“தி.மு.க வின் தலைவராகத் தளபதி ஸ்டாலின் அவர்களின் ஓய்வறியாத உழைப்பும், அரசியல் களத்தில் வெற்றிவாகை சூடிட, கூட்டணி வியூகமும், அதனை வகுத்ததோடு, நெறிப்படுத்தியும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகவே செயல்படுத்தி, தமிழ்நாட்டின் மக்கள் மத்தியில் அந்த உரிமைப் போர் முழக்கத்தைத் தணியாத முழக்கமாகவே ஆக்கி, தேர்தல் நேரத்தில் களப்பணியிலும், பிரச்சாரத்திலும் ஒப்பற்ற முறையில் செயலாற்றி, கூட்டணிக் கட்சிகளைத் தக்கபடி ஒருங்கிணைத்ததும் வெற்றிக்கான அடிப்படையாகும், பாராட்டுக்கள்!”.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி வாகை சூடிய தலைவர் ஸ்டாலினுக்கு இப்படியொரு நீண்ட பாராட்டு மடலை அளித்திருப்பது வேறு யாருமல்ல; திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் அவர்கள்தான் (விடுதலை, 24.05.2019.) ”நாங்கள் செல்லும் பாதையைப் பெரியார் திடல்தான் தீர்மானிக்கிறது” என்று தலைவர் ஸ்டாலின் கூறியதை இங்கு நினைவுகூர்வது மிகவும் பொருத்தமானது.
தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது என்று ஓயாமல் கேட்ட வெற்றுக் கூச்சல்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மிகச்சிறந்த முறையில் தோழமைக் கட்சிகளை ஒருங்கிணைத்து, மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசை மத்தியிலிருந்து அகற்ற வேண்டும் என்ற ஒற்றை இலக்கினை முன்வைத்து, ஆளுங்கட்சியின் அதிகார பலம், பணபலம் அனைத்தையும் தாண்டி, இந்தியாவிற்கே முன்மாதிரியான ஒரு மக்கள் தீர்ப்பை சாதித்துக் காட்டியிருக்கிறார் தலைவர் மு. க. ஸ்டாலின்.
அதே நேரம், மற்ற மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வேறாக இருக்கின்றன. போலி தேசபக்தியையும், போதையாய் மதவெறியையும் ஊட்டி, மக்களின் வாக்குகளைப் பெற்றுள்ளது பாரதிய ஜனதா கட்சி. சாதியையும், மதத்தையும் கணக்குப் பார்த்து, பிரிவினைவாத அடிப்படையிலான பிரச்சாரத்தின் மூலம் வாக்கரசியல் செய்துள்ளது பா.ஜ.க. ஆனால் அந்தக் கணித உத்திகள் தமிழ்நாட்டில் பயன் தராது என்பதைத் தமிழக மக்கள் பா.ஜ.க. வுக்கு அழுத்தமாக உணர்த்தியிருக்கிறார்கள். தமிழகம் பெரியார் மண் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது.
மாறாக, வளர்ச்சி என்னும் போலி முகமூடி சூடி ஐந்தாண்டுகள் மக்களை மாயையில் வைத்திருந்தது போதாதென்று, இன்னுமோர் ஐந்தாண்டுகள் நாட்டைச் சூறையாடக் காத்துக் கொண்டிருக்கிறது காவிக்கும்பல். இந்தியத் துணைக்கண்டமெங்கும் தனது ஆக்டோபஸ் கரங்களால் காவி, தனது சித்தாந்தத்தை விதைத்துக் கொண்டிருக்கிறது. விடுதலைக்குப் பின்னர் எழுபதாண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வந்த மதச்சார்பின்மைக்குப் பேராபத்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. Unity என்ற சொல்லுக்கு பா.ஜ.க. தந்துள்ள அர்த்தம் Uniformity என்பது. ஒற்றுமை என்ற பெயரில் நாடு முழுமைக்கும் ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் ஆகியவற்றைக் கொண்டு வந்து இந்தியாவின் பன்மைக் கலாச்சாரத்தை அழிக்கும் ஆர். எஸ்.எஸ். சித்தாந்தத்தை அமல்படுத்தும் பா.ஜ.க. வின் செயலை எப்பாடுபட்டாவது தடுக்க வேண்டும். அத்தகைய வலிமையை இந்தியாவிற்குத் தரும் ஒரே நம்பிக்கை, தி.மு.க. வின் தலைவர் மு.க. ஸ்டாலின் மட்டுமே.
இந்த சூழ்நிலையில், மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுப்பதிலும், மாநிலங்கள் மத்திய அரசின் கைப்பாவையாகப் பாவிக்கப்படுவதைத் தடுப்பதுமான பெரும்பணி மாநிலக் கட்சிகளின் முன்னால் இருக்கிறது. இதற்கான தீர்வு அறிஞர் அண்ணா முன்மொழிந்த மாநில சுயாட்சி முழக்கத்தை உயர்த்திப் பிடிப்பதே. இதற்கான முன்னெடுப்பாக மாநில உரிமைகள் குறித்து உண்மையான அக்கறை கொண்ட மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைத்து, வலுவான தலைமையின்கீழ் அவற்றை ஒன்றுசேர்ப்பதே இதற்கான ஒரே தீர்வாக அமைய முடியும்.
தமிழக மக்கள் மக்களவைக்குத் தேர்ந்தெடுத்திருக்கும் தி.மு.க. கூட்டணியின் 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில உரிமைகளை மீட்டெடுக்கத் தொடர்ந்து தில்லியில் குரல் கொடுக்க வேண்டும். நெருக்கடிநிலைக் காலகட்டத்தின்போது, மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்ட கல்வி உள்ளிட்ட அம்சங்களால் ஏற்பட்டுள்ள பாதிப்பினையும், மாநிலங்களின் உரிமைகளுக்கு அச்சுறுத்தலாக அமையும் இன்ன பிற அம்சங்களையும் நாடாளுமன்றத்தில் விவாதப் பொருளாக்க வேண்டும். இதற்கான ஒத்துழைப்பைப் பிற மாநில உறுப்பினர்களிடமிருந்தும் பெற வேண்டும். இத்தகைய முயற்சிகளைச் சரியான முறையில் ஒருங்கிணைவு செய்து முன்னெடுக்க மாநில சுயாட்சிக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தாலும், அதன் தலைவரான மு. க. ஸ்டாலின் அவர்களாலுமே இயலும்.
இன்றைய தமிழ்ச் சமூகத்தில், தமிழ்த்தேசியம் என்ற பெயரில் உலவும் போலித் தமிழ்த்தேசியவாதிகள், திராவிட இயக்க ஒவ்வாமையையும், எதிர்ப்புணர்ச்சியையும் இளைய தலைமுறையினரிடம் தொடர்ந்து விதைத்து வருகின்றனர். அவதூறுகளை மட்டுமே முதலீடாகக் கொண்டு தவறான வழிகாட்டுதலின் மூலம், திராவிட இயக்க எதிர்ப்புணர்வை வலுவாக்கி, காவிக்குத் துணை செய்வதே இவர்களின் பெருநோக்கமாக இருக்கிறது.
இப்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ள இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில், பிரிவினைவாத சக்திகளை மக்களுக்கு அடையாளம் காட்டுவதும், நாடு முழுவதும் அண்ணல் அம்பேத்கரின், தந்தை பெரியாரின் சித்தாந்தங்களைக் கொண்டு செல்வதுமே இந்தியாவைத் துண்டாடக் காத்திருக்கும் மதவாத பா.ஜ.க.விடமிருந்து நாட்டைக் காப்பாற்றும். அப்பணியை மேற்கொள்வது, நாட்டிலுள்ள முற்போக்கு அமைப்புகளின் முதன்மையான கடமையாகும். நாடு முழுவதும் உள்ள மதச்சார்பற்ற முற்போக்குச் சக்திகளை ஒருங்கிணைப்பதும், அவற்றை ஓரணியாகத் திரட்டி, பா.ஜ.க.வை அதிகாரத்திலிருந்து அகற்றுவதும் தலைவர் மு. க. ஸ்டாலின் முன்பு காத்திருக்கும் பெரும்பணிகளாகும். அப்பணியை அவர் சிரமேற்கொண்டு செவ்வனே செய்து முடிப்பார் என்பதில் தமிழகம் மட்டுமன்று, இந்தியாவும் நம்பிக்கை கொண்டுள்ளது.
(“திராவிடச் சிறகுகள்” அமைப்பு நடத்திய கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்ற கட்டுரை)