குரங்கு தன் எதிரில் உள்ள ஒன்றைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமானால் தன் காலை அதற்கு நீட்டி, நீட்டி இழுத்துக் கொண்டுத் தாவும்.

இதைக் குரங்குச் சேட்டை என்பார்கள். இப்பொழுது தமிழகத்திலும் அப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது.

மதுரை திருமங்கலம் ரயில் நிலையம் அருகில் இரண்டு இரயில்கள் ஒரே தண்டவாளத்தில் வந்த காரணத்தினால், ரயில்வே துறை அதிகாரிகள், பணியாளர்கள் அனவரும் இந்தியில்தான் பேசவேண்டும் என்று ரயில்வே துறை அதிகாரி ஆணை பிறப்பித்தார்.

அதாவது இரண்டு ரயில் நிலைய அதிகாரிகளில் ஒருவருக்குத் தமிழும், மற்றவருக்கு இந்தியும் தெரிந்திருந்த காரணத்தினால், நேரவிருந்த விபத்துக்குக் காரணம் தமிழில் பேசியதுதான் என்பது அதிகாரி சொல்லும் காரணம். இதைச் சப்பாணிக் காரணம் என்றுதான் சொல்ல வேண்டும்.

தமிழ்நாட்டில் தமிழ் தெரிந்த அதிகாரிகள்தான் பணியில் இருக்க வேண்டும். அப்போதுதான் தொடர்பு கொள்ளவும், கருத்துப் பரிமாறவும் எந்த ஊறும் இருக்காது.

அதை விட்டுவிட்டு வடநாட்டு இந்திக்காரர்களை பணியில் அமர்த்தி, அவர்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக இங்குள்ள தமிழதிகாரிகள், பணியாளர்கள் அனைவரும் இந்தியில்தான் பேச வேண்டும் என்றும், அவர்களின் தாய் மொழியில் பேசக்கூடாது என்றும் சொல்வது எந்த வகையில் நியாயம்?

தி.மு. கழகத்தலைவர் தளபதி ஸ்டாலின் எடுத்த அவசர நடவடிக்கையால், அதிகாரிகள் பின்வாங்கி விட்டனர். இதைத்தான் குரங்குச் சேட்டை என்று சொல்வார்கள்.

தமிழகத்தில் எப்படியும் இந்தியை நுழைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் விளைந்த மத்திய பாஜகவின் ‘நோட்டமிடும்’ செயல்பாடுகளில் இதுவும் ஒன்று.

முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு, இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை அவர்கள் மீது இந்தி திணிக்கப்பட மாட்டாது என்று உறுதி அளித்திருந்தார்.இன்று அந்த உறுதி மீறப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்சின் பாஜக மத்திய அரசின் மும்மொழித் திட்டம் இல்லை என்று அறிவிக்கும்வரை தமிழக மக்கள் மிக மிக எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.

பேரறிஞர் அண்ணாவின் இருமொழிக் கொள்கை ஒன்றைத்தவிர வேறு எதையும் தமிழ்நாடு ஏற்றுக் கொள்ளாது.

இதை மத்திய மோடி அரசு புரிந்து கோள்ள வேண்டும்.

Pin It