இயற்கையின் சீற்றத்திற்கு இரையானது சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்கள். 47 ஆண்டுகளுக்குப் பிறகு மாநகர் கண்டிராத மழையை மிக்ஜாம் புயல் கொண்டு வந்தது!
எத்தனையோ முன்னேற்பாடுகளை எண்ணி எண்ணித் தமிழ்நாடு அரசு செய்திருந்த போதிலும், இயற்கையின் சீற்றத்தின் காரணமாக இன்னல்கள் பலவற்றை எதிர்கொள்ளவே நேர்ந்தது. புயல் சென்னையைக் கடந்து நான்கு நாள்கள் ஆகிவிட்ட பிறகும், இன்னும் சில பகுதிகளில் பாதிப்புகள் இருக்கவே செய்கின்றன!மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதும், தொலைபேசி இணைப்புகள் இல்லாமல் போனதும் பெரும் துயரமாக அமைந்தது. சென்னை மாநகரில் மட்டும் 1812 மின் தடங்கள் இருக்க, அவற்றுள் 1610 தடங்கள் இரண்டு நாள்களுக்குள்ளாகச் சரி செய்யப்பட்டன. இருப்பினும், மீதம் உள்ள 202 மின் தடங்களில் படிப்படியாக மக்கள் மின்சாரத்தைப் பெறுவதற்கு மேலும் சில நாள்கள் ஆகிவிட்டன! அந்தச் சில நாள்களில் மக்கள் பட்ட துயரங்கள் பெரியவைதான்!
வெளியூர்களில் இருந்து 2500 மின் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்களும் அந்தந்த இடங்களுக்குப் போய்ச் சேருவதற்குப் பல தடைகள் ஏற்பட்டுவிட்டன. புயலும் மழையும் சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் பெரிய துன்பத்தைக் கொண்டு வந்து சேர்த்து விட்டது!
இன்னும் ஓரிரு நாள்களுக்குள் இயல்பு நிலை திரும்பிவிடும் என்றாலும், ஏற்பட்ட இன்னல்களை மக்கள் பொறுத்திட வேண்டிய நிலையே இருக்கிறது.
இந்நேரத்தில் பொதுமக்களாகிய நாமும் கவனத்தில் கொள்ள வேண்டிய சில செய்திகள் இருக்கின்றன. வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் ஏரிகளில்தான் வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. அதேபோல பெருங்களத்தூர் முழுக்க முழுக்க வயல்வெடிகளைக் கொண்ட ஊர் . ஏரிகள் ஊர்களாக மாறும்போது இந்த அபாயம் ஏற்படும் என்பதை அரசும் மக்களும் முன் உணர்ந்திருக்க வேண்டும்!
அதேபோல குப்பைகள், நெகிழிகள் (பிளாஸ்டிக்) ஆகியனவற்றை எந்தக் கவலையும் இல்லாமல் மக்கள் தெருக்களிலும், கண்ட இடங்களிலும் போடுவது என்பது இன்றும் நம்மிடையே இருக்கும் பழக்கமாக இருக்கிறது. அந்த நெகிழிகள் தண்ணீரைத் தரைக்குள் போக விடாமல் தடுத்து விடுகின்றன என்பதும் உண்மை. எனவே மக்களும், மேலும் கூடுதல் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது!
வெள்ளம் வடிந்து போனதோடு, எல்லாம் முடிந்து விட்டது என்று கருதி விடக் கூடாது. வெள்ளம் கற்றுக் கொடுத்துவிட்டுப் போய் இருக்கும் பாடங்களையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்!
- சுப.வீரபாண்டியன்