பாருங்கள், ராமர் மீது பாஜகவுக்கு எவ்வளவு பக்தி என்று சிலர் நினைக்கக் கூடும். பாருங்கள், விஜயகாந்த் மீது மோடிக்கு எவ்வளவு பாசம் என்று வேறு சிலர் நினைக்கக் கூடும்!

இரண்டுமே உண்மை இல்லை! அவர்களின் பக்தியும் வேஷம், பாசமும் வேஷம்! தேர்தல், ஆட்சி, அதிகாரம் இவற்றின் மீது மட்டும்தான் அவர்களுக்கு உண்மையான நேசம்!

2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் புல்வாமா மாவட்டத்தில், ஒரு தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்தது. அதில் இந்தியப் பாதுகாப்புப் படை வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். நாடு துயரத்தில் ஆழ்ந்தது. அதனைச் சொல்லிச் சொல்லியே 2019 தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. எண்ணிப் பாருங்கள்! அதற்குப் பிறகு பாஜக அது பற்றிப் பேசி இருக்கிறதா?

அந்தத் தேர்தலோடு புல்வாமா முடிந்தது. இந்தத் தேர்தலுக்கு ராமர் கோயில் வந்திருக்கிறது!nirmala sitharaman pays homage to vijaykanthமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டப்பட்டதோடு நிற்கிறது. மழை, வெள்ளத்தால் நேர்ந்த பேரிடருக்கு உள்ளான மக்களுக்கு உதவுவதற்காக நிதி கேட்டால், ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் தூக்கி எறிந்து பேசுகிறார். அவருடைய குரலும், உடல் மொழியும் தமிழ் மக்களை அவமதிப்பதாக உள்ளது! ஆனால் அயோத்தியில் ஆயிரம் கோடிகளில் பணத்தை அள்ளி வீசுகிறது ஒன்றிய அரசு!

வடநாட்டுக்கு ராமர் கோயில் கும்பாபிஷேகம் போதுமானது! தென்னாட்டிற்கு ஏதேனும் வேண்டுமே என்று அவர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருந்த போதுதான், விஜயகாந்தின் மரணம் நிகழ்ந்திருக்கிறது!

கடந்த எட்டு ஆண்டுகளாக விஜயகாந்த் உடல் நலமற்றிருந்த வேளையில், மோடியோ, அமித்சாவோ அவரை வந்து பார்க்கவே இல்லை! இப்போது கண்ணீர் விட்டு, கதறி, அங்கமெல்லாம் உருக அறிக்கை தருகிறார் பிரதமர் மோடி!

கடந்த சில நாள்களாக, பிரதமரின் எக்ஸ் பக்கம் முழுவதும் விஜயகாந்த் பற்றிய உருக்கமான அஞ்சலியே நிறைந்து வழிகிறது!

தன் 40 ஆண்டுகால ஆருயிர் நண்பரை இழந்து விட்டதாக எண்ணி எண்ணி வருத்தப்படுகிறார் பிரதமர் மோடி, இவ்வளவு அன்பையும், இவ்வளவு சோகத்தையும் அவர் எப்படித்தான் தாங்கிக் கொள்கிறாரோ தெரியவில்லை. அவ்வளவு சோகமாக இருக்கிறது அவருடைய பதிவுகள் எல்லாம்!

தேர்தல் நடந்து முடிகிற வரையில் இந்த சோகம் அவர் நெஞ்சில் அப்படியே அப்பிக் கிடக்கும். விஜயகாந்த் ஆதரவு வாக்குகளைத் தங்கள் பக்கம் அள்ளிக் கொண்ட பிறகுதான், நம் பிரதமரின் சோகம் தேய்ந்து மடியும்!

அயோத்தி ராமரும், அண்மையில் மறைந்த விஜயகாந்த்தும் எப்படியாவது தங்களுக்கு உதவ மாட்டார்களா என்று கவலையுடன் காத்திருக்கிறது பாஜக!,

ஏமாற்றுவது அவர்கள் விருப்பம். ஏமாற மாட்டோம் என்று மக்கள் சொல்லப் போவதுதான் தேர்தலின் திருப்பம்!

- சுப.வீரபாண்டியன்

Pin It