உலகப் புகழ் பெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஒன்றியத்திற்குப் புகழ் சேர்த்து, தங்கம் உள்ளிட்ட பதக்கங்களை வென்றுவந்த வீராங்கனைகளின் கண்ணீர்த் துளிகள் டில்லியில் தெறித்துக் கொண்டிருக்கிறது.

இந்திய மல்யுத்தச் சம்மேளனத்தின் தலைவரும், பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சிங் என்பவர் பாலியல் தொந்தரவு செய்ததாகச் சொல்லி, அவரைக் கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்தப் பதக்கங்கள் வென்ற வீரர்களான பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக், விக்னேஷ் போகட் தலைமையில் டில்லியில் போராடுகிறார்கள்.

பிரிஜ் பூஷன் சிங் பா.ஜ.கவைச் சேர்ந்தவர் என்பதால், மல்யுத்த வீராங்கனைகளின் அழுகுரல் மோடியின் காதுகளில் விழவில்லை. அதனால் பிரிஜ் பூசன் கைது செய்யப்படவில்லை.

 நீதிமன்றத் தலையீட்டால் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தும் கூட அவர் கைது செய்யப் படவில்லை.

பதக்கங்கள் வென்ற போது ‘மகளே, மகளே’ என்று அழைத்த மோடி, புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறப்பு அன்று அந்த வீராங்கனைகள் காவலர்களால் வலுக்கட்டாயமாகக் கைது செய்து இழுத்துச் செல்லும் போது திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.

நாட்டின் அரசியல் கட்சிகள், கிரிக்கெட் உள்ளிட்ட பிற விளையாட்டு வீரர்கள் எனப் பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வருகின்றன. ஆனாலும் பயன் என்ன ?

ஒலிம்பிக் பதக்கங்களை கங்கையில் வீசுவோம் என்று அந்த வீராங்கனைகள் உத்ரகாண்ட், அரித்துவார் கங்கை நதிக்கே சென்றார்கள். இது ஒன்றியத்திற்குத் தலைகுனிவு என்றாலும், மோடி அசையக்கூட இல்லை.

இப்பொழுது களத்தில் இறங்கிய பஞ்சாப் விவசாயிகள் நடத்திய ‘பாப்’ பஞ்சாயத்தின் முடிவுப்படி ஜுன் 5 ஆம் தேதிக்குள் மல்யுத்த வீராங்கனைகளின் கோரிக்கைகள் ஏற்கப்படா விட்டால் டில்லிக்குள் பால் உள்ளிட்ட முக்கிய உணவுப் பொருள்கள் போகா வண்ணம் டில்லி எல்லைகளை முற்றுகையிடப் போவதாக ‘பாரதிய கிசான் யூனியன்’ அறிவித்து இருக்கிறது. சர்வதேச மல்யுத்தச் சங்கமும் விரைந்து முடிவு எடுக்காவிடில், அங்கீகாரத்தை ரத்து செய்வோம் என்று கூறி விட்டது.

இட்லர், முசோலினிகளின் தலைக்கேறிய சர்வாதிகார, பாசிச ஆணவத்தின் வீழ்ச்சியை மோடிக்கு யாராவது எடுத்துச் சொல்லுங்கள்.

இதோ... நீதி கேட்கும் மல்யுத்த வீராங்கனைகளின் அழுகையைப் பாருங்கள்!

Pin It