அவர்களுக்கு வரலாறு இல்லை. ஏன், தரமான வாழ்க்கை கூட இல்லை. எனவே, வாழத் தெரிந்தவர்களைப் பார்த்தால் அவர்கள் வயிற்றெரிச்சல் படுவார்கள். வரலாறுகளைக் காண நேர்ந்தால் அவர்களால் பொறுத்துக் கொள்ளவே முடியாது.

வரலாறுகளை அழித்தொழிப்பது அல்லது அவற்றைப் பொய்யென்று உரைப்பது அல்லது வரலாற்றைத் திரித்து எழுதுவது இவை எதுவுமே முடியாதெனில் அந்த வரலாற்றுக்குள் உள்நுழைந்து அதையே தனதாக்கிக் கொள்வது, இதுதான் காலங்காலமாக அவர்களது வழக்கம்.

இந்துகுஷ் மலைகள், கைபர் - போலன் கணவாய் வழிகளைக் கடந்து இமயமலையின் அடிவாரத்தில் சிந்து, கங்கைச் சமவெளிகளில் இருந்த மேய்ச்சல் நிலங்களைத்தேடி அவர்கள் கால்நடைகளை ஓட்டிக்கொண்டு வந்தவர்கள்.

நாடோடி வாழ்க்கை என்பது துயரமானது. வலி மிகுந்தது. வரலாறு படைப்பதென்பது “வரலாறு படிப்பது போல் எளிதானதல்ல’’ என்பார் கவிஞர் வைரமுத்து.

தனக்கென்று ஓர் இருப்பிடம் இல்லாமல், தனக்கென்று கூடியழக்கூட ஓர் உறவுமில்லாமல் எங்கே போகிறோம்? எப்போது திரும்புவோம்? என்கிற திக்குத் தெரியாமல் போகிற பயணம் அது. அவர்கள் காட்டுமிராண்டிகளாக, மனிதநேயம் அற்றவர்களாக, நாகரிகம் என்பதை அறிந்திராதவர்களாக இருப்பதில் வியப்பொன்றுமில்லை.a raja and subavee 720அதைவிட, அவர்கள் அறிந்திராத நாகரிக வாழ்க்கையை வாழுகிறவர்களைப் பார்க்கும் பொழுது அந்த நாடோடிகளுக்கு ஆவேசமும், பொறாமையும்ஏற்படும். நாகரிக சமூகத்தின் மீது கோபம் எழும். காரணம், அவர்கள் காட்டுமிராண்டிகள்.

அப்படித்தான் சிந்து சமவெளியில் வாழ்ந்த திராவிட இன மக்கள் மீது நாடோடி ஆரியர்களுக்குக் கோபம் வந்தது. என்ன இது, இவர்கள் எல்லோரும் வீடுகள் கட்டிக் குடியிருக்கிறார்கள்? வீடுகளுக்குள் சமைத்துச் சாப்பிடுகிறார்கள்? வயல் வெளிகளில் உழுகிறார்கள்... விதைக் கிறார்கள், அறுவடை செய்கிறார்கள்? எப்படி இவர்கள் இடம்பெயராமல் ஓரிடத்தில் தங்கி நிலையான வாழ்க்கை வாழ்கிறார்கள்? அதுவும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்? என்று, வந்த நாடோடிகளுக்கு வியப்பு, பொறாமை, கோபம் எழுந்தது. சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட வீடுகள், நீண்ட அகன்ற நேர்தெருக்கள், நால்முனைச் சந்திப்புகள், பாதாளச்சாக்கடைகள், பொதுக்குளம், வீடுகளுக்குள்ளேயே கழிப்பறை, குளியலறை வசதிகள், எல்லா உணவையும் சமைத்துத் தேவைக்கேற்ப உண்ணுகிற வழக்கம், உடலை மறைப்பதற்கு மட்டுமல்லாது தோற்றத்தை அழகாக்கிடும் ஆடைகள், ஆபரணங்கள்.

தொழில், வாணிபம், விளையாட்டு, ஒன்றுகூடுதல், விழாக்கள், கொண்டாட்டங்கள் என்று ஒரு மனித சமூகம் பண்பட்டு வாழ்வதைக் கண்டு பதறுகிறார்கள் நாடோடிகளாக வந்த ஆரியக் காட்டுமிராண்டிகள்.

“ ஓ... இந்திரனே, இவர்கள் செம்புக்கோட்டைகளில் வாழ்கிறார்கள். ஆடுமாடுகள் மேய்கிற வயல் வெளிகளில் இவர்கள் உழுது பயிரிடுகிறார்கள்.

இவர்களைக் கொல்லுவதற்கு, இவர்களை வேட்டையாட எங்களுக்கு வலிமை கொடு “ என்று, அவர்களுடைய கடவுளிடம் வேண்டுகிறார்கள்.பின்னர், இரவு நேரங்களில் திடீரென மக்கள் குடியிருப்புக்குள் ஆயுதங்களுடன் புகுந்து கொலைவெறித் தாக்குதல் நடத்துகிறார்கள்.

 சிந்து சமவெளி மக்களிடமிருந்தவை எல்லாம் ‘கருவிகள்’. ஆரியக் காட்டுமிராண்டிகள் வசம் இருந்தவை எல்லாம் கொலைவெறி ‘ஆயுதங்கள்’. எனவே, வலிமையே வென்றது.

 அமைதியாய், நாகரிகமாய் வாழ்ந்த சமூகத்திற்குள் புகுந்து ஓர் இனப்படுகொலையையும் நடத்தியவர்கள், தங்கள் வெற்றியை நெருப்பு யாகங்கள் நடத்தி அதிலே ஆடுமாடுகளைத்தூக்கிப்போட்டுத் துடிக்கத் துடிக்கப் படுகொலை செய்து, சுடச்சுட அந்தப் பிராணிகளைத் தின்றும், தாங்கள் காய்ச்சி வைத்திருந்த சோம-சுரா மதுவகைகளைக் குடித்தும் கும்மாளம் இடுகிறார்கள்.

 காட்டுமிராண்டிகளின் தாக்குதலுக்கு அஞ்சிய நாகரிக மக்கள் தற்காப்புக்காக இடம்பெயர்ந்து விடுகிறார்கள். இப்போது பஞ்சம் பிழைக்க வந்த இடத்தில் தஞ்சம் புகுந்த மண்ணை வஞ்சகத்தால் சூழ்ச்சியால் கைப்பற்றிக் கொண்டனர் நாடோடி ஆரியர்கள்.

 மண்ணைப் பிடித்தார்கள், வேறு இடங்களில் மன்னர்களைப் பிடித்தார்கள், தங்கள் மேலாதிக்கத்தை மந்திரங்களின் பேரால் நிலைநாட்டினார்கள். சிக்கலான இடங்களில், சிக்கலான நேரங்களில் எந்த விலையும் கொடுத்துக் காரியம் சாதித்துக் கொண்டனர்.

இந்த அக்கிரமங்களை எதிர்த்தவர்களை ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்தார்கள். கொலைகளை எல்லாம் வழிபாடாக்கி கொல்லப்பட்ட இனத்தையே வழிபடச் செய்தார்கள்.

கல்வி கேள்வியறிவற்ற அடிமைகளாகப் பலரையும் ஆக்கினர். அவர்களைப் பலகூறுகளாய்ப் பிரித்து ஒருவருக்கு இன்னொருவரை எஜமானனாக்கி எல்லோருக்கும் இவர்களே மேலானவர்கள் ஆனார்கள்.

ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளாய்த் தொடர்ந்த இந்தக் கொடுமையின் அடி முடிகண்டு உலுக்கியெடுத்தவர்கள் முன்னர் சிந்துக் கரையில் வீழ்ந்துபட்ட இனத்தின் வம்சாவழியினர்.

ஆம், வடக்கே ஆரியம் வீழ்த்திய திராவிடரின் வழித்தோன்றல்கள் தெற்கே ஆரியத்தின் சூழ்ச்சியை அடையாளம் கண்டு அடித்து வீழ்த்தினர். வடக்கே ஆடிய ஆரியத் தாண்டவம் தெற்கே எழுந்த திராவிட முழக்கத்தால் அடிபட்டு வீழ்ந்தது. ஆண்டுகள் பல கடந்து ஆட்சிமுறைகள் பல மாறி, சட்டங்கள் பல இயற்றிக் குடியரசு, ஜனநாயகம் என்றெல்லாம் ஆனபின்னும் இன்னமும் தொடர்கிறது இந்த இனப்பகையும், போரும்.

2024 இல் தொடங்குகிறது இரண்டாம் கட்ட மாறுதலின் நூற்றாண்டு - இருவருக்குமே. இப்போதும் வன்மம் மாறவில்லை. குணம் மாறவில்லை. கொட்டம் அடங்கவில்லை என்பதற்கு அடையாளம் நிர்மலாக்களின் ஆணவம்.

ஈராயிரம் ஆண்டுப் பகைமுடிக்கும் போரில் நாங்கள் ஏந்திய எதையும் விட்டுவிடவில்லை என்கிற எச்சரிக்கையின் அடையாளமாய் திராவிடமாடலின் அடுத்த தலைமுறைத் தலைவர் உதயநிதியின் முழக்கமும். இன்னமும் தொடர்கிறது. அன்று தமிழ்நாடு வரை தேவைப்பட்டத் திராவிடத்தின்

முழக்கம் இனி, நாளைய இந்தியாவைக் காக்க டில்லியைத் தாண்டியும் தேவைப்படுகிறது.

ஏடுகள் வழியாகவும், உரைகள் வழியாகவும், பெரியாரியல் பெரும்பணியைச் சுமந்து தமிழ்நாட்டுத் தெருக்களில் ஓயாத பரப்புரையை நடத்திவரும் பேராசிரியர் சுபவீ அவர்களை ஆசிரியராகக் கொண்டு முழங்க வருகிறது “திராவிட முழக்கம்” மாத ஏடு, இது ஆரிய சூழ்ச்சிக்கு எதிரான போர்முரசம்!

- காசு.நாகராசன்

Pin It