ரஜினிகாந்தின் நேர்காணலில்
-> கலெக்டர் அலுவலகம், ஸ்டெர்லைட் குடியிருப்புகளைத் தாக்கியதில் விஷக்கிருமிகள் ஊடுருவியுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மக்கள் கிடையாது, சமூக விரோதிகள், சில தீய சக்திகள்தான். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளைத் தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
-> மக்கள் எதற்கு எடுத்தாலும் போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும்.
ரஜினி: தூத்துக்குடிப் போராட்டத்திலும் சமூக விரோதிகள் புகுந்து கெடுத்தார்கள். அங்கு போராட்டம் நடத்தியவர்கள் மீனவர்கள் அப்பாவி பொதுமக்கள். சமூக விரோதிகள் தான் அதில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டார்கள். போலிசாரைத் தாக்கியதும், கலெட்டர் அலுவலகத்தை தாக்கியதும் அவர்கள்தான்.
தீ வைத்ததும் அவர்கள் தான்.
நிருபர்: இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?
ரஜினி: எப்படி தெரியும் என நீங்கள் கேட்க வேண்டாம் எல்லாம் எனக்குத் தெரியும்.
விஷக்கிருமி என்ற சொல் 50 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் பாவலாகப் பேசப்பட்ட ஒரு சொல். 1967 ஆம் ஆண்டு திமுக பதவிக்கு வந்ததும், முன்னாள் முதலமைச்சர் பக்தவத்சலம், “தமிழ்நாட்டில் விஷக்கிருமிகள் பரவி விட்டன” என்றார். அது குறித்த கடுமையான விமர்சனங்கள் பல அன்று வெளிவந்தன.
பிறகு பலரும் அந்தச் சொல்லை அல்லது அப்பொருள்படும் சொல்லை அடிக்கடி கையாண்டனர். அண்மையில் சல்லிக்கட்டுப் போராட்டத்திலும், இப்போது தூத்துக்குடியிலும் அந்தச் சொல் பயன்படுத்தப் பட்டது. இப்போது மீண்டும் தூத்துக்குடிப் போராட்டத்தில் விஷமிகள் பரவி விட்டனர் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக முதலமைச்சர் எடப்பாடி ஆகியோர் கூறினர். இப்போது அதே சொல்லையும், கருத்தையும் ஊடக நேர்காணலில் ரஜினி பயன்படுத்தியுள்ளார்,
கொதித்துக் கொந்தளித்து எழுந்த மக்களின் போராட்டத்தை விஷமிகள் நடத்திய போராட்டம் என்று சொல்வது மக்களைக் கொச்சைப்படுத்துவதாகாதா? 99 நாள்கள் அமைதியாக மக்கள் நடத்திய போராட்டத்தை அரசு கண்டு கொள்ளவே இல்லை என்கிறபோது, மக்களிடம் ஒரு கோபம் குடிகொள்ளாதா? அந்தக் கோபம் சற்றுச் சூடேறி வன்முறையில் போய் முடிந்திருக்கிறது. அந்த வன்முறையைப் பற்றி மட்டும் கவலைப்படும் புதிய தேசபக்தர் ரஜினி, அந்த வன்முறையைத் தூண்டிய வன்முறை பற்றி அறிவாரா? மக்களின் உடல்நலம், உயிர்ப்பாதுகாப்பு என எது குறித்தும் கவலை கொள்ளாமல், தனியார் ஆலைக்கு அரசுகள் அளித்த ஆதரவுக்கு என்ன பெயர்? அது வன்முறையில்லையா?
தன் திரைப்படங்களில் ‘வேங்கை மகன் ஒத்தையில நின்னு’ எத்தனை வன்முறைகளை அரங்கேற்றியிருக்கிறார்! அதுதான் வீரம் என்று எத்தனை படங்களில் சொல்லாமல் சொல்லியிருக்கிறார். அவையெல்லாம் வன்முறைக்கான தூண்டுதல்தானே! ஆனால் அவற்றையெல்லாம் நினைப்பில் வைத்தன்று, தங்கள் வாழ்வுக்காக, உயிருக்காகப் போராடிய மக்களிடையே விஷக்கிருமிகளை புகுந்துவிட்டனர் என்பதற்கு என்ன ஆதாரம்? அரசு சொல்வதை அப்படியே திரும்பிச் சொல்வதற்கு ஒருவர் தூத்துக்குடி வரை பயணம் செய்ய வேண்டியதில்லை.எடப்பாடியின் அறிக்கைக்கும், பொன். ராதாகிருஷ்ணன் நேர்காணலுக்கும் கீழே, “அவ்வண்ணமே கோரும்“ என்று எழுதிக் கையெழுத்துப் போட்டிருக்கலாம் ரஜினி!
ஆலையை மீண்டும் திறக்க நீதிமன்றம் சென்றால், இனி அவர்கள் மனுஷங்களே இல்லை என்று கூறும் ரஜினிகாந்த்தான், எதுவாக இருந்தாலும் கோர்ட்டுக்குத்தான் போகணும் என்கிறார். என்ன முரண் இது! விஷமிகள் நடத்திய வன்முறை எதிர்ப்புப் போராட்டம்தானே, அதற்காக நாங்கள் ஏன் எங்கள் ஆலையை மூட வேண்டும் என்று அவர்கள் நீதிமன்றம் சென்று கேட்கமாட்டார்களா? மக்கள் போராட்டத்தை விஷமிகள் நடத்திய போராட்டம் என்று திரித்துச் சொல்வதை விட, ஆலை முதலாளிகளுக்கு வேறு எப்படி உதவ முடியும்?
கூட்டத்தை நோக்கிக் கூட இல்லை, குறிபார்த்துச் சுட்டிருக்கின்றனர் காவல்துறையினர். இனிவரும் காலங்களில் எவரும் போராட்டத்தை முன்னெடுக்கக்கூடாது என்னும் ஆகப் பெரிய மிரட்டல்தானே இது! அதனைக் கண்டித்து விட்டல்லவா காவல்துறையினரைத் தாக்கியவர்களைக் கண்டித்திருக்க வேண்டும்?
ஒரு நபர் ஆணையம் மீது நம்பிக்கையில்லை, உளவுத்துறையின் பிழைதான் இது என்று ஒப்புக்குச் சொல்லிவிட்டு, ஒட்டுமொத்தமாய் மக்கள் போராட்டத்தை விஷமிகளின் வன்முறைப் போராட்டம் என்று சொல்லிவிட்டார் ரஜினிகாந்த்!
ஜெயலலிதாவின் இரும்புக்கரத்தைப் பாராட்டும் இவர் போன்றவர்கள் ஆட்சிக்கு வந்தால், நாட்டில் இரும்புக்கரங்கள் மட்டும்தான் மிஞ்சும். மக்கள் மிஞ்ச மாட்டார்கள்! கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை போதாது என்பது போலல்லவா உள்ளது அவருடைய நேர்காணல்!
பூனைக்குட்டி வெளியில் வந்தது ஒருவிதத்தில் நல்லதுதான். ரஜினியின் அரசியல் பயணம் தொடங்குவதற்கு முன்பே தோல்வியடைந்துள்ளது!