மதம் பற்றி மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் போன்றவர்கள் வெளிப்படுத்திய கருத்துகள் ‘பொதுவுடைமைவாதம்’ என்றும், தந்தை பெரியார் வெளிப்படுத்திய கருத்துகள் ‘பெரியாரியம்’ என்றும் கொள்ளப்பட்டு, அவைகளுக்கு இடையிலான ஒற்றுமைகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மதம்

மதம் பற்றி மார்க்ஸோ, எங்கெல்ஸோ தனித்துப் புத்தகங்கள் எதுவும் வெளியிடவில்லை. ஆனால் அவர்களின் படைப்புக்களில் ஆங்காங்கே மதம் பற்றிய கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர். லெனின் மதம் பற்றி அதிகமாகப் பேசியும், எழுதியும் இருப்பதால் ‘மதத்தைப் பற்றி’ எனும் தலைப்பில் தமிழில் நூலாக வெளிவந்துள்ளது. ஆனால், தந்தை பெரியார் மதம் குறித்து பல கட்டுரைகள் எழுதியும், பல மேடைகளில் பேசியும் உள்ளதால், அவைகளெல்லாம் தொகுக்கப் பட்டு பல தொகுதிகளாக வெளிவந்துள்ளன.

மார்க்ஸ் - தந்தை பெரியார்

மார்க்ஸ் மதம் பற்றிச் சுருக்கமாக ‘மதம் மக்க ளுக்கு அபினைப் போன்றது’ என்று குறிப்பிட்டார். தந்தை பெரியார் ‘மதம் மக்களுக்கு அபினி (மது) என்றார் ஒரு பெரியவர். ஆனால் நான் மதம் மக்களுக்கு விஷம் என்கிறேன்’ என்று 31.5.1936 - நாளிட்ட குடிஅரசில் தம் கருத்தினைத் தெரிவித்தார். அதாவது,மார்க்ஸ் கருத்துப்படி, மதம் என்பது மனித னின் சிந்தனையைத் தெளிவற்றதாக்குவது. தந்தை பெரியாரின் கருத்துப்படி, மதம் என்பது மனிதனின் உயிரையே போக்குவது என்பதாகும். ஆக, மார்க்ஸை விடத் தந்தை பெரியார் மதத்தினை மிகவும் கொடிய தாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மார்க்ஸ் மதத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது, ‘வெளியில் கூற முடியாத சோகம் மனதில் மண்டிக் கிடக்கும்பொழுது அதை மனிதன் பெருமூச்சு மூலம் வெளிப்படுத்திக் காட்டுகிறான். அத்தகைய ஒரு சாதனமாக மதம் மக்களுக்குப் பயன்படுகிறது. இந்த நிலையில் மதத்தை எதிர்ப்பதைவிட அதை ஆராய்வது நல்லது’ என்கிறார். தந்தை பெரியாரும் ‘மதம் என்னும் விஷயமும் ஆராயத் தகுந்ததேயாகும்’ என்று 21.2.1952இல் விடுதலையில் வெளியிட்ட கருத்தில் தெரிவித்துள்ளார். ஆக, இருவரும் மதத்தினை ஆராய வேண்டும் என்ற நிலையில் ஒத்த கருத்துக்களையே வெளிப்படுத்தியுள்ளனர். 

மதத்தினை ஒழிக்க வேண்டும் என்ற நிலையில், மார்க்ஸ் தம் கருத்தாக ‘மக்கள் உண்மையான மகிழ்ச் சியைக் காணவேண்டும் என்றால் வெறும் பிரமை யான மகிழ்ச்சியைத் தரும் சமயத்தை ஒழித்தாக வேண்டும்’ என்று வெளிப்படுத்தியுள்ளார். தந்தை பெரியார் 10.3.1945இல் வெளியிட்ட கருத்தில், ‘மனித பேதம் ஒழிய வேண்டுமானால் மதம் ஒழிய வேண்டும்’ என்று வெளிப்படுத்தியுள்ளார். ஆக, மதம் ஒழிந்தால் தான் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ முடியும் என்பதே இருவரின் ஒருமித்த கருத்தாக வெளிப்பட்டுள்ளது.

பொருள் முதல் வாதத்தினை அடிப்படையாகக் கொண்டு மார்க்ஸ், ‘மனிதன் மதத்தை உருவாக்கு கிறான். மதம் மனிதனை உருவாக்கவில்லை’ என்று தம் கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். அதேபோன்று தந்தை பெரியார், ‘மதம் என்பது மனிதனின் உலக வாழ்க்கையின் நடப்பிற்கு ஒரு வழிகாட்டியான கொள் கையைக் கொண்டது. அது நம்மைப்போல ஒரு மனித னால் ஏற்படுத்தப்பட்டது’ என்றும், ‘மனிதன் பிறந்து வளர்ந்து நினைக்கத் துவங்கிய பிறகுதான் கடவுள் பற்றிய எண்ணம் தோற்றுவிக்கப்பட்டிருக்க வேண்டும். அதை யாரும் மறுக்க முடியாது. இப்போது கூட மக்களுக்குப் பிறர் சொல்லிக் கொடுத்த பிறகு தான் கடவுள் என்கிற பேச்சும் நினைப்பும் ஏற்படுகின்றதே தவிர தானாக ஏற்படுவதில்லை என்றும் தம் கருத்து களை வெளிப்படுத்தியுள்ளார். ஆக இருவரும் மதம் மனிதனால் உருவாக்கப்பட்டது என்ற கருத்தில் ஒரு மித்த கருத்துகளையே வெளிப்படுத்தியுள்ளனர்.

எங்கெல்ஸ் - தந்தை பெரியார்

எங்கெல்ஸ். மதத்தினையும் பொருளாதார பேதத் தினையும் குருமார்கள் உருவாக்குகிறார்கள் என்ற நிலையில் தம் கருத்தினைப் பின்வருமாறு வெளிப் படுத்தியுள்ளார்.

‘தொழில் பிரிவுகள் தொழில் திறமையையும் உற்பத்தித் திறமையையும் வளர்த்தன. தொழில் நுணுக்கம் முன்னேற்றம் கண்டது. இதனால் சமூகத் தில் ‘உற்பத்தி செய்பவர்கள்’ உற்பத்தியை அமைப்ப வர்கள் (Producers and Organizers of Production) என்ற உழைக்கும் பிரிவினரும், தாம் உழைக்காமல், உழைப்பைத் திட்டமிட்டு அமைப்பவர்களும் என்ற பிரிவுகள் தோன்றின. உழைப்பை அமைப்பவர்கள் உழைப்பின் கடுமையில் இருந்து விடுதலை பெற்ற னர். இவர்கள் தான் சிந்தனையாளர்களாக, மதகுரு மார்களாக, மந்திர தந்திரங்களை நடத்துபவர்களாக பொருளுற்பத்தி உழைப்பில் இருந்து விலகிச் செயல் பட்டனர்.

இக்கருத்தினை அடியொற்றியே தந்தை பெரியாரும் மதமே பொருளாதார பேதத்தினை உருவாக்குகிறது என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது ‘சமுதாய வாழ்வில் மனிதர்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பிக்கிறது மாத்திர மில்லாமல், பொருளாதாரத்தில் உயர்வு தாழ்வு கற் பிப்பதற்கும் மதம் மூலகாரணமாய் இருக்கிறது. உண்மையில் நீங்கள் யோசித்துப் பாருங்கள். உடல் வலிக்கப் பாடுபட ஒரு சாதியும், நோகாமல் உட்கார்ந்து கொண்டு சாப்பிட ஒரு சாதியும் மதம் சிருஷ்டிக்கவில் லையா?’ என்ற கேள்வி கேட்கும் விதமாகத் தம் கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். ஆக, மதமே வர்க்க பேதத்தினை உருவாக்குகிறது என்ற நிலையில் இருவரின் சிந்தனையும் ஒத்துப்போவதை அறிய முடிகிறது.

மதத்தைக் காத்திட மதவாதிகள் எத்தகைய வழியை மேற்கொள்வார்கள் என்பது பற்றி எங்கெல்ஸ் தம் கருத்தாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.

‘கிரேக்க மற்றும் கிரேக்க - உரோமானியக் கூறுகளே கிறித்துவத்தை உலகலாவிய ஒரு மதமாக்கப் பெரிதும் துணைபுரிந்துள்ளன. யூத மதத்திலிருந்து முழுமை பெற்று உருவான கிறித்துவ மதம் பாலஸ்தீனத்தில் துவங்கி, உலகை வென்றது என்ற மாயை புரூனோ பௌருக்குப் பிறகு சாத்தியமில்லாமல் போய்விட்டது. இனிமேல் அத்தகைய மாயை இறையியல் துறை யிலும், அறிவியலைத் தியாகம் செய்தாவது, மக்களுக் காக மதத்தைக் காக்க வேண்டும் என விரும்புப வர்களிடமும் மட்டுமே செல்லுபடியாகும்’.

இக்கருத்தினை அடியொற்றியே தந்தை பெரியார் தம் கருத்தினைப் பின்வருமாறு வெளிப்படுத்தியுள்ளார். ‘அறிவு வளர்ச்சியையும், ஆராய்ச்சி சுதந்தரத்தையும், இயற்கைச் சக்தியின் தன்மை உணர்வையும், விஞ் ஞானத்தையும் மக்கள் பெறமுடியாமல் தடுத்தாலொழிய, இனி எப்படிப்பட்ட மகானாலும், கடவுள் பக்தனாலும், கடவுள் காப்பாளனாலும் எந்தக் கடவுளையும் எந்த மதத்தையும் காப்பாற்ற முடியாது’.

ஆக, எங்கெல்ஸ் மற்றும் தந்தை பெரியார் ஆகிய இருவரும் மதத்தைக் காத்திட மதவாதிகள் அறிவியலைத் தடுத்திட முடியாமல் வேறு வழியில்லை என்று ஒத்த நிலையில் தம் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர். அறிவியலின் வளர்ச்சியே மதத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாகும் என்பது இருவர் தம் கருத்தாகும்.

லெனின் - தந்தை பெரியார்

லெனின் மதம் பற்றிய தம் கருத்துக்களில் பின் வரும் இரண்டு கோட்பாடுகளை முன்வைத்துள்ளார். அவைகளாவன :

1.            நாஸ்திகம் மார்க்சிசத்தின் பிரிக்க முடியாத ஒரு பகுதி - அதனால் வர்க்க உணர்வு கொண்ட ஒரு மார்க்சியக் கட்சி, நாத்திகத்துக்குச் சாதகமாகப் பிரச்சாரம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

2.            .....மத ஸ்தாபனங்களுக்கும், பள்ளிகளுக்கும் இடையே பரிபூரணமாக பிரிவு வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியாக வேண்டும்.

லெனின் குறிப்பிட்ட இந்த இரண்டு கோட்பாடுகளில் முதல் கோட்பாட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் செயல்படுத்தாத நிலையில் தந்தை பெரியார் தம் வாழ்நாள் முழுவதும் மேற்கொண்டுள்ளார்.

இரண்டாவது கோட்பாடான மத ஸ்தாபனங் களுக்கும் பள்ளிகளுக்கும் இடையே பிரிவு வேண்டும் என்ற லெனினது கருத்தினை விரிவாக விளக்கும் நிலையில், தம் கருத்தினைத் தந்தை பெரியார் 27.8.1931 நாளிட்ட குடிஅரசில் பின்வருமாறு வெளிப்படுத்தியுள்ளார்.

‘கல்வி கற்பிப்பதில் மதத்தின் ஆதிக்கம் வந்து புகுந்து அறிவுக்காகக் கல்வி என்பது மாறி முட்டாள்தனமும், விசாரணையற்ற தன்மையும் வருவதற்கே கல்வி பயன்படும் படியாக ஆகிவிடுகின்றது... இதற்குக் காரணம் என்னவென்றால், கல்வியின் பொறுப்பு எல்லாம் மதங்களினுடையவும், மத ஸ்தாபனங்களி னுடையவும் ஆதிக்கத்தில் சிக்கி மத போதகர்கள், மதகுருக்கள், மதத் தலைவர்கள் ஆகியவர்களால் நடத் தப்பட்டு வருகின்றவைகளாய் இருப்பதே காரணம்... மதம் கலந்த படிப்பால் இயற்கை அறிவுக்கும் ஆராய்ச் சிக்கும் இடமில்லாமலே போய்விடுகின்றது.

மத சம்பந்தமான கொள்கைகள், அபிப்பிராயங்கள் முதலியவைகள் எல்லாம் அந்தக் காலத்திய உலக நிலை, அறிவு நிலை, ஆராய்ச்சி சவுகரிய நிலை, கல்வி நிலை ஆகியவைகளுக்கு ஏற்றவைகளாகவே இருக்கும். ஆதலால் அவை இந்தக் கால அறிவு, ஆராய்ச்சி, சவுகரியம் முதலியவைகளுக்கு ஏற்றதாக இருக்க முடியாது. இந்தக் குறைபாடானது உலகத் தோற்றத்தின் - மனித வாழ்க்கையின் ஒவ்வொரு தன்மையிலும் இருக்க வேண்டியதாகிவிட்டது. ஆதலால் கல்வியும் மதமும் கலந்தால் அறிவு சூன்யமாக வேண்டியதைத் தவிர வேறில்லை.

அதாவது, லெனின் குறிப்பிட்ட,“மத ஸ்தாபனங்க ளையும், பள்ளிகளையும் பிரித்து வைக்க வேண்டும்” என்ற கருத்திற்கான காரணத்தினைத் தந்தை பெரியார் தம் கருத்தாகக் குறிப்பிட்டுள்ளார். இது இருவரின் ஒருமித்த கருத்து வெளிப்பாட்டைப் புலப்படுத்துகிறது. ஆக தந்தை பெரியார், மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோருக்கு இணையாக மதம் பற்றிய தம் கருத்து களை வெளிப்படுத்தியுள்ளார் என்பது புலனாகிறது.