கீற்றில் தேட...

அலைபேசியில் வந்த சிவகாமியின் செய்தியைக் கேட்டதும் அவளுக்கு மரத்தின் கிளைகளைச் சடச்சடவென யானையன்று முறிப்பதாகவே தோன்றியது. புங்கை மரத்தின் மேலிருக்கிற கூண்டு களுக்குள் தற தடதறவென பறவைகள் அடித்துக் கொள்வதாக உணர்கிறாள். அவளைப் போலவே அங்கு நின்று கொண்டிருக்கிறவர்களும் பதற்றம் கொள்கிறார்கள்.

பேருந்துகள் அவளின் ஊர் இருக்கிற பகுதி வழியாகச் செல்வதில்லை. மாறாக பல ஊர்கள் சுற்றிவிட்டுத்தான் செல்கிறது ஆதலால் இரவு விழுவதற்கும் முன்பாகவே உன் அலுவலகத்திலிருந்து கிளம்பி வந்து விடு என்கிற தகவலை அவளின் தோழி சொல்கிறாள்.

அவள் நின்று கொண்டிருக்கிற பேருந்து நிறுத்த நிழல் குடையின் மாதாந்திர சம்பளக்காரப் பெண்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். அவள் தன் சம்பளக் கவரை மற்றொரு முறை பார்த்தாள். அவள் இன்றிலிருந்து அளிக்க வேண்டியவர்களின் பட்டியலை வாசித்தாள்.

“இன்னிக்கு இன்கிரிமெண்ட் வாங்கிருக்கிறமே.. அன்னபூர்ணால சாப்டுப் போலாமே..அதான் டிராபிக் ஜாம் ஆயிடுச்சே..“ என்றார்கள் அருகிலிருக்கிற உடன் பணிபுரிகிற தோழிகள்..அவளைப் போல உள்ளுர கிராமங்களுக்குப் போகிறவர்கள் மறுத்துவிட்டு காத்திருக்கிறார்கள்.

நிழல் கூரையின் மேலிருந்து அடைந்த மைனாக் குருவிகளின் சத்தமும்..வெளிச்சத்திற்காகப் கூட்டுப் பூச்சிகள், கூகைகளின் வெறித்த கண்களும் காணமுடிகிறது. சில பெண்கள் விழும் எச்சத்திற்கு பய்நது விலகி வெம்பரப்பில் நிற்கிறார்கள். அங்கும் கிளைகள் நீண்ட அசோகமரத்தின் உச்சியை அவநம்பிக்கையுடன் காண்கிறார்கள். நல்லவேளை இநத மரங்கள் சர்ச்சின் காம்பவுண்டுக்குள் இருக்கிறது இல்லையென்றால் வெட்டிச்சாய்த்திருப்பார்கள்.

சமையல்காரப் பெண்களிலிருந்து அரசாங்க உத்தியோக சூப்பரிண்டென்ட் வரைக்குமான பெண்கள் தங்களை அழைத்துப் போகிறவர்களுக்காக மற்றும் தாங்கள் செல்ல வேண்டிய பேருந்துகளுக்காகவென இந்த நிறுத்தத்தில் ஆண்களற்று நிற்கிறவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது.

ஆனால் சாலைகளில் வாகனங்கள்தான் குறையவே இல்லை. வீடுகள் நிறைய காலியாக இருக்கிறது.

ஆனால் வீடில்லாதவர்கள் நிறையப் பேர் இருப்பது மாதிரி..யாருடைய முகங்களும் கணத்திற்கும் மேல் பார்க்க முடியவில்லை. சாலைகள் முழுக்கவும் ரூபாய் தாள்கள் சிதறியிருப்பதை யாரும் காணவில்லை. குப்பை கூட்டுகிறவர்கள் சில நாட்களாக பெருக்கி பெருக்கிப் பார்த்தார்கள் இந்த ரூபாய்த்தாள்களின் பொழிதல் மட்டும் நிற்கவேயில்லை. அவர்களும் பெருக்கிப் பெருக்கிப் பார்த்துவிட்டு காணாதது போல விட்டுவிட்டாள்.

கணநேரத்தில் வழித்து அடுக்குகிற இயந்திரங்கள் வந்து லாரிகளில் பத்திரப்படுத்துகிறது. அந்தப் பேருந்து நிறுத்தத்தில் நின்ற பெண்கள் தங்களின் சாப்பாட்டுப் பைகளிலிருந்து கத்தை கத்தையாக ரூபாய்த் தாள்களை அள்ளிக் கொட்டினார்கள். அங்கிருக்கிற காவலர்கள் பரபரத்த படி வந்து எச்சரிக்கிறார்கள்.

“அறிவிருக்கறதா உங்களுக்கு பொம்பளக் குணம்ங்கறது சரியாகத்தான இருக்கு...குப்பைக் கூடை யிருக்கல்ல அங்க கொட்ட வேண்டியதுதான..” என்று சொல்கிற நேரத்தில் நின்ற பேருந்துகளிலிருந்து இதுதான் சௌகரிமான இடம் என்று வண்டி புறப்பட்ட சமயத்தில் உள்ளிருந்து ரூபாய்த்தாள் களைக் கொட்டுகிறார்கள் காவலர்களில் சிலர் ஓடிப் போய்க் கொட்டாதீர்கள் தாள்களை நாணயங்களை.. என்று ஒலிபெருக்கியில் அனொன்ஸ்மெண்ட் தருகிறார்கள்.

தோழிக்குத் திரும்பவும் போன் செய்தாள். அவளுக்கு ஆச்சர்யமும் துன்பமும் அதிகமானது. மறுமுனையில் போன் எடுத்தவள் பிரச்சனையென்ன என்பதைக் கூறினாள்.

“யாரோ தெரியவில்லை சாலையில் பண மூட்டைகளை மலை மலையாக குவித்து வைத்துப் போய்விட்டார்கள் அதை அகற்றுவதற்கான முயற்சிகள் நடைபெறுகிறது. என்னவென்று தெரியவில்லை எல்லாப்பகுதிகளிலிருந்தும் மக்கள் ரூபாய்த்தாள்களைச் சாலைகளில் கொண்டு வந்து கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.. நானும் என் பைகளிலிருக்கிற தாள்களைக் கொட்டி விட்டேன்...”

நோய்கள் அதிகமாகியிருக்கிறது மருத்துவமனைகள் அதிகமான பின்பு.

விபத்துகள் அதிகமாயிருக்கிறது ஆம்புலன்ஸ்கள் அதிகமான பின்பு. குற்றங்கள் அதிகமாயிருக்கிறது. சட்டங்கள் தீட்டியபின்பு. பசி அதிகமாகிக்கொண்டே போகிறது. விதவிதமான உணவுகள் வந்த பிறகு என்பாள் சிவகாமி.

அப்படித்தான் பணப்புழக்கம் அதிகமானாதால் மக்கள கொட்டுகிறார்கள்  போல...

அவளுடன் பேசிக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.

வருடக்கணக்கில் இழுத்துக்கொண்டிருந்த பொருந்தாத ஜாதகம் பொருந்திப் போனது. திருமணமாகி கணவன் வீட்டிற்குப் போனபிறகு அவளுக்கு உற்ற தோழி என்பது மறந்தேவிட்டாள். எப்படியும் ரெண்டுஒரு அழைப்புகள் வந்துவிடும்.

பேருந்து அங்காளம்மன் கோயில் மைதானத்தை வட்டமடித்து மற்ற பேருந்துகள் நிற்கிற இடத்தில் அதற்குரிய ஒதுக்கப்பட் இடத்தில் நிற்கிறது. அங்கும் சாலைகளில் ஓரங்களில் அதற்குள் சாமியானக்கள் கட்டி வைத்து “தாள்களை நாணங்களை அதற்குரிய இடத்தில் போடுமாறுக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.. கண்ட இடத்தில் கொட்டுவது தேசவிரோதம்.

கன்டனத்திற்கும் தண்டனைக்குரிய செயலாகும் ஆகவே பொதுமக்கள் உரிய இடத்தில் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.”

அவளுக்கு தலைசுற்றியது. அட ஆமாம். இந்தப் பணத்தையும் கொண்டு போய் போட்டுவிடுவோமா என்று தோன்றியது. அந்த இடத்தில் பணத்தைக் கொட்டுவதற்காக மக்கள் வரிசை வரிசையாக காத்திருக்கிறார்கள். ஒரு கணம் தன் கைப் பையைத்திறந்து அன்று வாங்கியிருந்த மாத சம்பளம் எட்டாயிரம் ருபாயை அந்த சாமியானா பகுதிக்குச் சென்றவள் திடீரென்று மனம் மாறிவளாக திரும்பி வந்தாள்.

அப்பொழுதும் சிவகாமி அழைத்தாள்.“என்னப்பா பணத்த என்ன பண்ணுன..”

“யேய் சிவகாமி இன்னக்கித்தான் இன்கிரிமெண்ட்டோட சம்பளம் வாங்கிட்டு வந்தேன்.. ஒரு நாளைக்கு கையில இருக்கட்டுமே... என்னடி ஆச்சு...”

“அதப்பத்தி நமக்கென்ன..கைல வெச்சிருக்கறவங்கல்லாம் கொண்டு வந்து கொட்டுங்கன்னா கொட்டவேண்டியதுதான.. சரி சரி உன்ற பிரியம்.. ஆமா பொத்திவெச்சுக்க...பெரிய பீத்தக்காசு..”

தனது வீட்டிற்கு நான்கைந்து வீதிகள் தள்ளித்தான் வரவேண்டும். இருள் வெளிச்சம் கவியக் கவிய மின்சாரம் போன இருளில் லாந்தர்கள் உடம்பில் உள்ள புண் போல வெளிச்சம் எரிந்து கொண்டிருக்கிறது. அவள் ஊர்மக்கள் பரபரப்பாக இரு புறங்களிலிலும் பேசிக்கொண்டும் இந்த பணம் குறித்த செய்திகளை அவர்கள் அளவளாவிக் கொண்டிருக்கிறார்கள்.

அவளுக்கு குழப்பமும் அச்சமும் தீர்ந்து போனது. ஆமாம் இது கனவல்ல. உண்மைதான். இணையத்தில் வாட்ஸ்ஆப்பில் டெலிகிராமில் பேஸ்புக்கில் உள்பட எல்லா இடங்களிலும் பணப் பொழிவுகள் குறித்த விவாதங்கள் நடக்கிறது. தொலைக்காட்சிகளில் கூறப்படும் செய்திகளில்

மக்கள் ஆர்வமாகப் பார்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் முகத்தில் கவலை தென்படுகிறது. தன் சம்பளக் கவரை ஆசை ஆசையாகத்தொட்டுப்பார்த்துக் கொள்கிறாள்.

தன் சிறிய பிரிட்ஜிலிருந்து மாவை எடுத்து தோசைகளை ஊற்றினாள். தன் வயதான தாய் தந்தைக்கு பரிமாறினாள். அதையே புலம்பிக்கொண்டிருக்கிற செய்திகளை அணைத்தாள்.

விவாதம் செய்து கொண்டிருப்பவர்களில் ஒருவன் தன் கணவனின் சாயலில் இருப்பதாக அறிந்தாள். காய்ச்சிய பாலை குடித்து விட்டு மீதியை தயிருக்கு ஊற்றி வைத்துவிட்டு விழித்துக்கொண்டிருந்த அம்மாவிடம் வந்து “பாத்ரும் போறயாம்மா..” என்றவளை அருகிலமர்த்தி அம்மாள் சொன்னாள்..

“இன்னக்கிம் கூட அவர் வந்தாரம்மா... உங்க புள்ள கிட்ட சொல்லுங்க..

கேசெல்லாம் வாபஸ் வாங்கிக்கலாம்..னாரு..”

“நீ யென்ன சொன்ன...”

“நானென்ன சொல்றது கண்ணு.. எங்களுக்குக் காடு வா வா ங்குது.. என் பொழப்பு அத்தன வயனமா இருக்கு...”

“அந்தாள் சொல்லிட்டான்ல.. எனக்கு சம்பாதிக்கிற திமிரு... அதான் ஊட்டுக்கு அடங்காம ஊர் சுத்திட்டுத்திரியறன்னுட்டு... கட்டறபோது வேலைக்குப் போற புள்ள வேணுங்கறது. பொறவு ஊர் சுத்தறாளுகங்கறது.”

“நமக்கெதுக்கு சாமி வீறாப்பு... அவிக ஊட்டு ஆளுக நடையா நடக்கறாங்கம்மா... ஆம்பள நாக்கு நரம்பில்லாத நாக்கு.. என்ன வேணாலும் சொல்லும்...”

“அவன வந்து எங்கூட இருக்கச்சொல்லு.. கட்டின பாவத்துக்கு நான் கஞ்சி ஊத்தறன்.. உங்கள உட்டுப் போட்டு அவங்கொட நாம் போகமாட்டன்...”

“இந்தா..” என்று சம்பளக்கவரை தன் அம்மாவிடம் கொடுக்கவும் அவளோ..

இதெதுக்கு இனி கொண்டி அக்கட்டள்ள எறி போ... இதுனாலதான சட்டி ரெண்டாச்சு ஊட்ல...”

“காலைல போட்டுக்கலாம்...மா..”

வீட்டுக்குள்ளாக ரெண்டு ஏடிஎம் மெசின்கள் இருப்பதை அறிந்தவள் அம்மாவிடம் கேட்டபோது ரேசன் கடையில் வீட்டுக்கு இரண்டு மெசின்கள் கொடுத்தார்கள் என்றார்.

பிரிட்ஜ் திறப்பது மாதிரி திறந்தாள். உள்ளுக்குள் பணம் பணம்...

அப்படியே மனம் மாறாத ரூபாய்க்கட்டுக்கள்... விடிந்த நினைவேயில்லை.. எழுந்து அலுவல கத்திற்கு நேரமாகி விட்டதை அறிந்து மூன்று பேருக்கும் மதியத்திற்குமாக சாப்பாட்டு வேலைகளைத் துவக்கினாள்.

இரவில் அமைதியாக வைத்திருந்த செல்போனை எடுத்துப் பார்த்தால் தன் தோழி இரண்டு மூன்று முறை அழைத்திருக்கிறாள்.. அட ஆமாம் இந்தக் கவரைக் கொண்டு போய் பெட்டியில் போட்டு வந்து விடலாம்.

கவரைத் தூக்கிக் கொண்டும் டிராமில் கொட்ட வேண்டிய குப்பையையும் தூக்கிக் கொண்டு அதிகாலையில் நடக்கத் துவங்கியவளுக்கு மறபடியும் அழைப்பு.

“சொல்லு சிவகாமி....இத பாரு கொண்டு போய்ட்டுருக்கேன்..”

“சரி சரி ஒரு சின்ன ஹெல்ப்டி...சம்பளம் வாங்கிட்டயா..”

“ஃஃஃஃஃம்...”

“பணம் மூவாயிரம் என் அக்கவுண்ட்ல கட்டிரு..உனக்கு ரெண்டொரு நாள்ல உன் அக்கவுண்டல நாம் போட்டு விட்றன்...சாரி மறந்திறாத...” என்றாள்.

அவள் அதிர்ச்சியுடன் சற்று சுதாரித்தாள்.நேற்றிரவு பார்த்த சாமியானாக்கள் கண்டெய்னர்கள். வரிசையாக தாள்களுடன் நின்ற மக்கள் யாருமில்லை.

திரும்பவும் சிவகாமிக்குப் போன் செய்து நேற்று மாலை சொன்ன செய்திக்கும் இப்பொழுது நீ சொல்கிற செய்திக்கும் என்ன பிரச்சனை என்ன நடந்தது என்று கேட்க நினைத்து கால் செய்தவள் கட் செய்தாள். ஒரு கணம் தன் வீதிகளை சுற்றிப் பார்த்தாள். எல்லாம் இயல்பாக இருக்கிறது.

“வேண்டாம். கேட்க வேண்டாம். அவளை நம்ப முடியாது. கூட ரெண்டாயிரம் சேர்த்துக் கட்டச் சொன்னாலும் கட்டச் சொல்வாள்..”

கொட்ட வேண்டி குப்பையையும் பணத் தாள்களையும் பத்திரமாக எடுத்துக்கொண்டு திரும்பினாள் வீட்டுக்கு...

“பரவாயில்லயேம்மா.. வாடகைய கவர்லயே போட்டு ரெடியா வெச்சிருக்கீங்க போல...” என்றார் குடியிருக்கிற வீட்டுக்காரர்.