Yes banl 350எஸ் பேங்க் (”எஸ் வங்கி”) 2004-ம் ஆண்டு, ராணா கபூர் மற்றும் அவரது உறவினர்களால் தொடங்கப்பட்ட ஒரு தனியார் வங்கியாகும். மிகக்குறுகிய காலத்தில் அதாவது 16 ஆண்டுகளில், நாட்டிலேயே ஐந்தாவது தனியார் வங்கியாக அது வளர்ச்சியடைந்தது. நிதியாண்டு 2018-19-இல் அது ரூ.25491 கோடி வருமானம் ஈட்டியது. ஆனால் அதன் இழப்போ ரூ.1506 கோடியாக இருந்தது.

மார்ச் 5, 2020 அன்று இந்திய ரிசர்வ் வங்கியானது, எஸ் வங்கியின் நிர்வாகத்தைத் தன்வசப்படுத்திக் கொண்டு, அந்த வங்கியின் இயக்கத்தை 30 நாட்களுக்கு முடக்கி வைத்தது.

கடந்த சில ஆண்டுகளாக எஸ் வங்கியின் வாராகடன் நிலை மிகவும் மோசமடைந்து வந்திருக்க வேண்டும். இதனால் அந்த வங்கியின் செயல்படாத கடன் சொத்துகள் வளர்ந்து கொண்டே போனதால், அவ்வங்கி இழப்பு நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்த இழப்புகளை ஈடு செய்ய ஏதுவாக நிதி திரட்டவும் முடியாமல் திணறியது. மேலும் அவ்வங்கியின் வைப்பு நிதியாளர்களின் வட்டியும் முதலும் திருப்பித் தராமல் தத்தளித்தது. இந்தச் சூழ்நிலையில்தான் அதாவது வெள்ளம் தலைக்கு மேல் போன நிலையில் மத்திய அரசு வங்கியை முடக்கியது, வேறு வழியில்லாமல்.

இதனைத் தொடர்ந்து மார்ச் 7-ஆம் தேதி, முன்னாள் நிதி அமைச்சர் திரு.ப.சிதம்பரம், பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து எஸ் வங்கியின் நிலையை முன் வைத்தார். மார்ச் 6,அதாவது எஸ் வங்கியை முடக்கிய மறுநாள் அன்று, மும்பைப் பங்கு சந்தை 884 குறியீடுகள் விழுந்தது என்றும், அதே தினம் டாலருக்கு நிகராக ரூ.58 காசுகள் (-0.74%) விழுந்தது என்றும், எஸ் வங்கியின் பங்குகளின் விலை ரூ.38.60திலிருந்து ரூ.16.15க்கு விழுந்து ஒன்றிற்கும் உதவாத பங்காக ஆனது என்றும் எடுத்துரைத்தார்.

இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது எஸ் வங்கியால் கொடுக்கப்பட்டு வந்த கடன் நிலுவையின் அளவு கடந்த 5 நிதி ஆண்டுகளில் அபார வளர்ச்சி அடைந்ததைச் சுட்டிக் காட்டினார்.

கடன் நிலுவை மார்ச் 2009-ல் ரூ.55,633 கோடியிலிருந்து மார்ச் 19-ல் ரூ.2,41,499 கோடிக்கு வளர்ந்தது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 35 சதவீதம் வளர்ச்சியடைந்து இருக்கிறது. இதே காலக்கட்டத்தில் இந்திய வங்கித்துறையின் மொத்தக் கடன் நிலுவை வெறும் 9.6 சதவீதம் வளர்ச்சியடைந்தது. குறிப்பாக 2016-17 மற்றும் 2017-18 ஆம் ஆண்டுகளில் அதாவது பண மதிப்பீட்டிழப்பிற்கு பிறகு இரண்டு ஆண்டுகளில் இரட்டிப்பு ஆகியுள்ளது.

இந்த விவரங்களை முன்வைத்த திரு சிதம்பரம் சரமாரியான கேள்விகளை எழுப்பினார். 2014க்குப் பிறகு யாருடைய பரிந்துரையில் புதுக்கடன்கள் வழங்கப்பட்டன. மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் எஸ் வங்கியின் கடன் வழங்கும் படலம் தெரிந்திருக்கவில்லையா? இது என்ன வங்கியின் இயக்கமா அல்லது கொள்ளையடித்தலா? ரிசர்வ் வங்கியிலும் மத்திய அரசிலும் யாருமே எஸ் வங்கியின் நிதிநிலை அறிக்கைகளைப் படிக்கவில்லையா? எஸ் வங்கியின் 2019 ஜனவரியில் புது நிர்வாகத் தலைவரை நியிமித்த பிறகு எந்த மாற்றமும் ஏன் ஏற்படவில்லை? பிறகு 2019 மே மாத்தில் முன்னாள் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநரை ஒரு இயக்குநராக நியமித்த பிறகு எந்த மாற்றமும் நடைபெறாதது ஏன்? ஜனவரி - மார்ச் 2019-ல் பெரும் இழப்பு ஏற்பட்டபோது எந்தப் பதற்றமும் ஏற்படவில்லையா? மேலும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கீழ்க்காணும் புள்ளி விவரங்களை அவர் முன் வைத்தார்.

  1. டிசம்பர் 2019 வரை வங்கித்துறையின் மொத்த பாதிக்கப்பட்ட கடன் நிலுவைத் தொகை ரூ.16,88,600 கோடியாக இருந்தது. இது மொத்த கடன் நிலுவையில் 15.74% ஆகும்.
  2. நிதி ஆண்டு 2014-லிருந்து மொத்தம் ரூ.7,78,000 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது மொத்த நிலுவைத் தொகையில் 73 சதவீதம் ஆகும். 2018-19 ஆம் ஆண்டு மட்டும் ரூ.1.83 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
  3. வங்கித்துறையில் டிசம்பர் 2019 வரை மொத்த வாராக்கடன் ரூ.9,10,800 கோடியாக இருந்தது.
  4. இப்போது முடக்கி வைக்கப்பட்டுள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வாராக்கடன் தொகையைச் சேர்த்தால், மொத்த வாராக்கடன் தொகை மேலும் அதிகரித்திருக்கக் கூடும், இதன் விவரம் மார்ச் 31, 2020க்குப் பிறகு வெளிவரும்.
  5. மத்திய அரசின முத்ரா திட்டத்தில் ரூ.2 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தில் தற்போது ரூ.12000 கோடி அளவிற்குச் செயல்படாத கடன் நிலுவை உள்ளது.
  6. வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் மோசடியில் சிக்குண்ட தொகை 2013-14-ல் ரூ.10,171 கோடியிலிருந்து ரூ.1,43,068 கோடிக்கு 2018-19ல் உயர்ந்துள்ளது.

திரு.சிதம்பரம் அவர்கள் மேலும் கூறுகையில் எஸ் வங்கியின் பங்குகளை, இந்திய ஸ்டேட் வங்கி ரூ.2450 கோடிக்கு வாங்குவதைக் குறை கூறினார். குறிப்பாக எஸ் வங்கியின் மூலமதிப்பு இழப்பு நிலையில் இருக்கும்போது அவ்வங்கியின் மொத்தக் கடன் சொத்தை ரூ.1-க்கு இந்திய ஸ்டேட் வங்கி தன்வயப்படுத்திக் கொண்டு வைப்பு நிதியாளர்களின் நலன்களைப் பேணிப் பாதுகாப்பது மேன்மையாக இருக்கும் என்று கூறினார்.

எஸ் வங்கியின் பெரும்பான்மைக் கடனாளிகள் பா.ஜ.க.விற்கு மிக நெருக்கமானவர்கள் என்பது கவனிக்கத்தக்க ஒன்றாகும். இதற்கிடையில் மோடி அரசு குடியுரிமைச் சட்டம், இந்து முஸ்லீம் பூசல்கள் போன்ற செயல்களில் ஈடுபட்டும் ஊக்குவித்தும் இந்தியப் பொருளாதாரத்தின் உண்மையான நிலையை மக்களிடமிருந்து மறைத்து வைத்து இருக்கிறது. வங்கித் துறையில் தகுந்த சீர்த்திருத்தங்கள் செய்யாமல் இருந்தாலும் எஸ் வங்கியின் நிர்வாகக் குளறுபடிகள் பற்றித் துப்புத் துலங்காமல் இருந்தாலும் நாட்டிற்கு நல்லது இல்லை.

Pin It