கோஸ்டிஸ் பேபகங்காஸ் கிரேக்க நாட்டில் பிண்டு மலைகளுக் கிடையில் ஒரு கிராமத்தில் தலைமுறைகளாகப் புரட்சியாளர்களின் வம்சாவளியில் 1936ல் பிறந்தவர். கிரேக்கத்தை நாஜிகள் ஆக்ரமித்துக் கொண்டபோது கிரேக்க விடுதலைப்படையின் இளைஞரணியில் பணியாற்றியவர். ஆயுதம் தாங்கிய விடுதலை வீரர்களுடன் சேர்ந்து ஆக்ரமிப்புக்கெதிரான எதிர்ப்பியக்கத்தை அநுபவப் பூர்வமாகக் கண்டவர். கிரேக்கத்தில் நடந்த உள்நாட்டுப் போரின் போது மலைகளிலும், அவர் தந்தை போரில் கொல்லப் பட்டபோது இரண்டு வருடங்கள் ஆதென்ஸ் நகரத்திலும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர்.

1967ல் ஏழு வருட சர்வாதிகாரம் பிரகடனம் செய்யப்பட்ட போது பேபகங்காஸ் முதலில் இத்தாலிக்கு தப்பி ஓடினார். பிறகு ஸ்வீடனுக்கு குடிபெயர்ந்தார். இருபது வயதில் ‘சிலுவைப்பட வில்லை’ என்ற முதல் கவிதைத் தொகுப்புடன் துவங்கி ‘மாயை’ ‘கனவுகள்’ போன்ற பிரபலமான கவிதைத் தொகுப்புகளுடன் மொத்தம் 12 கவிதைத் தொகுப்புகள் 3 உரைநடை நூல்கள் வெளியிட்டுள்ளார்.

பேபகங்காஸின் கவிதைகள் அடக்குமுறைக்கெதிரான எதிர்க்குரல் கொண்டவை. அற்புதமான சொற்சிக்கனம், நிழற்படம் எடுப்பது போன்ற விவரிப்பு, வாழ்வுக்கும் சாவுக்குமான இடைவெளி, நம் காலத்தின் அர்த்தமற்ற தன்மைகளை இவருடைய கவிதைகள் வெளிப்படுத்துகின்றன.

ஆங்கில வழித் தமிழாக்கம் : லாவண்யா


கிரேக்கக் கவிதைகள்

1.

வசந்தம்

மரம் குனிந்து பறவையைப் போல்
கிணற்றில் நீரந்திற்று.
பறவை ஒற்றைக் காலில் நின்று
மரம்போல் பாவனை செய்தது
வேடன் பறவையின் கீழே
தன் முழங்காலை மடித்து
மரத்தைக் குறிவைத்தான்
கிணற்றிலிருந்து பீறிட்டது பச்சை ரத்தம்.

2.
வழிப்போக்கன்

ஒரு சிறிய மனிதன்
உணவகத்தில் நுழைந்தான்
மூன்று இறந்த மனிதர்களை
முதுகில் சுமந்தவாறு
காபி அருந்தி நகைச்சுவையாகப் பேசி
காசைத் தந்து பயணித்தான்.
முதுகின் மீதிருந்த மூன்று இறந்த மனிதர்கள்
ஒருவரை ஒருவர் கீறிக்கொண்டார்கள்
கிழித்துக் கொண்டார்கள் துண்டு துண்டாய்


உறுமிக் கூச்சலிட்டபடி
நகரம் அவனைக் கவலையுடனும்
பயத்துடனும் பார்த்தது
சுற்றியிருந்த நாய்கள் குறைத்தன.
அவன் அமைதியாக நடந்தான்
லேசாக, இறகைப் போல, புன்னகை ததும்ப
துக்கமும் அங்கலாய்ப்புகளுமில்லாமல்
நகரின் இடுகாட்டுத் தூரமாக.


3.

கனி தரா மரம்

யாரோ ஒரு குழந்தையின் சிறிய தலையை
தோட்டத்தில் புதைத்தார்கள்
அது வளர்ந்தொருநாள்
பெரிய மரமாயிற்று.

அதன்கிளைகளில் நிறைய
தலைகள் முளைக்கத் தொடங்கி
கண்களைச் சிமிட்டி
மென்மையாய் இசைத்தன.

பிறகு அண்டை வீட்டுக்காரர்கள் வந்தார்கள்
தலைகளை வெட்டி
குளிர்பதனப் பெட்டியில் வைத்தார்கள்
பனிக்காலத்தில் சூப் வைக்க.

அப்போதிருந்து அந்த மரம் கனி தருவதில்லை
மௌனத்தில் தன்னை மூடிக்கொண்டது
இரவில் சில சிறிய சிறிய நீலநட்சத்திரங்கள்
அதன் கிளைகளில் மிணுமிணுத்தன.

நிறையப்பேர் சொன்னார்கள் தாங்கள் கேட்டதாக
குழந்தைகள் அழுவதையோ அல்லது சிரிப்பதையோ -
எதுவென உறுதியாகத் தெரியாமல்
ஆனால், எல்லோரும் ஒருமித்துச் சொன்னார்கள்
சப்தங்கள் மரத்திலிருந்து வந்ததாகவும்
குளிர்பதனப் பெட்டியிலிருந்து வரவில்லையென்றும்.

4.

இறைகிணறு

வரண்டெரிந்த நிலம் புராதன மலைமுகடுகள்
வரண்ட மனிதர்கள்
கண்களின் மீது தொங்கும் கண்பட்டையோடு
கிணற்றிலிருந்து தண்ணீரிறைக்கும் கழுதைநான்.

எண்ணிருளில் நான் புல்லைக் காண்கிறேன்
என் தாகம் எனக்கு நீரோட்டத்தைக் காட்டுகிறது
இந்தச் சதுப்பு நிலத்தின் தாகம் தீர்க்க
நான் கடுமையாய் உழைக்கிறேன்
என்னை இடைமறிக்காதே
எனக்குதவுவதாகப் பாவனை செய்யாதே

கணினியிலிருந்து பிறக்கும்
செயற்கை மழை பற்றிப் பேசாதே-
நான் உன்னை நம்பவில்லை

என் கனவுக்கு வெளியில்
தண்ணீர் குறித்து என்னிடம் பேசாதே
என் கண்பட்டையை
என் கண்கள் மீதிருந்து அகற்றாதே.


5.

வேட்டை

ஒரு மனிதன் ஒரு மரத்தை
வேட்டையாடிக் கொண்டிருந்தான்
வேலிகளையும் வீடுகளையும் தாண்டிக் குதித்து
நொண்டிக் கொண்டோடியது மரம்
பின்னாலந்த மனிதன் மூச்சிரைக்கத் தொடர.

மரம் என்னில் ஒளிந்து கொண்டது
கிளைகளை உள்வாங்கிக் கொண்டு
நடுக்கமும் முனகலுமாக
வேட்டையாடிக்கும் கேட்டது
இப்போது அவன் என் மார்பின் மீது
கோடாரியாலடிக்கக் குறிவைக்கிறான்
என் காயத்தைப் பார்த்து.

அது தன் கால்களைத் தின்றுவிட்டது
அவன் சொல்கிறான்
துரதிருஷ்டவசமாக நான் மிகவும் தாமதித்தேன்

வானில் மற்றொரு மரம்
தொழிற்சாலையின் புகைபோக்கியிலிருந்து
தன் வேர்களை பிரயாசையுடன்
வலியோடு விடுவித்துக் கொள்ள முயன்றது.

அது அணிந்திருந்த மணப்பெண்ணின் தலைச் சீலையில்
நட்சத்திரங்களை நோக்கிச் செலும் நோய் செல்கள்
வளரும் கறுப்புப் பழங்களிருந்தன.

வேடன் பெஞ்சிலமர்ந்து
சிகரெட்டைப் பற்ற வைக்கிறான்
அவனுடைய கோடரி ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது.



6.

78-கோடைகாலத்தின் மத்தியில்

கிழவி திறந்த கண்களுடன் உறங்குகிறாள் அவற்றுள்
நீங்கள் அவள் கனவுகளைக் காணலாம்

அங்கே அர்ஜெண்டைனியர்களும் ஹாலந்தியர்களும்
காற்பந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்

அவளுக்கு எதிர்புறமாக
பச்சைக் கண்ணாடியணிந்த கருப்புப்பூனை
விளையாட்டை பார்த்துக் கொண்டிருக்கிறது.

பிறகு, புகைபோக்கியிலிருந்து
இறந்தவர்களெழுந்து
கிராமிய நடனத்துக்குச் செல்கிறார்கள்

தொலைவில் கடலில் மீனவன் ஆயத்தமாகிறான்
தன் வலைகளை விரிக்க
காற்பந்து வீரர்களை கிழவியை பூனையை
அவன் பிடித்து டின்னிலடைத்த உணவாக்குவான்

காலையில் பள்ளத்தாக்கில் கவலையற்று
மரங்களுடன் கைகோர்த்து
இறந்தவர்கள நடனமாடிச செல்வார்கள்.



7.

சட்டவிரோதமாக

இந்த வருடம் தொட்டிச் செடிகளில்
இலைகள் துளிர்க்கவில்லை
மாறாக நீண்ட கூரிய பற்கள்.

இரவின் விரிவில் அவை அமிழும்போது
ஒரு பெரும் சப்தம் எங்களை எழுப்புகிறது
நாங்கள் படுக்கையிலிருந்து ஏழுந்திருக்கிறோம்
ரத்தம் சொட்டும் கூரிய பற்களிலிருந்து
தப்பிக்கிறோம்
பெண்கள் சமையலறைக்குள் ஓடுகிறார்கள்
காபி தயாரிக்க.

ஒவ்வொரு விடியற்காலையிலும்
எங்களைத் தேடிவரும்
(போலீஸ் சீருடையணியாமல்)
மாற்றுடையணிந்த பெயர் தெரியாதவர்களுக்காக
இந்த வரும் நாங்கள் உழைப்பது
பற்பசைக்கும் காபிக்கும்
வாங்கிய கடனை திருப்பித்தர மட்டுமே.
Pin It