்பு உட்கார்ந்திருந்த ஒரு பிரஞ்சுக்காரன் தனது அனைத்து பணத்தையும் லேன்ஸ்லாட் என்ற குதிரைமேல் கட்டியிருந்தான். உத்வேகம் காரணமாக இரு கரங்களையும் உயரே தூக்கி ஆட்டிக் கொண்டே லேன்ஸ்லாட் லேன்ஸ்லாட் என பிரஞ்ச் உச்சரிப்புடன் கதறினான்.

டேபோடில் முதலிடத்திலும், லேன்ஸ்லாட் இரண்டாவதாகவும், மிர்சா, மூன்றாவதாகவும் வந்தன. சிறுவன் அசாதாரணமான அமைதியுடனும், கண்கள் ஒளிர, சிவந்திருந்தான். அவனது மாமா நான்கு 5 பவுண்ட் நோட்டுகளை கொடுத்தார். ஒன்றுக்கு நான்கு

இப்போது என்ன செய்வது? என நோட்டுகளை ஆட்டிக்கொண்டே மாமா கேட்டார்.

பேசட்டிடம் பேசுவோம். என்றான் பையன்.

என்னிடம் இப்போது 1500 பவுண்ட்களும் கையிருப்பு 20ம் நீங்கள் கொடுக்கும் 20ம் உள்ளது.

மாமா அவனையே சில நொடிகள் பார்த்தார்.

இங்கே பார் பையா நீ பேசட் பற்றியும், 1500 பற்றியும் பேசுவது உண்மைதானா?

உண்மைதான், ஆனால் இது நமக்குள்தான் இருக்கவேண்டும். சத்தியமாக?

சரி சத்தியமாக பையா ஆனால் நான் பேசட்டுடன் பேச வேண்டுமே.

மாமா நீங்கள் எங்கள் இருவருடனும் கூட்டாளியாக விரும்பினால் நாம் மூவருமே கூட்டாளிகள் ஆகிவிடலாம். ஆனால் நீங்கள் யாரிடமும் இதைப் பற்றி பேசுவதில்லை என ஆணை கொடுக்க வேண்டும். சத்தியமாக மாமா நீங்கள் கொடுத்த பத்து ´ல்லிங்கிலிருந்துதான் நான் ஜெயிக்க ஆரம்பித்தேன். பேசட்டும் நானும் அதிர்ஷ்டசாலிகள்தான், நீங்களும் அதிர்ஷ்டசாலியாகத் தானிருக்கவேண்டும் என நினைக்கிறேன் என்றான்.

ஒரு மதியம் மாமா, சிறுவனையும் பேசட்டையும் ரிச்மண்ட் பார்க்கிற்கு அழைத்துச் சென்று பேசினார்.

ஐயா, இது இப்படித்தான் ஆரம்பித்தது. என பேசட் தொடங்கினான். மாஸ்டர் பால் குதிரை பந்தயங்களைப் பற்றி கடந்த ஒரு வருடமாக என்னிடம் ஆதியோடு அந்தமாக கேட்டுக் கொண்டே இருப்பார். அவர் நான் தோற்றேனா அல்லது ஜெயித்தேனா என்பதை அறிவதில் மிக ஆவலாக இருப்பார். அதன் பின் அவருக்காக நான் 5 ´ல்லிங்கை விடியற் காலை ஒளியின் மேல் கட்டினேன். அப்போது தோற்றுப்போனோம். பின்பு உங்களிடம் வாங்கிய பத்து ´ல்லிங் மூலம் அதிர்ஷ்டக்காற்று எங்கள் பக்கம் திரும்பியது. அதை நாங்கள் சிங்களீஸ் மேல் கட்டினோம். அப்போதிருந்து மிகவும் திடமாக ஜெயித்து வந்துள்ளோம். என்ன சொல்கிறீர்கள் மாஸ்டர் பால்? என்றான் பேசட்.

நாங்கள் உறுதியாக நம்பும் போது ஜெயிக்கிறோம். உறுதியற்ற நிலையாக இருக்கும் போதுதான் தோற்கிறோம் என்றான் சிறுவன் பால்.

அந்தமாதிரி நிலையின் போது நாங்கள் ஜாக்கிரதையான முறையில் முடிவெடுப்போம் என்றான் பேசட்.

சரி மிக உறுதியான நிலையின் போது? என்று புன்னகை புரிந்து கொண்டே கேட்டார் மாமா.

மாஸ்டர் பால் தான் முடிவெடுப்பார் ஐயா, என மிக ­ம்பய பக்தி நிரம்பிய குரலில் ஆரம்பித்தான் பேசட்.

சொர்க்கத்திலிருந்து கிடைத்த தகவல் போல் மாஸ்டர் பால் அடைவார். இப்பொழுது கூட லிங்கன் பந்தயத்திற்கு டேபோடில் போல், கண்ணில் காணும் முட்டைகளை போல் உறுதியாக தெரியும்.

நீ டேபோடில் மேல் ஏதாவது பந்தயம் கட்டியிருந்தாயா? என ஆங்கர் கிரெஸ்வெல் கேட்டார்.

ஆம் ஐயா, கட்டியிருந்தேன்.

என் மருமகனும் கட்டியிருந்தானா?

பேசட் மொண்ணைத்தனமான மெளனம் சாதித்துக்கொண்டே    பாலைப் பார்த்தான்.

நான் 1200 ஜெயித்துள்ளேன் அல்லவா பேசட்? நான் 300 டேபோடில் மேல் கட்டியிருப்பதாக மாமாவிடம் சொல்லிவிட்டேன் என்றான் பால்.

அது உண்மைதான் ஐயா என்றான் தலையை ஆட்டியபடியே பேசட்.

சரி அந்தப் பணமெல்லாம் எங்கே? என்று மாமா கேட்டார்.

நான் பத்திரமாக பெட்டியில் பூட்டி வைத்துளளேன் ஐயா, மாஸ்டர் பால் எப்போது விரும்பினாலும் உடனே பெற்றுக் கொள்ளலாம்.

என்ன 1500 பவுண்ட்களையுமா?

மேலும் 20 மற்றும் நாற்பது, அதாவது 20ஐ இந்த பந்தயத்தில் ஜெயித்ததுடன் சேர்த்து

இது பிரமிப்பை ஏற்படுத்துகிறது என்றார் மாமா.

என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் ஐயா, நானாக இருந்தால் மாஸ்டர் பால் என்னை கூட்டாளியாக அழைக்கும்போது உடனே ஏற்றுக்கொள்வேன் என்றான் பேசட்.

ஆஸ்கர் கிரெஸ்வெல் இதைப்பற்றி யோசிக்க ஆரம்பித்தார்.

நான் பணத்தையயல்லாம் பார்க்கலாமா? என்றார்

அனைவரும் வீட்டிற்கு காரில் விரைந்து சென்றனர்.

பேசட் தோட்டத்து அறையிலிருந்து 1500 பவுண்ட்களை கொண்டு வந்து காட்டினான். அந்த 20 பவுண்ட் கையிருப்பு பணத்தை பந்தய தரகு வைப்புத் தொகையாக ஜோ கிளீயிடம் கொடுக்கப்பட்டது.

பாருங்கள் மாமா, நான் உறுதியாக உணரும் பட்சத்தில் நாங்கள் துணிந்து எங்களிடம் இருக்கும் அளவிற்கு பணயம் கட்டுவோம். இல்லையா பேசட்?

அப்படித்தான் கட்டுவோம் மாஸ்டர் பால்

நீ எப்போது உறுதியாக உணர்வாய்? என சிரித்துக் கொண்டே மாமா வினவினார்.

ஓ அது சில நேரங்களில் நான் துல்லியமாக அந்த உறுதியை உணருவேன். இந்த டேபோடில் ஜெயிக்கும் என்றது போல், சில நேரங்களில் லேசாக எண்ணமோ அல்லது ஒரு கருத்தோ, உருவாகும் சில நேரங்களில் இது கூட தோன்றாது. இது போன்ற சமயங்களில் நாங்கள் தோற்பதால் மிகவும் ஜாக்கிரதையாக விளையாடுவோம்.

உண்மைதான் டேபோடில்லை தேர்ந்ததைப் போல் மிக உறுதியாக உணரும் பட்சத்தில்... எது உணர வைக்கிறது பையா?

ஓ மாமா எனக்கு சரியாக தெரியவில்லை சங்கடமாக சொன்ன பையன் நான் உறுதியாக அறிவேன். அவ்வளவுதான் எனக்குத் தெரியும் என்றான்.

அது எதுவோ சொர்க்கத்திலிருந்து அறியப்படுவது போல ஐயா என பேசட் குறுக்கிட்டு சொன்னான்.

ஆம் அப்படித்தான் நானும் நினைக்கிறேன் என்றார் மாமா.

ஆனால் மாமாவும் இவர்களுடன் கூட்டாளியாக சேர்ந்து விட்டார். லேஜர் பந்தயத்தில் ஓடும் லிவ்லி ஸ்பார்க் குதிரைதான் ஜெயிக்கும் என பால் உறுதியாக கணித்துச் சொன்னபோது, குறிப்பிட்டு சொல்லமுடியாத குதிரையாக தெரிந்தாலும் பையன் அதன் மேல் 1000 பவுண்ட்களை கட்ட வற்புறுத்தினான். பேசட் 500 கட்ட ஆஸ்கர் 200 கட்டினார். லிவ்லிஸ்பார்க் தான் முதலில் வந்தது. பணயத்தொகை ஒன்றிற்கு பத்தாகும். பால் இந்த பந்தயத்தில் பத்தாயிரம் ஜெயித்தான்.

பார்த்தீர்களா எனக்கு மிக நிச்சயமான உறுதியுடன் மனதில் பட்டது என்றான்.

ஆஸ்கர் கிரெஸ் வெல்லுக்கு கூட 2000 பவுண்டுகள் கிடைத்தது.

பையா இங்கே பார், இந்த மாதிரி நடக்கும் வி­யம் என்னை குழப்புகிறது.

குழப்பமடைய தேவையில்லை மாமா நான் மறுபடியும் மிக உறுதியாக கணிப்பதற்கு நீண்ட காலம் கூட ஆகலாம்.

சரி நீ இந்தப் பணத்தையயல்லாம் என்ன செய்யப் போகிறாய்? என்றார் மாமா.

ஆம், நான் அம்மாவிற்காகத்தான் இதை ஆரம்பித்தேன். அவளுக்கு அதிர்ஷ்டமில்லை எனவும், அப்பாவும் துரதிர்ஷ்டசாலி எனவும் சொன்னதால் தான். ஒரு வேளை நான் அதிர்ஷ்டசாலியாக இருந்தால் அந்த முணுமுணுப்பான குரலை நிறுத்தலாம் என நினைத்தேன்.

எது முணுமுணுப்பான குரலை நிறுத்தும்?

எங்கள் வீடு மாமா, எங்கள் வீடு முணுமுணுப்பதை மிகவும் வெறுத்தேன்.

அது என்னவென்று முணுமுணுக்கிறது?

இல்லை, பையன் தடுமாறும் குரலில் சரியாக சொல்லத் தெரியவில்லை ஆனால் இது எப்போதும் உள்ள பணத் தட்டுப்பாடுதான் மாமா.

எனக்கு தெரிந்ததுதான் பையா, தெரிந்ததுதான்.

கடன் கொடுத்தவர்கள் அம்மாவிடம் கேட்டுக் கொண்டிருப்பது உங்களுக்கு தெரியும்தானே மாமா?

தெரியும் என்றார் மாமா.

அப்போதெல்லாம் வீடு கிசுகிசுக்க ஆரம்பிக்கும்.

நமக்கு பின்னால் மனிதர்கள் சிரிப்பதைப்போல, இது கொடுமையாக இருந்தது. நான் அதிர்ஷ்டசாலியாக இருக்கும் பட்சத்தில் .

நீ நிறுத்திவிடலாம் என மாமா முடித்தார்

பையன் ஒன்றும் சொல்லாமல், தனது பெரிய நீல நிற கண்களால் ஒரு குளிர்ந்த, நெருப்பு பார்வை பார்த்தான்.

அப்போ சரி, என்ன செய்யலாம்? என்றார் மாமா.

நான் அதிர்ஷ்சாலியாக பந்தயத்தில் இருப்பதை அம்மா அறிவதை நான் விரும்பவில்லை.

ஏன் பையா?

அவள் என்னை தடுக்கலாம்

அப்படி செய்வாள் என நான் நினைக்கவில்லை என்றார் மாமா.

ஓ நான் அவளுக்கு தெரிவதை விரும்பவில்லை. மாமா என நெளிந்தான் பையன்.

சரி பையா அவளுக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்ளலாம்.

அவர்கள் மிக சுலபமாக தாயாருக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டனர். மாமாவின் அறிவுரையின்படி பால், ஐந்தாயிரம் பவுண்ட்களை அவரிடம் கொடுத்து அதை தங்கள் குடும்ப வக்கீலிடம் சேர்ப்பித்தனர். குடும்ப வக்கீல் பாலின் தாயாரிடத்தில், அவளுடைய உறவினர் ஒருவர் ஐந்தாயிரம் பவுண்ட்களை கொடுத்து அவருடைய பிறந்தநாள் தினத்தில் 1000 பவுண்ட்கள் வீதம் ஐந்து பிறந்த நாளுக்கு பரிசளிக்க சொல்லியிருப்பதாகச் சொல்லவேண்டும், என முடிவெடுத்தனர்.

இதன் மூலம் அவள் தனது ஐந்து பிறந்த தினத்திற்கும் ஆயிரம் பவுண்ட்கள் வீதம் ஐந்து வருடத்திற்கு பரிசாகப் பெறுவாள் என்றார் ஆஸ்கர் மாமா.

இது அவளுக்கு பின்பு தொந்திரவு ஏதும் செய்யாது என நினைக்கிறேன்.

நவம்பர் மாதத்தில் பாலின் அம்மாவின் பிறந்தநாள் வந்தது. அவனுடைய அதிர்ஷ்டத்தையும் மீறி வீடு மோசமாக முணுமுணுக்க தொடங்கியிருந்தது. அவன் மிகவும் ஆவலாக, அம்மாவின் பிறந்த நாள் பரிசாக வக்கீலின் கடிதத்தை அவள் படிக்கும்போது நிகழப் போவதை நினைத்துக் காத்திருந்தான்.

 

பால் வளர்ந்து வருவதால், தற்போது தாதியின் பொறுப்பிலிருந்து விலகி, விருந்தாளிகள் வராத பொழுதுகளில், தனது பெற்றோருடன் உணவருந்தத் தொடங்கியிருந்தான். அவனது தாயார் தினமும் நகரத்திற்கு சென்று தனது சினேகிதி ஒருத்தியின் ஆடையகத்தில், பெண்கள் ஆடைகளை வரைந்தும் வடிவமைத்தும் கொடுத்துக் கொண்டிருந்தாள். தோலாடைகளையும், மற்ற வகை உடைகளுக்கும் வடிவமைக்கும் வரைகலை தனக்கு கைகொடுப்பதை அவள் அறிந்திருந்தாள். அவளது சினேகிதி ஆண்டிற்கு பல்லாயிரம் பவுண்ட்கள் சம்பாதித்தாள். ஆனால் திறமையிருந்தும் பாலின் அம்மா பல நூறு பவுண்ட்கள் தான் சம்பாதிக்க முடிந்தது. இதனால் அவள் மறுபடியும் திருப்தியிழந்தாள். அவள் ஏதாவது ஒரு துறையில் முதலாவதாக வரமுயன்று, முடியாமல் போனது.

பிறந்த நாளன்று காலை உணவருந்த தாயார் வந்த பொழுது பால் அவளது முகத்தையே கவனித்துக் கொண்டிருந்தான். அவள் தனக்கு வந்த கடிதங்களை படிக்க ஆரம்பித்த பொழுது, வக்கீலின் கடிதத்தை படித்தவுடன் முகம் இறுகி, எல்லாவித உணர்ச்சிகளும் வடிந்து, முகவாய்க்கட்டை இறுகியது.

அந்த கடிதத்தை மற்றவற்றிற்கு அடியில் மறைத்து வைத்தாள். எந்த வார்த்தையும் சொல்லாமல் மெளனமாக இருந்தாள்.

உனது பிறந்த நாள் கடிதங்களில் எதுவும் சிறப்பான செய்தி உண்டா? அம்மா? என்று பால் கேட்டான்.

மிதமான சிறப்புத்தான் உள்ளது என சலிப்பு பொங்க அம்மா பதிலளித்தாள்.

வேறு எதுவும் பேசாமல் நகரத்திற்கு புறப்பட்டுச் சென்றாள்.

ஆனால் மதியமே ஆஸ்கர் மாமா வீட்டிற்கு வந்து ஒரு செய்தியை தெரிவித்தார். அதாவது அம்மா, நகரத்தில் அந்த வக்கீலை சந்தித்து ஐந்தாயிரம் பவுண்ட்களையும் மொத்தமாக கொடுக்க முடியுமா, என கேட்டாளாம். எதற்காக என வினவிய போது, தனக்கு கடன் உள்ளதால் மொத்தமாக கிடைத்தால் உபயோகமாக இருக்கும் என்றாளாம்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மாமா? என்றான் பால். உன் முடிவிற்கே விட்டுவிடுகிறேன் பையா

அப்படியானால் அவள் பெற்றுக் கொள்ளட்டும் மாமா, நாம் பந்தயத்தில் மேலும் சம்பாதித்துக் கொள்ளலாம் என்றான்.

புதரில் ஒளிந்துள்ள இரு பறவைகளை விட நம் கையில் உள்ள ஒரு பறவை என்றுமே மதிப்புமிக்கது என அறிவுரைத்தார் மாமா.

என்னால் கிராண்ட் நே­னல் பந்தயத்தைப் பற்றியோ லிங்கன் ­யர் பந்தயத்தைப் பற்றியோ டெர்பி பந்தயத்தை பற்றியே உறுதியாக கணிக்க முடியும் என நம்புகிறேன் என்றால் பால்.

இதனால் மாமா வக்கீலுக்கு எழுதி கொடுத்ததால் அம்மா முழு பணமான ஐந்தாயிரம் பவுண்ட்களையும் பெற்றுக் கொண்டாள். இதன்பின்பு வெகு வினோதமான ஒலி ஒன்று வீட்டில் ஏற்பட்டது. அந்த வீட்டில் ஒலிக்கும் குரலானது மிக அதிகமாக, வசந்த கால மாலையில் ஒலிக்கும் தவளைகளின் குரல் போல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. வீட்டிற்கு புதிய மர சாமான்கள் வந்தன. பாலுக்கு பாடம் கற்பிக்க வீட்டிற்கே புதிய ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அடுத்த இலையுதிர் காலத்தில், பால் தனது அப்பா படித்த சிறப்பான ஈட்டன் பள்ளிக்கு போகப் போவதாக பேசிக்கொண்டனர். குளிர் காலத்தில் புதிய மலர்கள் வீட்டில், மலர் குடுவைகளில் வைக்கப்பட்டிருந்தன. பாலுடைய தாயார் விரும்பிய சொகுசு வாழ்க்கை பரிணமித்தது. இவ்வளவு இருந்தும் வீட்டின் பூத்த மலர் கொத்துக்களின் பின்பிலிருந்தும், சோபாக்களின் சொகுசு மெத்தைகளின் அடியிலிருந்தும், கிரீச்சிடும் குரலில் மேலும் பணம் வேண்டும் ஓ ஓ ஓ மேலும் பணம் வேண்டும், இப்பொழுது இப்பொழுது இப்பொழுதே... மேலும் பணம் வேண்டும் மற்றெப்போதையும் விட இப்போதே வேண்டும். குரல் எழுந்தவாறு இருந்தது.

இது பாலை மிகவும் பயமுறுத்தியது. ஆசிரியர் அவனுக்கு லத்தின் மற்றும் கிரேக்க மொழிப் பாடங்களையும் நடத்தி வந்தார். ஆனாலும் அவன் பேசட்டுடன் தான் மிக முக்கியமான நேரத்தை கழித்து வந்தான். கிரேண்ட் நே­னல் பந்தயம் வந்து போனது. அவனால் உறுதியாக கணிக்க முடியாததால் நூறு பவுண்ட்கள் நஷ்டமானது. கோடைக் காலம் நெருங்கியது. லிங்கன்­யர் பந்தயத்திற்கு ஆவலாக காத்திருந்தும் அவனால் உறுதியாக கணிக்க முடியாததால் ஐம்பது பவுண்ட் தொலைந்தது. பால் மிகவும் வித்தியாசமாக விழி விரிந்தும், அவனில் ஏதோ வெடித்து விடப்போவதைப் போல் தடுமாற்றத்துடன் காணப்பட்டான்.

அதன் போக்கில் விட்டுவிடு பையா மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதே என மாமா சமாதானப் படுத்தினார். ஆனாலும் பையனுக்கு இதையயல்லாம் கேட்கும் மனநிலையில் இல்லை.

நான் டெர்பி பந்தயத்தில் எது ஜெயிக்கும் என்பதை அறிந்தாக வேண்டும். அறிந்தாக வேண்டும் என மந்திர உச்சாடனம் போல் வெறி கொண்ட தனது நீல நிற கண்கள் ஒளி கக்க திரும்ப திரும்ப முணுமுணுத்துக் கொண்டே இருந்தான்.

அவன் எவ்வளவு பலகீனமாகவும், ஓய்ந்தும் இருப்பதை அவளது தாயார் கவனித்துக் கொண்டேயிருந்தார்.

அம்மாவின் மனம் அவனது நிலையைப் பார்த்து கனத்தது. நீ கடல்புற வாசஸ்தலத்திற்கு சென்றுவந்தால் கூட நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். இங்கிருந்து காத்துக் கொண்டிருப்பதை விட அங்கு சென்ற வரலாம் என்றாள்.

ஆனால் குழந்தை தன் மாசுமறுவற்ற கண்களால் அவளை வெறித்து பார்த்தான்.

டெர்பி பந்தயத்திற்கு முன்னால் போக முடியாதம்மா என்றான்.

ஏன் முடியாது? என்று அவனது எதிர்ப்பான பதிலால் உசுப்பப்பட்டு உரக்கக் கேட்டான். ஏன் முடியாது? கடல்புறத்திலிருந்து கூட உனது மாமாவுடன் டெர்பி பந்தயத்திற்கு நீ போகலாமே இதற்காக நீ இங்கே இருக்க வேண்டியது இல்லையே மற்றபடி நீ இந்த பந்தய விவகாரங்களில் அதிகமாக ஈடுபடுகிறாய் என நினைக்கிறேன். இது மோசமான முன்னுதாரணமாகும். எனது குடும்பம் ஒரு சூதாட்ட குடும்பமாக இருந்ததால் என்ன கஷ்டங்களை அனுபவித்தோம் என்பதை நீ பெரியவனாக ஆகும் போது தெரிந்து கொள்வாய்.

நான் பேசட்டை வேலையிலிருந்து நீக்க வேண்டும். மேலும் மாமாவையும் பந்தயத்தைப் பற்றி அதிகம் பேச வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்போகிறேன்.

நீ ஒழுங்காக நடந்து கொள்கிறேன் என எனக்கு சத்தியம் செய்து கொடுத்துவிட்டு கடல்புற ஓய்வு வாசஸ்தலத்திற்கு போ நி மிகவும் நலம்கெட்டு இருக்கிறாய் தெரியுமா? என்றாள்.

டெர்பி பந்தயம் முடிந்த பின்பு நீ சொன்னபடியே செய்கிறேன் அம்மா என்றான் பையன்.

சொன்னப்படி என்றால்? எங்கிருந்து உன்னை அனுப்புவது? இந்த வீட்டிலிருந்தா? என்றாள் அம்மா.

ஆமாம்

ஏன்? என் அதிகப் பிரசங்கி குழந்தையே இந்த வீட்டைப் பற்றிய இவ்வளவு அக்கறை உனக்கு உள்ளதா? இவ்வளவு அன்பா? இந்த வீட்டின் சூழலில் அவன் ஏதும் பேசாமல் தாயாரையே பார்த்தான். அவன் தனது ரகசியத்துனுள் ஒரு ரகசியத்தை ஒளித்து வைத்திருந்தான். அதை மாமாவிடமோ பேசட்டிடம் கூட கூறியதில்லை.

சிறிது நேரம் முடிவெடுக்காமல் தடுமாறிய அவள் தாய், சரி டெர்பி பந்தயம் முடியும் வரை கடல்புறத்திற்கு போக வேண்டாம். ஆனால் நீ அதையே நினைத்துக் கொண்டு நரம்பு தளர்ச்சி அடையக் கூடாது. நீ குதிரைப் பந்தயத்தைப் பற்றி அதிகம் நினைப்பதில்லை என எனக்கு சத்தியம் செய்து கொடுக்க வேண்டும்.

இல்லை அம்மா, என சாதாரணமாக சொன்ன பையன் நான் பந்தயத்தைப் பற்றி அதிகம் நினைக்கமாட்டோன். நீ கவலைப்படாதே. நான் கவலைப்பட மாட்டேன் அம்மா நான் நீயாக இருக்கும் பட்சத்தில் என்றான்.

நீ நானாக இருக்கும் பட்சமும், நான் நீயாக இருக்கும் பட்சத்திலும் என்ன செய்திருப்போம் என்பது ஆச்சரியமாகத்தான் உள்ளது என்றாள் அம்மா.

ஆனாலும் நீ கவலைப்பட தேவையில்லை என்பது உனக்கு புரியவில்லையா?

இதைக் கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என சோர்வுடன் சொன்னாள்.

ஓ நல்லது அம்மா, உன்னால் முடியும் தெரியுமா?

நீ வருத்தப்பட வேண்டியதில்லை என்று நீ தெரிந்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தினான்.

வேண்டியதில்லையா? சரி பார்த்துக் கொள்கிறேன் என்றாள் அம்மா.

பாலுடைய ரகசியத்தின் ரகசியம் அவனது பெயரற்ற மரக்குதிரை தான். அவன் குழந்தையாக இருந்தது முதல், தாதியிடமிருந்தும், குழந்தைகளைக் காக்கும் பெண்மணியிடத்திலிருந்தும், வளர்ந்ததால், விடுவிக்கப்பட்டு, தனக்கென ஒரு படுக்கை அறை ஒதுக்கப் பெற்றான். அந்த சாய்ந்தாடும் பொம்மைக் குதிரையையும் தனது படுக்கையறையிலேயே வைத்துக் கொண்டான்.

சாய்ந்தாடும் பொம்மை வைத்திருக்கும் வயதை நீ கடந்து விட்டாய் என அம்மா அவனைக் கடிந்து கொண்டாள்.

சரியம்மா, நான் உயிருள்ள உண்மையான குதிரையை வைத்துக் கொள்ளும் வரை ஏதாவது ஒன்றை வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறேன் என சமாளித்தான்.

இந்த பொம்மை குதிரை உனது துணைவனா? என அம்மா சிரித்தாள்.

ஆமாம் இது நல்ல குதிரையம்மா எனக்கு இது எப்பொழுதும் துணையாக உள்ளது. நான் அங்கிருக்கும் போது கூட என்றான் பால்.

ஆகவே அழுக்கடைந்திருந்தாலும், அந்த குதிரை ஒரு உறைந்த பாய்ச்சலுடன் பையனின் படுக்கையறையில் நின்றிருந்தது.

டெர்பி பந்தயம் நெருங்க நெருங்க பையன் மிகவும் இறுக்கமாக உணர்ந்தான். மிகவும் மெலிந்தும், கண்கள் குழி விழுந்தும், தன்னுடன் யாராவது பேசுவதை கூட கேட்டுக் கொள்ளாமல் விட்டேத்தியாக இருக்கலானான். அவனது தாய் அவனது நிலை கண்டு மிகவும் அசெளகரியமாக உணர்ந்தாள். திடீர் திடீரென அவளுக்கு ஒரு பதற்றம் உருவாகி அது அரைமணி நேரம் கூட நீடித்தது. அவனை நினைத்துக்கொண்டால் படபடப்பு ஏற்பட்டு, அவனருகே ஓடி அவன் நலமுடனிருப்பதை உறுதிப்படுத்தி பார்க்க ஆசைப்பட்டாள்.

டெர்பி பந்தயத்தின் இரு தினங்களுக்கு முன் அவள் நகரத்தில் ஒரு கேளிக்கை விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டாள். தனது முதல் மகனைப் பற்றி திடீர் என பதற்றம் ஏற்பட்டு, அந்த உணர்வால் நெஞ்சடைப்பதைப் போல் உணர்ந்தாள். எவ்வளவு முயன்றும் அந்த எண்ணத்திலிருந்து மீள முடியவில்லை. நடன அரங்கிலிருந்து வெளியேறி, ஊரகத்தில் உள்ள வீட்டிற்கு தொலைபேசியில் அழைத்து, குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் தாதியிடம் கேட்டுக் கொண்டாள். தாதி அவள் அழைக்கும் நேரத்தை பார்த்து மிகவும் அதிர்ச்சியும், ஆச்சரியமடைந்தாள்.

குழந்தைகள் எல்லோரும் பத்திரமாக இருக்கிறார்களா?

மிஸ் வில்மாட்?

ஆம், எல்லோரும் நலமாயிருக்கிறார்கள்.

மாஸ்டர் பால் பத்திரமாக இருக்கிறானா?

அவன் அப்பொழுதே படுக்கைக்கு சென்றுவிட்டான், நான் மறுபடியும் போய் பார்த்து வரவா?

வேண்டாம் என யோசனையுடன் கூறினாள்

நாங்கள் கூடிய சீக்கிரமே வீடு திரும்பி விடுவோம். அவனைத் தொந்திரவு செய்யவேண்டாம். என கூறி மகனின் தனிமையை தொந்திரவு செய்ய வேண்டியதில்லை என நினைத்துக் கொண்டாள்.

மிகவும் நல்லது அம்மா என்றாள் தாதி.

பாலின் தாயும் தந்தையும் வீடு வந்து சேரும் போது நடு இரவு தாண்டி ஒரு மணியாகிவிட்டது. மிகவும் நிசப்தமாக இருந்தது. அவள் தனது அறைக்கு சென்று தனது வெண்நிற மிருக தோலாடையை கழற்றி மாட்டினாள். அவளது கணவன் அந்நேரத்தில் விஸ்கியை சோடாவுடன் கலந்து கொண்டிருந்தார்.

அந்நேரத்தில் அவளுக்கு ஏற்பட்ட பதட்டத்தின் காரணமாக, சத்தமில்லாமல் மாடிக்குச் சென்று மகனின் அறைக்கு முன் நின்றாள். ஏதோ லேசான சத்தம் கேட்டது. அது என்ன சத்தம்?

அறைக் கதவிற்கு முன் இறுக்கமான தசைகளுடன் அசையாமல் நின்று கவனித்து கேட்டாள். ஒரு வித்தியாசமான ஆனால் பலத்த சத்தமில்லாத ஒரு ஓசை கேட்டது. அவளது இதயம் அசையாது நின்றுவிட்டதைப் போல் உணர்ந்தாள். அது ஒரு சத்தமற்ற சத்தமாக இருந்த போதிலும் வலுவான ஒரு விரையும் விசையுடனிருந்தது. ஏதோ ஒரு பெரிய உருவம் ஆக்ரோ­மான விசையுடன் செல்வதைப் போல் தெரிந்தது. என்ன அது? அட கடவுளின் பெயரால் என்னத்தான் அது? அவளுக்கு தெரிந்தே ஆக வேண்டும். அவளுக்கு அது என்ன ஓசை என தெரியும் என நினைத்தாள். அது என்ன என அவளுக்குத் தெரியும்.

இருந்தும் அவளால் அதை இன்னது எனப் புரிந்து கொள்ள முடியவில்லை. அது மேலும் மேலும் ஓசையுடன் வலுத்துக் கேட்டுக் கொண்டே போய் கொண்டிருந்தது. அது பைத்தியக்காரத்தனத்துடன் கேட்டுக் கொண்டேயிருந்தது.

மிக மெதுவாக, பயத்தால் உறைந்தபடி கதவுத் தாழ்ப்பாளைத் திறந்தாள்.

அறை இருண்டிருந்தது. இருந்தும் ஜன்னலருகே ஏதோ ஒன்று அப்பக்கமும் இப்பக்கமும் ஆடுவதையும் அதன் ஓசையையும் ஒருங்கே கேட்டாள். அவள் அதை பயத்துடனும் ஆச்சரியமும் ஒரு சேர பார்த்தாள்.

உடனே விளக்குப் பொத்தானை அழுத்திப் பார்த்தப்போது அவளது மகன் தனது பச்சை பைஜாமாவை அணிந்து கொண்டு தனது சாய்ந்தாடும் குதிரை பொம்மையின் மேலமர்ந்து வெறி கொண்டு ஆடிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். அறை விளக்கின் ஒளிக்கற்றை, பையனை ஜொலிக்க வைத்தது. அறைவாசலில் நின்றிருந்த தாயின் வெளிர்பச்சை உடையையும் அவளது கிரிஸ்டல் நகைகளையும் ஒளிரச் செய்தது. அவளது சாம்பல் நிற சிகையலங்காரத்தையும் ஜொலிக்கச் செய்தது.

பால் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? எனக் கதறினாள்.

அது மலபார்தான் என ஒரு அமானுஷ்யமான குரலில் உரத்து கத்தினான். அது மலபார் தான்.

தனது தாயை உணர்ச்சியற்று ஒரு நொடி உறுத்துப் பார்த்துவிட்டு குதிரையின் ஆட்டத்தை நிறுத்தினான். நிறுத்தும் போதே ஒரு புறமாக சரிந்து கீழே விழுந்தான். தனது முழு தாய்மையுணர்ச்சியும் வெள்ளமெனப் பொழிய ஓடிச் சென்று அவனைத் தூக்கினாள்.

ஆனால் அவன் உணர்ச்சியற்று மயக்கமடைந்திருந்தான். ஏதோ ஒரு மூளைச் சுரத்தால் அவன் மூர்ச்சையடைந்திருந்தான். சுர மயக்கத்தில் உளறலும், உடல் தூக்கித் தூக்கி போட்டுக் கொண்டிருந்தது.

தாய் அவனருகே கல்லென அமர்ந்திருந்தாள்.

மலபார் அது மலபார் தான் பேசட், பேசட் எனக்கு தெரியும் அது மலபார்தான். உள்ளுணர்வளித்த தனது குதிரையை நோக்கி எழ முயற்சி செய்து கத்தினான் அந்தப் பையன்.

மலபார் என என்ன சொல்கிறான்? என நெஞ்சுறைத்த தாய் கேட்டாள்.

எனக்குத் தெரியவில்லை என பதிலளித்தார் தந்தை

மலபார் என எதைச் சொல்கிறான்? என்று தனது சகோதரன் ஆஸ்கரிடம் கேட்டாள்.

டெர்பி பந்தயத்தில் ஓடும் குதிரைகளில் ஒன்றுதான் என பதில் வந்தது.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும், ஆஸ்கர் கிரஸ்வெல் பேசட்டிடம் பேசி ஒன்றுக்கு பதினான்கு என்ற கணக்கில் மலபார் மேல் ஆயிரம் பவுண்ட்கள் கட்டச் செய்தார்.

சுரத்தின், மூன்றாம் நாள் மிகவும் சிக்கலாகியது. எல்லோரும் ஏதேனும் மாற்றம் வருமா எனக் காத்திருந்தனர். பையன் தனது நீண்ட சுருள் முடியுடன் தலையணையில் புரண்டு கொண்டேயிருந்தான். அவன் தூங்கவுமில்லை. மயக்கத்திலிருந்து தெளியவுமில்லை. அவனது கண்கள் நீல நிறக் கற்களைப் போல் ஜொலித்தன. அவனது தாயார் இதயமே இறுகி கல்லாகிப் போனது போல் இருண்டு போய் அவன் அருகிலேயே உட்கார்ந்திருந்தாள்.

அன்று மாலை ஆஸ்கர் கிரெஸ்வெல் வரவில்லை. அவளுக்குப் பதில் பேசட், தான் ஓரே ஒரு தடவை மேலே வந்து குழந்தையை பார்க்கட்டுமா? என கேட்டிருந்தான். இது பாலுடைய அம்மாவை மிகவும் கோபப்படுத்தியது. பின்பு சிந்தித்து பார்த்தபொழுது அவனை அனுமதித்தாள். பையனின் நிலைமை அப்படியே தானிருந்தது. ஒருவேளை பேசட் பையனை மயக்கத்திலிருந்து மீட்கலாம்.

பேசட் என்ற அந்த தோட்டக்காரன், பழுப்பு நிற மீசையும், கூர்மையான சிறிய கண்களும், குட்டையான உருவமும் கொண்டவன். மெல்லடி எடுத்து அறைக்குள் வந்தவன், பாலின் தாயைப் பார்த்து இல்லாத தனது தொப்பியைத் தொட்டு மரியாதை செய்தான். கட்டிலருகே வந்து, தனது சிறிய மின்னும் கண்களால், இறக்கும் தருவாயில் உள்ள குழந்தையை உற்றுப் பார்த்தான்.

மாஸ்டர் பால் என்ற மெதுவான குரலில் அழைத்து மாஸ்டர் பால் மலபார்தான் முதலில் வந்தது. தெளிவான வெற்றி. நீங்கள் சொன்னபடி செய்துவிட்டேன். நீங்கள் எழுபது ஆயிரம் பவுண்ட்கள் ஜெயித்துள்ளீர்கள். தற்போது மொத்தம் உங்களிடம் எண்பதாயிரம் பவுண்ட்கள் உள்ளன. மலபார்தான் முதலில் வந்தது மாஸ்டர் பால்.

மலபார் மலபார் நான் மலபார்தான் என்று சொல்லவில்லையா? அம்மா நான் மலபார் எனச் சொன்னேன் பார்த்தாயா? நான் அதிர்ஷ்டசாலி தானே அம்மா? எனக்கு மலபார்தான் என தெரியும். எண்பதாயிரம் பவுண்ட்களுக்கும் மேலே இதைத்தான் அதிர்ஷ்டம் என்பேன் இல்லையா அம்மா? எண்பதாயிரம் பவுண்ட்கள், எனக்குத் தெரியும். எனக்குத் தெரியும் என்று தெரியாதா? மலபார்தான் முதலில் வந்தது. எனக்கு உறுதியாகத் தெரியும் வரை எனது குதிரையில் நான் ஆடினால் என்னால் தெளிவாகச் சொல்லமுடியும். பேசட் நீ எவ்வளவு பணயம் கட்ட முடிந்ததோ அவ்வளவு கட்டியிருக்கலாம். எல்லாவற்றையும் பணயமாகக் கட்டினாயா பேசட்?

நான் ஆயிரம் கட்டினேன் மாஸ்டர் பால்.

அம்மா நான் இதுவரை உன்னிடம் சொன்னதேயில்லை. நான் என் குதிரையில் ஏறி ஆடிக்கொண்டே அங்கே சென்றால் உறுதியாக என்னால் சொல்லமுடியும். துல்லியமாக எப்பொழுதாவது உன்னிடம் சொல்லியிருந்தேனா அம்மா? நான் அதிர்ஷ்டசாலிதான். இல்லை, நீ சொன்னதேயில்லை என்றாள் அம்மா. அன்று இரவே பையன் இறந்து போனான்.

பையன் இறந்து கிடக்கும் போது அவளது சகோதரனின் குரல் அடக்கடவுளே ஹெஸ்டர் நீ எண்பது ஆயிரத்திற்கு மேல் லாபமடைந்தும் மகனை நஷ்டப்பட்டும் இருக்கிறாய். பரிதாபப் பிறவி. பரிதாபப் பிறவியான உன் மகன் வாழ்க்கையை விட்டுப் போய் தனது சாய்ந்தாடும் பொம்மை குதிரையில் வெற்றியை தேடிப் போய்விட்டான்.

தமிழில்:விஜயராகவன்

 

Pin It