தேசிய கீதம் ஜன கண மன என்றும், தேசியப் பாடல் வந்தே மாதரம் என்றும் சொல்கின்றனர். வந்தே மாதரம், தேசியப் பாடல் இல்லை, தேசிய ஒற்றுமையைக் குலைக்கும் பாடல்!

pakkim chandra chatterjee19ஆம் நூற்றாண்டில் வங்கத்தில் வாழ்ந்த பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதி, 1882 ஆம் ஆண்டு வெளிவந்த 'ஆனந்த மடம்' என்னும் நாவலில் அந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. அவர் நடத்தி வந்த 'பங்கதர்ஷன்' என்னும் ஏட்டில் 1871 முதல் அவ்வப்போது அவர் எழுதிவந்த தொடர்தான் பிறகு, நூலாக வெளியாயிற்று.

அவர் வாழ்ந்த காலத்திற்கும் ஒரு நூற்றாண்டிற்கு முன்பு நடைபெற்ற வைஷ்ணவ சந்நியாசிகள் கலவரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட நாவல் அது.அதனை ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தை ஊக்குவிக்கும் நாவலாக உருவகப்படுத்தினர்.ஆனால் அந்தப் பொய் நெடுநாள் நிலைக்கவில்லை.

அதனை அந்நாவலாசிரியரே மறுத்துவிட்டார்.மறுக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்தது.அவர் பிரிட்டிஷ் அரசின் கீழ் அதிகாரியாகப் பணியாற்றியவர்.முதலில் துணை ஆட்சியராகவும், பிறகு துணை நீதிமன்ற நடுவராகவும் (Deputy Magistrate) இருந்தவர். அரசிடம் இருந்து நெருக்கடி வந்தவுடன், பதறிப்போய், இரண்டாவது பதிப்பில் அது மீர் ஜாபர் என்னும் நவாபுக்கு எதிரான நாவல் என்று கூறிவிட்டார். அது மட்டுமின்றி, ஆங்கிலேயர்கள் எப்போதும் நமக்கு நண்பர்கள், முஸ்லிம்கள்தான் நம் எதிரிகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வந்தே மாதரம் பாடலே, முஸ்லிம்களை எதிர்த்துப் பாடிச் செல்லும் பாடல்தான். வந்தே மாதரம் என்றால், தாயை வணங்குவோம் என்றல்லவா பொருள் என்றால், ஆம், அதுதான் அதன் பொருள். ஆனால் எந்தத் தாயை என்பதில்தான் சிக்கல் இருக்கிறது. பாரதத் தாயைக் கூட அன்று, ஜெகதீஸ்வரி, காளி, துர்கை ஆகிய மூன்று வடிவங்கள் கொண்ட இந்துக் கடவுளான தாயைத்தான் அப்பாடல் வணங்குகின்றது. இந்தக் கருத்தினை அந்தப் பாடலுக்கு இசையமைத்த கவிஞர் ரவீந்திரநாத் தாகூரே தெளிவாகச் சொல்லியிருக்கிறார் (The Hindu, 22.06.2015). இதனை எப்படிப் பிற மதத்தினரும், கடவுள் நம்பிக்கை அற்றவர்களும் ஏற்க முடியும்? இது எப்படித் தேசியப் பாடல் ஆகும்?

நாட்டில் எவ்வளவோ சிக்கல்கள் இருக்கின்றன.அவற்றையெல்லாம் விட்டுவிட்டு அரசு ஏன் இதுபோன்ற சிக்கல்கல்களை முன்னெடுக்கிறது? மக்களின் கவனத்தைத் திசை திருப்பத்தான்!

Pin It