“வைதீகபுரியினரின் ஆதிக்கத்திற்கு அடிபணிய வேண்டிய மக்கள் தொகையைப் பெருக்கிக் காட்ட ‘இந்து’ என்னும் இந்தப் பெயரே துணையாயிற்று என்பது வரலாறு” என்று சொல்கிறார் பேராசிரியர் க.அன்பழகனார்.

இங்கே ‘இந்து’ என்ற சொல் கவனம் பெறுகிறது. இந்து என்றால் என்ன? இந்துக்கள் என்பார் யார்? அது குறித்த சரியான விளக்கம் தேவைப்படுகிறது.

 அந்த விளக்கத்தை அறிவார்ந்து, உரிய சான்றுகளுடன் சிந்தனைச் செல்வர் கு.ச. ஆனந்தன் அவர்கள் “ திராவிட இயக்கங்களின் பார்வையில் இந்து சமயம் “ என்ற நூலில் தந்திருக்கிறார்.

ku sa aanandhan book on hindu religion1955 ஆம் ஆண்டு தொகுக்கப்பட்ட “இந்து திருமணச் சட்டம்” - “இந்து வாரிசுரிமைச் சட்டம்” - “ இந்து இளவர் மற்றும் காப்புரிமைச் சட்டம்” - “ இந்து தத்தெடுப்பு மற்றும் வாழ்க்கைப் பணச் சட்டம்” இச்சட்டங்களில் இந்து என்பவர் யார் என்பதற்கு ஒரேவகை, மறைநிலை விளக்கம் தந்திருப்பதாக நூலாசிரியர் கூறுகிறர்.

 இச்சட்டத்தின் வழியாக, சமயத்தால் இந்து என்பவருக்கும், அச்சமயத்தின் பல வடிவங்கள் அல்லது நிலைக்கூறுகளைச் சார்ந்த ஒருவருக்கும், வீரசைவம், லிங்காயத்து, பிரம்ம சமாஜம், பிராத்தனை அல்லது ஆரிய சமாஜம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைச் சார்ந்தவருக்கும் (Section 2 (i) (a) - Hindu Marriage Act, 1955), புத்தம், சமணம், சீக்கிய மதத்தைச் சார்ந்த ஒருவருக்கும், இந்து என்பது பொருந்தும் என்று (Section 2 (i) (b) சொல்கின்ற ஆசிரியர், இஸ்லாமியர், கிறித்தவர், பார்சி, யூதர் என்றிருந்தால் அவருக்கு இச்சட்டம் பொருந்தாது (Section 2 (i) (c) என்று சட்டச் சான்றுகளுடன் விளக்கம் தருகிறார் கு.ச. ஆனந்தன்.

இந்தச் சான்றுகளில் எங்கும் இந்து என்பதற்கு நேரடியான விளக்கம் சொல்லப்படவில்லை.

“இந்து சமயம் என்றால் என்ன? அதனை நிறுவியவர் யார்? அச்சமயத்திற்கு உரிய நூல்கள் எவை? அதற்கென்று ஒரே சமயத் தலைவர் உண்டா? அவர் கொள்கை எவை? இதுவரை இவ்வினாக்களுக்கு உரிய சரியான விடையை யாரும் தரவில்லை”

“ஏனெனில் இந்து சமயம் என்பது மதமேயல்ல. பல சமயங்களின், சமய உணர்வுகளின், வழிபாட்டு மரபுகளின் கூட்டுத் திரட்சியே | இந்து மதம் எனப் பொருள் புரியாமல் அழைக்கின்றனர் “ எனக் கேள்வியும், பதிலுமாக விளக்கம் தருகிறார் இந்நூலில், நூலாசிரியர் கு.ச. ஆனந்தன்.

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள், “இந்து சமூகம் என்ற வார்த்தைக்கே பொருளில்லை, அது வெறும் கற்பனைதான். இந்து சமூகம் என்பது, உண்மையில் பல சாதிகள் சேர்ந்த ஒரு கதம்பமே ஆகும்” என்று சொல்லியிருப்பது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

சரி, அப்படியானால் ‘இந்து’ ‘இந்து மதம்’ என்பது எப்படித் தோன்றியது? சரியாகச் சொன்னால் இந்திய ஒன்றியத்தின் எந்த ஒரு மொழியில் இருந்தும் இப்பெயர் தோன்றவில்லை. வடக்கே சிந்து நதியை அடிப்படையாகக் கொண்டு இப்பெயர் இஸ்லாமியப் பெயர்ச்சொல்லாக உருவான பெயரே, இந்து என்ற பெயர்.

“வெள்ளைக்காரன் நமக்கு இந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ பிழைத்தோம். அவன் வைத்த பெயர் (இந்து) நம்மைக் காப்பாற்றியது “ என்று காஞ்சி சங்கராச்சாரியார் அவரின் ‘தெய்வத்தின் குரல்’ நூலில் சொல்லியிருப்பது இங்கு கவனிக்கத்தக்கது.

“ வருணாசிரமப் பாதுகாப்புச் சங்கம்” “சனாதன தர்ம சங்கம்” “சனாதனச் சங்கம்” போன்ற இந்து சமய சனாதனச் சங்கங்கள் 1900 - 1920 களில் தமிழ்நாட்டில் பீடு நடை போட்டுச் செயல் பட்டதாகப் பதிவு செய்யும் நூலாசிரியர், இந்து சமயத்தின் சாதிய, வர்ணாசிரமத்திற்கு எதிராகச் “சென்னை மாகாணத் திராவிடர் சங்கம்”- “தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்” என திராவிட இயக்கங்கள் குரல் கொடுக்கத் தொடங்கின என்பதையும் தெளிவாகப் பதிவு செய்துள்ளார்.

“இந்து என்பது சமுதாயப் பெயரா, இனப் பெயரா, மதப் பெயரா, என்பதற்கு யாதொரு விளக்கமும் இல்லை. இந்து என்றால் இந்தியன் என்ற வார்த்தையின் சுருக்கச் சொல் என்பதல்லாமல் அதற்கு வேறு கருத்து எதுவும் இருக்க இடமில்லை. இந்து என்ற சொல்லுக்கு ஆராய்ச்சியாளர்கள் பல பொருள் சொல்கிறார்களே தவிர, அதற்கு மதம் என்ற பொருள் இல்லை...... இந்துக்கள் என்று அழைக்கப்படுகின்ற திராவிட மக்கள், இந்நாட்டின் நலன் கருதியும், பெரும்பாலான மக்களுக்குப் பிறவியின் காரணமாகவே சுமத்தப்பட்ட இழிவு ஒழிக்கப்பட வேண்டும் என்பது கருதியும், முதலாவதாகச் செய்ய வேண்டிய வேலை இந்து மதம் என்ற புரட்டை விளக்கி, மக்களுக்குத் தெளிவை ஏற்படுத்தி அந்தச் சிறையில் இருந்து வெளியேறும்படிச் செய்வதே ஆகும்” என்று அய்யா தந்தை பெரியாரின் ஆவேசத்தைச் சொல்லி, இந்துத்துவத்தின் மீது திராவிட இயக்கங்களின் பார்வையைத் தெளிவுபடுத்துகிறது இந்நூல்.

“திராவிட இயக்கங்களின் பார்வையில் இந்து மதம் என்ற ஆய்வு இனித் தேவையில்லை” எனச் சொல்லி “திராவிட இயக்கங்களின் செயல்பாட்டில் இந்து மதத்தின் நிலை” என்ற சீராய்வுதான் இனி வேண்டும் என்று இந்நூலில் கு.ச. ஆனந்தன் சொல்வதில் நுட்பமான பொருள் பொதிந்துள்ளது என்பதைப் புறம் தள்ளி விட முடியாது!

நூல்: திராவிட இயக்கங்களின் பார்வையில் இந்து சமயம்
ஆசிரியர்: கு.ச. ஆனந்தன்
வெளியீடு: தங்கம் பதிப்பகம்
விலை: ரூ.50
தொடர்புக்கு: 9578004698

- எழில்.இளங்கோவன்

Pin It