தொடர்புடைய படைப்புகள்

tm nairகேள்வி : ஐயா, அண்மையில் அமித்ஷா மதுரைக்கு வந்தாரே, அது குறித்துத் தங்கள் கருத்து..?

தலைவர் டி.எம் நாயர் : சில வடநாட்டுத் தலைவர்கள் தேசியம் என்று சொல்லிக் கொண்டு, இங்கு வந்து இங்குள்ளவர்களுக்கு அறிவுரைகளைக் கூறத் தலைப் பட்டிருக்கின்றனர்

இங்கு நிலவும் வர்ணாசிரம தர்மம் காரணமாக இந்துக்களுக்குள்ளே பலப்பல வேறுபாடுகள் ஏற்பட்டுப் பலர் சூத்திரர் என்றும், வேசியின் மக்கள் என்றும், படிக்கக் கூடாதவர்கள் என்றும், தீண்டத் தகாதவர்கள் என்றும், நெருங்காதவர்கள் என்றும், பார்க்காதவர்கள் என்றும் இழிவுபடுத்தி வைக்கப்பட்டு உள்ளார்கள்.

இப்படிப்பட்டவர்கள் கோயிலுக்குப் பக்கத்தில் கூட வரத்தகாதவர்கள் என்றும், அவர்கள் எல்லோரும் ஊருக்கு வெளியேதான் வாழவேண்டும் என்றும், அவர்கள் ஓட்டைக் குடிசையில்தான் வாழவேண்டும் என்றும் கொடுமைப் படுத்தப்பட்டு வருகிறார்கள்.

இப்படிப்பட்டவர்களை மேலும் கொடுமைப் படுத்தி, இழிவுபடுத்தவே இந்து தர்மம் பேசிக்கொண்டு சில வட இந்தியத் தலைவர்கள் இங்கு வந்து கொண்டு இருக்கிறார்கள்.

இவர்களின் செயல்கள் இங்குள்ள பார்ப்பனர்களுக்கு மேலும் ஆதிக்க, அதிகார வெறியை ஊட்டவே பெரிதும் பயன்படுவதாக அமையும்.

இவர்கள் எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு இங்கு வருகிறார்கள் என்று தெரியவில்லலை.

(டி.எம்.நாயரின் ஸ்பர்டாங் உரை - 07-10-1917)

கேள்வி : ஐயா, திராவிட இயக்கம், இந்து மதம் இன்றைய பார்வை ?

k s.anandhanஅறிஞர் கு.ச. ஆனந்தன் : தந்தை பெரியாரின் மறைவுக்குப் பிறகு திராவிடர் கழகம் பல கூறுகளாகப் பிரிந்துவிட்டன. என்றாலும் இந்துமதம் பற்றிய பெரியாரின் பார்வைதான் அப்பகுத்தறிவுக் கூறுகளின் தனித்தனிப் பார்வையும் ஆகும்

திராவிட இயக்கங்களின் இக்கட்டான இக்காலகட்டத்தில் இந்துமதத்தின் உயிர்க்கூறான பார்ப்பனியம், தனது உன்னத வளர்ச்சிக் கட்டத்தை நோக்கி மீண்டும் விரைந்து நடைபோடுவதில் வியப்பில்லை. இத்துணைக் காலமாகப் பெற்ற சமுதாய விழிப்புணர்ச்சியும், சாதி ஒழிப்புத் தீவிரமும், இந்துமத எதிர்ப்பும், பழங்கதைகளாகிப் பகற்கனவாகிப் பாழடைந்துவிடுமோ என்ற அச்சம் தமிழகத்தைப் பற்றிக் கொண்டுள்ளது.

இவ்வகையில் இந்துமதம் பற்றிய 'இருவகையான கண்ணோட்டங்கள்' திராவிட இயக்கங்களில் தற்காலிகமாக நிலைபெற்று விட்டன. சாதியமும் இந்துசமயத்தின் உள்ளடக்கம். அத்தகைய இந்துசமயத்தின் அடிப்படை நிலைப்பாடுகளை எதிர்க்காமல் - இழக்காமல்-தகர்க்காமல் - சாதியத்திற்கு எதிர்ப்பான மனப்பக்குவத்தை மக்களிடையே படைக்க முடியாது. புதிய போராட்டக் களத்தைச் செப்பனிடவும் முடியாது.

'திராவிட இயக்கங்களின் பார்வையில் இந்துமதம்' என்ற ஆய்வு இனித் தேவையில்லை. அது முடிவாகிவிட்ட ஒன்று. மாறாக 'திராவிட இயக்கங்களின் செயல்பாட்டில் இந்துமதத்தின் நிலை' என்ற சீராய்வு (Review) தான் இனிவேண்டும். ஏன்? இன்றைய சூழ்நிலையில் 'இந்துமதத்தின் பார்வையில் திராவிட இயக்கங்கள்' என்ற புதிய ஆய்வைப் பார்ப்பனியம் மேற்கொண்டு விட்டது.

இந்துசமயம் பல்வேறு நம்பிக்கைகளின் கூட்டுக் கிடங்கு என்ற பன்மை நிலையை எதிர்த்தது திராவிட இயக்கம் என்ற ஒருமை அமைப்பு. அந்நிலை இன்று மாறி இந்து சமயத்தின் ஒருமை நிலையை, பன்மை நிலைக்கு ஆளாகிய பல திராவிட இயக்கங்கள் ஆய்வு செய்கிற அவலநிலை உருவாகிவிட்டது. இந்துமதம் படைத்துப் பூசை போட்டுப் போற்றி வளர்த்து வரும் சாத்திரக் குப்பைகளை, புராணப் புரட்டுகளை, செல்லரித்துப் போன ஆகமங்களை, நால்வருண அமைப்பு முறையை, சாதியத்தை, இந்துச்சட்டத்தைத் தகர்த்தெறிய பிளவுபட்டத் திராவிட இயக்கங்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

(திராவிட இயக்கங்களின் பார்வையில் இந்துமதம் - சிந்தனைச் செம்மல் கு.ச.ஆனந்தன்)

- எழில்.இளங்கோவன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.