காங்கிரசு கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி, முதல் கட்டமாக 2022 செப்டம்பர் 7 இல் தொடங்கி 2023 ஜனவரி 30இல் முடித்த, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, தெற்கிலிருந்து வடக்கு வரையிலான ‘பாரத் ஒற்றுமைப் பயணம்’ மேற்கொண்டார். 4,080 கி.மீ. தொலைவை, எளிய மனிதராக, தன் நடைபயணத்தால் மக்களோடு நெருங்கிப் பேசியும், அவர்கள் பேசுவதைக் கவனத்துடன் கேட்டும், ‘மொகபத் கீ துகான்’ என பா.ஜ.க.வின் வெறுப்பிற்கு எதிரான அன்பின் கடையைத் திறப்பதாக அவர் ஏந்திய முழக்கம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவருடைய செல்வாக்கு வளர்வதைப் பொறுக்க முடியாமல் திணறியது பா.ஜ.க. அரசு.

அதைத் தொடர்ந்தே, அவர், 2023 மார்ச் மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பல ஆண்டுகள் கழிந்த ஒரு வழக்கில், குஜராத் நீதிமன்றத்தால் 2 ஆண்டுகள் தண்டனை பெற வைக்கப்பட்டு, அதன் காரணமாக அவசர அவசரமாகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். உச்சநீதிமன்றத் தலையீட்டால் மீண்டும் ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டார்.rahul gandhi yatraதற்போது இரண்டாம் கட்டமாக ‘பாரத் ஒற்றுமை நீதி யாத்திரை’ யை இந்தியாவின் கிழக்கு எல்லையான மணிப்பூர் - இம்பாலில் தொடங்கி மேற்கு எல்லையான மும்பை வரை 14 மாநிலங்கள், 110 மாவட்டங்களை அடையுமாறு திட்டமிட்டு இந்த ஆண்டு, 2024 ஜனவரி 14ஆம் நாள் பயணம் தொடங்கி விட்டார். 67 நாள்களில் 6,713 கி.மீ தொலைவில், 355 மக்களவைத் தொகுதிகளைத் தொடுகிறது பயணம். இம்முறை தேர்தல் நெருங்குவதால், நேரம் கருதிப் பயணத்தை பெரும்பாலும் பேருந்திலும், சிறிது தொலைவுகளை நடந்தும் சேர முடிவெடுத்திருக்கிறார்கள்.

ஆளும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, இராமர் கோயிலை வைத்து அரசியல் செய்யலாம் எனப் பேரார்வமாக, அரையும் குறையுமாக, இன்னும் கட்டி முடிக்கப்படாத கோயிலைத் திறக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கும்போது, ராகுல் மக்களின் உண்மையான சிக்கல்களான உணவு, கல்வி, வேலைவாய்ப்பு, ஒற்றுமை பற்றி நான் பேசப் போகிறேன் எனக் கிளம்பிவிட்டார். பொறுக்குமா பா.ஜ.க.வினருக்கு?

ஆளும் பா.ஜ.க அரசு, இம்பாலில் தொடங்க வேண்டிய பயணத்தைத் தன் நெருக்கடியால் தௌபால் மாவட்டத்திற்கு மாற்ற வைத்தது. அங்கே கொடி அசைக்கும்போது கூட்டம் இவ்வளவு தான் இருக்க வேண்டும் என நிபந்தனை விதித்தது. நடைபயணமே இந்த அரற்றல்களுக்கும் மிரட்டல்களுக்கும் எதிராகத்தான். “சஹோ மத்; டரோ மத்” – “ துயருறாதே; பயப்படாதே” இது தான் பயணத்தின் முழக்கம். மணிப்பூரில் தொடங்கிய பயணம், மூன்றாம் நாள் நாகாலாந்தில் தொடர்ந்தது. அங்கே இரண்டு நாள்கள் முடித்து ஐந்தாம் நாள் அசாம் வந்தார் ராகுல். அசாமில் 8 நாள்கள் பயணத் திட்டம்.

வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் பழங்குடி மக்களின் தனித்த அரசியலை, அவர்களுடைய வெள்ளந்தித் தனத்தை, தன் பெரும்பான்மை மதவாத அரசியலாலும், குயுக்திகளாலும் களேபரம் செய்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. பழங்குடிகளின் கட்சிகளை ஆதரிப்பதாகச் சொல்லி, ஆட்சியமைத்து, அவர்களை இரண்டாம் நிலைக்குத் தள்ளி, ஏமாற்றியும் வருகிறது பா.ஜ.க. அங்கிருக்கும் பா.ஜ.க முதல்வர்கள் ஊழலில் திளைக்கிறார்கள்.

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா ஷர்மாதான் இருப்பதிலேயே மோசமான ஊழல்வாதி என தாக்குதல் தொடுத்திருக்கிறார் ராகுல். அசாம் அரசு ராகுலின் பயணத்தைக் கவுகாத்தி நகருக்குள் நுழைய விடாமலும், பல்வேறு நிகழ்ச்சிகளுக்குத் தடை விதித்தும் தன் வெறுப்பைக் காட்டி உள்ளது. அது மட்டுமல்லாமல், நகர எல்லைக்குள் நுழைவதைத் தடுக்க இரண்டு இடங்களில் தடுப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும், காவல்துறைக்கும் நடந்த தள்ளுமுள்ளுவில் இருதரப்பும் காயமடைந்துள்ளனர். ராகுல் மீது வழக்கு பதியச் சொல்லி இருக்கிறார் அசாம் முதல்வர். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு கைது செய்வார்களாம்!

முன்னதாக மேகாலயா- அசாம் எல்லையில் இருக்கும் அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற இருந்த அனுமதியையும் திரும்பப் பெற வைத்துள்ளார்கள். பல்கலைக்கழக வாயிலில் பேருந்தை நிறுத்திய ராகுல், பேருந்தின் மீது ஏறி நின்று மாணவர்கள் இடையே உரையாற்றத் தொடங்கி இருக்கிறார்.

ஜனவரி 22, திங்களன்று, இவர்களின் ராமர் கோயில் நாடகம் நடந்தபோது, நிகோன் எனும் இடத்தில் அசாமின் சமூக சீர்திருத்தவாதியும் மதகுருவுமான ஸ்‌ரீமந்த சங்கரதேவாவின் படத்ரவா புனித தலத்தின் அழைப்பின் பேரில் அங்கு சென்ற ராகுலுக்கு அனுமதி மறுத்திருக்கிறார்கள். ஜனவரி 19, வெள்ளியன்று லக்கிம்பூரில், பா.ஜ.க. குண்டர்கள் காங்கிரசாரின் வாகனங்கள் மீது ஏறித் தாக்குதல் நடத்தி உள்ளார்கள்.

இந்த அராஜகங்கள் சொல்வதெல்லாம் ஒன்று தான். பா.ஜ.க.வினர் அச்சமடைந்திருக்கிறார்கள். அமலாக்கத் துறைக்குப் பயந்தவர்களே இராமர் கோயிலுக்குப் போனார்கள். வெறுப்புக்குப் பயந்தவர்கள் அன்புக் கடைக்குப் போய்விடுவார்களோ என அஞ்சத் தொடங்கியிருக்கிறது பா.ஜ.க.

- சாரதா தேவி

Pin It