யோசனை

யோசனை காவிக்கறை படிந்த பற்கள், சோளக்காட்டில் அங்கங்கே சோளத்தட்டையில் குருத்துப் பூச்சி விழுந்து செத்து காய்ந்தது போல் தெரியும் நரைத்தும் நரைக்காத தலை, ஒரு பொட்டு வெளுக்காத மீசை, கறுப்பு நிறத்தில் மிதக்கும் எண்ணெய் பிசுபிசுப்பு முகம். கண்களைச்சுற்றி சுருக்கம் விழத் துவங்கியிருந்தது. தினமும் கிடைக்கும் சொற்பபணத்தை வீட்டுக்கு கொடுத்துவிட்டு அந்த நெடுஞ்சாலையில் கூட்டம் நிரம்பி வழியும் மதுக்கடைக்கு முன்பாக நிற்பான். அவனை அறிந்தவர்கள் அவனுக்கு ஒரு கட்டிங்கையோ, குவாட்டரையோ தந்து விட்டுப் போவார்கள். இப்போது யோசனையைப் பார்த்தாலும் நாற்பத்தைந்துக்குள் தான் மதிக்க தோணும். ஆனால் ஐம்பதை தாண்டிக் கொண்டிருக்கிறான், இவனைக் காட்டிலும் கொஞ்சமாய் குடித்தவர்களெல்லாம், வெகு இளவயதிலே மாரடைப்பு வந்து இறந்து போனார்கள். குடம், குடமாய் குடித்தாலும் இவனுக்கு வயிற்றில் சுறுக்குன்னு வலிகண்டதில்லை. காய்ச்சல் தலைவலின்னு கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் போய் நின்றதில்லை.

யோசனைக்கு துளியூண்டு மது உள்ளே போகாமல் ஒரு நாள் போகவே போகாது. இன்னொரு அதிர்ஷ்டம் அவனுக்கு இருந்தது. இதுவரை யாரிடமும் போய் தர்மம் கேட்டதில்லை. ஒரு கிளாஸ் மதுவுக்கு கையேந்தியது இல்லை. அந்த குருட்டு நம்பிக்கைகளுக்காக தான் இப்படி வந்து மதுக்கடைக்கு எதிரே வந்து நின்று பார்த்துக் கொண்டேயிருப்பான் சாமிதரிசனம் காண்பவனைப்போல. காசே இல்லாமல் நின்றப்பக் கூட வெறுங்கையோடு திரும்பிப் போனதில்லை. வெகுநேரமாய் நிற்கிறான். கட்டிங்குக்கு ஆள் கிடைக்கவே இல்லை. வழக்கமாய் செட்டு சேரும் ஆட்களையும் காணோம். நேரம் இரவை வெகு சீக்கிரமாக விழுங்கிக் கொண்டிருந்தது. என்றுமில்லாமல் இன்று ஒருவித பதட்டம் அவனிடம் தொடங்கியிருந்தது. இன்னும் பத்து நிமிசம்தான் அதன் களோபரங்கள். இதுவரை மிகக்குறுகின உறைகிணற்றுக்குள் இறங்கி அமிழந்ததின் காட்சிகளாய் தோன்றி ஒன்றின்மேல் ஒன்றாய் ஊடுபாவும் காட்சி வெளிகள் நிழலாடிக்கொண்டிருந்தன. கண்களில் கிணற்று இருள்புக, கூடவே காது அடைத்தது. விரைந்து மறையும் சாலை வெளிச்சங்கள் உடலில் ஒருவித வெப்பத்தை பதிந்து கடந்து கொண்டிருந்தன.

கடை அடைக்கும் வேலைகள் துவங்கிவிட்டன. அப்போது பார்த்து ஒரு போலீஸ் ஜீப் மூன்று காவலர்களுடன் வேகமாக வந்து நின்றது. யோசனைக்குள் ஒளிந்து கொண்டிருந்த இரைச்சல்கள் ஏதோ பக்கத்து தெருவில் கேட்பது போன்ற பாவனைகள் விலகி, வயர்லெஸ் இரைச்சல்களில் கலந்து கொடூர எரிச்சல் தன்மையை ஏற்படுத்தியது. ஒரு போலீஸ் பாட்டில் வாங்கிக் கொண்டிருக்கும் போதே, இன்னொரு போலீஸ் பார்க்குள் சென்று அதி தீவிரமாய் தேடி சர்வரிடம், அவன் தேடும் பேரைச் சொல்லி கேட்க, அவன் உள்ளிருந்து வெளியே அழைத்து வந்து மின்கம்பத்தில் சாய்ந்து நின்று, உடலை ஊடுருவும் மெல்லிய மின் அதிர்வை கூட பொருட்படுத்தாமல் மிக அயற்சியாய் இருந்தான் யோசனை.

அந்த ஏட்டு இப்போது அவனை அழைக்க மிக பவ்யமாய் வந்து நின்றான். தண்ணி போட்டியா? இல்லைங்க எஜமான். கொஞ்சம் காசுதேன் கையிலே இருக்கு. அவன் அதை காலையிலிருந்தே டீக்கு தேடிய சில்லரை குவியல்களாய் இருந்தது. அதை இரு கைகளையும் திறந்து நீட்டினான் யோசனை. ஏட்டு சரி சரி அதை பையில போடு இந்தா எனக்கொரு சிகரெட் பாக்கெட் வாங்கிட்டு உனக்கொரு குவாட்டர் வாங்கிட்டு வண்டியிலே ஏறு என்றதும், தலைகுனிந்திருந்த வாகன வெளிச்சம் ரோட்டைத் துழாவிக் கடக்கும் வேகத்தில் யோசனையின் புலன்கள் உயிர்க்க, வாங்கிகொண்டு, என்ன ஏது எதுக்கு என்ற எந்த கேள்வியுமில்லாமல் சீட்டின் நுனியில் கதவையயாட்டி சாய்ந்தபடி, அமர்ந்து மிக பத்திரமாக இடுப்பில் பாட்டிலை சொருகிக் கொண்டான். விலையுயர்ந்த கார்கள், வாகனங்கள் விதவிதமான நகரத்து வண்ண விளம்பர தட்டிகளை போல அவன் மனிதன் பணம் பற்றின கடவுளைப்பற்றி நிறைய கேள்விகள் எழுந்தது. பணம் எவ்வளவு பெரிய வலி, அவமானம், எதிர்ப்பார்ப்பு, ஏமாற்றம் எல்லாவற்றுக்கும் அழவைக்கும். நம்மை மட்டும் ஏன் கோமாளியாக்கி இப்படி கூத்தாடுகிறான் இந்த கடவுள், என்று உள்ளுக்குள் ஓடியது.

இத்தனை வயசாகியும் கிணற்றுக்குள், குளத்துக்குள், ஆற்றுக்குள் இரவு பகல் பாராமல் இறங்கி, மூச்சடக்கி, சம்பாதித்தலுக்கு ஒரு விமோசனத்தையும் வாழ்நாளில் இதுவரை கடவுளைப் போல ஏன்? கண்டே பிடிக்கமுடியவில்லை என்ற எண்ணங்கள் வாகனத்தைவிட வேகமாய் மனதுக்குள் தறிகெட்டு ஓடிக்கொண்டிருக்கையில் ஜீப் கிறீச்சுட்டு நின்றது. போலீஸ் ஸ்டேசன் இன்று மிகப்பரபரப்பாய் இயங்கிக்கொண்டிருந்தது. விடாமல் தொலைபேசி அலறிக் கொண்டிருந்தது. வாங்கின குவாட்டரின் மூடியை விரல் நழுவ விட்டு தயங்கிக்கொண்டிருந்தான் யோசனை. அவனுக்கு ஒன்று மட்டும் புரிந்தது. இன்னைக்கு இந்த குவாட்டர் பத்தாது... இன்னும் அதிகமா தேவைப்படும் அதற்கு என்ன செய்வது? இன்னேரம் கடை அடைத்துவிட்டிருக்கும் என்ற எண்ணம் துரித கதியில் இயங்கியது. பீடி பண்டலையும், பான்பராக் வெற்றிலையும் வாங்கி வைத்து மறந்துபோன தீப்பெட்டியையும் மடியில் வைத்து இறுக்கிக் கொண்டான் வேட்டியில். இனி இதைவிட்டு கிளம்பும் நேரந்தான் கூப்பிடுவார்கள்.

சற்று தள்ளி நிற்கும் புளிய மரத்தில் சாய்ந்து நின்று கொண்டிருக்கையில், சிறுவயதிலிருந்து படிப்படியாக மாற்றமடைந்து இன்னைக்கு புத்தம் புதிய கட்டிடம். ஒரு காலத்தில் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில், துணைக்கு வந்து படுக்கச்சொல்லி படுத்துக் கிடந்த பழைய கட்டிடம் அவன் மனக்கண்ணில் விரிந்தது. வெவ்வேறு விதமான இன்ஸ்பெக்டர்களும், ரைட்டர்களும் டைப் சத்தத்தில் வந்து போனார்கள். இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் கிராமத்து ஆளுங்கள் ரோட்டுக்கும் வாசலுக்குமாக இவனை கடந்து நடந்து கொண்டருந்தார்கள். மெல்லிய சோர்வு ஆட்கொள்ள நாசியில் நிணம் ஊறின சடல வாசனைகள் கரிமூட்டமாய் படர்ந்து அவனுள் என்னவோ செய்தது. இது வழக்கமான ஒன்றுதான் என்பதாலும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. அந்த சலனங்களை ஏழெட்டு நாள் ஆன உடம்புகளைக் கூட பானைகளில் அள்ளி, அள்ளி போட்டிருக்கான் யோசனை. ஆனால் அள்ளும் மட்டும் சொன்ன ஆசை வார்த்தைகளை பேசின கூலி, எல்லாம் அடிப்பட்டு போகும் அந்த அவசர சூழலில் அசதியாய் இருக்கும். அந்த அகால நேரங்களில் சீயக்காய் வெச்சு சுடுதண்ணிலே எம்புட்டு உடம்பு சரியில்லைன்னாலும் குளிப்பாட்டிவிடுவா, அவன் மனைவி.

இப்ப இப்ப. அவளுக்கும் உடம்புல வலு இல்லை. நினைச்சாலும் முடியிறதில்லை. யோசனைக்கும் பலம் குறைஞ்சு வருது. சில தடுமாற்றங்களும் தெரியுது. முடியிலைன்னு சொன்னாலும், ஸ்டேசன் அதிகாரிங்க விடுறதில்லை. மாசத்துக்கு ஒண்ணு எப்படியாது வந்து சேந்துருது. மீண்டும் அவன் மனதுக்குள் புகைப்படக்காரனின் ஒளிக்கீறல்கள் சடலங்களை அருந்திக்கொண்டிருந்தது. தன்னை ஒரு போலீஸ் தொட்டு உலுக்கவும், விரைந்து வண்டியில் ஏற, ஒற்றையடியில் ஊர்களை கடந்து கண்மாய் மேட்டு ஆலமர கருப்பசாமி கோவிலுக்கு வந்து நின்றது. கருக்கிருட்டு, ஈரக்காற்று குளிர் போர்த்த சன்ன நட்சத்திர வெளிச்சம். அங்கே கூடியிருந்த ஆட்களும் பலவாறாக பேசிக் கொண்டிருந்தனர்.

இன்ஸ்பெக்டர் விசாரித்தார் எத்தனை நாளா? இந்த மூட்டை மிதக்குது, இந்த பக்கம் யாருமே வரலீயா? யார் இத மொத பாத்தா..ன்னு மொறவச்சு மடை பாத்தி, மாத்துரப்ப, சலசலப்பு, நிலத்துகாரங்ககிட்ட.. அதனால மொத கவனிக்கலை. ரெண்டாவது காட்டு பொணமெல்லாம் இப்ப குளம் குட்டைக்குள்ள மிதக்குது சார். கோர்ட்டு படியேறி நாளைக்கு சாட்சி அது இதுன்னு, அலையவேண்டி வந்து, நல்லது கெட்டதுக்கு போய் வர முடியாதுன்னு சாவடியில ஆளாளுக்கு கையை ஒதறி போயிட்டாங்க. அப்பத்தான் உங்களுக்கு தகவல் வந்து இருக்கு. உங்கள பார்த்துதேன் நாங்க வந்தோம். காட்டு வேலை முடிஞ்சு திரும்புற பொம்பளைங்க கையக்காலக் கழுவும் போது, பார்த்துதேன் இது ஒத்த மூடை இல்ல மூணு, நாலு முட்டிக்கிட்டு மிதக்குதுன்னு தெரியவந்துச்சு.

எங்கய்ய யோசனை, போயி தண்ணிக்குள்ள இறங்குய்யா... முதல்ல என்னான்னு பாரு.. பாத்துட்டு கூப்பிடு. துணைக்கு ஆளுங்களை கூட்டியாந்திருக்கையா... இல்லியா சரி இறங்கு சொல்றேன். நீ இறங்குன்னதும் மடியிலிருந்து சுளுவா எடுத்து அந்த மதுவை அப்படியே ஒரு சொளவாய் விட்டுக்கொண்டு குதித்தான். வதி அப்பியது யோசனையை.

கரைவதிக்குள்ள ஒட்டுன உடம்போட நீர் அலசி நடந்தான் யோசனை. மேட்டுக்குள்ளிருது பலவாக்கில் கண்சிமிட்டியது டார்ச் வெளிச்சம். தகவல் தெரிஞ்சு மேலும் ஊர் ஆட்கள் வர, இந்நேரம் கூட்டம் வேண்டாம். ஒண்ணு ரெண்டு பெரியாளுங்க மட்டும் நில்லுங்க. மத்தாளுங்க கிளம்புங்க என்று எரிச்சலுடன் இன்ஸ்பெக்டர் கூட்டத்தை அப்புறப்படுத்தினார். அவருக்கு பலவித சந்தேகங்கள் இருந்தது. அதை நிரூபிக்கும் விதமாக அவ்வப்போது பலமாக மூச்சை உள்ளிழுத்து கவனித்தார். நேரமாகிக் கொண்டேயிருந்தது ஒரு மூட்டைதான் தட்டுப்பட்டது. கூட்டம் கலைந்து ஒன்றிரண்டு ஆட்களும் களத்துமேடு பிள்ளையார் திட்டுக்கு சென்று அமர்ந்தனர். ஏய் யோசனை என்னெய்ய பண்ணிக்கிட்டுயிருக்க. இம்புட்டு நேரம் தண்ணிக்குள்ள இருந்தா என்ன அர்த்தம். என்ன ஏதுன்னு சட்டுபுட்டுன்னு சொல்லு.

ஐயா, மூட்டை வசத்துக்கு அம்புட மாட்டேங்குது. ஒருவசத்துக்கும் வராம சுத்திக்கிட்டு பலூன் கெனக்கா மிதக்குது. சடலமாதி தோனலங்க. பொணநாத்தமும் இல்ல. ஏதோ விளையாட்ட செஞ்சது கெனக்கா இருக்கு... ஆனா நல்லா கணமாவேற இருக்கு. என்னான்னே புரியல.ன்னு தடுமாறி மூச்சு வாங்கியபடி கரை வந்து சொன்னான். கையில் ஒரு கத்தியை கொடுத்த பின்பு இறக்கி விட்டனர். கத்தையை மூட்டை நடுவயிற்றில் சொருகி கிழித்தான் உள்ளே இன்னொரு யூரியா சாக்கு. அதையும் கிழித்தான் இடுப்பு தண்ணிக்கு இழுத்தாந்து அரை வெளிச்சத்தில் பார்த்தான். அப்படியே பேயறைஞ்சது போலானது. தலைகிறுகிறுத்தது, போதை கூடின மறுநாள் வரும் தலைக்குடைச்சல் அப்பொழுதே ஆரம்பமானது. அவன் அறியாமல் அவன் உடல் பதட்டமடைந்து சீரற்று சுவாசம் துடித்தது. அவன் பொறப்பிலிருந்தே எத்தனையோ ஆடுமாடுகளிலிருந்து, ஆம்பள, பொம்பள, குழந்தைங்க சடலம் வரைக்கும் எடுத்திருக்கிறான். அப்போதெல்லாம் இப்படி இல்லை. அவன் கண்களையே நம்பமாட்டாமல், மூட்டைக்குள் கையை விட்டு ஈரப்படாமல் தொட்டுப்பார்த்தான் திரும்பவும் நெஞ்சடைத்தது.

அவ்வளவும் பணம். கட்டுக்கட்டாக ரேகை ஒட்டாத பணம். என்ன ஒருசத்தத்தையும் காணோம் என்றபடி ஏட்டு, முழங்கால் தண்ணியில் இறங்கி வந்தார். யோசனை இங்கிட்டு தள்ளுய்யா... ஏய்யா இப்படி தெகச்சு வாயடைச்சுப் போய் நிக்கற. அய்யா, ஐயா, அத்தனையும் பணம்ங்க. அய்யா பணமுன்னு பிரமிப்பு அகலாமல் சொன்னான். பரபரப்பு தொற்றிட நாலுமூட்டையும் கரைவந்தது. கம்மா முழுசும் தேடினாலும் வேறு எதுவுமில்லைங்க. இந்த நாலு மூட்டையும் பணம். ஏட்டு வாங்கின குவார்ட்டரை, தூக்கி ரொம்ப வேகமாக கொடுத்தார். இந்தா இத வச்சுக்கோன்னு. உள்ளே பேச்சு நடந்துச்சு யோசனைக்கு உடம்பு தீயாக கொதித்தது. கண்ணெல்லாம் சிவந்திருச்சு... பேய் புகுந்த உடம்பா மனசு அழிச்சாட்டியம் பண்ணுச்சு என்னென்னவோ, நிமிசத்தில் கற்பனை ஓடுச்சு. உள்ளேயிருந்து திரும்பவும் ஏட்டு வந்தார்.

என்ன யோசனை இன்னம் கிளம்பளையா? நீ கிளம்புய்யா.. ரெண்டுமுறை திரும்பி கும்பிடுகிறான். சாமி வரட்டுங்களா.. கும்பிடுறேன் சாமின்று நாக்கு உலர்ந்த வார்த்தைகள் வெளிப்பட்டன. உள்ளே திரும்பி நடந்த ஏட்டு நின்று திரும்பி, யோவ் இங்க வா. ஊருக்குள்ள நீ வாயத் தொறக்கக்கூடாது என்ன. இந்தான்னு வெடவெடப்பா ஒரு பச்ச நோட்ட நீட்ட, அதை வாங்கிகொண்டு வணக்கம் சாமின்னு நடந்தான் யோசனை. நள்ளிரவைத் தாண்டி கோழி கூப்பிடும் தூரம் நெருங்கிக் கொண்டிருந்தது. மின் கம்ப குழல்விளக்கு வெளிச்சத்தில் தெருநாய்களைத் தவிர யாருமில்லை. அந்த நோட்டை அப்படியோ உத்துப்பார்த்தான். இதுவரை பார்த்ததே இல்லை. பிறந்ததிலிருந்து ஆயிரம் ரூபா நோட்டுன்னு கேள்விப் பட்டிருந்தான். சின்ன வயசிலே ஒத்த நோட்ட பார்த்ததில்லை. ஆனா இன்னைக்கு ஒரே ஒரு நோட்டு கையில் அவனறியாமல் புல்லரித்தது. என்னவோ செய்தது. தனக்குள் மறுகியபடி போய் படுத்தான்.

யோசனை அந்த பச்சைநிற வடவடதாளை மனைவியிடம் காட்டவில்லை. படுத்தவுடன் தூங்கிவிடுவான். தூக்கம் கலைந்து எழுந்தால் அடுத்து படுக்கை என்பது இல்லை. ஆனால் இப்பொழுது படுத்திருப்பதில் பல மாறுதல்கள். தலையணையாய் வைத்திருக்கும் துணிப் பொட்டலத்தை கிழித்து ஆராய்கிறான். புரண்டு படுக்காமல் கிடந்தான்.

அவன் உள்ளங்கால் வழியேறும் காந்தி எறும்பில் புறுபுறுப்பை அசட்டை செய்து கிடந்தான். அவனுக்கு வைத்த கறுப்பு காப்பி ஆறி ஈ விழுந்து கிடந்தது. அவனையே கவனித்துக் கொண்டிருந்த மனைவி அசந்து தூங்கிப் போவாள். பின் விழிப்பு வந்து யோசனையை பார்த்தால் அவன் தொப்பலாக நனைந்து படுத்திருந்தான். கண்கள் நீண்ட நேரம் தண்ணியில் கிடந்ததன் அடையாளமாக சிவந்திருந்தது. கை விரல்களை இறுக்கியிருந்தான். அவனருகே செல்ல அவள் பயந்தாள். அவளும் வியர்வையில் நனைந்திருந்தாள்.

யோசனைக்காக உடுக்கோடு ஒருவன் வந்தான். ஒருசாண் தாடி. சுண்டுவிரலும் கட்டை விரலும் நீட்டி உள்நோக்கி கவித்தியது போல் மீசை. அவிழ்த்து விடப்பட்ட முடியோடு கண்களை உருட்டி உடுக்கையை அடித்தான். உடுக்கையை போலவே சில நேரம் அவனுடைய குரலும் அதிர்ந்தது. படுத்திருந்த யோசனை இமை கூட அடிக்கவில்லை. உடுக்கையடி பக்கத்துவீடு, பக்கத்து தெரு என அத்தனைபேரையும் உசுப்பிக் கொண்டு வந்தது. யோசனை உசும்பவில்லை. கூட்டம் கூடக்கூட உடுக்கைகாரனுக்கு ஆக்ரோசம் வர விரல்கள் விண்விண் என்று தெறிக்க அடித்தான். கூடி யிருந்தவர்களுக்குள் பயம் ஊடுருவியது. யோசனை அப்பிடியே கிடக்க, அடியின் உக்கிரத்தில் உடுக்கை தெறித்து விழுந்தது. உடுக்கைக்காரன் யோசனையை வெறித்துப் பார்த்துவிட்டு கிளம்பினான்.

இப்பொழுது யோசனையின் மனைவி, பலநாள் தூங்காத தூக்கத்தை எல்லாம் சேர்த்து தூங்கிக் கொண்டிருந்தாள். நீண்ட நேரம் கதவு தட்டப்பட்டுக் கொண்டிருந்தது. சுவிட்ச் போட்டது போல் விழித்தாள். தலையை சொறிந்து கதவை திறந்தாள். மங்கிய வெளிச்சத்தில் ஒரு காவலர் நின்றிருப்பது தெரிந்தது.

யோசனை எங்க... அங்க ஒரு பொணமிதக்குது. தூக்கணும் என்றார். அவள் மெல்ல யோசனை படுத்திருந்த இடத்திற்கு வந்தாள். அவன் படுத்த இடத்தில் மெல்ல கைவைத்தாள்... தண்ணீர் மட்டும் தட்டுப்பட்டது.

Pin It