சோவியத் ஒன்றியம் 1991ஆம் ஆண்டு டிசம்பரில் சிதைவுற்ற போது, அதன் உறுப்பு நாடாக இருந்த உக்ரைன் தனி நாடாகியது.

இருந்தாலும் உக்ரைனைத் தன் ஆளுமையில் வைத்துக் கொள்ள ரஷ்யா தொடர்ந்து முயன்று வருகிறது.

உக்ரைன் ரஷ்யாவின் ஆளுகைக்கு உட்படாமல் ‘நேட்டோ’ அமைப்பில் சேர முயன்றது, இதன் பின்னணியில் அமெரிக்காவும் இருக்கிறது.

நேட்டோ படை ரஷ்ய எல்லைக்கு அருகில் வருவதை விரும்பாத அந்நாடு, உக்ரைன் நேட்டோவோடு சேருவதைத் தடுக்கிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரட்டன், பிரான்ஸ், உள்பட நேட்டோ நாடுகளும்; ரஷ்யாவுக்கு ஆதரவாக சீனா, வடகொரியா உள்ளிட்ட நாடுகளும் இருக்கின்றன.

இந்நிலையில் உக்ரைன் மீது 24-02-2022 , காலை 5 மணி அளவில் ரஷ்யா தாக்குதலைத் தொடுத்துவிட்டது. ஐ.நா இப்போரைத் தடுக்க முயல்கிறது.

போர் என்று வந்தால் அது அழிவைத்தான் தரும். அமைதியை, பொருளாதாரத்தைச் சீர்குலைத்து விடும் என்பதுதான் உண்மை.

உலகத் தலைவர்களும், ஐ.நா.மன்றமும் தலையிட்டு ரஷ்ய - உக்ரைன் போரை நிறுத்த வேண்டும். பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வும், அமைதியும் ஏற்படுத்தி மக்களைக் காப்பாற்ற  வேண்டும் என்பதைத் தவிர வேறு வழியில்லை.

இச்சூழலில் அங்கு பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பணியாளர்கள், கல்வி பயிலும் மாணவர்கள் நாடு திரும்ப உதவி தேவைப்பட்டால் www.nrtamils.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ 044-28515288; 994256444 என்ற தொலைபேசி எண்கள் மூலமாக உதவி கோரலாம் என்று தி.மு.கழக அரசு அமைத்த “அயலகத் தமிழர் நலன் - மறுவாழ்வுத் துறை ஆணையரகம்’’ மூலம் தமிழக அரசு அறிவித்துள்ளது. அது மட்டுமல்லாது உக்ரைனில் இருந்து வரும் எல்லா மாணவர்களின் பயணச் செலவை அரசே ஏற்கும் என்றும் முதல்வர் ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.

நம் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்குப் பார்வையையும், மனித நேயத்தையும், விரைந்த நடவடிக்கையையும் இந்த அறிவிப்பு தெளிவாகக் காட்டுகிறது.

Pin It