prabhakaran 376விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த போராளிகள் சிலர், ஐரோப்பிய நாடுகளிலிருந்து இரண்டு நாள்களுக்கு முன்னால் என்னிடம் தொலைபேசியில் உரையாடினர்!

தமிழ் ஈழத்திற்காகவும், அந்த மண்ணின் விடுதலைக்காகவும், தொடர்ந்து பல ஆண்டுகள் களத்தில் நின்று, பெரும்படை திரட்டிப் போராடி, உலக வரலாற்றில் ஒரு புதிய சரித்திரத்தைப் படைத்த தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் வீரச் சாவிற்கு வரும் ஆகஸ்ட் 2 அன்று, சுவிட்விசர்லாந்தில் மிகப்பெரும் அளவில் வீரவணக்க நாள் கூட்டம் நடத்த இருப்பதாகவும், அதற்கு உலகத் தமிழர்கள் அனைவரின் ஆதரவும் வேண்டும் என்றும் கூறினார்கள்!

மாவீரர்களுக்கும் மரணம் உண்டு! ஆனால் அது மற்றவர்களின் மரணத்தைப் போன்றதன்று! தன் நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் தன்னலம் துறந்து வாழ்நாள் முழுவதும் போராடி, களத்தில் வீரச் சாவு அடைவது என்பது உலகம் மறக்க முடியாத ஒரு வரலாற்று நிகழ்வு! அத்தகைய மாவீரர்கள் புதைக்கப்படுவதில்லை மண்ணில் - விதைக்கப்படுகிறார்கள்!

அவர்களின் வீர மரணத்தைத் தோல்வி என்று கருதி, தலைவர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்று சொல்லிக் கொண்டே இருப்பது அவருக்கு நாம் செலுத்த வேண்டிய மிகப்பெரும் வீர வணக்கத்திற்குத் தடையாக ஆகிவிடும்! இதனை உணர்ந்தே, போராளிகள் இயக்கத்தில் தலைவருடன் இருந்த மூத்தவர்கள் சிலர், இந்த முடிவை இப்போது எடுத்து இருக்கிறார்கள்!

நவம்பர் 27- மாவீரர்கள் நாள், மே 18 - முள்ளிவாய்க்கால் நினைவு நாள் என்பவைகளைத் தாண்டி, இப்போது ஏன் ஆகஸ்ட் 2 என்று ஒரு வினா எழலாம் !

ஏதோ ஒரு காரணம் கருதியே அவர்கள் இந்த நாளைக் குறித்திருக்கக் கூடும்! எனவே நாள் பற்றிய விவாதங்களுக்கு இடம் தராமல், உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள், தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் அந்த மாபெரும் தலைவனுக்கு அன்று வீரவணக்கம் செலுத்திட வேண்டும் என்பதே நம் விருப்பம்!

- சுப. வீரபாண்டியன்