உலகின் தொன்மையான நாகரிங்களில் மிகப் பெரியதும் பல துறைகளில் சிறந்ததும் சிந்துச் சமவெளி நாகரிகம் ஆகும். ஆனால், உலகின் பிற தொன்மை நாகரிகங்களுக்கு நேராத அவலம் தமிழர் நாகரிகமான சிந்துவெளிக்கு நேர்ந்து வருகிறது. எகிப்து நாகரிகம் எகிப்தியருடையது; சீன நாகரிகம் சீனருடையது; கிரேக்க நாகரிகம் கிரேக்கருடையது என்பதில் எந்தக் குழப்பமும் இல்லை. ஆனால், சிந்துவெளி நாகரிகம் யாருடையது என்பதில் இந்துத்துவவாதிகள் ஏற்படுத்தி வரும் குழப்பங்களுக்கு அளவே இல்லை. சிந்துவெளியை ‘வேதகால நாகரிகம்’ என்று கூசாமல் எழுதியும் பேசியும் வருகின்றனர் இந்துத்துவவாதிகள். திராவிட மாயைக்குள் சிக்கியவர்களோ, ‘அது திராவிட நாகரிகம்’ என பொருந்தாப் பொய்யை உரைத்து வருகின்றனர். சிந்துவெளியைப் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளும் போதெல்லாம், ‘பழங்கதை பேசுவதால் என்ன பயன்?’ என்று கேலி செய்யும் வழக்கம் ஒருபுறம்.
கடந்தகால வரலாற்றைப் பயிலாமல் புதிய வரலாறு படைக்க இயலாது என்பதே சமூக அறிவியல். சிந்துவெளி நாகரிகம் என்பதே, ஆரியருக்கு எதிரானது; ஆரியரை எதிர்த்துப் போரிட்ட தமிழரின் வரலாறு. ஆரியரின் யாகங்களை சிந்துவெளித் தமிழர் எதிர்த்தனர். ஆரியருக்கும் தமிழருக்குமான பகை சிந்துவெளியிலேயே தொடங்கிவிட்டது. இந்த உண்மைகள் ஆய்வுகளின் அடிப்படையில், மறுக்கவியலா வண்ணம் முன் வைக்கப்பட்டால் மட்டுமே இன்றைய தமிழினம் தன் பகையை எதிர்த்துப் போராடும்.
இந்த அடிப்படையில்தான் சிந்துவெளிக்கும் தமிழகத்துக்குமான உறவு குறித்த இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
சிந்துச் சமவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதற்கான சான்றுகள் ஏராளமாக வெளி வந்துள்ளன. ஆயினும், சிந்துச் சமவெளிக்கும் தமிழகத்திற்குமான உறவு / தொடர்பு குறித்த சான்றுகள் ஏதும் இல்லாத நிலை கடந்த காலத்தில் நிலவியது. ஆய்வுலகில் இது ஒரு குறையாகவே கருதப்பட்டது.
டார்வின் வடித்த பரிணாமக் கோட்பாட்டில் ‘விடுபட்ட இணைப்பு’ என்ற ஒரு குறை நீண்ட காலமாக நிலவியது. மனிதக் குரங்கு மனிதனாக மாறிய நிலையை அவரால் சான்று காட்டி நிறுவ முடியாமல் போனது. அதாவது, அவ்வாறான இரட்டை நிலையில் (குரங்கின் தன்மையும் மனிதத் தன்மையும் கலந்த நிலை) உள்ள விலங்கின் படிமம் எதையும் அவரால் கண்டறிய இயலவில்லை. இந்த விடுபட்ட இணைப்பு, டார்வின் மரணத்திற்குப் பிறகும் புதிராகவும் சவாலாகவும் நீடித்தது.
கடந்த 2002 ஆம் ஆண்டு, எத்தியோப்பியாவில் அந்த விடுபட்ட இணைப்பிற்குத் தொடர்பு கிடைத்துவிட்டது. டார்வினுக்குக் கிடைக்காத அந்த இரட்டை நிலை விலங்கின் படிமங்கள் எத்தியோப்பியாவில் கண்டறியப்பட்டன. டைம் இதழ் இது குறித்த விரிவான கட்டுரையை அப்போது வெளியிட்டது.
சிந்துவெளிக்கும் தமிழகத் துக்குமான விடுபட்ட இணைப்பு, இணைக்கப்படும் அளவுக்கான ஆய்வுகள் தற்போது வெளிவரத் தொடங்கிவிட்டன. இது தமிழர் வரலாற்று ஆய்வுகளில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சியாகும்.
சிந்துவெளியில் வாழ்ந் தவர்கள் தமிழர்கள்தான் என்பதைப் பல்வேறு ஆய்வாளர்களும் உறுதி செய் துள்ளனர். சிந்துவெளி எழுத்து களின் ஒலி வடிவம், தமிழில் இன்றும் புழங்கும் சொற்களுடன் கூடியவையாக உள்ளன.
’சிந்துவெளிப் பண்பாடும் சங்க இலக்கியமும்’ என்ற நூலை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்நூல் முனைவர் ஐராவதம் மகாதேவன் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் ஆகும். இந்நூலில் அவர் குறிப்பிடத்தக்க சான்று ஒன்றை விளக்கியுள்ளார். அவரது ஆய்வின் வெளிச்சத்தில், சிந்துவெளிக்கும் தமிழகத்துக் குமான உறவு நிலைகளை முன் வைக்கிறேன். முனைவர் ஐராவதம் மகாதேவன், சிந்துவெளிப் பண்பாட்டுக் கூறுகளை ‘இந்து மதத்தோடு’ தொடர்பு படுத்துகிறார். இக்கருத்தை இக் கட்டுரை ஏற்கவில்லை. இது குறித்து வேறு வாய்ப்பில் விரிவாகக் காணலாம்.
கபிலர் பாடிய இருங்கோவேள்
கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரி போரில் மரணமடைந்த பிறகு, பாரியின் நண்பரும் அறிவாளருமான கபிலர், பாரியின் இரு மகள்களான அங்கவை சங்கவை ஆகியோரை அழைத்துக் கொண்டு பறம்பு மலையிலிருந்து வெளி யேறுகிறார். பாரி மகளிரைத் திருமணம் செய்துகொள்ளும்படி, எருமை நாட்டுத் துவரை நகரில் அரசாண்ட இருங்கோவேள் எனும் மன்னனைச் சந்திக்கிறார் கபிலர். எருமை நாடு என்பது, இன்றைய மைசூர் ஆகும். எருமை நாடு, என்பது பழந்தமிழப் பெயர். எருமை என்பதை வட மொழியில் மகிக்ஷம் என்றாக்கினர். மகிக்ஷ நாடு, பின்னாளில் மைசூர் ஆனது.
துவரை நகரம் எனச் சங்க இலக்கியங்கள் குறிக்கும் நகரம் இன்று மைசூர் அருகே உள்ள துவாரகா நகரமே ஆகும். எருமையூர் மகிசூர் என்றாகி, மைசூர் ஆனதுபோல், துவரை நகரம், துவாரகா ஆகிவிட்டது.
துவரையில் இருந்த இருங்கோவேளைச் சந்தித்து, கபிலர் தமது வேண்டுகோளை முன் வைக்கிறார். அதன் சுருக்கம்:
’இருங்கோவேளே...என்னுடன் வந்துள்ள இவர்கள் யார் என்றால், பறம்புத் தலைவன் பாரியின் மகளிர். நான் இவர்கள் தந்தையின் தோழன். நீ யார் தெரியுமா? வடக்கில் வாழ்ந்த முனிவனது பெரும் மண் பாண்டத்தில் தோன்றிய வேளிர் பரம்பரையின் நாற்பத்து ஒன்பதாம் வாரிசு நீ. உன் முன்னோரான வேளிர், வடக்கே... செம்பினால் கட்டியது போன்ற உயரமான மதில் சுவர்களை யுடைய துவரை என்னும் நகரை ஆண்டவர்கள்.
யாரும் நெருங்க அச்சப்படும் வீரனே! புலியைக் கொன்றவனே (புலிகடிமாலே)! இந்த மகளிரை ஏற்றுக் கொள்வாயாக!’
-இந்தப் பாடலில்தான் சிந்து வெளிக்கும் தமிழகத்துக் குமான இணைப்பு ஒளிந்துள்ளது.
கபிலர் இருங்கோவேளின் முன்னோர் குறித்து உரைத்த சேதி,
‘நீயே வடபால் முனிவன் தடவினுள் தோன்றி’ என்ற வரியில் தொடங்குகிறது.
‘வடபால் முனிவன்’ யார் என்பதில் கடந்த காலத்தில் பல முரண்பட்ட முடிவுகள் முன்வைக்கப்பட்டன. வடக்கே வாழ்ந்த முனிவர் ஒருவர், அங்கிருந்த துவரை நகரை ஆண்ட வேளிர்குலத்தவரைத் தமிழகத் துக்கு அழைத்து வந்தார் என்பதே பாடல் கூறும் சேதி.
’வடபால் முனிவன் தடவினுள் தோன்றி’ என்றால், வடக்கே வாழ்ந்த முனிவனது ’பெரும் மண் பாண்டத்தில் தோன்றி’ என்று பொருள். பல உரையாசிரியர்கள் தடவினுள் என்பதற்கு, ‘ஓமகுண்டத்தில்’ என்று தவறாகப் பொருள் கூறினர். ’தட’ என்பது மண் பாண்டத்தைக் குறிக்கும். சிந்துவெளியின் சின்னங்களில் மண்பாண்டம் ஒன்றாகும். மேலும், தொல் பொருள் ஆய்வுகளில் ‘தட’ என்பது மண்பாண்டத்தையே குறிப்பதாக முனைவர் ஐராவதம் மகாதேவன் நிறுவியுள்ளார்.
வடபால் முனிவன் என்பவர், அகத்தியர்தான் என்பதே இக் கருத்தின் அடிப்படை. அகத்தியர் குறித்த தகவல்களில் இந்த இடத்திற்குப் பொருத்த மானது ஒன்றைக் காண்போம்.
துவரை என்பது வட நாட்டில் கண்ணன் ஆட்சி செய்த நகரம் அல்லது நாடு. அகத்திய முனிவர், கண்ணனிடமிருந்து 12 வேளிர்குலத்தவரை, தென்னாடு அழைத்து வந்தார் என்பது நச்சினார்க்கினியார் விளக்கம். அகத்தியர் வடக்கே இருந்து வந்தவர் என்பதைத்தான் ஏறத்தாழ எல்லா புராணங்களும் கூறுகின்றன.
கண்ணன் தமிழன்
நச்சினார்க்கினியரின் குறிப் பிற்கும் கபிலரின் பாடலுக்கும் நேரடி உறவே உள்ளதைக் கவனிக்கலாம்.
அதாவது, துவரையை ஆண்ட கண்ணன் ஏதோ ஒரு காரணத்திற்காக அகத்திய முனிவரை அழைத்து, 12 வேளிர் குலத்தவரைத் தென்னாட்டுக்கு அனுப்பினார். இதைத்தான் கபிலர், ‘வடபால் முனிவர் தடவினுள் தோன்றி’ என்கிறார். மண்பாண்டம் என்பது அகத்தியருக்கான குறியீடு. அக்கால, சிந்துவெளி எழுத்துக்கள் சித்திர வகைப்பட்டவை. சித்திரங் களின் வழிதான் அவர்கள் மொழியைப் பதிவு செய்தார்கள். அதன்படி, மண்பாண்டம் அல்லது கும்பம் என்பது அகத்தியரைக் குறிக்கும் என்பது முனைவர் ஐராவதம் மகாதேவன் ஆய்வு முடிவு.
இந்த இடத்தில் வேறொரு வரலாற்று ஆய்வையும் நாம் காண வேண்டும். சிந்துவெளியில் வாழ்ந்த தமிழர்களின் நகரங்களை அழித்தொழித்த ஆரியர்கள், அடுத்ததாக கங்கைச் சமவெளிக்கு வந்தார்கள். அங்கே இருந்த நகரம் துவரை என்பதாகும். அதாவது, இன்றும் துவாரகா எனப்படும் நகரமே அக்கால துவரை. துவரையின் மன்னன் கண்ணன். கண்ணனைப் பற்றிய குறிப்பை, ஆரிய வேதங்களின் மூலங்களில் ஒன்றான பாகவதம் பதிவு செய்துள்ளது. பாகவதம், கண்ணனை ‘தாச யாதவன்’ என்கிறது. சிந்துவெளி மக்களையே ஆரியர் தாசர் என்றனர். தாசர் என்றால், வள்ளல் என்று பொருள். பின்னாளில் தாசர் என்றால், அடிமை என ஆரியரால் பொருள் மாற்றப்பட்டது என்ற கருத்தை ஆய்வாளர் கோசாம்பி முன் வைத்துள்ளார். (சிந்து முதல் குமரி வரை - குருவிக்கரம்பை வேலு) ஆக, தாச இனத்தைச் சேர்ந்தவனே கண்ணன். இந்தக் கண்ணன் ஆண்ட நகரம் துவரை!
கண்ணன், தமிழ் இனத்தைச் சேர்ந்த மன்னன் என்பது இக்கருத்தால் உறுதிப்படுகிறது. கண்ணன் மற்றும் அவனது மக்களின் நிறம் கருப்பு என்பதை பாகவதம், ரிக் வேதம் ஆகியன மிகத் தெளிவாகப் பதிவு செய்துள்ளன. கண்ணனது படைகளுடன் ஆரிய இந்திரன் படைகள் போரிட்டுத் தோற்றதாக பாகவதம் கூறுகிறது. போரில் ஆரியர் வென்றதாகவும் கண்ணன் படை தோற்றதாகவும் ரிக் வேதம் கூறுகிறது.
’கண்ணன் கருப்பு நிறத்தவன்; தாச இனத்தவன். அவனுக்கும் ஆரியருக்கும் போர் நடந்தது; ஆரியர் தலைவன் இந்திரன்’ ஆகிய தகவல்களை ஆரியரின் வேதங்களே ஏற்றுக் கொள்கின்றன. ஆகவே, கண்ணன் ஆரியன் அல்லன் என்பது மிகத் தெளிவானது. மேலும், அவன் தமிழன் என்பதற்கான புறச் சான்றுகளும் உள்ளன.
அகத்தியர், அக்கால அறிவாளர்களில் தலைமைத்துவம் வாய்ந்தவர். தமிழரின் பேரரசியல் நடவடிக்கைகளில் அவருக்கு முக்கியப் பங்குண்டு. ஆனால், அகத்தியரை ஆரிய முனிவர் என்று, ஆரிய வேதங்கள் சொந்தம் கொண்டாடத் தொடங்கின. அவை, அகஸ்தியர் என்று அவரை அழைத்தன. ஆய்வறிஞர் டி.டி. கோசாம்பி, அகத்தியரை சிந்துவெளி யோடு தொடர்புடைய வராக இருக்கலாம் என்று முடிவு செய்துள்ளார். (பண்டைய இந்தியா - அதன் பண்பாடும் நாகரிகமும் பற்றிய வரலாறு).
அகத்தியரோடு தொடர் புடைய ’தட’ குறித்து கோசாம்பியும் விளக்கியுள்ளார். தட என்பது மண்பாண்டத்தைக் குறிக்கும் எனக் கண்டோம். மண்பாண்டம் என்பது, பொருண் மையான சொல். நடைமுறையில் - அகத்தியரைக் குறிக்கையில், இது கும்பம் ஆகும். அதாவது, அகத்தியரின் சின்னம் கும்பம். கும்பம் என்பது கருப்பையின் குறியீடு என்கிறார் கோசாம்பி. பண்டைய பண்பாடு களை ஆய்பவர்களுக்கு குறியீட்டு மொழி விளங்க வேண்டும். இது அடிப்படை யானதும் இன்றி யமையாததும் ஆகும். ஏனெனில், அக்கால மக்கள் தமது பண்பாட்டு நடவடிக்கைகளை உரைநடையாக எழுதவில்லை. புனைவு களாகத்தான் பதிவு செய்தனர். இன்று உள்ளது போல, மொழியின் எழுத்துரு வளர்ச்சியும் அக்காலத்தில் இல்லை. ஆகவே, குறிப்பிட்ட கருத்தை அவர்கள் ஏதேனும் குறியீடாக வரைந்து வைத்தனர். சான்றாக, தாமரை இதழ்கள், பிளந்த மாதுளைப் பழங்கள் ஆகியவை, பெண்ணின் பிறப்பு உருப்பைக் குறிக்கும் குறியீடுகள். இது போலவே, கும்பம் என்பது கருப்பையின் குறியீடு.
அகத்தியரின் குறியீடு கும்பம் என்பதால், அவரது பிறப்பு ஏதோ ஒரு தாய் தெய்வ வழிபாட்டுச் சமூகத்துடன் தொடர்புடையது என்ற கருத்தைக் கோசாம்பி முன்வைக்கிறார். சிந்துவெளித் தமிழர் தாய் தெய்வ வழிபாட்டைக் கொண்டிருந்தனர். ஆரியர், இதைக் கடுமையாக எதிர்த்தனர். ஆகவே, அகத்தியர் சிந்துவெளியோடு நெருங்கிய உறவு கொண்ட தமிழரே, என்பதை உறுதிபடக் கூறலாம்.
மீண்டும் கண்ணனிடம் வருவோம். நச்சினார்க்கினியார் குறிப்பில் வரும் வேளிரை கண்ணன் ஏன் தென்னாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற கேள்வி இயல்பானது. மேலும், அவ்வாறு அனுப்பப்பட்ட வேளிர் குலத்தவர் எருமை நாட்டில் ஆட்சி செய்யும்போது, அங்கும் ஒரு நகரத்துக்கு துவரை என ஏன் பெயரிட வேண்டும் என்ற கேள்வியும் தவிர்க்க இயலாதது.
ஆரியருக்கும் தமிழருக்கும் நடந்த போரின்போது ஏதோ ஒரு தவிர்க்க இயலாத சூழலில், துவரை மன்னன் கண்ணன் அங்கிருந்த வேளிர்குலத்தவரில் 12 பேரைத் தமிழகத்துக்கு அனுப்பிவிட்டான். இப்பணியை மேற்கொள்ள அவன் அகத்திய முனிவரது உதவியை நாடியுள்ளான். அவ்வாறு தமிழகம் வந்த 12 வேளிர் குலத்தவரும் காடு அழித்து துவரை நகரை உருவாக்கி ஆட்சிசெய்தனர். அந்தப் பரம்பரையில் 49 ஆம் வாரிசாக வந்தவனே இருங்கோவேள். அவனிடமே கபிலர் பாரி மகளிரை அழைத்துச் சென்றார். அவனைப் பற்றிப் புகழ்ந்து கூறும்போது, அவனது குலப் பெருமையாக, ’நீயே வடபால் முனிவன் தடவினுள் தோன்றி’ என்றார்.
இதுவே விடையாக இருக்க முடியும்.
இந்தக் கூற்றை வலுப்படுத்த மேலும் ஒரு சான்று உள்ளது. கபிலரே அந்தச் சான்றையும் விட்டுச் சென் றுள்ளார்.
அழிந்த நகரங்கள்
இருங்கோவேள், பாரி மகளிரை ஏற்க இயலாதென மறுத்துவிட்டான். இதனால் கோபம் கொண்ட கபிலர் அவனை நோக்கிப் பின்வருமாறு பாடினார்;
‘உன் முன்னோர் வாழ்ந்த சிற்றரையம் பேரரையம் ஆகிய இரு நகரங்கள் அழிந்துபோயின. அந்த நகரங்களில் பொன்னும் பொருளும் குவிந்து கிடந்தன. ஆயினும் அவற்றின் அழிவைத் தடுக்க முடியாமல் போனது. காரணம் என்ன தெரியுமா? கழாத்தலையார் என்ற புலவர் ஒருவரை உன் முன்னோர் அவமதித்தனர். அதன் விளைவுதான் இந்த நகரங்களின் அழிவு’ என்கிறார் கபிலர்.
(புறநானூற்றில் சில பாடல்களை இயற்றிய கழாத்தலையார் வேறு; கபிலர் குறிப்பிடும் கழாத்தலையார் வேறு)
இருங்கோவேளின் முன் னோர் வடக்கே வாழ்ந்தவர்கள். அவர்களது இரு நகரங்கள் அழிந்தன. இதைக் கபிலர் ‘நீடுநிலை அரையத்துக் கேடு’ என்கிறார். அரையம் என்றால், பெரும் நகரம் என்று பொருள். அரையம் என்பதன் திரிந்த வடிவமே அரப்பா என்ற கருத்து ஆய்வுலகில் நீண்ட காலமாக உள்ளது. முனைவர் ஐராவதம் மகாதேவன் இக்கருத்தையும் கணக்கில் கொள்ளலாம் என்கிறார்.
மேலும், கபிலர் பாடலில் உள்ள நகரங்கள் வடக்கே இருந்தவைதான் என்ற கருத்தில் நிற்கின்றன. ஆகவே, வேளிர் குலத்தவரின் முன்னோர் சிந்துவெளியில் அரசாண்டவர்கள் என்பதும், அவர்களது நகரங்கள் அழிக்கப்பட்டன என்பதும் தெளிவாகிறது.
வேளிர் என்பது, வேளாளர் என்பதன் முந்தைய சொல். வேளிர் குலத்தவர், வேளாண் குடியினர் ஆவர். வேளாளர் / வேளிர் என்ற சொல், எந்தச் சாதியையும் குறிக்கவில்லை; அக்காலத்தில் சாதி அமைப்பும் நிலவவில்லை.
சிந்துவெளியின் முக்கியத் தொழில் வேளாண்மையே ஆகும். சிந்து ஆற்றின் குறுக்கே சிந்துத் தமிழர் அணைகள் கட்டி வேளாண்மை செய்தனர். அந்த நாகரிகம் ஆரியரால் அழிக்கப்பட்ட போது, அங்கிருந்து தப்பிய வேளிர் குலத்தவர், துவரையை ஆண்ட கண்ணனிடம் வந்திருக்க வேண்டும். கண்ணன், கால்நடைச் சமூகத் தலைவன். பண்டைய ஆரியப் பாடல்கள் கண்ணனை, ‘தாச யாதவன்’ என்கின்றன.
கண்ணன், வேளிருக்கு உதவி செய்து அகத்தியருடன் அவர்களைத் தமிழகத்துக்கு அனுப்பியிருக்க வேண்டும். தமிழகம் வந்த வேளிர் குலத்தவர், எருமை நாட்டைத் தேர்ந்தெடுத்து, அங்கிருந்த காட்டை அழித்து, வேளாண் தொழிலில் ஈடுபட்டு, அரசு அமைத்திருக்க வேண்டும். கண்ணன் ஆண்ட துவரை நகரிலிருந்து வந்ததால், பன்னிரு வேளிரும் தமது புதிய நகரத்துக்கும் ‘துவரை’ என்றே பெயரிட்டிருக்க வேண்டும்.
இந்தக் கருத்துக்களையே கபிலர் பாடல்களும் பிற அறிஞர் ஆய்வுகளும் உணர்த்துகின்றன.
தமிழின் மிகத் தொன்மை வாய்ந்த அறிவாளரான அகத்தியர் இயற்றிய நூல் ‘அகத்தியம்’ என்பதாகும்.
தொல்காப்பியத்துக்கும் முந்தையதான அந்நூல் அழிந்து விட்டது. சித்தர் மருத்துவ அறிவியலின் தந்தை அகத்தியரே ஆவார். எருமை நாட்டில் வேளிரை அரசாளச் செய்த அகத்தியர், வேளாண் விளை நிலங்களை உருவாக்க காவிரி ஆற்றிலிருந்து கிளைகளை வெட்டும் திட்டத்தில் பங்காற்றியிருக்க வேண்டும். ’அகத்தியர்தான் காவிரி நீரை உருவாக்கினார்’ என்ற கதை நீண்ட காலமாக நிலவுகிறது. இக்கதை புராணங்களின் வடிவில் கூறப்படுவதாலேயே புறக்கணித்து விடக் கூடாது.
பொதுவாகவே, புராணங் களின் கற்பனைகளுக்கு இடையே வரலாற்று உண்மைகள் மறைந்தும் திரிந்தும் இருக்கும். ரிக் வேதத்தின் மந்திரங்களின் வழியேதான், சிந்துவெளித் தமிழரின் ஆரிய எதிர்ப்புப் போரை அறிந்து கொள்ள முடிகிறது. இலியட், ஒடிசி ஆகிய கிரேக்க இதிகாசங்களின் கற்பனைக் கதைகளின் ஊடாகவே கிரேக்க வரலாறு எழுதப்பட்டது.
சிந்துவெளிக்கும் தமிழகத் துக்குமான உறவில் இந்தக் குறிப்புகள் பல புதிய ஆய்வுகளை நோக்கி அழைத்துச் செல்லப் போகின்றன என்பதை உணர முடிகிறது.
சிந்துவெளிப் பண் பாட்டின் உன்னதமான கூறுகளை, மடை மாற்றி இந்துப் பண்பாட்டுக்குள் அடைக்கும் முயற்சிகள் நீண்ட காலமாகவே நடக்கின்றன.
உண்மையில், இந்துத்துவம் எனும் தத்துவத்தின் ஆரிய மூலத்தை எதிர்த்தவர்களே சிந்துவெளித் தமிழர். இன்றும் இந்துத்துவத்தைத் தத்து வார்த் தமாகவும் நடைமுறையிலும் எதிர்க்கும் இனமாக தமிழ் இனமே உள்ளது. இந்த முரண்பாட்டை, ஆரியமயப்படுத்தவே ஆரியம் தொடர்ந்து முயற்சிக்கிறது. அகத்தி யரை, ஆரிய முனிவர் ஆக்கியது போல, சிந்து வெளியையே, இந்துப் பண்பாட்டின் சின்னமாக மாற்றத் துடிக்கிறது ஆரியம்.
முனைவர் ஐராவதம் மகாதேவன், தமது ஆய்வின் முன்னுரையில், சிந்துவெளியில் இருந்த நீச்சல் குளத்தை, ‘இன்றைய இந்துமதக் கோயில் குளங்களின் முன்னோடி வடிவம்’ என்கிறார். சிறப்பான ஆய்வுகளை மேற் கொள்ளும் ஆய்வாளரே, இவ் வாறான பிழையான/ உள்நோக்க முள்ள முடிவுகளை முன் வைப்பதைக் கவனிக்க வேண்டும்.
தமிழிய ஆய்வுலகம் இது போன்ற சதிகளை முறியடித்து வெற்றிகாண வேண்டும். தமிழ் இன உணர்வாளர்கள் தமிழிய ஆய்வுலகை ஆதரிக்க வேண்டும்.