சனாதனம் என்பது உயர்ந்த நெறி, அதைக் கொண்டுள்ள இந்து மதமே உயர்ந்த மதம், இதோ பார், பலராமர் உள்ளிட்ட கடவுள்களை வணங்கியபின் ஜல்லிக்கட்டை நடத்திய செய்தி முல்லைக்கலியில் இருக்கிறது. அதனால் ஜல்லிகட்டு இந்து மத விழாவாகும் என்று ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அருள்வாக்கு அருளி இருக்கிறார். அம்மையார் கவனத்திற்கு இரண்டு செய்திகள் தருகிறோம்.

ஒன்று, ஆங்கிலேயர் இங்கு வந்து ‘இந்து’ என்று பெயர் சொன்னதால் (இந்து மதம்) தப்பித்தோம் என்று காஞ்சி பெரிய சங்கராச்சாரியர் சொல்லி இருக்கிறார்.

ஆகவே ஆங்கிலேயர் வருகைக்குப் பின்தான் இந்து மதம் என்ற பெயர் வந்ததேயொழிய அதற்கு முன் எந்த இலக்கிய, கல்வெட்டுப் பதிவிலும் அந்தப் பதிவு இல்லை. ஆங்கிலேயர் வந்தது கி.பி.1600 இல், முல்லைக்கலி காலம் கி.மு.2000.

இரண்டாவது, புது டில்லி தேசியக் கண்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில், ஒரு காளையின் உருவமும், அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து சிந்துவெளி நாகரீக காலத்தில் ஏறுதழுவல் வழக்கத்தில் இருந்துள்ளது என்று ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

ஆரியர்கள் வடமேற்குக் கணவாய்களின் வழியாக சிந்து தீரத்திற்கு வந்ததே கி.மு. 1500இல். அதற்கு 500 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் வேத மதம் உருவானது, இந்து மதம் அல்ல. சிந்துவெளி நாகரீக் காலம் கி.மு. 1500 என்பதற்கும் முந்தைய காலம்.

ஏறுதழுவுதல் தமிழர் பண்பாடு, ஏர் உழுவதும் தமிழர் பண்பாடு. இவை இரண்டிற்கும் பார்ப்பனர்க்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதனால் இந்து சாயத்தை அம்மையார் பூச முயல வேண்டாம்.

ஆளுநர் ஆர். என். ரவி திருவள்ளுவருக்குக் காவிசாயம் பூசுகிறார் என்றால் அவரின் டில்லி எஜமானர்கள் கொடுத்த ‘அஜண்டா’ அது.

திராவிடச் சூரியனை எந்த மேகத்தாலும் மறைக்க முடியாது.

சூரியன் எரிக்கும், மேகங்கள் கலைந்து மறையும்.

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It