திருவாரூர் மாவட்டம் கீரனூருக்கு அருகில் உள்ள பாலூர் என்ற கிராமத்தில் கிருஷ்ணசாமி - சின்னம்மாள் தம்பதியின் மகளாக, இசை வேளாளர் குடும்பத்தில் 1883-ஆம் ஆண்டு பிறந்தார் இராமாமிர்தம் அம்மையார். இவர் வளர்ந்தது மூவலூர் கிராமம் என்பதால் 'மூவலூர் இராமாமிர்தம்' என்று அழைக்கப்படுகிறார்.

தன்திருமண வயதில் தனக்கு இசையும், நடனமும் கற்றுத் தந்த சுயம்புப்பிள்ளையை இராமாமிர்தம் மணந்தார். இராமாமிர்தம் அம்மையாரின் திருமணத்திற்கு ஊரில் கடுமையான எதிர்ப்பு உருவானது. அவர்கள் அதை எதிர்த்து போராடினார்கள்.

1917-ம் ஆண்டு முதல் மயிலாடுதுறை பகுதியில் இசைவேளாளர் குடும்பத்துப் பெண்களை இணைத்து 'நாகபாசத்தார் சங்கம்' என்கிற அமைப்பை ஆரம்பித்தார். இசைவேளாளர் குடியில் திருமணம் செய்ய விரும்பும் பெண்களுக்குத் திருமணத்தை நடத்திவைப்பது இந்த அமைப்பின் நோக்கம் . நாகபாசத்தார் சங்கம் சார்பில் இரண்டு மாநாடுகளை மயிலாடுதுறையில் கூட்டினார். இந்த மாநாடுகளில் திரு.வி. கல்யாணசுந்தரனார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். அவர் தன்னுடைய நவசக்தி இதழில் அம்மையார் பற்றி எழுதினார். அது காந்தியின் கண்களுக்குப் படவே காந்தி இராமாமிர்தம் அம்மையாரை காங்கிரஸில் இணையும்படி அழைத்தார். அப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்த திருவிக, வரதராஜீலு நாயுடு, பெரியார் ஈ.வெ. ராமசாமி போன்றவர்கள் தேவதாசி முறை ஒழிப்புக்காகக் குரல் கொடுத்து வந்தனர்.

1925-ல் பெரியார் காங்கிரசில் இருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கிய போது இராமாமிர்தம் அம்மையாரும் வெளியேறி, பெரியார் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். ஈ.வெ.ரா. நடத்திய 'குடியரசு’ இதழில் இராமாமிர்தம் அம்மையாரின் கட்டுரைகள் வெளிவந்தன. மூவலூர் இராமாமிர்தம், திராவிட இயக்கத்தின் முதன்மைப் பெண் சிந்தனையாளராகத் திகழ்ந்தவர். அந்தக் காலத்தில் பெண்கள் அரசியல் மற்றும் சமூக விஷயங்களில் பங்கேற்பது மிகவும் அபூர்வமான ஒன்று. ஆனால் மூவலூர் அம்மையார் தனது பேச்சுதிறன் மற்றும் எழுத்துத்திறன் மூலம் திராவிட இயக்கத்தின் முக்கியமான உரையாளர் மற்றும் செயல்வீரராக மாறினார்.

பெண்கள் திருமண வசதி, கல்வி, மற்றும் சமத்துவம் குறித்து அவர் எழுதிய கட்டுரைகள், நாடகங்கள், உரைகள் அனைத்தும் திராவிட இயக்கத்தின் கோட்பாடுகளுடன் இணைந்து செயல்பட்டன.

1930 இல் சென்னை மாகாணத்தில் தேவதாசிமுறை ஒழிப்பைச் சட்டமாகக் கொண்டுவர டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி முயன்றபோது அவருக்குத் துணை நின்றார் பெரியார். ஆனால் அப்போது அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. பின்னர் 1947-ல் நிறைவேற்றப்பட்ட சட்டம் வழியாகவே தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது. இராமாமிர்தம் அம்மையார் தன்னுடைய எண்பதாம் வயதில் 27.06.1962 அன்று இவ்வுலக வாழ்வை நீத்தார்.

 அவரின் நினைவாக அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் தமிழ்நாடு அரசின் ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டத்திற்கு 'மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் ஏழைப் பெண்கள் திருமண உதவித்திட்டம்' என்று பெயர் சூட்டினார்.

இன்று, தமிழக அரசு உயர் கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு, உயர்கல்வி பயில மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் என்ற பெயரில் மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கி வருகிறது தமிழ்நாடு அரசு.

- தா.ஜெயபாரதி, திராவிடப் பள்ளி மாணவர்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.