ஆர்.எஸ்.எஸ். மோடி அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு அலங்கோலப்பட்டுக் கொண்டிருக்கிறது.
நீட் தேர்வு நடத்தப்படும்பொழுது மாணவர்கள் அலங்கோலப்பட்டார்கள், குறிப்பாகப் பெண்கள்.
முழுக்கை சட்டை அணிந்து வந்த மாணவியரின் சட்டைகளைக் கிழித்து, சோதனை என்ற பெயரில் அரைக்கைச் சட்டைகளாக கத்தரிக்கப்பட்டன.
காலணிகளைக் கழற்றச் செய்தனர். சடை பின்னப்பட்டிருந்த தலை மயிர் அவிழ்க்கப்பட்டு தலைவிரி கோலத்தில் தவிக்கவிடப்பட்டனர்.
கொலுசு, மூக்குத்தி, கழுத்தணிகள் உள்ளிட்ட அனைத்து அணிகலன்களும் கழற்றப்பட்டன. பெண்கள் மேலணியும் துப்பட்டாக்கள் கூடப் பிடுங்கப்பட்டன.ஆடைகளைச் சரி பார்த்தார்கள். ஆளைச் சரி பார்க்காமல் விட்டு விட்டார்கள்.
அதுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டு மாணவர்கள் கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான், கர்நாடகா என வேறு மாநிலங்களில் தேர்வெழுத அலைக்கழிக்கப்பட்டனர்.
இத்தகைய அலங்கோலங்களுக்கு இடையில் இப்பொழுது வேறு ஒரு அலங்கோலம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
தேனி மருத்துவக் கல்லூரியில், உதித்சூர்யா எனும் மாணவர் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் இப்பொழுது நீதிமன்றத்துக்கும் வந்துவிட்டது.
நீதிமன்றத்தில், நீட் தேர்வில் எத்தனை பேர் ஆள்மாறாட்டம் செய்தனர்? அதன் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றவர்கள் எத்தனை பேர்? நீட் தேர்வு எழுதியவர்களின் அடையாளம், மாணவர் சேர்க்கை பெற்றவர்களின் அடையாளம் சரி பார்க்கப் பட்டதா? ஆள் மாறாட்டம் மோசடி தொடர்பாக வேறு வழக்குகள் கண்டறியப்பட்டனவா? இரட்டை இருப்பிடச் சான்று அளித்து மாணவர்கள் சேர்க்கை பெற்றதுபோல, வேறு வகையில் மோசடி செய்து மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனரா என்று நீதிமன்றம் கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
நாடு முழுவதும் 14 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வில் ஒரே ஒரு இடைத் தரகர் மட்டும்தான் இந்த முறைகேடுகளைச் செய்துள்ளார் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சொல்லியிருப்பது நம்பும்படியாக இல்லை.
இந்த முறைகேடு அரசு அதிகாரிகளின் ஆதரவு இல்லாமல் நடந்திருக்க முடியாது.
பணம் கைமாறாமல், லஞ்சம் இல்லாமல் இத்தகைய மாபெரும் மோசடி நடந்திருக்க வாய்ப்பில்லை. ஏழை நடுத்தர மாணவர்களின் மருத்துவக் கல்வியை சீரழிக்க வந்த நீட் தேர்வு இன்று மக்கள் முன்னால் அலங்கோலமாகச் சீரழிந்து கொண்டிருக்கிறது.
இதை மோடிக்குச் ‘சமர்ப்பணம்’ செய்வோம்.