கடந்த ஜூலை மாதம், வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா, திரைப்பட இயக்குனர் மணிரத்னம், அடூர் கோபாலகிருஷ்ணன், ஷ்யாம் பெனகல், அபர்ணா சென், ரேவதி உள்ளிட்ட இந்தியாவின் புகழ்பெற்ற 49 ஆளுமைகள், இந்தியப் பிரதமருக்கு ஒரு திறந்த மடல் எழுதினர். சிறுபான்மையினர், தலித் மக்கள் ஆகியோர்,'ஜெய் ஸ்ரீராம்' சொல்லாத காரணத்திற்காக, வடநாட்டில் அடித்துக் கொல்லப்படுவதைப் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வருவதும், அந்தக் கொடிய நிகழ்வுகள் நிறுத்தப்பட வேண்டும் என்று கோருவதும் மடலின் நோக்கம்.

manirathnam revathi and adoorகடிதத்தின் விளைவாக, எளிய மக்களை அடித்துக் கொன்ற எவரும் கைது செய்யப்படவில்லை. மாறாக, கடிதம் எழுதிய 49 பேர் மீதும் தேசத்துரோக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஒரு சர்வாதிகார நாட்டில் கூட இப்படி இதுவரையில் நடந்ததாகத் தெரியவில்லை.

கடிதம் எழுதியவர்களில் சிலர் இந்திய அரசின் பத்மஶ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் விருதுகள் எல்லாம் பெற்றிருக்கின்றனர். இப்போது தேசத்துரோக விருதும் வழங்கப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டம், 124(ஏ) பிரிவின்கீழ் இவர்கள் மீது, பீகார் நீதிமன்றம் ஒன்றில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டம், ரகசியமாக, தேசத்திற்கு எதிராகச் சதி செய்பவர்கள் மீது வழக்குத் தொடுப்பதற்கான சட்டப் பிரிவு ஆகும். பிரதமருக்குத் திறந்த மடல் எழுதுவது, எப்படி ரகசியமாகச் சதி செய்வதாகும் என்பது நம் போன்ற பாமரர்களுக்குப் புரிய வாய்ப்பில்லை.

தேசத் துரோக வழக்கிற்கான சட்டப் பிரிவு நமக்கு ஒன்றும் புதிது இல்லை. ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த ரவுலட் சாஸ்திரி சட்டத்தின் மறு பதிப்பும் மலிவுப் பதிப்புகளும்தான் இவை. அந்த ரவுலட் சட்டத்தை எதிர்த்துத்தான் 1919இல் மக்கள் போராடினர். அதனையட்டியே ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது.

ஆங்கிலேயர்கள் வெளியேறியவுடன் அந்தச் சட்டமும் வெளியேறிவிடவில்லை. வேறு வேறு பெயர்களில் இன்னும் இங்குதான் உள்ளது. 1960களில் அதற்கு DIR (Defence of Indian Rules) என்று பெயர். பிறகு மிசா, என்.எஸ்.ஏ, தடா, பொடா என்று பல்வேறு பெயர்களில் அதே சட்டம் மீண்டும் மீண்டும் உயிர்த்து எழுந்தது. இப்போதும் என்.ஐ.ஏ என்ற பெயரில் அது வந்திருக்கிறது.

மேலே உள்ளவை தனிச்சட்டங்கள். அவை அல்லாமல் இந்தியக் குற்றவியல் சட்டத்திலேயே உள்ள 124 (ஏ) என்பதும் தேசத் துரோகம்தான். அதற்குத் தண்டனைச் சட்டம் 104இன் கீழ் வாழ்நாள் (ஆயுள்) தண்டனையே கொடுக்க முடியும்.

குற்றம் சாட்டப்படவர்களுள் இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி ஆகியோரைத் தமிழகம் நன்கு அறியும். மணிரத்னம், ரோஜா, பம்பாய், உயிரே போன்ற படங்களில் இஸ்லாமியர்களைத் தேச விரோதிகளாக ஆக்கித் தன் தேசப் பற்றைப் ‘பரிபூரணமாக’ வெளிப்படுத்தியவர். பாவம், இப்போது அவரையே தேசவிரோத வழக்கில் இணைத்து விட்டார்கள். நடிகை ரேவதியும் பெரிய தேசப் பற்றாளர்தான். முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி டி.என்.சேஷனை தனிக் கட்சி தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டவர். அவரும் இப்போது தேசவிரோதி.

இந்த வழக்கை இப்படியே விட்டுவிடாமல், எல்லோரையும் சிறையில் அடைத்துத் தண்டனை வழங்கினால்தான், அடுத்த தேர்தலிலாவது (அப்படி ஒன்று இனி நடந்தால்) நாட்டின் இருள் நீங்கும்! 

Pin It