அடிப்படையில் நான் ஓவியன் என்பதாலோ என்னவோ ஒரு கல்லைக்கூட கல்லாகப் பார்க்கத் தவறிவிட்டேன். ஒரு சாதாரண மனிதனின் மனநிலையிலிருந்து விலகி நெடுதூரம் சென்று விட்டிருக்கிறேன். என்னைச் சுற்றிலும் இருக்கும் சூழலுக்கு எதிர்த்தவனாக எனக்கான சூழலை உண்டு பண்ணாதவனாய் எனக்கான மொழியில் எனக்கான வண்ணங்களில் புதைந்துகொண்டுள்ளேன். ஒரு குழந்தை சிரிப்பதைப் பார்த்தால்கூட சிரிப்பில் ஆழ்ந்து அதன் சிரிப்பதற்கான காரணங்களில் ஆழ்ந்து அதன் வண்ணங்களை மனதில் ஏற்றி காகிதத்தில் பதியும் வரை சிரிப்பு வெவ்வேறு வடிவங்களை அடைந்து முடிவில் எனக்கானதாய் முடிந்து இருக்கும். முடிவில் குழந்தையின் சிரிப்பு சில சமயம் வெற்றி அல்லது தோல்வியில் முடியும். இப்படித்தான் ஒரு சிரிப்பைக்கூட எனக்கானதாக மாற்றி அந்தக் குழந்தையின் சிரிப்பின் அழகியலை சாதாரண மனிதனின் மனநிலையிலிருந்து தொலைவில் சென்றுவிட்டேன். அந்தத் தொலைவுகூட என் தேடலில் கிடைத்ததுதான். என்னுடைய தேடல்கள், பிம்பங்கள், காட்சிகள் சாதாரண மனிதனின் மனநிலையிலிருந்து என்னை நான் தொலைத்துக் கொண்டிருக்கிறேன்.

மாலை நேரத்தில் இன்னும் பூர்த்தி செய்யப்படாத காகிதத்துடன் மனதுக்குள் இருக்கிற பிம்பத்தை, நினைத்துக் கொண்டிருக்கிற மாதிரியே பதிவு செய்வதற்கு ஏற்ற கோடுகளை வரைவதற்குக் காத்துக் கொண்டிருந்தேன். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் யாருடனும் பேசுவதில்லை. பொதுவாக தனிமையில் தவழ்ந்து கொண்டிருப்பேன். இப்படி ஒரு கருத்தைப் பற்றி நினைக்கும்போது இன்னொரு கருத்து இடையிடையே வந்து செல்வது வழக்கம். சில சமயம் இடையே வரும் கருத்தே முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்ளும். கையில் இருந்த பென்சிலோ என் நினைவின்றி ஏதேதோ காகிதத்தில் நிரப்பி வழிந்து கொண்டிருந்தது. வரைய நினைத்தது மறைந்து வேறொன்று வந்து நின்றது. முடிவில் அது காதலாகி போனது.

காதல், ஆம், காதல் இப்போது என் மனதில், அது என் மனதில் ஏற்படுத்தும் தீவிரம் அதற்கானது எந்தக் குறியீடு என்று தேடிக் கொண்டிருக்கிறது. நீண்ட நேரம் எனக்கான விவாதங்கள் காதலை எப்படி பதிவு செய்வது அதை எந்தக் குறியீட்டில் குறிப்பது. பின்பு சில குறியீடுகளைக் குறித்து காதலுடன் பொருத்திப் பார்த்தால் ஒன்றும் பொருந்தாமல் வேறொரு பொருளைக் காட்டிச் சென்றது. இவ்வோவியங்குறித்த விவாதங்களே எனக்கும் என் கேன்வாஷிற்கும் (கித்தான்) இடையே நீண்ட காலம் ஏற்பட்டு எந்த முடிவும் எட்டாது விலகி சென்று கொண்டிருக்கிறது.

அன்று அதிகாலையிருக்கும் எதற்காக எழுந்தேன் என்று தெரியவில்லை. இன்றாவது காதலைப் பதிவு செய்தே ஆக வேண்டும் என்று என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு கிடைத் குறியீடுகளால் குறித்துப் பார்த்தேன். ஒரு காகிதத்தின் ஆண் பெண் இருவருக்குமான வரைந்தேன் - காதல் பூர்த்தியாகவில்லை. ஆண்பெண் இருவருக்குமான இடை வெளியைக் குறைத்தேன்-காதல் பூர்த்தியாகவில்லை. ஆண்வெண் இருவரும் தொட்டுக் கொண்டிருக்கும்படி வரைந்தேன்-காதல் பூர்த்தியாகவில்லை. இப்பொழுது இருவரையும் நெருக்கமாக வரைந்து ஆண் அவளை முத்தமிடச் செய்வது போலவும் பெண் அதற்காக ஏங்குவதுபோல வரைந்து முடித்தேன். காதல் மௌனமாய் சிரித்துக் கொண்டிருந்தது. காகிதத்தில் காமத்தின் குறியீடுகள் காதலாய் நின்று போனது. தொடுதல், உணர்தல், பகிர்ந்து கொள்ளுதல்-காகிதத்தில் இம்மூன்றும் காதலை. காதலை காமம் இல்லாமல் குறிக்க முடியாதோ? பார்வையாளன் இப்படி வரைந்தால்தான் இருவரும் காதலர்கள் என்று ஒப்புக்கொள்வானோ? காமம் இல்லாது காதலைக் குறிக்க முடியாதோ? என்னால் முடியவில்லை, எனக்கு காதல் காமமாகத்தான் நின்றுவிட்டது. எந்த நிர்ப்பந்தமும் யாருடைய எதிர்பார்ப்பும் இல்லாதுதான் இவ்வோவியத்தை வரைந்து முடித்தேன். பகல் இரவாகிப்போனது, நான் தூங்கிப்போனேன்.

ஏதாவது வரைய வேண்டும் போலிருந்தது, வரைவதற்கு எந்த உந்துதலும் இல்லாது வரைவதற்கான சூழலுக்கு வெளியில் இருந்த என்னை, சுத்திகரிப்பதற்கான வேலையில் கால்கள் கட்டுப்படுத்தாது சாலை அழைத்துச் செல்லும் வழியெல்லாம் பயணித்துக் கொண்டிருந்தேன். எனக்கான சூழல் வெறிச்சோடிக் கிடந்தது.
வரைதலுக்கு ஒன்றும் பொருந்தவில்லை. மனதுக்கு மென்மை ஒன்றும் புகாமல் வேறொன்று, வேறொன்று என்று தேடிக்கொண்டிருந்தது. வெயில் என் மேல் படர்ந்து நானே வெப்பமாகிவிட்டேன். மர நிழலில் குளுமையைத் தொட்டுக்கொண்டிருந்த நேரம் எதிர் வீட்டின் Don’t park in front of the gate என்ற தகவல் பலைகை தாண்டி ஒரு மரத்தில் நின்றது என் பார்வை. பார்த்தவுடனே அது பலாபழம் மரம் என்று தெரிந்துகொண்டது. வழுக்கு மரம் போல நீண்டு குறிப்பிட்ட அடிக்குமேல் குடைபோல் தழைகள் வரித்து நின்று கொண்டிருந்தது.

தழைகளின் இடையில் குண்டுகுண்டாக காட்சி அளித்துக் கொண்டிருந்தது. தழைகளின் இடையில் குண்டு குண்டாக காட்சியளித்துக் கொண்டிருந்தது பலாப் பழங்கள். அதற்குமேல் என் பார்வை அங்கு நில்லாது சற்றே கீழிறங்கி ஒன்றோடு ஒன்று பிணைந்து கொண்டிருந்த பழங்களில் வந்து நின்றது. அது பார்த்த மாத்திரத்திரத்திலே இரு தலைகள் பின்னித் தொங்கிக் கொண்டிருக்கும் அமைப்பை உறுதிப்படுத்திவிட்டது. பின்பு அம்மரத்தை சுற்றிலே எனது எண்ணங்களும் எனது கோடுகளும் என்னுள் புதுப்புது பிம்பங்களை ஏற்படுத்திக் கொண்டே நோனது. அதன் உருவம் நான் எங்கோ பார்த்து இரசித்தவைகள் போல் இருந்தது. அதனுருவம் என் எல்லைகளை அதனுள் புகுத்தி எனக்குள்ளவைகளாக மாற்றின. அம்மரம் உயர்ந்து, அதன் பருவம் அழகான பழங்கள் போன்றவை என்னுள்ளே பதிந்துகொண்டது. அதனுடனே என் உலையாடல்களும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்தது.

மரமும் அதன் பழங்களும் அதன் தோற்றமும் என்னை வரைவதற்கான சூழலுக்கு இட்டுச் சென்றது. தைல வண்ண முறையைத் தேர்ந்தெடுத்து வரைதலுக்கான கருவிகளை மேஜைமீது வைத்து வெள்ளி கித்தானுடன் வரைதலுக்கான ஆரம்பக் கோடுகளை சரி பார்த்தேன், கித்தானுக்கு ஜாடை காட்டி. சில நிமிடம் என்னுள்ளே இருக்கும் பிம்பங்களைக் கோர்த்து வண்ணங்களைத் தேர்ந்தெடுத்து வட்ட தூரிகையின் தேவையான கோடுகள் மூலம். எனக்கேயுள்ளான பாதிப்பில் எனக்குள்ளே பதிவான முறையில் வரைந்து முடித்தேன். அவ்வோவியம் ஓரளவுக்கு சரியாக பதிவாகிவிட்டது. வரைந்து முடிக்கும்போதே, இவ்வோவியம்தான் சமீபத்தில் வரைந்த ஓவியங்களைக் காட்டிலும் சிறப்பானதான மனது சொல்லிச் சென்றது. இதன் பாராட்டுகள், இதை விலை அதிகமாகத்தான் இருக்கும் என்ற கனவிலும் சென்றுவிட்டேன், இவ்வோவியம் வரைய முழுதாக ஒருநாள் அப்பாடிலே அடக்கமானது இந்த நாள்.

அவ்வோவியத்தின் பக்கம், இடையில், தூரம், கண்மூடி கண் திறந்து பார்த்தால் இப்படியாக அவ்வோவியத்தை ரசித்து சளிக்காதவனாய் பார்த்துக் கொண்டிருந்தேன். சில நிமிடங்கள் கண்மூடி இருட்டைச் சுவாசித்து இப்பொழுது கண் திறந்து பார்த்தேன். இப்பொழுது ஒரு பெண் போல காட்சியளித்தது. கண்களை இறுக்கி திரும்பவும் பார்த்தேன். இப்பொழுது ஓவியத்தில் நான் வரைந்த அந்த பலா மரமே நின்று கொண்டிருந்தது. இந்நிகழ்வுபோல் எனக்கு அடிக்கடி ஏற்பட்டது உண்டு. முன்புகூட ஒரு பாம்பு தூரத்தில் தெரிந்தது. ஆனால் நன்றாக உற்றுப்பார்த்தவுடன்தான் அது கயிறு என்று உணர்ந்தேன். ஆனால் அக்கயிறைத் திரும்பவும் ஓர் பாம்புபோல காண நிறைய முயற்சித்தேன். ஆனாலும் அது கயிறாகவே நின்று போனது. இதுபோலதான் ஓவியமும் பெண் போல காட்சி அளித்திருக்க வேண்டும். சில மணி நேரம் சாதாரண மனிதனின் மனநிலையில் உலாவலாம் என்று காற்றைக்கிழித்துப் புறப்பட்டேன்.

நான் திரும்புவதற்கு இரவாகிவிட்டது. மின்சார தெரு விளக்குகள் என் தலையை நனைத்துக் கொண்டிருந்தது. எதிரே என் நண்பர் ஒருவர் என் நடையை நிறுத்தி, அவர் இப்பொழுதுதான் என்னைக் காண என் வீட்டிற்குச் சென்றதாகவும் நான் இல்லாததால் திரும்பி வந்துவிட்டார் எனவும், திரும்பும்முன் புதியதாய் வரைந்த ஓவியத்தைப் பார்த்தேன் என்றும் சொன்னார். நான் தாமதிக்காது எப்படி இருந்தது என் ஓவியம் என்றேன். அவரும் “அந்த பெண் ஓவியம் தானே” என்றார். இல்லை பலா மரம் வரைந்து வைத்திருந்தேன். அதைப் பார்த்தாயா என்றேன். அதற்கு அவன் வரவேற்பறையில் இருந்த ஓவியம்தானே, ஆமாம் என்றேன். அதுதான் நீ சொல்வதுபோல் ஒரு மரம்போல் எனக்குக் காட்சித் தரவில்லை, ஒரு பெண்ணுக்குத் தேவையான அனைத்து அடையாளங்களும் அதனுள் பொதிந்து இருக்கிறது.

அவளின் அழகு எந்த வாக்கியத்திலும் பூர்த்தி அடையாது என்று அவன் மேலும் பேச்சு அவ்வோவியத்தின் பெண் பற்றி நீண்டுகொண்டே போனது. இடையில் குறிக்கிட்டு அவ்வுரையாடலை முடித்து நான் வேகவேகமாக ஓவியம் மாட்டியிருக்கும் வரவேற்பு அறையினுள் நுழைந்தேன். மின்சார துண்டிப்பில் நானும் என்னோடு வீடும் இருளில் மூழ்கியது. வெளிச்சத்தோடு வந்த அம்மாவிடம் “என் பெயிண்டிங்கைப் பார்த்தாயா” என்று கேட்டேன். “ஆங் பார்த்தேன், பார்த்தேன்” என்று சலித்துக்கொண்டாள். “என்ன சலிப்பு” என்றேன். அதற்கு அம்மா “ஏன்டா உனக்கு அறிவு இல்ல. இப்படித்தான் வரையறதா? ஒரு பொம்பளைய துணி கூட இல்லாம, இதுல வேற எதிரிலேயே மாட்டிட்ட. பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க. அதனாலதான் உன் ரூம்ல எடுத்து வச்சிட்டேன்” என்றாள். எதிர்த்து எதுவும் சொல்லாது அம்மாவிடம் இருந்த வெளிச்சத்தைப் பிடுங்கி என் அறையில் வெளிச்சத்துடன் சென்றேன்.

ஓவியம் மூலையில் திருப்பி வைக்கப்பட்டு இருந்தது. இருட்டில் இருந்து வெளியே எடுத்து அதற்குப் பக்கத்ல் வெளிச்சத்தை வைத்து தூரமாய் நின்று அவ்வோவியத்தைப் பார்த்தேன். ஆம் ஒரு பெண் , அதுவும் என் ஓவியத்தில்! நான் வரைந்த ஓவியத்தில் என்னால் நம்ப முடியாமலே நான் மெதுவாய் இருட்டினுள் விழுந்தேன். எப்படி இருக்க முடியும் என் ஓவியத்தில், நான் வரைந்த பலா ஓவியத்தில் என்று திரும்பவும் வெளிச்சத்தில் முன்னேறி அவ்வோவியத்தைப் பார்த்தேன். ஆம் ஒரு பெண் தான். ஆனால் இப்பெண் ஆம் நான் சமீபத்தில் இவளைப் பார்த்திருக்கிறேன். அவளின் நீளமான உடல், அவளின் கச்சையான மார்பகங்கள். அவளின் படர்ந்த குடைபோல் முடி, ஆம் இவளை பார்த்திருக்கிறேன். அவ்வோயித்தைப் பார்க்கும்போதே அவளை ஞாபகப்படுத்தியது. ஆம் அவளை இவ்வோவியம் வரைவதற்கு முன்பே பார்த்துவிட்டேன்.

நான் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த நேரம், சென்னை சென்ட்ரலிலிருந்து 17ஏ தடத்தில் நான் பயணித்துக்கொண்டிருந்தேன். வேலையின் அலைச்சல் காரணமாக கண் அயர்ந்து தூங்கிவிட்டேன். நடத்துநரின் அதீத குரல் என் உறக்கத்தைக் கலைத்துப்போட்டது. தெளிவில்லாத கண்களுக்கு ஒரு தெளிந்த முகம், ஆம் அந்த நிமிடத்தில் தான் அவளை பார்த்தேன். பிரத்தேயேக பெண்கள் இரு சக்கர மோட்டார் சைக்கிளையே அவளும் பயன்படுத்தும், நான் பயணிக்கம் பேருந்து பக்கத்திலே பயணித்து வந்தாள். அவளின் பார்வை ஏற்கனவே என்னைப் பார்த்துவிட்டது போலவும், அவளை பார்ப்பதற்காகவே என்னை எழுப்பிவிட்டது போலவும் இருந்தது.

பேருந்தின் ஒவ்வொரு நிறுத்தத்திலும் அவளும் நின்று என்னுடனே பயணித்து வருவதுபோல் செய்துவிட்டாள். இதற்கு முன் இத்தனை அழகை? ஆம் எனக்குப் பிடித்த சிகப்பு வண்ணத்தில்தான், அதனால் தான் நான் வரைந்த பலா ஓவியத்தில் சிகப்பு நிறத்தைப் பதிவு செய்தேனோ? சிகப்பு நிறம்- அதன் வலிமை, அதன் ஸ்பரிசம் அதனுடனான எனது பதிவுகள், என்னுடைய ஓவியம் என்று சிகப்பு நிறம் கண்டாலே நண்பர்கள் சொல்லிவிடுவார்கள். அவ்வளவு ஆழ்ந்து இருக்கிறேன் அந்நிறத்தில். அவ்வளவு நிகழ்வும் இவளைக் கண்ட மாத்திரத்திலே உண்டு செய்தது. இவளை என் நண்பர்கள் பார்த்தால், ஒரு வேளை இவளும் எனக்கானவள் என்று சொல்லி விடுவார்களோ. அவள் அழகாய் பறந்து கொண்டிருக்கிறாள். என்னைப் பார்த்த வண்ணம் இடையிடையே என் எண்ணத்தில் என் காதலி வந்து உறுத்துவாள் - தவறு செய்கிறேன் என்று? அவளுக்கு அந்நினைவுக்கு எந்தப் பதிலும் சொல்லாதவனாய் எதிரில் இருப்பவளை கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். அவளின் பார்வை பாதையில் செல்வது காட்டிலும் என்னிலே சென்று கொண்டிருந்தது.

அவளின் அழகு முன்பும் பின்பும் இறுக்கமான இடுப்பும் உதட்டோரத்தில் சிக்கிய நமட்டுச் சிரிப்பில் சொக்கிப்போனது. சில நிமிடங்களிலே என்னுடன் உரையாடி, உடலுறவில் களித்துத் திரும்பாமல் சென்றுகொண்டிருப்பதுபோல் பாவனை செய்து கொண்டிருந்தாள். என் மனக்கையை அவளின் பின் பக்க இருக்கை நீட்டித்துப் பார்த்துவிட்டேன். சிக்காது தூரமாய் சென்றுவிட்டாள். குருவிக்கு பொருந்தாத சுமைபோல எனக்குள் கனமாகி எங்கோ சென்றுவிட்டாள். சன்னல் ஓரத்திலே பயணித்துக் கொண்டே அவளுடன் சேர்ந்து கனவுலகத்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். திடீர் என ஓர் அலறல் சப்தம். கேட்ட மாத்திரத்திலேயே பேருந்தும் அலறி நின்றது.

காற்றில், விபத்து, இறந்துவிட்டார்கள், உயிருடன்தானே? சக்கரத்தின் கீழே, பொழைக்கவே முடியாது என்று உலவிய வார்த்தைகள். கண்காட்சிக்கு சூழ்ந்த மக்கள், அழுதும், இச்கொட்டியும், மயக்கமடைந்தும், தூரமாய் நின்றும், சிலர் பயந்த முகத்துடன் என்னைக் கடந்து சென்றார்கள். இதுபோன்ற சம்பவங்களைப் பார்த்தே ஆக வேண்டும் என்பதற்காகவே காத்திருந்தவன்போல் சன்னலில் வழியே வெளியேறி ஒவ்வொருவராய் கடந்து விபத்து ஏற்படுத்திய பேருந்தைக் கேட்டேன். பேருந்து வலது பக்க கண்ணை இழந்துவிட்டிருந்தது. கண் இருந்த என் பார்வை மெல்ல கீழ் இறங்கி பேருந்தின் காலுக்கடியில் நின்றுபோனது. சக்கரத்தின் தீரா பசி இன்று தீர்ந்துவிட்டதுபோல் காட்சி குடிகொண்டிருந்தது. என்னை சடலத்தின் அருகே இட்டுச்சென்றது. நிச்சயம் சிகப்பு வண்ணமாகத்தான் இருக்கும். அச்சடலம் ஒரு பெண்ணைப்போல காட்சியளித்தது. அவள் பூட்டி இருந்த உடைகள் - சில நிமிடங்கள் முன்பு என்னுடன் உறவாடியவளின் உடைபோல் இருந்தது -கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டேன். திறக்கும்போது அவளாக இருக்கக்கூடாது என்று எனக்குப் பிடித்தப் பெயரைச் சொல்லி வேண்டிக் கொண்டேன்.

கண் திறந்து பார்த்தேன். பக்கத்திலே அவள் ஓட்டி வந்த அந்த இரு சக்கர வாகனம், ஆம், இது அவளேதான் என்று கூவி அழுதுவிட்டேன். யாரும் என்னைப் பார்க்காததுபோலவே அவரவர் பார்த்துப் பரிதாபங்களைக் கொட்டிச் சென்று கொண்டிருந்தனர். முன்பு என்னுடன் உறவில் கலந்த மாயை பெண் இறந்துவிட்டாள். அந்தப் பெண் உடல் எவ்வளவு தூரம் என்னுள் பயணித்துவிட்டாள். ஆனால் அந்த உடல் இங்கு, எவ்விதம் அவள் உடல் என்று பார்த்தேன். அவளின் சிதைந்த காலுக்கு இடையில் ஏறி, அவள் குறி சிதைந்து, அவளின் மார்பகம் அறுபட்டு, பற்கள் சிதறி, கண்கள் வெளியே தொங்கிக் கொண்டிருந்தது.

அத்தனை கொடிய விளைவுகடிள ஏற்படுத்திய சக்கரம் வெறும் சிகப்பை அப்பிக்கொண்டிருந்தது. ஒருவிதமான போதைக்கு ஆட்பட்டு, ஏன் அப்படி? என்ற கேள்விகளுடனே என்னை ஒரு பெட்டகத்தில் அமுத்திக் கொள்ளாதவனாய் ஓவென்று அழுதுவிட்டேன். வீட்டிற்குச் செல்லும்வரையிலும் ஏன் இப்பொழுது மலத்தோடு பிசைந்துபோன அந்த அழகின் நாற்றம் என்னைக் கட்டுப்படுத்தாது மனநிலைக்கு இட்டுச் செல்லும். என்னை அறியாமலே அந்த உடல், அவளின் தொனி, அவளின் உடல் மொழி எப்படி இந்த ஓவியத்தில்? என்று கேள்விகள் என்னை அடுத்தொரு மனநிலைக்கு இட்டுச் செல்லாத வண்ணம் என்னைக் கட்டுப்படுத்தது-அவ்வரைக்குள்ளிலிருந்து வெளியேறி வரவேற்பறையில் உறங்கிவிட்டேன்.

கருமை என் கண்களில் அப்பிஇருந்தது. இடையிடையே சிறுகோடுகள் என்னில் வெளிச்சம் கொட்டிச் சென்றது. இடையில் எங்கிருந்து வந்தாளோ அதே இரு சக்கர வாகனத்தில் அதே அழகி. ஆனால் இன்று மேகங்களின் நடுவே வந்தாள். எப்படி மேகங்களின் நடுவே? என்று கேட்டதற்கு இப்படி என்று இறக்கை முளைத்த வாகனத்தைக் காட்டினாள். மேலும் தான் பறக்கக் கற்றுக்கொண்டதாகவும் என்னையும் பறக்க வைப்பேன் என்று உறுதி சொன்னாள். என் சுட்டு விரல் பிடித்துப் பறக்க கற்றுக்கொடுத்தாள். எனக்கான ஒரு சிகப்பு குளத்தில் இருவரும் குளித்தோம். விதவிதமான கனிகளைப் பறித்துக்கொடுத்தாள். பின்பு இதுதான் நாகரிகம் தோற்றுவித்த கனி என்று கொடுத்து, இக்கனியை உண்ணாதிருந்ததால் நாகரிகம் தோன்றியிருக்காது அல்லவா? என்று ஒரு கேள்வியும் கேட்டுவைத்தாள்.

ஒரு குழந்தைபோல் என்னைத் தாலாட்டி இடுப்பில் இட்டு நிலாச் சோறு உண்ணக் கொடுத்தாள். நான் முதலில் வரைந்த முட்டை ஓவியத்தை வரைந்து கொடுத்தாள். அவளின் பசிக்கு என் உதடுகளைத் தின்றுகொண்டிருந்தாள். பசி என்ற பெயரே மறந்துவிட்டது என்று சொல்லி உன் பசி போக்க நீ என்னைத் திண்ண வேண்டும் என்ற புதிதாய்ச் சொல்லிக் கொடுத்தாள். முதலில் உச்சத்தில் ஆரம்பித்து ஒவ்வொன்றாய்த் திண்ணக் கொடுத்தாள். இங்குதான் அதிகமாய் உண்ண வேண்டும் என்று அடிக்கடிச் சொல்லிக்கொண்டாள். என் உச்சம் அதிகரிக்காது ஒவ்வொன்றாய்த் திண்ணக்கொடுத்தாள். முதலில் உதடு, அது உப்பாய் ஆனழ. அவள் முனகும் முன்னே என் உதடை எடுத்துவிட்டேன்.

அவள் என் உதடை இழத்து அவள் மார்பகத்தில் பூட்டிக்கொண்டாள். அறுந்துவிடும்போல் இருந்தது. விலகிவிட்டேன். பின்பு என் உதட்டைப் பிடித்து அவள் உறுப்பில் திணித்துவிட்டாள். மலத்துடன் கூடிய இரத்த வாடையில் அதிர்ந்து அப்படியே விட்டு விலகினேன். சில நிமிடம் அமைதி, மெதுவாக அவளைப் பார்த்தேன். அவளின் கண்கள் இரண்டும் தொங்கிக் கொண்டிருந்தது. அவளின் மார்பகத்தை அறுத்து வீசிக்கொண்டிருந்தாள். தொப்புளில் அழுகிய இரத்தம் வழிந்துகொண்டிருந்தது. தொடைகள் அழுகி உதிர்ந்துகொண்டிருந்தது. திடீர் என்று என்னை அணைத்துக்கொள் என்று நாக்கை சுழவி கத்தினாள். விலக,விலக என்னைத் துரத்தினாள். நான் அறுபட்டு கீழே விழுந்தேன்.

என் ஓவியம் இருக்கும் அறைக்கு ஓடினேன். ஓவியம் திருப்பி வைக்கப்பட்டிருந்தது. மெதுவாக அருகில் சென்றேன். ஓவியத்தைத் திருப்பிப் பார்த்தேன். கித்தானில் உள்ள வண்ணங்கள் ஒன்றோடு ஒன்று கலந்து, உருவம் கலைந்து ஓவியம் எழுங்கில்லாது ஒழுகிக்கொண்டிருந்தது.

Pin It