(இன்றைக்கு வளர்ந்து வரும் சாதி வெறியைக் கட்டுக்குள் கொண்டு வர, காதலால்தான் முடியு-ம் என்னும் பார்வையின் அடிப்படையில், ‘ஆதலினால் காதல் செய்வீர்’ என்னும் கவிதை நூல் ஒன்றினை கவிஞர் பொன்.செல்வகணபதி விரைவில் வெளியிட உள்ளார். அதுகுறித்து அவரோடு ஓர் உரையாடல்.)

pon selvaganapathyகாதலுக்கு இனிக்கவிதை செய்யமாட்டேன் என்று 1972 களில் நீங்கள் கவிதை எழுதியிருக்கிறீர்கள். ஆனால் இப்போது காதலுக்காகவே ஒரு புத்தகத்தை கொண்டு வரவேண்டும் என்று கருதுவது எதற்காக? எப்படி இந்த மனமாற்றம் உங்களுக்குள் நிகழ்ந்தது?

உண்மைதான். அந்த கால கட்டம் திராவிட இயக்கக் கொள்கைகளிலும், பொதுவுடமைக் கொள்கைகளிலும் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்த இளம் பருவம். அந்த இளம் பருவம் காதல் கவிதைகள் எழுதக்கூடிய பருவம்தான். ஆனாலும் நானும் என்போன்ற நண்பர்களும், திராவிட இயக்கக் கொள்கையின்பால் ஈடுபட்டும், பொதுவுடமைக் கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டும், காதலை, காதல் கவிதைகளை இரண்டாந்தரமாகக் கருதி, கொள்கைப் பிடிப்புள்ள கவிதைகளையே முதல் தரமாக நினைத்துக்கொண்டிருந்தோம். அந்தக் காலகட்டத்தில் காதலுக்கு இனிமேல் கவிதை செய்யமாட்டேன் என்று நான் எழுதினேன்.

இப்போது இந்த முதிய வயதில் காதலைப் பரப்புகிற வகையில் கவிதை எழுதவேண்டிய கட்டாயம் ஏன் வந்தது என்பது அனைவருக்குமே தெரியும். தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் ஏற்பட்டிருக்கின்ற பல்வேறு ஆணவக் கொலைகள், தருமபுரியில் ஒரு நிகழ்ச்சி, திருச்செங்கோட்டில் ஒரு நிகழ்ச்சி. அவர்கள் செய்த குற்றம் என்ன? காதல் செய்தது ஒன்றுதானே! அதற்காக அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். எந்த பூமியில் அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்? பெரியாரின் பூமியில் அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

சங்கம் வளர்த்த தமிழ் உலாவிய இந்த பூமியில் அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். சங்க இலக்கியம், சங்க காலம் என்ன சொல்லுகிறது? காதலைப் போற்றிய காலம் சங்ககாலம். ஜாதியில்லை, மதமில்லை, இனமில்லை சந்திக்கிற இளைஞர்கள் அவர்களுக்குச் சம்மதம் என்றால் காதலிக்கலாம். அந்தக் காதலை அவர்களுடைய பெற்றோர்கள் போற்றுவார்கள், பெற்றோர்கள் போற்றவில்லை என்று ஏதாவது நடந்தால்கூட அவர்கள் உடன் போக்காகச் செல்லலாம்.

அந்த சங்கத் தமிழ் மரபு உலவிய இந்த பூமியில்தான் இன்றைக்குக் காதலை ஒழிப்பதற்கே கட்சிகள் புறப்பட்டிருக்கின்றன என்கிற நிலமை இருக்கிறது. இந்த நிலைக்கு நாம் எதிர்விணை ஆற்றவேண்டிய ஒரு கடமை இருக்கிறது என்பதால் இப்போது காதலைப் போற்றுவது கூட ஒரு சிறந்த கொள்கையாக எனக்குப் படுகிறது. அதனால் இந்த நூலை நான் எழுதவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

முழுக்க முழுக்க வெண்பாக்களால் மட்டும் எழுதியிருக்கிறீர்களா அல்லது வேறு கவிதை வடிவங்களும் உள்ளே இருக்கின்றனவா?

முழுக்க முழுக்க வெண்பா என்கிற ஒரு யாப்பு வடிவத்தில் மட்டுமே எழுதியிருக்கிறேன். ஏனென்றால் அந்த வெண்பாவிற்கு இருக்கின்ற ஒரு ஆற்றல் வாய்ந்த ஒரு தன்மை என்னை மிகவும் கவர்ந்தது. அதனால் அந்த வெண்பா யாப்பிலேயே ஒரு நளவெண்பா போல ஒரு காதல் வெண்பாவை இயற்றியிருக்கிறேன்.

சாதிக்கு எதிரானது காதல் என்பதிலே எந்த மறுப்பும் இல்லை. ஆனால் காதல், சாதி மறுப்புத் திருமணங்கள் இவைகளால் மட்டும் சாதியை இந்த மண்ணிலிருந்து நம்மால் அகற்றிவிட முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

நமக்கு முன்னால் இருக்கிற ஒரே வழி காதல்தான் என்று நான் கருதுகிறேன். நான் பின்பற்றுகிற பாவேந்தர் பாரதிதாசன் ஒரு முறை ஒரு பேட்டியில் சொன்னதாக ஞாபகம், புரட்சிக்கவிஞராகிய நீங்கள் ஏன் காதலைப் பற்றி எழுதுகிறீர்கள்? என்று கேட்ட போது, அவர் சொன்னார்: சாதியை ஒழிப்பதற்கு காதலை விட்டால் வேறு வழியில்லை அதனால்தான் நான் காதல் கவிதைகள் எழுதுகிறேன் என்று சொன்னார். என்னுடைய குருநாதர் போன்ற பாரதிதாசன் சொன்னது இந்தக் காலகட்டத்திற்கு ரொம்பவும் அவசியம் என்று நான் கருதுகிறேன்.

ஜாதி மறுப்பு என்பதில் பொதுவாக இரண்டு ஜாதிகளை சேர்ந்தவர்கள் வெவ்வேறு ஜாதிகளை சேர்ந்தவர்கள் காதலிப்பதற்கு மட்டும் வருகிற எதிர்ப்பை விட, இருவரில் ஒருவர் அதிலும் குறிப்பாக ஆண் தலித்தாக இருக்கிறபோதுதான், மிகக் கடுமையாக கொலை வரையில் இந்த ஜாதி வெறி நீள்கிறது. எனவே இது வெறும் சாதி மறுப்பு மட்டுமா? அல்லது தலித்தியத்தின் எழுச்சியோடு இது ஒருங்கிணைந்ததா?

சரியாகச் சொன்னீர்கள். உண்மையிலேயே இது ஒரு தலித் ஆண்மகன் வேறொரு சாதிப்பெண்ணை காதலிக்கிறபோதுதான் இந்த எதிர்ப்பு வருகிறது. அதே மேல்சாதிக்காரன் ஒரு தலித் பெண்ணைக் காதலித்தால் கூட வருவதில்லை. இந்த தலித் ஆண் மேல் சாதிக்காரப் பெண்ணை காதலிக்கிற போதுதான் இந்த நிகழ்ச்சி வருகிறது. காதல் மலருவது சாதி பார்த்தோ, இனம் பார்த்தோ, பணம் பார்த்தோ வருவது இல்லை என்று சொல்லுவார்கள்.

அது உண்மைதான் அப்படியெல்லாம் பார்த்துவிட்டு வருவது காதல் அல்ல வியாபாரம். அதனால்தான் இந்தப் பெண்கள் தாங்கள் சந்திக்கிற இளைஞர்கள் அவர்கள் யார் எந்த சாதி என்று பார்க்காமல் அவர்களுடைய தோற்றத்தை, அவர்களுடை பழக்கத்தை, அவர்களுடை படிப்பை பார்த்துதான் காதலிக்கிறார்கள். அந்தக் காதலை இந்த மேல்சாதிக்காரர்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்றால், நம்முடைய சாதிக் கட்டுக்கோப்பு குலைந்துவிடும், நாம் நடத்திக்கொண்டிருக்கிற ஜாதிக்கட்சிக்கு பங்கம் வந்துவிடும் என்பதற்காக மட்டுமேதான் அவர்கள் எதிர்க்கிறார்களே தவிர சாதி போய்விட்டது என்கிற கவலையெல்லாம் அவர்களுக்கு ஒன்றும் இல்லை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக காலூன்றியிருக்கிற இந்த சாதி என்கிற நச்சு மரத்தை அடியோடு வீழ்த்துவதற்கு கவிதை மட்டும் போதுமா? அல்லது சாதியை ஒழிப்பதற்கு நாம் எப்படி அணி திரள வேண்டும்?

என்னுடைய கையில் கிடைத்த கருவி கவிதை. அந்தக் கருவியின் மூலமாக நான் இந்தப் பரப்புரையைச் செய்கிறேன். இன்னும் சொல்லப்போனால் காதலிக்கத் தூண்டுகிறேன். அந்தத் தூண்டல் பல வகையிலே செய்ய முடியும். ஒரே ஒரு உதாரணத்திற்கு சொன்னால், குடும்பக் கட்டுப்பாடு பிரச்சாரம் நம்முடைய நாட்டிலே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஒரு வீட்டில் ஆறு குழந்தை ஏழு குழந்தை பத்துக் குழந்தை என்று இருந்த நாடுதான் இந்த நாடு.

அதனால் ஏற்படுகிற துன்பங்கள் துயரங்கள் பெண்களுக்கு ஏற்படுகிற உடல் உபாதைகள் இவற்றையெல்லாம் எடுத்து செய்த பரப்புரையின் காரணமாக இன்றைக்கு எல்லோரும் ஒரு குழந்தை இரண்டு குழந்தையோடு இருப்பதும், அவர்களே ஏற்றுக்கொண்டு இன்றைக்கு எல்லோரும் குடும்பக்கட்டுபாட்டு அந்த நிலையை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

இது ஒரு நல்ல உதாரணம் நமக்கு. அதே போல சாதி மறுப்பு திருமணங்களை நாம் பரப்புரை செய்தால், காதல் திருமணங்களை நாம் பரப்புரை செய்தால், இதை ஏற்கனவே பெரியாரும் அவருடைய இயக்கத்தை சேர்ந்தவர்களும் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். இன்னும் முழுமையாக நாம் இளைஞர்களிடம் இதைக் கொண்டுபோக வேண்டும். அதையெல்லாம் நான் என்னுடைய நூலில் எழுதியிருக்கிறேன்.

காதலுக்காக ஒரு கழகமே அமைக்க வேண்டும், கட்சியே கட்டவேண்டும் என்றெல்லாம்கூட எழுதியிருக்கிறேன். காதலர்களுக்குத் திருமணம் செய்து வைப்பது, அவர்களுக்கு ஒரு நல்ல வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவது இதையெல்லாம் இந்தக் காதல அமைப்புகள் செய்ய வேண்டும்.

உரையாடியவர்: கவிஞர் செம்பை சேவியர்

Pin It