திருவள்ளுவர் ஞானஸ்நானம் பெற்ற கிறித்தவர் என்னும் கருத்தைக் கொண்ட “மற்ற உரைகள் அனைத்தும் தவறானவை என நிலைநாட்டும் திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்” என்னும் நூல் அண்மையில் வெளியிடப்பட்டிருக்கிறது. இது பற்றிய தங்களுடைய கருத்து.

oviya 276இந்த நூலை நான் இன்னும் படிக்காத காரணத்தால், நூலில் என்ன சொல்லப் பட்டிருக்கிறது என்பது பற்றி கருத்துச் சொல்ல முடியாது. ஆனால் திருக்குறள் ஒரு கிறிஸ்தவ மத நூல் என்பது நீண்டகாலமாக ஒரு சிலரால் சொல்லப்பட்டு வருகிறது. கி.பி. 4ஆம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் கிறிஸ்தவம் என்பது மதமாகக் கட்டமைக்கப்படுகிறது. அதாவது அரச மதமாக உருவாகிறது. அதற்கு முன்பு இயேசு கிறிஸ்து நடத்தியது ஒரு மக்கள் இயக்கம். “பொய்” என்னும் தாயின் கருவில் பிறப்பவைதான் எல்லா மதங்களும். அப்படித்தான் இவ்வளவு பெரிய மதங்கள் கட்டப்படுகின்றன. மதத்தைப் பரப்ப வந்தவர்கள் பொய் சொல்வார்கள் என்பது நாம் எளிதில் புரிந்து கொள்ள வேண்டிய விசயம். அவர்கள் சொல்வதில் பொய்யே இருக்காது, அதை நாம் ஆய்ந்து பார்க்க வேண்டும் என்று சொல்கிற அளவிற்கு, இதைப் பெரிய விசயமாக நான் எடுத்துக் கொள்ளவில்லை.

இரண்டாவது, மனித இனம் ஒரே மாதிரியானக் கதைகளைச் சுமந்து சென்றிருக்கலாம். பெருவெள்ளத்தினால் வந்த அழிவு என்பது பைபிளில் சொல்லப்படுகிறது. அதே மாதிரியான செய்தி பிற மதங்களின் குறிப்புகளிலும் இருக்கிறது. மனித சமூகத்தின் ஒரு பொதுவான நிகழ்வு மதங்களுக்குள் பொதியப்பட்டு வேறு வேறு நிகழ்வுகளாக அது சொல்லப் பட்டிருக்கலாம். அப்படித்தான் நாம் இதைப் பார்க்க வேண்டும்.

ஆனாலும் நாம் படித்த வரலாற்றின்படி கிறிஸ்தவ மதம் என்பது ஆங்கிலேயர்கள் வந்து நாட்டைப் பிடித்த போது இங்கு வந்தது. அதற்கு முன்பு இந்த மண்ணிற்கும் கிறிஸ்தவ மதத்திற்கும் தொடர்பில்லை என்பதுதான் நாம் அறிந்த வரலாறு. இந்த வரலாற்றைக் கேள்விக்கு உட்படுத்த வேண்டுமானால், மிகப் பெரிய தொல்லியல் ஆதாரங்களுடன் ஒருவர் கேள்விக்குட்படுத்தினால் நாம் அதில் குறுக்கே நிற்கப் போவதில்லை. ஜெருசேலத்திற்கும் கன்னியாகுமரிக்கும் என்ன உறவு இருந்தது என்பதை அவர்கள் சொல்ல வேண்டும். அப்படியே அவர்கள் ஒரு விசயத்தைக் கட்டமைத்தாலும்கூட, அது ஒரு வரலாற்றுக் கட்டமைப்பாக இருக்க வேண்டுமே தவிர, அது என்ன திருவள்ளுவரை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்கள் மதவயப்படுத்துவது? தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக நிலைபெற்றிருக்கக் கூடிய திருவள்ளுவரை எங்கள் மதத்தைச் சார்ந்தவர் என்று சொல்வதை நேர்மையான கூற்றாக நாம் எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? மதவாதிகள் என்றாலே அவர்கள் பொய் சொல்வார்கள். இது ஆச்சரியமான விசயம் ஒன்றுமில்லை. ஏனெனில் மதவாதிகள் சிந்தனை என்பதும் ஒரு அரசியல்தான்.

திருவள்ளுவர் எழுதிய திருக்குறளிலும் கூட அப்படிக் குறிப்பிடக் கூடியச் சான்றுகள் இல்லை. பொதுவான சிந்தனைகள் பைபிளுக்கும் திருக்குறளுக்கும் இருக்குமேயானால், அது இயேசு கிறிஸ்துவிடமிருந்து திருவள்ளுவர் பெற்றார் என்று சொல்ல முடியாது. திருவள்ளுவரிமிருந்து கூட இயேசு கிறிஸ்துவிற்குப் போயிருக்கலாம். இன்றைக்கு கிறிஸ்தவ மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளை விட்டு விட்டு இந்த மாதிரியான விஷயங்களுக்குள் திசைதிருப்ப வேண்டிய அவசியம் கிடையாது.

“திருக்குறளும் ஆரியக் குரலே! - தோழர் பெரியார்” என்னும் ஒரு நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. இது பற்றிய தங்களுடைய கருத்து.

திருக்குறள் ஆரியக் குரலே என்றொரு வாசகத்தைப் பெரியார் சொல்லியிருப்பாரா என்று எனக்குத் தெரியவில்லை. பெரியாரின் உரைகள்தான் தொகுக்கப்பட்டு வெளியிடப் படுகின்றன. ஒரு மேடையில் குறிப்பிட்ட ஒரு நோக்கத்திற்காகப் பேச்சு அமையும். ஆரியத்தினுடைய ஆதிக்கத்திலிருந்து முழுமையாக விடுபட்டு நிற்பது திருக்குறள் என்பதைப் பெரியார் ஏற்றுக் கொள்ளவில்லை. அதைச் சில குறள்களை எடுத்துக்காட்டி விளக்கியிருக்கிறார் பெரியார். அதே சமயம் “திருக்குறள்” என்பது நாம் ஒரு அடையாளமாக எடுத்துக் காப்பாற்றப்பட வேண்டியது என்றும் பெரியார் பேசியிருக்கிறார்.

ஆக பெரியார், எப்போது, எதை, எந்த மேடையில் பேசியிருக்கிறார் என்பதைப் பொறுத்துதான் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள முடியும். அப்படி ஒரு விஷயத்தை மட்டும் உருவி எடுத்து வந்து ஒரு நூல் தலைப்பாக வைப்பது எல்லாம், இன்றைக்கு ஆர்எஸ்எஸ்காரர்களுக்கும், தமிழ் இளைஞர்களைத் திராவிடத்திற்கு எதிராகக் கட்டமைக்கக் கூடிய வேலைகளுக்கும் வேறு ஒரு வகையில் முட்டுக் கொடுப்பதாகவே அமையும்.

அதே பெரியார் திருக்குறள் மாநாடுகள் நடத்தினார். அப்படியானால் பெரியார் முரண்பாட்டின் வடிவம் என்று சொல்ல வருகிறார்களா? பெரியார் பேசியது என்ன, என்ன பேசுபொருள், என்பதைப் பொறுத்துச் சில மதிப்பீடுகள், சில விமர்சனங்கள் மாறுபடும். பெரியார் நீண்ட நெடிய காலம் பேசியிருக்கிறார். திருக்குறள் ஆரியக் குரல் என்று அவர் எழுதியதாக நான் படிக்கவில்லை. அப்படி எழுதி இருந்தாலும், முந்தைய அல்லது பிந்தைய பத்திகளுடன் சேர்த்துப் படிக்க வேண்டிய விசயமாக இருக்கும்.

பெரியார் மிகுந்த விழிப்புணர்வு கொண்ட தலைவர். அவருடைய இறுதிச் சொற்பொழிவு வரைக்கும், அவருடைய உரைகளில் ஞாபகமறதியோ, வயதானதால் உள்ள தடுமாற்றமோ, பிறழ்வுகளோ இல்லை. அவரைப் படிக்கும்பொழுது, ஒவ்வொன்றையும் விளக்கப்படுத்தியும் வியாக்கியானப்படுத்தியுமே அவர் பேசிக் கொண்டிருப்பதை விளங்கிக் கொள்ள முடியும். பெரியாரின் மொழியில் ஒற்றைச்சொல் தனியாக நிற்காது. அது பிற விசயங்களோடு பின்னிப் பிணைந்துதான் இருக்கும். அதனால் அவருடைய ஒற்றை வரியை உருவிக்கொண்டு, பெரியாரின் ஒரே கருத்து அதுதான் என்பதுபோல எழுதுவதும், தலைப்புகள் வைப்பதும், திரித்து நூல் வெளியிடுவதும் பெரியாருக்குச் செய்கின்ற துரோகம்.

- தோழர் ஓவியா, பெரியாரியலாளர் புதிய குரல்

நேர்கண்டவர்: மா.உதயகுமார்

Pin It