ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆயுதந்தாங்கிய தீவிரவாதச் செயற்பாடுகளை நோக்கித் திருப்பிய முதற்கட்ட இளம் முன்னோடிகளில் ஒருவராக இருந்த போதிலும் புஸ்பராஜா தமிழக அளவில் அறியப்பட நேர்ந்தது அவரது ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’ என்கிற நூல் மூலமாகவே.

 ஈழப் போராட்ட வரலாறு குறித்த ஒற்றைப் பார்வையே தமிழ்ச் சமூகத்தில் நிலவியிருந்த சூழலில் சற்றே ஒரு மாறுபட்ட பார்வையை முன்வைத்த வகையில் இந்நூல் முக்கியமானதாய் அமைந்தது. ஆனால் இதுவுங்கூட முழுமையான மாற்று வரலாறு இல்லை என்கிற விமர்சனங்களும் இதன் மீது உண்டு. எந்த நிகழ்வைப் பற்றியுமே எண்ணற்ற வரலாறுகள் சாத்தியம் என்கிற வகையில் புஸ்பராஜாவின் வரலாறு முக்கியத்துவம் பெருகிறது. Authentic கான ஒரு வரலாற்றை எழுதுகிற மதர்ப்பு இன்றி ஏதோ தான் பார்த்த ஒரு நிகழ்வைச் சொல்லுகிற ஒரு சாதாரண கதைச்சொல்லி போல அந்த நூலை எழுதியிருந்ததன் மூலம் தமிழ் வாசகர்களுடன் புஸ்பராஜா நெருக்கமானவர்.

தனது நூலைப்போலவே புஸ்பராஜா எளிமையானவர். எந்நேரமும் தன்னிலும் இளமையானவர்களுடன் சிரிப்புக் கூத்தென வாழ்ந்தவர். ஷோபாசக்தி, சுகன் போன்ற கலகக் கும்பலுடன் பல்வேறு அம்சங்களில் கருத்து வேறுபட்டிருந்த போதிலும் அவர்களோடு நட்பாக இருந்தது மட்டுமின்றி அவர்களுக்கு ஆதரவாகவும் அருந்துணையாகவும் இருந்தவர்.

ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்த முன்னோடி இயக்கங்களில் செயலாற்றி இருந்தபோதிலும், ‘ஆயுதங்கள் இல்லாமல் வரும் எவருடனும் நான் உரையாடத் தயார்’ என ஓரிடத்தில் அவர் பதிவு செய்திருப்பது நினைவுக் கூறத்தக்கது.

மயிலிட்டி சி. புஷ்பராஜா தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவர் என்பதை ‘அநிச்ச’ பதிவு செய்ய விரும்புகிறது. அவர் அதை வெளிப்படுத்திக் கொள்வதில் ஆர்வங்காட்டாதவராயிருந்த போதிலும் அவர் குறித்த பதிவுகளில் இது தவிர்க்க இயலாதது.

அநிச்ச இதழ் செயற்பாடுகளில் அவர் மிகுந்த உற்சாகம் காட்டியிருந்தார். சென்ற இதழில் அவர் எழுதியிருந்த கட்டுரை முக்கியமானது. வித்தியாசமான கோணத்தில் பத்திரிகையாளர் சிவராமின் கொலையை அவர் அணுகியிருந்தார். இந்த இதழில் அவர் நூல் குறித்த விமர்சனம் ஒன்று உள்ளது. ஈழப் போராட்டத்தில் பெண்களின் பங்கு குறித்து கட்டுரை எழுதித் தருவதாகச் சொல்லியிருந்தார். அந்தக் கட்டுரைக்கு பதிலாக இப்படியொரு இரங்கற் குறிப்பு எழுத நேர்ந்ததது துயரமானது.

எந்தவித பெரிய முன்னறிவிப்புகளும் இல்லாமல் சடக்கென அடித்த ஒரு சுழற்காற்று போல மரணம் அவரை நம்மிடமிருந்து தட்டிச் சென்றுவிட்டது. சபாலிங்கம், உமாகாந்தன், கலைச்செல்வன், இப்போது புஸ்பராஜா என புகலிட இலக்கிய ஆர்வலர்களின் முதல் தலைமுறையினர் ஒவ்வொருவராக மறைவது நம்மை வருத்துகிறது.

அடுத்த இதழில் புஸ்பராஜா குறித்த விரிவான கட்டுரையொன்று வெளியிடப்படும். இம்மாத இறுதியில் அவருக்கான இரங்கல் கூட்டமொன்றை ஏற்பாடு செய்ய உள்ளோம். விவரம் அறிய எமது தொலைபேசியில் தொடர்புகொள்க.

என்றும் என் காதலுக்குரிய என அவரால் விளிக்கப்பட்ட அவரது துணைவியார் மீரா அவர்களுக்கும், அவரது பிள்ளைகள் மூவருக்கும், எங்களது ஆழ்ந்த இரங்கலும் அனுதாபங்களும்.

Comments

1 comment

1
nanthanrajh
அண்ணா புஸ்பராஜ ஜாதிப்பிரச்சினை முடியவில்லை அது அப்போதும் இருந்தது இப்போதும் இருக்கிறது. ஆனால் அதன் வீரியம் இப்போது குறைந்திருப்பதற்கு காரணம் தமிழீழ ஆயுதப் போராட்டமாக இருக்கலாம் என்று நீங்கள் சொல்லும் போது ஒரு தடுமாற்றத்தை பார்த்தேன். அதுதான் பலருக்கும் ஒரு புரியாத புதிராக இருக்கும். அதை உங்களாலும் புரிய முடியவில்லை. ஆனால் அந்த விடயம் எனக்கு தெரிந்திருந்தது. ஆனால் அதை விபரமாக சொல்லும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. இருந்தாலும் உங்களை நேசிக்கும் அன்பானவர்கள் காலம் கடந்தாவது இதை அறிந்தே ஆகவேண்டும் என்பதுதான் எனது விருப்பம். இதோ விடயத்திற்கு வருகிறேன். அண்ணன் புஸ்பராஜா, அவர் தம்பி வரதராஜா, சகோதரி புஸ்பராணி, நவரட்ணராணி இவர்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. இவர்கள் படித்த ஆரம்பத்தில் கத்தோலிக்க மதம் சார்ந்த ஒரு பள்ளியில் படித்தார்கள். அங்கு கூட சாதி பார்க்கப்பட்டது. அட இந்து மதக்காரர்களும் சாதி பார்க்கிறார்கள் என்றால் கர்த்தர், சிலுவை, இயேசு, மரியா இவைகளை கும்புடுகிறவர்களும் சாதி பார்க்கிறார்களே என்ற அடி மனதின் தாக்கம்தான் இந்த குடும்பத்தின் பாதிப்பேர்
கடவுள் நம்பிக்கை இல்லாததற்கான காரணம். இதுதான் உண்மை. சரி இதை ஒரு பக்கம் வைப்போம். அண்ணன் புஸ்பராஜா தடுமாற்றத்தோடு கூறிய அந்த வார்த்தையில் அவருக்கே அது புரியா புதிராக இருந்தது என்புதுதான் உண்மை. தமிழீழ போராட்டம் நடந்திருந்த காலகட்டத்தில் சாதி பிரச்சினையின் வீரியம் குறைந்திருக்கலாம்???????? என்று தடுமாறி கூறினார். இதில் உண்மை என்னவென்றால் கடவுள் உண்டென்றால் அவருக்கு ஒரு எதிரியும் இருக்கிறான். அவன்தான் பிசாசு. அல்லது பேய், அல்லது அமானிஷ சக்தி. அந்த பிசாசின் நோக்கம் உலகத்தில் எந்த இன மனிதனையும் அல்லது உலக மனித இனத்தை சாகடிக்க வேண்டும் என்பதே அவன் நோக்கம். எவ்வளவு விரைவில் மனிதனை அளிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் அளிப்பதுதான் பிசாசின் நோக்கம். அதன் வெளிப்பாடுதான் சாதி சண்டை. சமய சண்டை, தமிழர் சிங்களவர் சண்டை, தமிழீழ போர், நாட்டுப் பற்று. இனப்பற்று. மொழிப் பற்று. தேசப் பற்று. வீட்டுக்கு ஏற்றவாறு, நாட்டுக்கு ஏற்றவாறு, இனங்களுக்கு ஏற்றவாறு. காய் நகர்த்தி செல்கிறான் அந்த பிசாசு. இதை அறியாமல் மனிதன் அடிபட்டு சாகிறான். இதை தெழிவு படுத்த நாங்கள் முயற்சி செய்தாலும் அதற்கும் ஆப்பு வைக்கிறான் அந்த பிசாசு அல்லது பேய். ஆனால் அவனுக்கு கடவுளை போன்ற வல்லமை இல்லை. அதனால்தான் ஒட்டு மொத்த மனித இனைத்தை அவனால் அழிக்க முடியவில்லை அழிக்கவும் முடியாது. கடவுள் மனிதனுக்கு அறிவை படைத்து. இன்று மனிதன் செவ்வாய் கிரகத்திலும் ஆராட்சி செய்துவிட்டான் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற கிரகம் இந்த பூமி மட்டும்தான். இந்த பூமியில் எந்த சாதி பாகுபாடும் இல்லாமல் சமாதானமாக வாழ வேண்டும் இதுதான் உண்மை கடவுளின் நோக்கம். அதை அவர் விரைவில் ஏற்படுத்துவர். அந்தப் புதிய உலகில் அண்ணா புஸ்பராஜாவும் நித்திரையை விட்டு விழித்தேழுவார். அங்கு நாங்கள் சந்திப்போம்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.