‘நமக்கு நாமே’ பயணத் திட்டத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, மக்களைச் சந்தித்து வரும் தளபதி மு.க. ஸ்டாலின், கடந்த 26,27 தேதிகளில், சேலம் மாநகரில் பல்வேறு தரப்பினரைச் சந்தித்து உரையாடினார்.

அப்போது 15 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியரை ஓர் அரங்கத்தில் கண்டு கலந்துரையாடினார்.  அவர்களிடமிருந்து புறப்பட்ட பலவகையான கேள்விகளுக்குப் பொறுமையாகவும், ஆக்கப்பூர்வமாகவும் விடைகளை அளித்தார். அங்கு ஒரு மாணவர் ஒரு நுட்பமான வினாவை எழுப்பினார்.

“இந்த ஆட்சியிலும், அம்மா உணவகம், அம்மா மருந்தகம் போன்ற சில நல்ல திட்டங்கள் உள்ளன. நாளை தி.மு.க. ஆட்சி ஏற்படுமானால், இத்திட்டங்களின் நிலை என்னவாகும்?” என்பதே அம்மாணவரின் வினா.

அப்படி ஓர் ஐயம் எழுவது இயல்பே!  நேற்றைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் யாவும் இன்று குப்பைத் தொட்டிக்கு அனுப்பபடுவதைக் கண்கூடாகப் பார்ப்பதால் இவ்வினா அம்மாணவனின் நெஞ்சில் எழுந்திருக்கக்  கூடும்.

மிக நிதானமாகத் தளபதி விடை சொன்னார் - “எம்.ஜி.ஆர். ஆட்சியில் சத்துணவுத் திட்டம் கொண்டுவரப் பட்டது. ஆனால் அதனையடுத்து ஆட்சிக்கு வந்த கலைஞர் அதனைக் கைவிடவில்லை. அதில் முட்டையும் சேர்த்து, மேலும் உண்மையான சத்துணவாக அதனை வளர்த்தெடுத்தார். அந்தப் போக்கினைத்தான் நாங்கள் எப்போதும் கடைப்பிடிப்போம். ஒரு திட்டம் யாரால் கொண்டுவரப் பட்டது என்று பார்க்காமல், அதனால் மக்களுக்கு என்ன பயன் என்றே பார்ப்போம். ஆய்வு செய்வோம். நல்ல திட்டமாக இருந்தால், அதனை மேலும் செழுமைப்படுத்தி மக்களுக்கு அளிப்போம்.”

மாணவர்கள் ஆர்ப்பரித்துக் கைதட்டி அந்த விடையை வரவேற்றனர்.

இந்தக் கேள்வியின் நாயகியே இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாதான்! சென்ற ஆட்சி கொண்டுவந்த நல்ல திட்டங்களை எல்லாம் அவர் முடக்கிப் போட்டார். ஏழை, எளிய மக்கள் அதனால் பாதிக்கப் படுகின்றார்களே என்ற மனித நேயம் கூட இல்லாமல், தான் நினைத்ததை முடித்தார்.

மக்கள் நலப் பணியாளர்கள் போராடிப் போராடிக் களைத்துப் போனார்கள். எத்தனை ஆண்டுகள் போராட்டம்...இடையில் எத்தனை சாவுகள்! எதற்கும் அந்த ‘அம்மா’வின் மனம் இரங்கவில்லை.

மிக அண்மையில், இந்து ஆங்கில நாளேடு, திருநங்கையர் நல வாரியத்தின் இன்றைய நிலை குறித்துச் சான்றுகளுடன் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. ஒரு பானைச் சோற்றுக்கு அந்த ஒரு சோறு பதமாக உள்ளது.

தலைவர் கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில், 2008 ஏப்ரல்  மாதம், தமிழ்நாட்டில் திருநங்கையர் நல வாரியம் தொடங்கப்பட்டது. இந்தியாவிலேயே அது முதல் முயற்சி. அவ்வாரியத்தின் குழு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூடி, முடிவுகளை எடுத்து, குறிப்பிட்ட அம்மக்களுக்குச் சில் நமைகளைச் செய்து வந்தது.

அ.தி.மு.க.ஆட்சி ஏற்பட்ட பிறகு,  ஒருமுறை கூடக் கூடுவதில்லை. 2013 டிசம்பர் கடைசிக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அதற்குப் பிறகு சந்திக்கவே இல்லை. அதனை விடக் கொடுமை என்னவென்றால், அந்தக் குழுவிற்கான பொது உறுப்பினர்கள் இன்னும் நியமிக்கப் படவே இல்லையாம். அது குறித்து அமைச்சர்களிடம் கேட்டபோது,  பரிசீலனையில் உள்ளன என்று கூறியுள்ளனர்.  ஆட்சிக் காலமே முடியப் போகிறது. இப்போதுதான், குழு உறுப்பினர்கள் பெயர்களை ஆய்வு செய்கிறார்களாம். என்ன கேலிக் கூத்து இது!

இப்படித்தான் இங்கு ஒவ்வொரு செயலும் நடைபெறுகிறது.எந்தச் செயல்பாடும் இல்லாமல் ஆட்சி மாதிரி ஒன்று நடக்கிறது. முதலமைச்சரோ, கொடநாட்டில் ஓய்வெடுக்கிறார்!

விரைவில் தமிழகத்தின் இருள் அகலும், உதய சூரியனின் ஒளி பரவும் என்ற நம்பிக்கையோடு நாடு காத்திருக்கிறது!

Pin It