லூய்கி – பிரண்ட்லோ 1867ல் ஜுன் 28 அன்று சிசிலியில் பிறந்தார். போன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம். ரோம் நகரின் நார்மல் மகளிர் கல்லூரியில் இத்தாலிய மொழி பேராசிரியர். 1889ல் முதல் கவிதைத் தொகுதி வெளிவந்தபோதே பிரண்ட்லோ பேசப்பட்டார். காரணம் தெரியாமல் வாழ்வால் அலைக் கழிக்கப்பட்டு ஒரு இருளின் தனிமையோடு தகர்ந்து தவிக்கும் கொடிய யதார்த்தங்களை அவரது சிறுகதைகள் கொண்டிருக்கின்றன. 1918 முதல் இத்தாலி மொழியின் முதன்மை நாடகசிரியரானார். ஐரோப்பா முழுவதும் முதல் உலக யுத்தத்தின் தீ நாக்குகள் அவரது நாடகங்கள் மூலம் பரவி பதறவைத்தன என்பது வரலாறு. 1934ல் நோபல் பரிசு. 1936ல் இரண்டாம் உலகப் போருக்கு இடையில் திடீரென்று மரணத்தை தழுவுவதற்கு முதல்நாள் பிரண்ட்லோ எழுதிய சிறுகதை இது.

அவரது இலக்கிய நூல்கள்

1.     நூலாசிரியரை தேடும் ஆறு பாத்திரங்கள் (1922) - நாடகம்

2.     தி பிளஷர் ஆஃப் ஆனஸ்ட்டி (1917)- நாடகம்

3.     ரை யு ஆர் இப் யு திங்க் சோ (1922) - நாடகம்

4.     ஹென்றி-4 (1922) - நாடகம்

5.     ஆஸ் யு டிசையர் மி (1930) - நாடகம்

6.     தி அவுட்காஸ்ட் (நாவல்) 1925

7.     பெட்டர் திங்க் ட்வைஸ் எபோட் இட் - 1936 -சிறுகதைகள்.

ரோமிலிருந்து இரவு நேர பெரு ரயிலில் புறப்பட்டவர்கள் இந்த பழைய ஃபாப்ரியனோ புகைவண்டி நிலையத்தில் வந்து இறங்கி, சல்மோனாவுக்கு அந்த பழங்கால இணைப்பு ரயில் பெட்டியில் விடியல்வரை - பயணத்தை தொடர காத்திருக்க வேண்டி இருந்தது. அந்த விடியலில், புகை அப்பி நெடி அடிக்கும் ஒரு இரண்டாம் வகுப்பு பெட்டியில் - ஏற்கனவே ஐந்துபேர் தங்கள் இரவை கழித்து இருந்த அந்த கம்பார்ட்மெண்டில் துக்கம் அனுஷ்டித்தபடிவந்த அந்த பருமனான பெண்மணி நிமிர்த்தி திணிக்கப்பட்டு ஒரு துணிமூட்டையைப்போல வந்து விழுந்தாள். அவளைத் தொடர்ந்து குட்டியான மெலிந்திருந்த வெறைத்து செத்த முகமும், பேயறைந்தவர்களுக்கான சுவாசமும்.. பளிச்சென மின்னும் விழிகளோடும் அவளது கணவர் சற்றே வெட்கிய முகத்துடன் வந்தார்.

ஒரு வழியாக இடம் ஒன்றில் அமர்ந்ததும் - தனது மனைவிக்கு அவள் தனது பருமன் தேகத்தை திணித்துக் கொள்ள போதுமான இடமளித்து உதவிகள் செய்த சக பயணிகளுக்கு நன்றியை பெருந்தன்மையோடு தெரிவித்துக் கொண்டார். இருவரும் மிகுந்த துக்கத்தில் இருந்தனர். பிறகு தனது கோட் காலரை பின்நோக்கி மடித்து காணாமல் போன அதை சரி செய்துபடி கொள்ள பெருமுயற்சி செய்த அவளை நோக்கி திரும்பி உனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லையே... ஆர் யு ஆல் ரைட்? என பாசத்தோடு விசாரித்தார்.        பதிலேதும் கூறாது முகத்தை மூடிக் கொள்பவளைப் போல பருத்த பெண்மணி காலரால் மறைத்தாள்.

கொடிய உலகம் ஒரு துயரப் புன்னகையுடன் கணவர் முணுமுணுப்பது எல்லோருக்கும் கேட்டது. தன்னோடு பயணிக்க இருக்கும் சக பிரயாணிகளுக்கு, தனது மனைவியின் மீது இரக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவது கடமை என்று கருதியவர் போல அவர் அவர்களது ஒரே மகனை யுத்தம் எடுத்துக் கொண்டுள்ள செய்தியை அறிவித்தார். ஒரே மகன் இருபது வயது. இருவருமாக தங்கள் வாழ்வையே அவனுக்காக என்று அர்பணித்தார்கள். சல்மோனாவில் தங்களது வீட்டை விட்டு ரோமிற்கு அவனோடு - அவன் படிப்பிற்காக இருக்கப் போனார்கள்.

ஆனால் அங்கே ரோமில் அவனுக்கு கல்வி கற்க இடம் கிடைத்ததே அவன் இராணுவ சேவைக்கு எப்போது அழைத்தாலும் செல்ல வேண்டும் எனும் நிபந்தனையோடுதான். ஆறுமாதத்திற்கு அனுப்ப வாய்ப்பு இல்லை என்று உத்தரவாதம் அளித்த அதிகாரி. ஒரே வாரத்தில் யுத்தம் வந்துவிட்டது. உத்திரவை மீறமுடியாது. என திடீரென்று தந்தி செய்தியை காட்டினான். மூன்றே நாட்கள் நீங்கள் அவனோடு இருந்து... வழி அனுப்பி விடுங்கள்.

அந்த பருமனான மனைவி உடல் பதறி குலுங்கி துக்கத்தை வெளியிட்டாள். அவளுக்குத் தெரியும் அந்த ரயில் பெட்டியில் இருந்த ஒவ்வொருவருமே கிட்டதட்ட அதே அவலத்தில்தான் இருந்தார்கள் என்று. தன் மீது இரக்கம் வரவழைக்க வேறு வழிகள் இல்லை. ஒரு மிருகம் போல அவள் உறுமியபடி அழத்தொடங்கினாள். அங்கிருந்தவர்களில் அவர்களது உரையாடலை உன்னிப்பாக செவிமடுத்த ஒருவர் சொன்னார்.

நீங்கள் கடவுளுக்கு நன்றி சொல்லவேண்டும். இப்போதுதான் உங்கள் மகன் யுத்தமுனைக்கு அனுப்பப்படுகிறான். யுத்தம் தொடங்கிய முதல்நாளே என் மகன் அனுப்பப்பட்டு விட்டான். இருமுறை ஏற்கனவே கடுமையான காயங்களுடன் முகாமிற்கு எடுத்து வரப்பட்டு.. இப்போது திரும்பவும் போர் முனைக்கு அனுப்பப்பட்டு விட்டான்.

அப்புறம் என் கதி என்ன? ஏற்கனவே என் இரண்டு மகன்கள் உறவினர் மகன்கள் மூவர் யுத்த முனையில் உள்ளனர் என்றார் மற்றொரு பயணி.

இருக்கலாம்..., ஆனால் எங்கள் வி­யத்தில் அது எங்கள் ஒரே மகன் என்றார் மெலிந்த கணவர்.

என்ன வித்தியாசம்? அதீத கவனம் அவன் மீது செலுத்துவதன் மூலம் நீங்கள் ஒரே மகனை வீணடிக்கலாம். ஆனால் மற்ற குழந்தைகளும் உங்களுக்கு இருக்கும் என்றால் அவர்களைவிட அதிகமான அன்பை நீங்கள் அவன் மீது செலுத்த முடியாது. பெற்றோர் பாசம் என்பது ரொட்டித் துண்டு அல்ல. ஏதோ வெட்டி எடுத்து பாதிப் பாதி ஆக்கி பையன்களுக்குள் பகிர்ந்து தருவதற்கு.. ஒரு தந்தை தனது ஒவ்வொரு மகனுக்குமே தனித்தனியாக தனது முழு அன்பையும் பாசத்தையும் வழங்குகிறான். எந்த பாரபட்சமும் இவ்விசயத்தில் கிடையாது. ஒரு மகனோ பத்து பிள்ளையோ... இப்போது இரு மகன்களுக்காக துக்கப்படுகிறேனே ஒருத்தனுக்கு ஒரு பாதி மற்றவனுக்கு ஒரு பாதியாகவா துக்கப்படுகிறேன்? இல்லை. உண்மையில் இரண்டு துக்கம் அதாவது இரண்டு மடங்கு.

உண்மை உண்மைதான் மெலிந்த கணவர் தர்மசங்கடத்தில் நெளிந்தார். ஆனால், ஒருவேளை (உங்களுக்கு அப்படி நேராது என்றே நம்புவோம்) ஒரு தந்தைக்கு இரண்டு மகன்கள் இருந்து ஒரு மகன் யுத்தத்தில் இறந்து விட்டதாகக் கொள்வோம். இன்னொரு மகன் இருப்பான் அல்லவா, ஒரு ஆறுதலுக்காகவாது ஆனால்.

ஆமாம் எதிர் இருக்கையில் இருந்த அவர் உடனே குறுக்கிட்டார். ஆறுதல் என்ற பெயரில் ஒரு மகன் ஒருவன் இறந்து துயரமாகி நெஞ்சை குத்துகிறான். மற்றொருவனுக்காகவாவது வாழ்ந்தே ஆகவேண்டும். ஆனால் ஒரே ஒரு மகன் இருக்கும் தந்தை துக்கத்திற்கு முடிவுகட்ட துணிந்து மரணத்தையாவது தழுவலாமே. இரண்டில் எது கொடிய சூழல். எனது நிலைமை மிகவும் கொடியது என்பது உங்களுக்குப் புரியவில்லையா?

முட்டாள்த் தனம்! இரத்தம் வழிய அடிப்பட்டிருந்த முகம் வீங்கிய அவரை அனைவரும் திரும்பிப்பார்த்தனர். கண் ஒன்று கிட்டத்தட்ட வெளியே வந்திருந்தது. இரத்தக்களறியான முகம்... தனது கைகுட்டையால் உடைந்து போன இரண்டு முன் பற்களை மறைத்தபடி அவர் நடுங்கினார். ஆழ்மனக் காயங்களையும் கொடிய மன வேதனைகளையும் அவரது முகம் வெளிப்படுத்துவதாக இருந்தது. முட்டாள்த் தனம்! மேலும் கைகுட்டையை வைத்து வாயை மூட முயன்றபடி திரும்பச் சொன்னார். முட்டாள்த்தனம் குழந்தைகளை நாம் பெற்றெடுப்பது நமது சுயநலத்திற்காகவா? அவர் பருமனாக இருந்தார்.

சக பயணிகள் அவரை மிகுந்த துயரத்துடன் நோக்கினர். முதல் நாள் யுத்தத்தின்போது மகனை அனுப்ப நேர்ந்தவர் சொன்னார். நீங்கள் சொல்வதுதான் சரி நமது குழந்தைகள் நமக்குச் சொந்தமானவை அல்ல. அவை இந்த நாட்டிற்கே சொந்தம்.

ஓ... ஷ்! பருமனான காயம்பட்ட அவர் தொடர்ந்தார். நாம் குழந்தைகளை பெற்றெடுக்கும்போது நாட்டையா நினைக்கிறோம்? நமது பையன்கள் ஏன் பிறக்கிறார்கள் என்றால்... ம் ஏனென்றால் அவர்கள் பிறந்தே ஆகவேண்டும் என்பதற்காகப் பிறக்கிறார்கள். அவர்கள் பிறக்கும் போது நமது வாழ்க்கைக்கும் சேர்த்து அர்த்தம் ஏற்படுகிறது. இதுதான் உண்மை. நாம் அவர்களை சேர்ந்தவர்கள்... ஆனால் அவர்கள் நம்மை சேர்ந்தவர்கள் அல்ல. இருபது வயதை அடையும்போது அவர்கள் நாம் இந்த வயதில் எப்படி இருந்தோமோ அதே மாதிரி ஆகி விடுகிறார்கள். நமக்கும் ஒரு தந்தை இருந்தார். தாய் இருந்தார். ஆனால் அதைத்தவிர வேறு விஷயங்களும் இருந்தன.

மது, மங்கை, சிகரெட், கனவுகள்... புதிய உறவுகள், கற்பனை அப்புறம் நாடு. அப்போதும் நாடு இருந்தது. அது தனக்கான தேவை என அழைத்திருந்தால்... நமது தாயும் தந்தையும் என்ன நினைத்திருந்தாலும்... நாமும் போய்த்தான் இருப்போம்... கட்டாயம்... இப்போது நமது வயதிற்கு நாடு பற்றிய பற்று மேலும் அதிகமாக இருக்கவேண்டும். அது குழந்தைகளைவிட நாட்டின் மீதான பற்று நமக்கு அதிகமாக இருக்க வேண்டும். நமது பிள்ளைகளுக்கு பதிலாக நாம் போகலாம் என்று சொல்லப்பட்டால் யுத்தமுனைக்கு போக முடியாது என நம்மில் யாராவது சொல்லி விடுவோமா என்ன?

சுற்றிலும் அமைதி... அனைவருமே ஆமோதித்து தலையசைத்தனர். ஏன்.. அந்த பருமன் மனிதர் தொடர்ந்தார். நமது குழந்தைகள் இருபது வயதை எட்டும்போது அவர்களது உணர்வுகளை நாம் ஏன் புரிந்து கொள்ளக்கூடாது? நான் கேட்கிறேன் அவர்களுக்கு நாடு என்பது நம்மைவிடவும் அதிக அவசியமான ஒன்றாக இருக்கக்கூடாதா... (நான் ஒழுக்கமான பிள்ளைகளை மட்டும் குறிப்பிடுகிறேன்) நம்மை விட அதிகம் அதை நேசிக்கக்கூடாதா?... வயதாகி விட்ட நம்மால் ஒரு அடிக்கூட எடுத்து வைக்க முடியாத நிலை வந்துவிட்ட பின் இளைஞர்களான அவர்கள் வேறு வழியின்றி அங்கே போனது இயற்கை தானே.. நாடு என்கிற ஒன்று இருக்கும் என்றால்... உட்கொள்ளா விட்டால் செத்துப்போய் விடுவோமே அந்த உணவு போல இதுவும் அவசியம் என்றால்... அது இல்லாவிட்டால் நாமெல்லாம் அழிவது நிச்சமென்றால்.. நாட்டைக் காப்பதும் அவசியம்தானே.. யாராவது ஒருவர் போய் அதை காப்பாற்றியே ஆகவேண்டும், அல்லவா? நம் பிள்ளைகள் போயிருக்கிறார்கள்.

இருபது வயதில் அவர்களுக்கு கண்ணீர் தேவை இல்லை. ஏனெனில் அவர்கள் சாகும்போது யாதொரு குறையுமின்றி மகிழ்ச்சியோடுதான் சாகிறார்கள். (நான் ஒழுக்கமான பையன்களைப்பற்றி சொல்கிறேன்) ஒருவர் இளமையோடு மகிழ்ச்சியாக வாழ்வின் கெட்ட இருண்ட பக்கமின்றி சலிப்பின்றி வாழ்ந்து, கசப்புணர்வும், இயலாமையும் ஏதுமின்றி மகிழ்ச்சியாக இறந்துபோனால்... அவரிடம் வேறு என்ன எதிர்ப்பார்க்க முடியும்? அனைவருமே அழுவதை நிறுத்த வேண்டும். எல்லோரும் சிரிக்க வேண்டும். என்னைப் போல அல்லது கடவுளுக்கு நன்றி சொல்லலாம். என்னைப்போல ஏனென்றால் என் மகன் தான் யுத்தத்தில் பலியாவதற்கு முன் எப்படி சாக நினைத்தானோ அப்படி உயர்ந்த சாவை தான் அடைந்து மிகுந்த மகிழ்ச்சியோடு உயர் விடுவதாக எனக்கு செய்தி அனுப்பி இருக்கிறான். அதனால்தான் நான் துக்க-உடை கூட அணிந்திடவில்லை.

தலையை லேசாக அசைத்தபடி தனது கரடித்தோல் மேல்கோட்டை காட்டும் விதமாக காலரை கையால் இழுத்து காண்பித்தார். பல் உடைந்திருந்த தாடைக்கு மேல் உதடு நடுங்கியது. கண்கள் ஈரமடைந்திருந்தன. அசைவற்று இருந்த அவர் சற்று குலுங்கிச் சிரித்தார்.

ஆமாம்... ஆமாம் மற்றவர்கள் ஒப்புக்கொண்டார்கள்.

ஓரமாக ஒரு பெரிய மூட்டையைப் போல் அமர்ந்திருந்த அந்த உடல் பருத்த மனைவி, கடந்த மூன்று மாதங்களாக தனது மெலிந்திருந்த கணவர் மற்ற நண்பர்களின் அவளைத் தேற்றும் வார்த்தைகளால் ஒரு தாய் சாகக்கூட அல்ல, ஆபத்தான வாழ்விற்கு மகனை அனுப்புவது என்றால் எப்படி துயரப்படவேண்டும் என்பதை கற்றவள் போல இருந்தாள். இருந்தும் அவளது உள் ஓடிய அந்த துயரத்தை - எத்தனையோ பேரின் வார்த்தைகள் எதுவுமே - துடைப்பதாகவோ துயரத்தை பகிர்வதாகவோ அவளுக்கு தோன்றவே இல்லை.

இப்போதோ அந்த பயணியின் வார்த்தைகள் உணர்வை கிளர்த்தெழ வைத்ததோடு அவளை அதிர்ச்சியும் அடைய வைத்தன. திடீரென்று அவளுக்குப் புரிந்தது. அவளை புரிந்து கொள்ளாமல் போன மற்றவர்கள் தவறிழைக்கவில்லை. தங்களது மகன்களை யுத்தத்திற்கு அனுப்புவதோடு இருந்தாலும்கூட அழுது ஆர்ப்பாட்டம் செய்யாமல் நாட்டுக்காக என தாங்கிக் கொள்ளும் மற்ற தாய் தந்தையர் அளவிற்கு உயர்ந்த மன நிலைக்கு செல்லாத அவள்தான் தவிர்த்துவிட்டாள்.

எனவே தனது தலையை சாய்த்து திரும்பி சக பயணிகளிடம் எப்படி மகன் ஒரு உயர்ந்த மாமனிதனாக மன்னருக்காவும், மண்ணிற்காகவும் வீழ்ந்தான் என்பதை எந்த குற்றசாட்டுமின்றி மகிழ்ச்சியோடு சொல்லிக் கொண்டு வந்தவரை ஆழமாகவும், உன்னிப்பாகவும் கவனித்தாள். இதுவரை தான் நுழையாத ஒரு புதிய உலகிற்குள் கேள்விப்பட்டே இருக்காத அதற்குள்... மகனின் மரணத்தை... குறித்து மிகுந்த பெருமையோடு பேசும் தந்தையை முழு மனதோடு வாழ்த்திப் பாராட்டும் பலர் கொண்ட உலகிற்குள் பிரவேசித்தாள்.

பிறகு திடீரென்று ஏதோ கனவிலிருந்து விழிப்பவளைப் போல ஏதோ கேள்விப் பட்டறியாத ஒன்றைப் பற்றி கேட்பது போல அந்த ரத்தம் சொட்டும் முதியவரிடம் திரும்பி கேட்டாள். அப்போ உங்கள் மகன் உண்மையிலேயே இறந்து போய்விட்டானா?

எல்லோரும் அவரைப் பார்த்தனர். அந்த வயதான மனிதரும் திரும்பி தன் வீங்கி இரத்தம் கட்டிய விழிகளால் அவளை நேருக்குநேர் கண்டார். பதிலளிக்கத்தான் முயன்றார். ஆனால் வார்த்தைகள் அவரை பழிவாங்கின. அவர்களை பார்த்துக்கொண்டே இருந்தார். திடீரென அப்போதுதான் மகன் இறந்து இனி வரவேப் போவதில்லை என்ற கொடிய உண்மையை உணர்ந்தவர் போலானார். அவரது முகம் சிறுத்தது. பலவிதமாக அதன் சுருக்கங்கள் முகத்தில் தோன்றின. தனது சட்டை பாக்கெட்டிலிருந்து ஒரு கைக்குட்டையை அவசரமாக உருவி அங்கிருந்து அனைவரும் ஆச்சரிப்படும்படி துயரம் தாங்காமல் இதயம் வெடித்து ஓவென்ற சப்தத்தோடு கதறிக் கட்டுப்படுத்த முடியாமல் பீறிட்டு அழத் தொடங்கினார்.

இத்தாலிய மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மைக்கேல் பெட்டினாடி

தமிழில் நிருத்தன்

Pin It