“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று உலகுக்குத் தோழமையைச் சொல்லிக் கைகளை நீட்டியவர்கள் தமிழர்கள்.

அதற்காக அந்நியர்களின் அதிகாரத்தையும், ஆதிக்கத்தையும் ஏற்பவர்கள் அல்லர் தமிழர்கள்.

வலிமை வாய்ந்த மன்னர்களான அசோகர், அக்பர் போன்ற பேரரசர்களின் பேரரசுகள்  இந்நாட்டில் விரிவடைந்த போதும், அவைகளால் தமிழ் நாட்டின் எல்லையைக் கூட மிதிக்க முடியவில்லை. வடவர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்தவர்கள் தமிழர்கள்.

புறப்பகைவர்களைக் களத்தில் எதிர்கொள்ளலாம், வெல்லலாம்.

ஆனால் சொக்கட்டான் சகுனிக் கும்பல்கள் அப்படியில்லை. கூட இருந்தே கழுத்தறுப்பு வேலைகளைச் செய்து சேர்ந்தாரைக் கொல்லியாக உருவெடுப்பது அவைகளின் குணம்.

தமிழைத் தமிழ்நாட்டில் சங்கம் அமைத்து வளர்த்த செய்தியை இறையனார் களவியலுரை மூலம் அறிகிறோம்.

இப்போது ஆர்.எஸ்.எஸ். முகமூடியான பிரதமர் மோடி கிளம்பி விட்டார், காசியில் போய் தமிழ் வளர்க்கப் போகிறேன் என்று.

தமிழில் வணக்கம் சொல்வார், திருக்குறள் சொல்வார், யாதும் ஊரே பாட்டையும் பாடுவார், தமிழ் அழிந்து விடக் கூடாது என்று கூப்பாடும் போடுவார். எல்லாம் நடிப்பு!

கேந்திர வித்யாலயாக்களில் தமிழுக்குத் தடை, தில்லி பல்கலைக்கழகத்தில் இந்தி கட்டாயம், ஜே.என்.யு. பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள தமிழ்ப் பேராசிரியர் பதவி நிரப்பப்படவில்லை, தமிழ்நாட்டு வங்கிகளில் தமிழர்களுக்கு வேலையில் முன்னுரிமையில்லை, இரயில்வேயில் தமிழர்கள் புறக்கணிப்பு... இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

தமிழை வளர்ப்பதன்று மோடியின் நோக்கம். தமிழைச் சொல்லி, அதற்குள் மதத்தை நுழைத்துத் தமிழை அழித்து இந்தியை /சமஸ்கிருதத்தை நிலைநிறுத்தும் சொக்கட்டான் வேலையைச் செய்கிறார், அவர்.

வாளை விட நூல் ஆபத்தானது.

வடக்கை எதிர்கொள்ளும் தெற்குச் சூரியன், ‘திராவிடம்’ ஒன்று தான்.

தமிழர்களே! அணி திரள்வோம் வாருங்கள், முதல்வர் ஸ்டாலின் தலைமையில்!

Pin It