கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

இரண்டு தேசிய இனங்களைக் கொண்ட நாடு இலங்கை. ஒன்று தமிழ்த் தேசிய இனம், மற்றொன்று சிங்களத் தேசிய இனம்.

பவுத்த பேரினவாதச் சிங்கள அரசின் முந்தைய அதிபர் ராஜபக்சே தமிழர்களை ஒழித்துக்கட்டுவதில் முனைப்புக் காட்டியவர்.

அவரின் அமைச்சரவையில் இருந்த சிறிசேனாவும் அப்படித்தான். ரணில் விக்ரமசிங்க இவர்களுக்குக் கொஞ்சமும் குறைந்தவர் இல்லை.

ரணில் இந்தியச் சார்பை விரும்புபவர். ராஜபக்சே முழுவதும் சீனாவின் கைப்பாவை.

இலங்கை பிரச்சனையைச் சரியாகச் சொன்னால் அது தென்கிழக்காசிய நாடுகளின் மையப்புள்ளி.

பிலிப்பைன்ஸ், டிகோகார்ஷியா போன்ற கிழக்காசியப் பிராந்தியத்தில் ராணுவத் தளங்களை வைத்துள்ள அமேரிக்கா, இலங்கை திரிகோண மலையிலும் அப்படி ஒரு தளத்தை அமைக்க முயல்கிறது.

அதை முறியடிக்க இலங்கையில் ஊடுறுவி பெருமுதலீடுகளைச் செய்து ஏறத்தாழ இலங்கையைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது சீனா.

இந்த இரு வல்லரசுகளை எதிர்கொண்ட விதத்தில் இந்தியாவுக்கு ஈழப் பிரச்சனை ஒரு மையப்புள்ளி.

இன்று ஈழத்தில் போர் நடக்கவில்லை என்றாலும், ஈழ மக்கள் மீதான ஒடுக்குமுறை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

அது போல இலங்கையில் அமைதி நிலவி வருகிறது என்று சொல்லிக்கொண்டாலும், அங்கே குழப்பங்கள்தான் தொடர்கின்றன என்பதை இன்றைய அரசியல் உணர்த்துகிறது.

ரணிலுக்கும், சிறிசேனாவுக்கும் ஏற்பட்ட கருத்து மோதலில் ராஜபக்சேவை பிரதமராக்கினார் சிறிசேனா. பெரும்பான்மை ரணிலுக்கு இருந்த காரணத்தினால் இன்று ராஜபக்சே, பிரதமர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இலங்கையின் இந்தக் குழப்பத்தை இந்தியா உள்பட உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கின்றன. இதில் ஈழத்தமிழர்களின் வாழ்வும் பின்னிப் பிணைந்திருக்கிறது.

அத்துடன் தென்கிழக்காசியாவின் எதிர்கால வல்லாண்மை ஆதிக்கமும் இங்கு இப்பொழுது கேள்விக் குறியாக இருக்கிறது.